கண்ணகி கோபத்தை குறைத்த செல்லத்தம்மன்

பிறப்பு : - இறப்பு :

கண்ணகி கோபத்தை குறைத்த செல்லத்தம்மன் செல்லத்தம்மன், கண்ணகி கோபக் குணமுடையவர்களுக்கு, அவர்களின் கோபத்தைக் குறைத்து, மன அழுத்தம், ரத்தம் அழுத்தம் போன்ற நோய்களிலிருந்து விடுபட்டு நல்வாழ்வு வாழ்ந்திட அருள்புரிகிறாள், மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள செல்லத்தம்மன். இந்த அம்மன் மதுரையை எரித்த கண்ணகியின் கோபத்தை தணித்தவள் என்று தல வரலாறு தெரிவிக்கிறது. அந்த வரலாற்றைப் பார்ப்போம்.

தல வரலாறு

சோழநாட்டில் இருக்கும் காவிரிப்பூம்பட்டினத்தில் கோவலன், கண்ணகி திருமணம் நடக்கிறது. மணமக்கள் தனி வீட்டில் குடும்பம் நடத்துகின்றனர். யாழ் இசைப்பதில் வல்லமை கொண்ட கோவலன் ஆடல், பாடல் களிலும் விருப்பம் கொண்டவன். பூம்புகாரில் ஆடல் தொழில் செய்து வந்த மாதவியின் ஆடல் நிகழ்ச்சியைக் கண்டு மனம் மகிழ்ந்த அவன், பின்னர் மாதவியின் வீட்டுக்குச் சென்று அவளுடன் வாழத் தொடங்குகிறான். கோவலனின் செல்வம் அனைத்தும் குறைந்து போகிறது. மாதவியுடன் மனம் வேறுபட்டு, அவளை விட்டுப் பிரிந்து மீண்டும் கண்ணகியிடம் வந்து சேர்கிறான்.

தான் இழந்த பொருள் அனைத்தையும் மீட்டுவிடும் நோக்கத்தில், கண்ணகியை அழைத்துக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து வெளியேறி, மதுரை நோக்கிச் செல்கிறான். அங்கு கோவலன் வணிகம் செய்வதற்காக, கண்ணகி தனது காற்சிலம்புகளில் ஒன்றினைக் கழற்றிக் கொடுக்கிறாள். கோவலன் கண்ணகியை மாதரி எனும் ஆயர்குலப் பெண்ணிடம் அடைக்கலமாக இருக்கச் சொல்லிவிட்டு, அந்தச் சிலம்பை விற்பதற்காக நகருக்குள் செல்கிறான்.

நகருக்குள் சென்ற கோவலன், தான் கொண்டு சென்ற சிலம்பை அங்கிருந்த அரண்மனைப் பொற்கொல்லனிடம் காட்டுகிறான். அந்தப் பொற்கொல்லன் முன்பே அரசியின் சிலம்புகளில் ஒன்றைத் திருடி இருந்தான். அந்தக் குற்றத்தை மறைக்க இதுதான் சரியான நேரம் என்று எண்ணிய அவன், அந்தச் சிலம்புடன் அரண்மனைக்குச் செல்கிறான். அப்போது அரசவையில் ஆடல் நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியினைக் கண்டு அரசன் தன்னை மறந்து விட்டான் என்று நினைத்து, அரசி மனம் வேறுபட்டு அந்தப்புரம் சென்று விடுகிறாள்.

அரசியைச் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் அரசன் அந்தப்புரம் செல்லும் வழியில், பொற்கொல்லன் அரசனைக் கண்டு, அரசியின் சிலம்பு காணாமல் போன குற்றத்தில் கோவலனைத் திருடனாக்கிக் குற்றம் சுமத்துகிறான். இந்நிலையில் அரசன் அது குறித்து முழுமையாக விசாரிக்காமல் கோவலனுக்கு மரண தண்டனை அளித்து விடுகிறான். கோவலனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

இச்செய்தி அறிந்த கண்ணகி கோபத்துடன் பாண்டிய மன்னனின் அவைக்குச் சென்று வழக்கு உரைக்கிறாள். இந்த வழக்கின் முடிவில் உண்மையறிந்த பாண்டிய மன்னன், தனது தவறான தீர்ப்பை நினைத்து வருந்தி, அவன் அமர்ந்திருந்த அரியணையிலிருந்து கீழே விழுந்து உயிர் துறக்கிறான். அரசனைத் தொடர்ந்து அரசியும் தனது உயிரை விடுகிறாள். அதன் பின்பும் கண்ணகியின் கோபம் குறையவில்லை. தனது கற்பின் வலிமையால் மதுரை மாநகரத்தையே நெருப்புக்கு இரையாக்குகிறாள்.

அந்தக் கோபத்துடனே அங்கிருந்து வெளியேறி, நீண்ட தூரம் நடந்து சென்ற அவள் சேரநாட்டை அடைகிறாள். அங்கிருந்த குன்றில் வேங்கை மர நிழலில் நின்று கொண்டிருக்கிறாள். அவளைக் கண்ட வேடுவர்களிடம், தான் அடைந்த துன்பம் கொண்ட தனது வாழ்க்கையினை முழுமையாகக் கூறுகிறாள். அதன் பின்னர், அங்கு வானோர் வடிவில் வந்த கோவலனோடு கண்ணகி தெய்வ விமானமேறி வானகம் சென்றாள்.

பிற்காலத்தில், கண்ணகியின் கற்புத்திறனை உணர்ந்த மக்கள், அவளைத் தெய்வமாக நினைத்து வழிபடத் தொடங்கினர். மதுரையில் அவள் தங்கியிருந்த இடத்தில் அவளுக்குச் சிலை அமைத்துக் கோவில் கட்டி வழிபாடுகளைச் செய்யத் தொடங்கினர். இக்கோவில் அமைக்கப்பட்ட நேரத்தில், கோவில் இருந்த பகுதியில் அடிக்கடி தீ விபத்துகள் நடந்தன. கண்ணகியின் சிலை கோபத்துடன் இருப்பதாலேயே இது போன்ற தீ விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன என்று அங்கிருந்த மக்கள் நினைக்கத் தொடங்கினர்.
இது குறித்து, மக்கள் அனைவரும் அப்போது ஆட்சியிலிருந்த மன்னன் செண்பகப் பாண்டியனிடம் தெரிவித்தனர். மன்னன் தனது அமைச்சர்களுடன் இது குறித்துப் பேசினான். அமைச்சர்களிடமிருந்து சரியான ஆலோசனை எதுவும் கிடைக்காததால், மன்னன் கவலையடைந்தான்.

இந்நிலையில் ஒருநாள் இரவில் அவன் கனவில் தோன்றிய சிவபெருமான், அந்த இடத்தில் பார்வதி சிலையினை வைத்துக் கோவிலை மாற்றி அமைக்கும்படி தெரிவித்தார். அதன் பிறகு மன்னன், அம்பாள் சிலை ஒன்றை வடிவமைக்கச் செய்து, அந்த அம்பாளையே முதன்மை தெய்வமாக்கி அந்தக் கோவிலை மாற்றியமைத்தான். அதன் பின்னர் அந்தப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவது நின்றுபோனது.

இந்தக் கோவிலில் அமைக்கப்பட்ட பார்வதி சிலை, அந்த மன்னன் பெயரைக் கொண்டு செண்பகத்தம்மன் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் அந்தப் பெயர் மருவி செல்லத்தம்மன் என்று ஆகிவிட்டது என இக்கோவிலின் தலவரலாற்றைச் சொல்கின்றனர்.

கோவில் அமைப்பு

ஒரு அசுரனைக் கொன்ற நிலையில், கையில் கொன்றை மலர் ஒன்றினைப் பிடித்தபடி வடக்கு நோக்கி செல்லத்தம்மன் இருக்கிறார். கோவிலின் முன் மண்டபத்தில் கிழக்கு நோக்கி செல்லத்தம்மன் உற்சவ அம்பிகைக்குத் தனிச்சன்னிதி அமைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, அமைக்கப்பட்டுள்ள சன்னிதியில் வடக்கு நோக்கியபடி துர்க்கையம்மன், இடைச்சியம்மன் (மதுரை வந்த கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்த மாதரி, இடைச்சியம்மன் எனும் பெயரில் இடம் பெற்றிருக்கிறார்) சிலைகள் இருக்கின்றன. இதைத் தொடர்ந்து கிழக்கு நோக்கி, கையில் சிலம்புடன் இருக்கும் பெரிய அளவிலான கண்ணகி சிலை இருக்கிறது. இதையடுத்து, மீனாட்சி, சிவபெருமான், அய்யனார், காலபைரவர், ஐயப்பன் சிலைகள் இடம் பெற்றிருக்கின்றன. வெளிப்பகுதியில் செல்லத்தம்மனுக்கு எதிராக பேச்சியம்மன் சன்னிதி அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், கோவில் வளாகத்தில் நாகர், கருப்பசாமி போன்றவர்களுக்கும் தனிச்சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

வழிபாடு

இக்கோவிலில் செல்லத்தம்மனுக்கு நாள்தோறும் வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. செல்லத்தம்மனுக்கு வழிபாடு நடந்து முடிந்த பின்பு கண்ணகிக்கும் தனி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. கோப குணமுடையவர்கள் தங்களின் கோபத்தைக் குறைக்க வேண்டியும், மன அழுத்தம், ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த நோயிலிருந்து விடுபட வேண்டியும் செல்லத்தம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்து வணங்குகின்றனர். இது போல், கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருக்கும் கணவன், மனைவியர் ஒன்றுபட்டு வாழ்ந்திட இங்குள்ள கண்ணகிக்கு எலுமிச்சை மாலை, தாலிப்பொட்டு அணிவித்து வேண்டுகின்றனர். திருமணமாகாத பெண்கள், தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டுமென்று செல்லத்தம்மன், கண்ணகி என இருவரையும் வேண்டிச் செல்கின்றனர்.

அமைவிடம்

மதுரை மாநகரின் மத்தியப் பகுதியான சிம்மக்கல் பகுதியில் இக்கோவில் அமைந்திருக்கிறது. மதுரை நகரில் இயக்கப்படும் பெரும்பான்மையான நகரப் பேருந்துகள் சிம்மக்கல் பகுதி வழியாகவே செல்கின்றன.
-தேனி மு.சுப்பிரமணி.

செல்லத்தம்மனுக்கு சிறப்பு

மதுரை மீனாட்சியம்மன் கோவில் தை பிரம்மோற்சவ விழாவின் போது, சிவபெருமான், அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படும். அந்த நிகழ்வின் போது, செல்லத்தம்மன், மீனாட்சியம்மன் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறார். அங்கு சிவபெருமான் சன்னிதி முன்பாக இருக்கும் ஆறுகால் மண்டபத்தில் அம்மன் சிலை வைக்கப்படும். அப்போது, சிவபெருமான் சன்னிதியில் இருந்து எடுத்து வரப்படும் பட்டுச்சேலை செல்லத்தம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது. பின்பு திருமாங்கல்யம் சூட்டப்படுகிறது. மறுநாள் செல்லத்தம்மன் திருமணப்பட்டுடன் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit