விருச்சிக ராசிக்கு அமோக மாற்றங்கள் ஆரம்பம்… மற்றவர்களுக்கு எப்படி? ஆடி மாத ராசி பலன்கள்!

பிறப்பு : - இறப்பு :

astrology_july

உங்கள் ராசிக்கு என்ன பலன்கள் நடக்கும்?…

  • மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் உச்ச வலுவில் உள்ளதாலும், ராசிக்கு குரு பார்வை இருப்பதாலும் மேஷராசிக்கு இது சந்தோஷங்களைத் தரும் மாதம்தான். ஒரு குறிப்பிட்ட பலனாக கோபத்தை கட்டுப்படுத்துங்கள். சிறு விஷயத்திற்கு கூட பொறுமை இழந்து எரிச்சல் படுவீர்கள். கோபத்தைப் பற்றி குறிப்பாகச் சொல்கிறேன் என்றால் அதில் அர்த்தம் இருக்கிறது. ஏற்கனவே கோபக்காரராகிய நீங்கள் தற்போது ராசிநாதன் செவ்வாய் உச்ச நிலையில் இருப்பதால் இன்னும் அதிகமான கோபத்திற்கு ஆளாக கூடிய சில சம்பவங்கள் நடக்கும். எதிலும் அமைதியாகவும் நிதானமாகவும் இருப்பது நல்லது. ஏதாவது தவறாக நடந்த பிறகு வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை.

    இதுவரை செட்டிலாகாத இளைய பருவத்தினருக்கு இப்போது நல்ல மாற்றங்கள் நடைபெறும். முப்பது வயதுகளில் இருப்பவர்கள் மாற்றங்களைச் சந்திப்பீர்கள். சாப்ட்வேர், கணக்கு, ஊடகம், கலைத்துறை சம்மந்தப்பட்டவருக்கு முன்னேற்றமான நிலைமைகள் இருக்கும். பத்தாமிடம் பலம் பெற்று அமைவதால் தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகள் சிறப்பாக நடைபெறும். அரசுப்பணியாளர்கள், மருத்துவம், விளையாட்டு, காவல்துறையினர், சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் இருப்பவர்கள் மிகுந்த நன்மைகளைப் பெறுவீர்கள்.

    வியாபாரிகளுக்கு இது அமோகமான காலம். புதிய முதலீடுகளைச் செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்து புதிய கிளைகள் அமைக்கலாம். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள். ஒருசிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும். மேஷநாதன் செவ்வாய் நல்லநிலையில் இருப்பதால் ஜூலை மாதம் எவ்வித கெடுதல்களையும் செய்யாது. தடங்கல்களும் எதிர்மறை அனுபவங்களும் இருக்காது. தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரம் பெருகும். கடந்த காலங்களில் இருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது.

    1,3,7,8,10,11,17,18,20,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 22-ம்தேதி அதிகாலை 4.16 மணி முதல் 24-ம்தேதி மதியம் 3.28 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வெகுதூர பிரயாணங்களோ புதியமுயற்சிகளோ செய்ய வேண்டாம். இந்த நாட்களில் எதையும் செய்யும் முன் ஒன்று இரண்டாக யோசிப்பது நல்லது.

  • ஜூலைமாதம் ரிஷப ராசிக்கு சிறப்புகளைச் சேர்க்கும் மாதம்தான். குருவின் பார்வை படும் ஜீவன ஸ்தானத்தின் பலத்தினால் வருமானத்திற்கு எந்தக் குறையும் இருக்காது. தொழில் ஸ்தானம் வலுப்பெறுவதால் இந்த மாதம் அதிர்ஷ்டம் கை கொடுக்கும். அஷ்டமச் சனி நடப்பதால் தேவையற்ற விவகாரங்களில் மூக்கை நுழைத்து கையில் இருக்கும் காசை விரயம் செய்வீர்கள் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும்முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள்.

    சனி எட்டில் இருப்பதால் உங்களில் சிலருக்கு கடைசிநேரம் வரை வரவேண்டிய பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று டென்ஷன் இருக்கும். இறுதியில் பணம் கிடைக்கும் என்பது நிச்சயம். ஆனாலும், அப்போதைய தேவைக்குத்தான் பணம் வருமே தவிர மிச்சம் பிடித்து சேமிக்கும் அளவிற்கு இருக்காது. இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சிந்தனைகள் திசைமாறும் மாதம் இது. எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் காலகட்டம் நடைபெறுகிறது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள். அந்தக் காதல் அடுத்த வருடம் மன அழுத்தத்தில் கொண்டு போய் விடும். சுக்கிரன் ராகு இணைவதால் உங்களில் சிலர் இந்த மாதம் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பீர்கள்.

    சிலருக்கு தொழில், வேலை அமைப்புகளில் இருந்து வந்த தடைகள் விலகி நன்மைகள் நடக்கும். வீடு வாங்குவதற்கு, புது வீடு கட்டுவதற்கு இருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது. நல்ல வீட்டில் குடி போவீர்கள். கணவன், மனைவி உறவுகள் பெரிதாக சொல்வதற்கில்லை. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவதால் பிரச்னைகள் பெரிதாகாமல் தடுக்கலாம்.

    பங்குதாரர்களை எதற்கெடுத்தாலும் நம்ப வேண்டாம். எவரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவதோ, அடுத்தவர் விஷயத்திற்காக போய் முன்னே நிற்பதோ கூடவே கூடாது. அனைத்து விஷயங்களிலும் ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்து செயல்படுவீர்கள். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். வழக்குகளில் தீர்ப்புகள் தாமதமாகும். பெண்களுக்கு இந்த மாதம் நல்லபலன்கள் அதிகம் இருக்கும்.

    5,6,8,10,14,15,16,20,21,28 ஆகிய நாட்களில் பணம் வரும் 24-ந்தேதி மதியம் 3.28 மணி முதல் 27-ந்தேதி அதிகாலை 4.12 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களோ புதிய முயற்சிகளோ செய்ய வேண்டாம்.

  • மாத ஆரம்பத்தில் ராசிநாதன் புதன் ராசியிலேயே ஆட்சி வலுவுடன் இருக்கிறார். மிதுனத்திற்கு இது மேன்மையான மாதம்தான். ஜூலை மாதத்தில் உங்களுக்கு எல்லாவிதத்திலும் நன்மைகள் மட்டுமே இருக்கும். மதிப்பு, மரியாதை, அந்தஸ்து, கௌரவம், தொழில் மேன்மை, தன லாபங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற நன்மைகள் உண்டு. மனக்கவலைகள் குழப்பங்கள், எதிர்மறை எண்ணங்கள் தடைகள் போன்றவைகள் தீரும். உடலிலும் மனதிலும் தெம்பு பிறக்கும். உற்சாகமாக இருப்பீர்கள். எந்த ஒரு செயலையும் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும். உங்களுடைய பேச்சை அனைவரும் கேட்பார்கள்.

    இரண்டு, எட்டில் ராகு கேதுக்கள் இருப்பதால் மிதுன ராசிக்காரர்கள் ஒருமுறை ராகு பகவான் பரிகார ஸ்தலங்களான ஸ்ரீகாளகஸ்தி, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கொடுமுடி போன்ற புனிதத்தலங்களுக்கு சென்று பரிகாரங்களை செய்வது நல்லது. சிலருக்கு மாத முற்பகுதியில் நல்ல பலன்கள் இருக்கும். பிற்பகுதியில் சிறிது அலைச்சல்கள், காரியத் தடங்கல்கள் இருந்தாலும் மாதம் முடிந்த பிறகு அனைத்தும் நல்லவிதமாக முடிவுக்கு வரும். சிலருக்கு கோவிலுக்கு போவதும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதும் இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல பலன்கள் உண்டு. குறிப்பாக பெண் குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள் கிடைக்கும்.

    மாணவர்களுக்கு இது நல்ல ஜாலியான மாதம். படிப்பை தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். சிலர் நல்ல வீட்டில் குடி போவீர்கள். பணவரவு இருக்கும். பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்தும் திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் நன்மைகளை அடைவீர்கள் திறமையை மட்டும் வைத்துத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றங்கள் உண்டு. வாழ்க்கைத்துணை விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் விலகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவீர்கள். பங்குதாரர்களிடம் சுமுகமான உறவு இருக்கும். பெண்களால் லாபம் உண்டு. சகோதரிகள் உதவுவார்கள். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் நல்லபடியாக முடியும். அனாவசிய செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கடன் பிரச்சனைகள் தொந்தரவுகள் தராது.

    4,8,9,12,14,18,21,22,26,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 27-ம்தேதி அதிகாலை 4.12 மணி முதல் 29-ந்தேதி மாலை 5.06 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்துடனும் நிதானத்துடனும் செயல்படுவது நன்மையை தரும்.

  • கடக ராசியின் பத்தாமிடத்தை யோகாதிபதி குரு பார்ப்பதாலும், ஜீவனாதிபதி செவ்வாய் உச்சமாக இருப்பதாலும் இதுவரை தடையாகி வந்த உங்களின் தொழில் முயற்சிகள் இப்போது நிறைவேறும். செவ்வாயின் சுப வலுவால் கடந்த சில மாதங்களாக தொழில் நிலைமை சரி இல்லாமல் இருப்பவருக்கும், வேலையில் பிரச்னை உள்ளவருக்கும் இனிமேல் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் உண்டு. சுயதொழில் செய்வோருக்கு தொழில் முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் நடக்கும். வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது. இளைஞர்களுக்கு கெடுதல்கள் நடக்காது.

    செவ்வாய் வலுப்பெற்று இருப்பதால் கடன் வாங்கியாவது குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும். நீண்டநாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். சிலருக்கு வேலைமாற்றம், தொழில்மாற்றம், வீடு மாற்றம் போன்றவைகள் நடக்கும். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

    ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். கடக ராசிப் பெண்கள் குடும்பத்திலும், வேலை செய்யுமிடத்திலும் கோபப்படாமல் அமைதியாக பிரச்னைகளை சமாளியுங்கள். ஒரு பெண் நினைத்தால் எதையும் ஆக்கலாம் அழிக்கலாம் என்பது உலகவிதி. எந்தக் குடும்பத்தில் அதன் தலைமைப் பெண்மணி விழிப்புடன் இருக்கிறாளோ அந்தக் குடும்பத்தை எவ்வளவு பெரிய சோதனைகள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பது நிரூபிக்கப்பட்ட நிஜம்.

    சிலருக்கு அலுவலகங்களில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். அனாவசியமாக எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எல்லா விஷயத்திலும் பொறுமை அவசியம். அனைத்து விஷயங்களிலும் ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசித்து செயல்படுவது நல்லது. ஏழில் செவ்வாய் உள்ளதால் தேவையற்ற ஈகோ பிரச்னையால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமைகள் வரலாம். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தலைவியின் கட்டுக்குள் இருக்கும் குடும்பத்தில் குறைகள் எதுவும் இருக்காது என்பதால் மனைவியின் பேச்சை கேட்டால் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

    5,6,7,10,11,16,18,19,20,23 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 2-ம் தேதி காலை 11.07 மணி முதல் 4-ம் தேதி இரவு 10.54 மணி வரையும், மாதக்கடைசியில் 29 -ம்தேதி மாலை 5.06 மணி முதல் 1-ம்தேதி அதிகாலை 4.54 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்டதூர பிரயணங்களோ எந்த ஒரு புதியமுயற்சியோ இந்த நாட்களில் செய்வதை தள்ளி வைப்பது நல்லது.

  • ராசிநாதன் சூரியன் வலுவான அமைப்பில் மாதம் முழுவதும் நட்பு வீடுகளில் இருப்பதால், உங்களில் சிலருக்கு இருந்து வரும் நிச்சயமற்ற வேலை அமைப்புகளும், லாபங்களைத் தராத தொழில் அமைப்புகளும் மாறி நல்ல விதமான பணவரவும் லாபங்களும் இனிமேல் கிடைக்கத் துவங்கும்.. சிலருக்கு ஜூலை மாதத்தில் தொழில்ரீதியான பயணங்கள் அதிகமாக இருக்கும். வெளிமாநிலங்களுக்குச் செல்வீர்கள். தொழில் அமைப்புக்களில் சிக்கல்கள் எதுவும் வராது. வீட்டிலும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் நிம்மதி இருக்கும்.

    ஜூலை மாதம் சிம்மத்தினருக்கு தொழில், குடும்ப விஷயங்களில் நல்லவைகள் நடக்கும். மாத ஆரம்பத்திலேயே யோக அமைப்புக்கள் உண்டாவதால் இதுவரை உங்களை முடக்கிப் போட்டுக் கொண்டு இருந்த எதிர்ப்புகள் விலகும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். உடல்நலக் குறைவாக இருந்தவர்கள் நலம் கிடைக்கப் பெறுவார்கள். தென்னாடுடைய சிவனாகிய ஈசனின் பூரண அருளுடன் பிறந்த நீங்கள் எல்லா சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக் கூடியவர் என்பதால் தெய்வத்தின் அருளும், கிரகங்களின் ஆசியும் இப்போது முழுமையாகக் கிடைப்பதால் எடுத்த காரியம் வெற்றி பெறும். நம்பிக்கையை கை விடாதீர்கள்.

    சிலருக்கு அதிகமான ஆன்மீக ஈடுபாடும், கோவில் குளங்களுக்கு செல்வதும் நடக்கும். குருவின் ஒன்பதாமிட பார்வையால் வீட்டில் பொன், பொருள், சேர்க்கை உண்டாகும். செலவுகள் அதிகம் இருக்கும் என்பதால் வரும் வருமானத்தை நல்ல விதமாக செலவு செய்வது புத்திசாலித்தனம். வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள்.

    கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. காவல்துறையினருக்கு இது நல்ல மாதம். பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு நல்லபலன்கள் நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும்.

    1,2,7,8,9,15,16,17,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 4-ம்தேதி இரவு 10.54 மணி முதல் 7-ம்தேதி காலை 7.39 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வீண் வாக்குவாதங்களோ தேவையற்ற பேச்சுக்களோ பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளும் வேண்டாம்.

  • ஜூலை மாத முற்பகுதியில் கன்னி நாதன் புதன் பத்தாமிடத்தில் ஆட்சிபெற்ற நிலையில் தனது நண்பரான சூரியனுடன் வலுவான நிலையில் இருப்பதால் கன்னிக்கு ஜூலை நன்மைகளை தரும் மாதம்தான். குருபகவான் இரண்டில் இருப்பதால் ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், பேச்சை நம்பி தொழில் செய்பவர்கள், மார்க்கெட்டிங் துறையினர் போன்றவர்களுக்கு இந்த மாதம் நல்லபலன்கள் இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற ஆரம்பங்கள் உண்டு. பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகள் கிடைக்கும். நவகிரக சுற்றுலா போவீர்கள்.

    கன்னிக்கு அந்தஸ்து, மதிப்பு கிடைக்கும் நிலையும் தாராளமான பணவரவும் உள்ள மாதம் இது. தந்தை வழி உறவினருடன் உரசல்கள், கருத்து வேற்றுமை ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இது சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். குடும்பத்தில் உற்சாகமும், செல்வச் செழிப்பும் இருக்கும். பனிரெண்டாமதிபதி சூரியனுடன் ராசிநாதன் பத்தாமிடத்தில் இருப்பதால் சில கன்னி ராசிக்காரர்களுக்கு தூர தேசங்களில் இருந்தும் தொலைவான இடங்களில் இருந்தும் நல்ல தகவல்களும், தொடர்புகளும் ஏற்படும்

    என்ன பிரச்னை என்றாலும் கொடுக்கும் வாக்கை காப்பாற்ற முடியும். இழுபறியில் இருந்து வந்த விஷயங்கள் செட்டில் ஆகி லாபம் வரும். சிலருக்கு வெளிநாடு தொடர்பான காண்ட்ராக்ட் விஷயங்கள், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பெட்ரோல் போன்ற விஷயங்கள் குறிப்பாக அரபு நாடுகள் தொடர்பான விஷயங்களில் வெற்றிகளும், லாபங்களும் இருக்கும். கன்னி என்றாலே வெற்றிதான் என்பதை இந்த மாதம் உங்கள் செயல்களால் மற்றவர்களுக்கு புரிய வைப்பீர்கள். நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் கிடைக்காத சில விஷயங்கள் இப்போது சுலபமாக கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். உங்களைப் பிடிக்காதவர்கள் உங்களைக் கண்டாலே ஒளிந்து ஓடுவார்கள்.

    1,4,12,13,14,20,22,23,26,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ம்தேதி காலை 7.39 மணி முதல் 9-ம்தேதி மதியம் 12.31 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களை தள்ளி வையுங்கள். இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்.

  • ஜூலை மாத ஆரம்பத்தில் முதலிரண்டு வாரங்கள் ராசிநாதன் சுக்கிரன் பத்தாமிடத்தில் ராகுவுடன் இணைந்து, வலு இழந்து ஒளி குறைந்த நிலையை அடைவதால் மாதத்தின் ஆரம்ப நாட்கள் உங்கள் பொறுமையை சோதிப்பதாகவும் பிற்பகுதி நாட்கள் பிரச்சினைளை தீர்த்து நன்மைகளைத் தருவதாகவும் அமையும்.

    அதேநேரத்தில் மற்ற கிரகங்கள் நல்ல அமைப்பில் உள்ளதால் துலாம் ராசிக்கு துன்பங்கள் எதையும் சொல்வதற்கு இல்லை. பெண்கள் விஷயத்தில் மட்டும் சற்றுத் தள்ளியே இருங்கள். மனம் சற்றுப் பதட்டத்துடனும் எரிச்சலுடனும் இருந்தாலும் அனைத்தும் கட்டுபாட்டுக்குள் இருக்கும். இராசிநாதன் பலவீனம் பெறுகிறார் என்பதால் சிலருக்கு கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலை இருக்கும். சில விஷயங்கள் இழுபறியாக தாமதமாக முடியும்.

    மாத ஆரம்பத்தில் பாக்கியாதிபதி புதன் ஒன்பதாமிடத்தில் ஆட்சி பெறுவதால் தடைபட்டிருக்கும் பாக்கியங்கள் வயதுக்கேற்ற வகையில் உங்களுக்குக் கிடைக்கும். நீண்ட நாட்களாக திருமணம், வேலை, புத்திரபாக்கியம் தாமதப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு இப்போது மன மகிழ்ச்சி உண்டு. வியாபாரிகள், விவசாயிகள், பத்திரிக்கை துறையினர், கலைஞர்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது நல்ல மாதம்.

    குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். வேலைக்கு செல்லும் மனைவியால் உதவிகளும் தேவைகள் நிறைவேறுதலும் இருக்கும். எட்டாமிடம் பாப வலுப் பெறுவதால் புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. மனம் சற்று அலைபாய்ந்து, முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுங்கள். இரண்டுக்குடையவன் வலுத்து தனயோகம் ஏற்படுவதால் என்ன பிரச்சனைகள் இருந்தாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. பிற்பகுதியில் சுகம் காணும் மாதம் இது. முதல் இரண்டு வாரங்கள் நிதானமாக இருங்கள்.

    1,5,6,8,17,18,24,25,27,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 9-ம்தேதி மதியம் 12.31 மணி முதல் 11-ம்தேதி மதியம் 2.02 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய விஷயங்கள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். யாரிடமும் கோபப்பட்டு பேசுவதும் இந்த நாட்களில் கூடாது.

  • சனிபகவான் இறுதிப்பகுதியான பாதச் சனியாக வந்து விட்டதால் இனிமேல் உங்களுக்கு கொடுமையான பலன்களைத் தராமல் இரக்கம் காட்டுவார். நிஜமாகவே விருச்சிக ராசிக்கு சோதனைகள் விலகும் மாதம் இது. குறிப்பாக கேட்டை நட்சத்திரக் காரர்களின் மன அழுத்தங்கள் நீங்கும். அதோ இதோ என்று ராசிபலனில் நான் போக்குக் காட்டிக் கொண்டிருந்தாலும் இந்த மாதம் உண்மையான திருப்பங்கள் வருவதை உங்களில் சிலர் உணருவீர்கள். சிலர் ஏற்கனவே பிரச்னைகள் தீர ஆரம்பித்திருப்பதை உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

    முக்கியமாக இளையபருவத்தினர் சோம்பலை விட்டு ஒழியுங்கள். அதிகாலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்து வேலையை பார்க்க வந்து விட்டாலே பாதி வேலை முடிந்து விட்டதாக அர்த்தம். சுறுசுறுப்பாக ஆக்டிவாக இருங்கள். விருச்சிகத்தின் திறமைகள் வெளிவரும் மாதம் இது. அதிர்ஷ்டம் இந்த மாதம் கை கொடுக்கும். முக்கியமான சில பிரச்னைகள் இந்த மாதம் நீங்கி நிம்மதியாக உணர்வீர்கள்.

    என்னதான் ஒருவரை இறைவன் கடுமையாக சோதித்தாலும் கடைசி நேரத்தில் அவரைக் கைவிட மாட்டார் என்பது இப்போது உங்கள் விஷயத்தில் நடக்கும். இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகளும், எதிர்த்து வந்தவர்களும் மனம் மாறி உங்களையும், உங்கள் கருத்துகளையும் ஆதரிக்கும் மாதம் இது. சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது.

    வீண்செலவுகளும், தேவையற்ற விரயங்களும் இருக்கும் என்றாலும் செலவு செய்வதற்கு ஏற்ப தேவையான வருமானமும், பணவரவும் நிச்சயம் இருக்கும் என்பதால் எதற்கும் கவலை வேண்டாம். வேலை வாங்கித் தருவதாக எவராவது சொன்னால் முன்னாலேயே நம்பி பணம் தர வேண்டாம். ஏமாறுவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது. மாத முற்பகுதியில் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி தீர்த்துக்கொள்வது நல்லது.

    1,2,3,6,7,15,17,20,22,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 11-ம்தேதி மதியம் 2.02 மணி முதல் 13-ம்தேதி மதியம் 1.42 மணி வரை சந்திரன் எட்டில் மறையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் உங்களுக்கு தெளிவற்ற மனநிலை இருக்கும். இந்த நாட்களில் எவ்வித புதிய ஆரம்பங்களும், முயற்சிகளும் செய்ய வேண்டாம்.

  • யோகாதிபதி சூரியனும், ஜீவனாதிபதி புதனும் இணைந்து ராசியைப் பார்க்கிறார்கள் என்பதால் தனுசு ராசிக்கு நன்மைகள் கிடைக்கும் மாதம் இது. குறிப்பாக ஐம்பது வயதினைக் கடந்த இரண்டாவது சுற்று பொங்கு சனியினைக் கொண்டவர்களுக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவனஅமைப்புகளில் நல்ல வருமானம் இருக்கும். ஜனனகால ஜாதகப்படி யோக தசா, புக்திகள் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு இரட்டிப்பு நன்மைகள் உண்டு.

    இளைய பருவத்தினர் புதிதாக தொழில் ஆரம்பிப்பதோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வதோ ஒரு முறைக்கு நான்கு முறை நன்கு யோசித்து செய்வது நல்லது. ஜென்மச்சனி முடியும் வரை புதிய முயற்சிகள் எதுவும் கை கொடுக்காது. எவரையும் நம்ப வேண்டாம். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதையே திறம்பட செய்வது நல்லது. உங்களில் சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். நடுத்தர வயதை தாண்டியவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை வைப்பது நல்லது. சிறிய விஷயத்திலும் அலட்சியம் வேண்டாம். எட்டாமிடத்தில் சுக்கிரன் ராகுவுடன் இணைவதால் பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். சகோதரிகளால் செலவு உண்டு. கணவன், மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும். பெண்கள் விஷயத்தில் நினைப்பது நடக்காது.

    அலுவலகத்தில் தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு நன்மைகள் உண்டு. குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும். நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இப்போது குழந்தை பிறக்கும்.

    5,6,7,12,13,19,20,22,30,31 ஆகிய நாட்களில் பணம் வரும். 13-ம்தேதி மதியம் 1.42 மணி முதல் 15-ம்தேதி மதியம் 1.28 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் செய்யவேண்டாம். மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

  • மகரத்திற்கு வேலை, தொழில் போன்றவைகளிலும் குடும்பத்திலும் மாற்றங்கள் நடக்கக் கூடிய மாதம் இது. சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாறுதல் இருக்கும். பெரும்பாலான மகரத்தினருக்கு குடும்பம், வேலை, தொழில் போன்றவைகளில் ஊர்மாற்றம், இடமாற்றம், தொழில்மாற்றம் போன்றவைகள் உண்டு. மாத ஆரம்பத்தில் தேவையற்ற விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு வந்து உங்களைக் குழப்பினாலும் பிற்பகுதியில் அனைத்தையும் நல்லமுறையில் சமாளித்து வெற்றி எப்போதும் மகரத்தின் பக்கம் என்பதை நிரூபிப்பீர்கள்.

    மாதத்தின் முதல் வாரங்களில் ஆறாமதிபதி புதன் ஆட்சி வலுப் பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். தனாதிபதியும் ராசிநாதனுமாகிய சனி குருவின் வீட்டில் வலுவாக இருப்பதால் தாராளமான பணவரவு உண்டு. வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். கணவன், மனைவி உறவும், வாழ்க்கைத்துணை வழியில் உதவிகளும் சுமாராகவே இருக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக வழக்குகளும், கோர்ட் கேஸ் போன்றவைகள் இருப்பவர்கள் வழக்கை முடிக்குமாறு அவசரப்பட வேண்டாம்.

    செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல் படுவது நல்லது. போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம். பங்குச் சந்தை வேண்டவே வேண்டாம். தேவையில்லாமல் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. சிறுசிறு உடல் கோளாறுகள் வரலாம். சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. முக்கியமாக கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் எடுப்பவர்களுக்கு விசா போன்றவைகள் ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு கை கொடுக்கும். நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்குவழி வேண்டாம்.

    2,3,7,8,9,12,13,22,27,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 15-ம்தேதி மதியம் 1.28 மணி முதல் 17-ம்தேதி மதியம் 3.07 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வெகுதூர பிரயாணங்களை தள்ளி வைப்பது நல்லது. புதிய முயற்சிகளும், ஆரம்பங்களும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

  • கோட்சாரக் கிரக நிலைகள் சாதகமாக இருந்தாலும் பிறந்த ஜாதக அமைப்பின்படி யோக தசா புக்திகள் நடக்காத பெரும்பாலான கும்ப ராசிக்காரர்கள் நல்லவைகளை அனுபவிக்க முடியாமல் சிக்கல்களில் இருக்கிறீர்கள். அவர்களுக்குக் கூட ஓரளவாவது நன்மைகளைத் தரும் மாதமாக ஜூலை இருக்கும். இதுவரை நல்லவை எதுவும் நடக்காமல் கிணற்றில் போட்ட கல்லாக வாழ்க்கை இருப்பவர்களுக்கு ஆகஸ்டுக்கு மாதத்திற்கு மேல் மேன்மைகள் உண்டு. குல தெய்வத்திற்கான நேர்த்திக் கடன்களை செலுத்தாமல் இருப்பவர்கள் உடனடியாக நிறைவேற்றுங்கள்.

    குருபகவான் வலுவாக இருப்பதால் பண வரவிற்கு குறை இருக்காது. எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள். எதிர்பாராத தனலாபங்கள் இந்த மாதம் இருக்கும். நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயங்கள் ‘சட்’ என்று முடிவுக்கு வந்து ஒரு நல்லதொகை கைக்கு கிடைக்கும். வீடு வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்குகிறது. இருக்கும் வாகனத்தை மாற்றிவிட்டு அதைவிட நல்ல வாகனம் வாங்க முடியும். வாகனம் இல்லாதவர்களுக்கு தற்போது வாகனம் வாங்குவதற்கான யோகம் இருக்கிறது. ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்கள் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் யோகத்தை தரும்.

    இதுவரை நடந்து வந்த எதிர்மறை பலன்கள் இனிமேல் இருக்காது. கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். எந்த விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது. ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.

    1,3,7,8,9,14,15,17,29,31 ஆகிய நாட்களில் பணம் வரும். 17-ம்தேதி மதியம் 3.07 முதல் 19-ம்தேதி மதியம் 7.56 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களோ யாரையும் நம்பி முடிவெடுப்பதோ இந்த நாட்களில் கூடாது. கூடுமானவரை எதையும் இந்த நாட்களில் ஒத்தி வைப்பது நல்லது.

  • நவம்பர் மாதம் வரை உங்களின் ராஜ யோகாதிபதி செவ்வாய் பதினொன்றாமிடத்தில் உச்ச வலுவுடன் இருக்கிறார். இந்த அமைப்பு எப்படிப்பட்ட பிரச்னை வந்தாலும் அதை தடுக்கும் கேடயமாக செயல்பட்டு உங்களை அனைத்திலும் காப்பாற்றும். அதன்பிறகு குருபகவான் ஒன்பதுக்கு மாறி விடுகிறார் என்பதால் இனிமேல் மீனத்திற்கு எதிலும் ஜெயம்தான். அஷ்டம குருவின் ஆதிக்கத்தினால் உங்களுக்கு தொழில், குடும்பம் போன்றவைகளில் இருந்து வந்த சங்கடங்களும் சாதகமற்ற விஷயங்களும் இந்த மாதம் விலகும்.

    இனிமேல் புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் செயலாற்றுவீர்கள். மீனத்தினர் இந்த மாதம் மனதளவிலும் உடல்நிலையிலும் பத்து வயது குறைந்த புத்துணர்ச்சியையும், சந்தோஷத்தையும் அனுபவிப்பீர்கள் என்பது நிச்சயம். இதுவரை வேலை, வியாபாரம், தொழில் விஷயங்களில் இருந்து வந்த இடைஞ்சல்கள் நீங்கும். வேலை கிடைக்காதவருக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரம் மீண்டும் சூடு பிடிக்கும். எதிரிகளின் தொந்தரவு ஒழியும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

    கோட்சார கிரக நிலைகள் இனிமேல் உங்களுக்கு நல்ல பலன்களை தரும் என்பதல் நாளை நீங்கள் நன்றாக இருக்க போவதற்கான வழிமுறைகள் இப்போதே ஆரம்பிக்கத் துவங்கும். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். கோர்ட், கேஸ், போலீஸ் விவகாரங்கள் பாதகம் தராது. தொழிலாளர்களுக்கு பணிச்சுமை குறையும். தொழில் அதிபர்களுக்கு சிக்கல்கள் தீரும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் சற்று கசப்புகள் இருக்கும். பொறுத்துப் போவது நல்லது.

    அனைத்து விஷயங்களிலும் சிறிது தடைகள் இருப்பதாகத் தோன்றினாலும் கடைசியில் உங்களுக்கு சாதகமாக வெற்றியாகவே முடியும். வேலை செய்யும் இடங்களில் சந்தோஷமான நிகழ்ச்சிகள் உண்டு. நிலுவையில் இருந்த பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். குல தெய்வ வழிபாடு சரிவரச் செய்யாதவர்கள் உடனே அதைச் செய்யும்படி இருக்கும். பெண்கள் மேன்மை அடைவீர்கள். மாமியார் மாமனார் வகையிலும் நல்லபலன்கள் இருக்கும்.

    4,6,7,8,12,14,15,24,26,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 19-ம்தேதி மதியம் 7.56 மணி முதல் 22-ம்தேதி மதியம் 4.16 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எவருடனும் வீண் பேச்சுக்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இந்த நாட்களில் கோபமும், எரிச்சலும் கலந்த உணர்வுகளில் இருப்பீர்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends










Submit