சர்வதேசத்தால் மறக்கப்படும் தமிழர் தரப்பு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

sri-lanka_534659a1

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு, சர்வதேச மட்டத்தில் வலுவிழந்து விட்டதையே ஐ.நா அதிகாரிகளின் அண்மைய கருத்துக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன.

கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட, போர்க்குற்ற விசாரணை தொடர்பான கருத்துக்கு, ஐ.நா தரப்பில் அளிக்கப்பட்டுள்ள பதில் அதனைத் தான் புலப்படுத்துகிறது.

வாதுவவில் நடந்த சட்டக் கருத்தரங்கில் உரையாற்றியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போருடன் தொடர்பான விடயங்கள் தொடர்பான விசாரணைகளை அடுத்து நடத்தப்படும் உள்நாட்டு நீதிச் செயல்முறைகளில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு, தான் இணங்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.

அதாவது முதற்கட்டமாக போர் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளில் மீறல்கள் இடம்பெற்றிருப்பது உறுதியாகி, எவர் மீதாவது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட நேரிட்டால், அந்த விசாரணைகளில் வெளிநாட்டவர்களுக்கு இடமளிக்க முடியாது என்று தான் ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

உள்நாட்டு நீதித்துறை நம்பகமானது என்றும், உள்நாட்டு நீதித்துறை அரசியல் தலையீடுகளின்றி சுதந்திரமாகச் செயற்படுவதற்கு தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்திருந்தார்.

ஏற்கனவே இலங்கையின் நீதித்துறை சுதந்திரமானதாக இல்லை, அரசியல் தலையீடுகள் மிக்கது என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும், பலமுறை ஒப்புக்கொண்டிருந்தனர்.

அதுபோலவே இலங்கையின் நீதித்துறைக் கட்டமைப்பு பக்கசார்பானது, நம்பகமற்றது என்பதால் தான், வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குத்தொடுனர்களை உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும் கூறியிருந்தார்.

இலங்கையின் நீதித்துறை மீதான நம்பகமற்ற நிலைதான், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம் என்ற கருத்து வலுப்பெறக் காரணமாக இருந்தது.

ஆனாலும், போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புத் தொடர்பாக அரசாங்கம் அவ்வப்போது குழப்பமான தகவவல்களையே வெளிப்படுத்தி வருகிறது.

சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகிறார், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்,வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், இதுபற்றி இன்னமும் முடிவெடுக்கவில்லை, வெளிநாட்டு பங்களிப்புக்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது என்று கூறுகின்றனர்.

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு ஏற்கப்படுமா – இல்லையா என்ற விவாதங்களுக்கு இலங்கை அரசாங்கம் இன்னமும் முற்றுப்புள்ளி வைக்கவில்லை.

ஏனென்றால், போர்க்குற்ற விசாரணை தொடர்பான எந்த இறுதி முடிவும் இன்னமும் எடுக்கப்படவில்லை.

விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படும் காலஎல்லை பற்றி அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டது. ஆனாலும் இன்னமும், எந்த முடிவையும் எடுக்கவில்லை.

விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைப்பது இங்கு பிரச்சினையான விடயமல்ல. அது உள்ளகப் பொறிமுறைதான் என்பது கூட உறுதியாகி விட்டது.

அந்த உள்ளகப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளும் விடயத்தில் தான் எந்த தெளிவான முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது.

இந்த விசாரணைப் பொறிமுறை விடயத்தில் நான்கு விதமான பார்வைகள் உள்ளன.

முதலாவது- பாதிக்கப்பட்ட தரப்பான தமிழர்களின் பார்வை. இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உள்நாட்டு விசாரணைகள் நியாயம் வழங்க தவறியதை அடிப்படையாக கொண்டு, சர்வதேச விசாரணையே தேவை என்பதே அது.

இரண்டாவது, ஐ.நா மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் நிலைப்பாடு. இது இலங்கையின் அண்மைக்கால நீதித்துறை செயற்பாடுகள்  நியாயமற்றது – பக்கச்சார்பானது என்பதால், சர்வதேச விசாரணையே அவசியம் என்று வலியுறுத்தியது.

மூன்றாவது – இலங்கை அரசின் நிலைப்பாடு. சர்வதேச விசாரணை தேவையில்லை, உள்நாட்டு விசாரணைகள் மூலமே தீர்வு காணலாம் என்கிறது அது.

நான்காவது – வெளிநாடுகளை உள்ளடக்கிய சர்வதேச சமூகத்தினது பார்வை. சர்வதேச விசாரணை என்பதை பெரும்பாலான நாடுகள் ஏற்காவில்லை. இலங்கை உள்நாட்டு விசாரணை நடத்தினால் போதும் என்கிறது ஒரு பகுதி. இன்னொரு பகுதி சர்வதேச விசாரணை, கலப்பு விசாரணை என்று அவ்வப்போது குழம்பி நிற்கிறது.

இவ்வாறான நான்கு நிலைகளுக்குள் இந்த விவகாரம் சிக்கியிருக்கிறது.

இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர், போர்க்குற்ற விசாரணை தொடர்பான சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடுகளிலும் பிறழ்வுகள் ஏற்பட்டு விட்டன.

சர்வதேச சமூகத்தின் இந்த நிலை மாற்றத்துக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று தமக்கு வசதியான ஆட்சியொன்று கொழும்பில் உருவாகியுள்ள நிலையில் அதனைப் பாதுகாக்க வேண்டும் என்று கருதும் மேற்கு நாடுகள், தமது முன்னைய இறுக்கமான நிலைப்பாடுகளைத் தளர்த்தத் தொடங்கியுள்ளன.

அடுத்தது, இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள போதிலும், அடுத்த கட்டமாக எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியாது என்ற சிக்கலான நிலையும் சர்வதேச சமூகத்துக்கு இருக்கிறது.

இதனால், விட்டுப் பிடிக்க சர்வதேச சமூகம் தீர்மானித்து விட்டது. கடந்த ஒக்ரோபர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அதனை அடிப்படையாகக் கொண்டது தான்.

அந்த தீர்மானத்தில் கலப்பு விசாரணைப் பொறிமுறை என்று கூட நேரடியாகச் சொல்லப்படவில்லை. அதற்குப் பதிலாகத் தான், வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குத்தொடுனர்களின் பங்களிப்புடன் நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஆனால் அந்த தீர்மானமும் கூட இப்போது உறுதியற்றதாக மாறிவருகிறது.

கடந்த மாதம் இலங்கை வந்திருந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனிடம் இதுபற்றிக் கேட்ட போது, கலப்பு விசாரணை அல்லது வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை என்பது தமது பரிந்துரை மட்டும் தான் என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

அது இலங்கைக்கு இடப்பட்ட உத்தரவு அல்ல. வெறும் பரிந்துரைதான். அதன் அர்த்தம் அதனை நடைமுறைப்படுத்தலாம், அல்லது நடைமுறைப்படுத்தாமலும் விடலாம் என்பதேயாகும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட, வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற விடயத்தில் தனது பிடியை தளர்த்தத் தயாராக இருக்கிறது என்பதையே  ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் கருத்து உணர்த்தியிருந்தது.

கடந்தவாரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு நீதிபதிகளை போர்க்குற்ற விசாரணைகளில் உள்ளடக்க அனுமதிக்கமாட்டேன் என்று கூறியது குறித்து ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம் கேள்வி எழுப்பிய போது, அவரிடம் இருந்தும் அதே பதில் தான் வந்திருக்கிறது.

“ விசாரணைகள்  எவ்வாறு போகின்றன என்பதை ஐ.நா மனித உரிமைகள் பேரவை மதிப்பீடு செய்யும்.  ஆனால்  இது நம்பகமான விசாரணையாக என்பதை உறுதிப்படுத்துவதே எமக்குத் தேவை. நம்பகமான விசாரரணை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களை நாம் தெளிவாக கூறியுள்ளோம்.  அவ்வாறு நடப்பதை உறுதிப்படுத்துவதற்கு இலங்கையுடன் தொடர்ந்தும் கலந்துரையாடுவோம்.” என்று அவர் கூறியிருந்தார்.

அவரது இந்தக் கருத்து, உள்நாட்டு விசாரணையா- சர்வதேச விசாரணையா என்பதைக் கடந்த இந்த விவகாரம் வெளியே வந்து விட்டது என்பதை உறுதியாக்கியிருக்கிறது,

இதைவிட, இலங்கை அரசாங்கம் நடத்தப்போகும் விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்பு பற்றியெல்லாம் ஐ.நா கவலைப்படவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது.

நம்பகமான விசாரணைக்கான சில வழிகாட்டல்களை நெறிமுறைகளை ஐ.நா கூறிவிட்டு, அதன்படி நடந்தால் சரி என்ற நிலைப்பாட்டுக்குள் வந்திருக்கிறது.

எனவே இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்காமல் நடத்தப்போகும் விசாரணைகளுக்கு சர்வதேச சமூகம் எதிர்ப்பை வெளியிடப் போவதில்லை. அதற்குத் தான் ஆதரவளிக்கப் போகிறது.

அதேவேளை விசாரணைகள் தமது வழிகாட்டல் முறைக்கு ஒவ்வாததாக இருந்தால் மட்டும் தான், அவர்கள் எதையாவது கூறக் கூடும்.

அங்கேயும் கூட அவர்கள் என்ன நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என்றோ, நம்பகமற்ற விசாரணை என்பது உறுதியானால் அதனை நிராகரிப்பார்கள் என்றோ முழுமையாக எதிர்பார்க்க முடியாது,

எதுஎவ்வாறாயினும், போர்க்குற்ற விசாரணை விவகாரங்களில் சர்வதேச சமூகம் இலங்கை அரசுடன் சமரசம் செய்து கொள்ளத் தாயராகி விட்டது என்பது உறுதியாகியிருக்கிறது.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட தரப்பாகிய தமிழர்கள் தான் நிர்க்கதியாக வெளியே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில், இதுவரை ஐ.நா அதிகாரிகள் கூறிய கருத்துக்கும் இப்போது ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறியுள்ள கருத்துக்கும் இடையில் ஒரு வேறுபாடு இருப்பதை கவனிக்க வேண்டும்.

போர்க்குற்ற விசாரணை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை திருப்திப்படுத்த வேண்டியது முக்கியம் என்று முன்னர் ஐ.நா அதிகாரிகள் கூறிவந்தனர். அதனை இவர் மறந்து விட்டார்.

இதனை பர்ஹான் ஹக் மட்டும் தான் மறந்தாரா அல்லது சர்வதேச சமூகமே அதனை மறந்து விட்டதா?

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit