வீடு, மனைவி, மக்கள் இருந்தும் நடுத்தெருவில் நிற்கிறேன். நடிகர் விக்னேஷ் உருக்கமான பேட்டி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இளையராஜா இசையமைத்த “சின்னத்தாய்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் விக்னேஷ். முதல் படமே 105 நாட்கள் ஓடி வசூலைக் குவித்தது. தொடர்ந்து, “கிழக்குச் சீமையிலே’, “பசும்பொன்’ (பாரதிராஜா), “ராமன் அப்துல்லா’ (பாலுமகேந்திரா), “பொங்கலோ பொங்கல்’ (வி.சேகர்) போன்ற வெற்றிப் படங்களிலும் நடித்தவர். கொஞ்ச காலம் இடைவெளிவிட்டு, மீண்டும் சினிமாவுக்கு வந்தவரின் வாழ்க்கையில் பிரளயம். “நீங்க சொந்தப்படம் தயாரிச்சிங்கன்னா, நான் தற்கொலை பண்ணிக்குவேன்’ என்று மனைவியிடமிருந்து மிரட்டல். தற்போது மனைவியையும் பிரிந்துவிட்டு, தான் காதலித்த சினிமாவை மட்டும் கரம் பற்றி இருப்பவரைச் சந்தித்தால்…

“”என் மனைவிக்கு சினிமா பிடிக்கும். ஆனால், நான் செலவு செய்து எடுக்கும் சினிமாவைத்தான் பிடிக்கவில்லை. காரணம், அந்த அளவுக்கு வலி. சினிமாவை விட்டு விலகியிருந்த நாட்களில் சொந்தமாகத் தொழில் செய்து சிறுகச் சிறுக சேர்ந்த காசை மறுபடியும் நான் சினிமாவில் விட்டு விட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் அவளுக்கு.

ஏற்கெனவே “சூரி’ என்ற படத்தில் நடித்தபோது அதன் தயாரிப்பாளருக்கு உதவப் போய் என் கோயம்பேடு இடத்தை விற்றுதான் பணம் கொடுத்தேன். ஆனால், “சூரி’ படம் சரியாகப் போகலை, ஆனால்… என் இரண்டு கோடி ரூபாய் சொத்து போச்சு. அந்த அனுபவம்தான் என் மனைவியை யோசிக்க வைச்சது. படத்தில் வேணும்னா நடி. ஆனால் தயாரிப்பு மட்டும் வேண்டாம்’ என்றாள். நான் கேட்டால்தானே… அதுதான் இந்தப் பிரிவு. ஆனால், இது நிரந்தரமில்லை என்று எனக்குத் தெரியும்.

சினிமாக்காரர்கள் எல்லோருமே கஷ்டப்படுகிறோம் என்று சொல்வார்கள். நான் அப்படிச் சொல்ல விரும்பவில்லை. நான் சினிமாவைக் காதலிக்கிறேன். அதனால்தான் வெற்றிகரமாக வேறு தொழில்களில் சம்பாதித்ததைக்கூட துணிந்து சினிமாவில் முதலீடு செய்கிறேன்.

நான் பிறந்தது ஈரோடு மாவட்டம் மூலனூரில்… என் பாட்டி (அப்பாவின் அம்மா) தான் என்னை வளர்த்தார்கள். ஹைதராபாத்தில் வேலையில் இருந்த என் பெற்றோர், எனக்கு ஒன்றரை வயதாக இருக்கும் போதே பாட்டியிடம் என்னை ஒப்படைத்து விட்டுச் சென்று விட்டனர். அப்பா – அம்மா, பாசம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்தேன். பள்ளியில் ஏற்றத் தாழ்வினால் மிகவும் காயப்பட்டேன். அப்போதே வாழ்க்கையில் நாம் எப்பாடுபட்டாவது முன்னேற வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.

அப்போதுதான் எல்லா இளைஞர்களுக்கும் ஏற்படும் சினிமா ஆசை எனக்கும் உண்டானது.

சென்னைக்கு வந்து 7 வருடங்கள் போராடினேன். சினிமாவில் பலரிடம் உதவியாளராகப் பணிபுரிந்தேன். கொடுத்த வேலையை ஒழுங்காகவும் ஈடுபாட்டுடனும் செய்ததால், நல்ல பெயர் கிடைத்தது. முதல் படத்திலேயே கதாநாயகனாகவும் நடித்தேன்.

ஆனால், பாலுமகேந்திராவின் “வண்ண வண்ண பூக்கள்’ படம் நான் நடிக்க வேண்டியது. மூன்று நாட்கள் அந்தப் படத்தில் நடிக்கவும் செய்தேன். அப்போது படப்பிடிப்பு தளத்துக்கு நடிகை அர்ச்சனா வந்தார். அவர், “இந்தப் பையனும் புதுப் பையன், என் சொந்தக்காரப் பையனும் புதுப்பையன். என் சொந்தக்காரப் பையனையே நடிக்க வைக்கலாமே” என்றார். பாலுமேந்திரா மறுத்துவிட்டார். கோபமான அர்ச்சனா, அருகில் இருந்த பேப்பர்களைத் தூக்கி எறிந்துவிட்டு, “குட் பை பாலு’ என்று கத்திவிட்டுப் போய்விட்டார். பாலு சாரும் கோபத்தில் அன்று பேக்-அப் சொல்லிவிட்டார். கொஞ்ச நாள் கழித்து, புதுமுகமே வேண்டாம் என்று, தெரிந்த முகமான பிரசாந்தை நடிக்க வைத்துவிட்டார்.

இயக்குநர் பாலா, என்னையும் நடிகை கீர்த்தனாவையும் வைத்து “சேது’ படத்தை இயக்கினார். “சேது’ படத்தில் முழுக்க நான் நடித்தேன். பாலா என் வீட்டில் தங்கி தினமும் எனக்கு நடிப்பைச் சொல்லிக்கொடுத்தார். அப்போது தாணு சாரிடம் மேனேஜராக இருந்தவர்தான் அந்தப் படத்தைத் தயாரித்தார். அவரால் தொடந்து தயாரிக்க முடியவில்லை. பைனான்ஸ் இல்லாததால் படம் டிராப் ஆயிடுச்சு. பொறுமை இழந்து ஆறு மாதம் கழித்து பாலாவும் ஆபீசை காலி பண்ணிவிட்டார். பிறகு, இரண்டு வருடம் கழித்து அதே “சேது’வை விக்ரமை வைத்து இயக்கினார்.”

“அப்போது உங்களை நடிக்க கூப்பிடலையா?’

“நான் அப்போது, “காதலி’, “ராமன் அப்துல்லா’ ஆகிய படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தேன். அதனால் என்னை அவர் அப்ரோச் பண்ணவில்லை.”

“சரி… 40 படங்களுக்கு மேல் நடித்தும்கூட சினிமாவில் ஒரு இடத்தைப் பிடிக்க வில்லையே?’

“”தெளிவான புரிதல் இல்லை. நல்ல படங்களைத் தேர்வு செய்து நடிக்கும்படி சொல்ல நண்பர்கள் யாரும் இல்லை. “கிழக்குச் சீமையிலே’ படம் வெளிவந்ததும், 7,8 படங்கள் ஒப்பந்தமானது. எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டேன். அதில் மூன்று படம்தான் வெளியானது. மற்ற படங்கள் என்ன ஆனதென்றே தெரியவில்லை. வெளிவந்த படங்களும் நல்ல பேரைப் பெற்றுத் தரவில்லை. அந்த நேரத்தில், என்னைத்தேடி வந்த பெரிய நிறுவனங்களையும், நல்ல கதைகளையும் நான் இழந்து விட்டேன். எனக்கு சரியான வழிகாட்டி இருந்திருந்தால், இந்த நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டேன்.”

“இன்னைக்குச் சினிமா நாளுக்குநாள் மாறிக்கிட்டிருக்கு, இந்தச் சூழலில் “அவன் அவள்’ தாக்குப் பிடிக்குமா? என்ன மாதிரியான கதை?’

“”இன்னைக்கு எந்த மாதிரியான திரைப்படங்கள் வெற்றி பெறுகிறது என்று எனக்கும் தெரியும். “சதுரங்க வேட்டை’, “ஜிகர்தண்டா’ “முண்டாசுப்பட்டி’ போன்ற படங்கள்தான் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது. பெரிய ஹீரோ என்பதால் ஓப்பனிங் வேண்டுமானால் இருக்கும். படம் பிடிக்கவில்லை என்றால், அடுத்த நாளே தியேட்டருக்குப் போகமாட்டார்கள்.

“அவன் அவள்’ திரில்லர் கதை. இன்றைக்கு ஆண்களும் பெண்களும் எதற்காக வாழ்கிறோம் என்று தெரியாமலேயே வாழ்கிறார்கள். யாருமே சந்தோஷமாக இல்லை. பக்கத்து வீட்டைப் பார்த்து தன் வீட்டை மறக்கிறார்கள் பெண்கள்.

தேவைக்கு மீறிய வசதிகளுக்காக ஆண்களை இயந்திரமாக்குகிறார்கள். சில பெண்கள் தடம் மாறவும் செய்கிறார்கள். ஒரு பெண் தடம் மாறினால் என்ன நடக்கும் என்பதை திரில்லர் பின்னணியில் சொல்லியிருக்கிறோம்.

எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்று என் மொத்த சேமிப்பையும் போட்டுத்தான் “அவன் அவள்’ படத்தைத் தயாரிக்கிறேன். இதற்கு என் மனைவி கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததனால் அவளுடன் பேசுவது இல்லை. வீட்டுக்கும் செல்வதில்லை. எடிட்டிங் ஸ்டூடியோவிலேயே தங்கி இருக்கிறேன். ஒரே ஒரு வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன். அதற்காக, வீடு, மனைவி, மக்கள் இருந்தும் நடுத்தெருவில் நிற்கிறேன்.

இந்த முறை தமிழக மக்கள் எனக்கு வெற்றியைக் கொடுத்து நான் இழந்த எல்லாவற்றையும் மீட்டுத் தருவார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன்” என்றார் விக்னேஷ்.

அவரது நம்பிக்கை பொய்க்காமல் இருக்கட்டும்!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*