கவிஞர் வைரமுத்துவும் ஈழ காவியமும் (சண் தவராஜா)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

shan thavarajah katturai

எழுத்து வாசிப்புக்கு உரியது. வாசிப்பு ரசனைக்கு உரியது. எழுத்து பல சாதனைகளைப் படைத்திருக்கிறது. கோபுரத்தில் இருந்தவர்களைக் குப்பை மேட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. குப்பை மேட்டில் இருந்தவர்களைக் கோபுரத்தில் வைத்து அழகு பார்த்தும் இருக்கிறது. சரித்திரங்கள் வரலாறுகளாக எழுதப்பட்டது போக, சில எழுத்துக்கள் சரித்திரங்களைப் படைத்த வரலாறுகளையும் உலகம் கண்டிருக்கிறது.

எழுத்துக்கள் சில சமயங்களில் பாராட்டுக்களையும் சில சமயங்களில் எதிர்ப்புக்களையும் சம்பாதித்து இருக்கின்றது. எழுத்தாளர்கள் சிலர் எதிர்ப்பைச் சமாளிப்பதற்காக தலைமறைவாகி இருக்கின்றார்கள். சிலர் எழுதுவதையே நிறுத்திக் கொண்டும் இருக்கின்றார்கள். சிலர் தமது எழுத்துக்களால் கோடி கோடியாகச் சம்பாதித்து இருக்கின்றார்கள். ஒரு சிலர் தமது எழுத்துக்களுக்கு தமது உயிரையே விலையாகக் கொடுத்தும் இருக்கின்றார்கள்.

எழுதுவது ஒரு சிலருக்குத் தொழில். வேறு சிலருக்கு அது பணி. எழுதுவது ஒரு சிலருக்குப் பொழுது போக்கு. சிலருக்கு அதுவே உணவு. ஜனநாயக நாடுகளில், குறிப்பாக மேற்குலக நாடுகளில் எதைப் பற்றியும் எழுதலாம் என்கின்ற சுதந்திரம் இருக்கின்றது. இது முழுமையான சுதந்திரமாக இல்லாது விட்டாலும், கீழைத்தேய நாடுகளில் நிலவும் அடக்குமுறைகளோடு ஒப்பிடும் போது பாரிய சுதந்திரமாகவே கொள்ளப்படக் கூடியது.

நவீன தகவல் யுகத்தில் சர்ச்சைக்குரிய விவகாரம் ஒன்று தொடர்பிலான எழுத்து, அது நூல் வடிவில் வெளிவர முன்னமேயே அது தொடர்பிலான ஊகங்கள் வெளியிடப்பட்டு நூல் தொடர்பில் எதிர்பார்ப்பு ஒன்று உருவாக்கப் படுகின்றமையை அவதானிக்க முடிகின்றது. சிலவேளை, அது சர்ச்சையானதாகவும் மாறிப் போகின்றது. அவ்வாறு உருவாகும் சர்ச்சை சிலவேளை நூல் வெளியாவதைத் தடுக்கும் அளவிற்குச் சென்று விடுகின்றது. ஒரு சில வேளைகளில் நூலின் உள்ளடக்கத்தையே மாற்றியமைக்கும் வகையில் அமைந்து விடுகின்றது.

ஆனால், நூல் ஒன்றை எழுதப் போகின்றேன் என ஒருவர் தெரிவித்த கருத்து சர்ச்சையானதாக மாறியதாக இதுவரை அறியப்படவில்லை. அது கவிஞர் வைரமுத்து விடயத்திலேயே நடந்திருப்பதாக நான் அறிகிறேன்.

வடக்கு மாகாணசபை முல்லைத்தீவில் நடாத்திய பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் தான் ஈழ காவியத்தைப் படைக்கப் போவதாக அவர் தெரிவித்து இருந்தார். அவரின் அறிவிப்பை வரவேற்று எந்தவொரு ஊடகத்திலும் கருத்துத் தெரிவிக்கப்பட்டு இருந்ததை நான் காணவில்லை. இதில் சமூக ஊடகங்களும் அடக்கம்.

ஆனால், அவரின் அறிவிப்பைக் கண்டிக்கும் அல்லது ஈழ காவியம் படைக்க கவிஞர் வைரமுத்துவிற்கு உள்ள யோக்கியதையைக் குறிக்கும் வாதப் பிரதிவாதங்கள் சமூக வலைத் தளங்களில் அதுவும் ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் வெகு தீவிரமாக நடைபெற்று வருகின்றமையைக் காண முடிகின்றது. இவ்வாறு முன்வைக்கப்படும் விமர்சனங்களுள் ஒருசில கவனத்திற் கொள்ளப் படக்கூடியவையாக இருந்தாலும், பெரும்பாலான விமர்சனங்கள் வீரபாண்டிய கட்டப்பொம்மன் திரைப்பட வசனப் பாணியில் ‘நாற்று நட்டாயா? களை எடுத்தாயா?” என்ற பாணியிலேயே அமைந்திருக்கின்றன.

ஈழத்தில் பிறக்காத ஒருவரால் அந்த மக்களின் வலியைப் புரிந்துகொண்டு பாட முடியாது என்ற வாதத்தை ஒருசிலர் முன்வைக்கின்றனர். ‘ஆகா எழுந்தது பார் யுகப் புரட்சி” எனப் பாரதி ரஸ்ய விடுதலையைப் பற்றிப் பாடியபோது ‘பாரதி ரஸ்யாவில் பிறக்காதவர். அவரால் எவ்வாறு அந்த நாட்டின் விடுதலையைப் பற்றிப் பாட முடியும்” என யாரும் கேள்வி எழுப்பவில்லை. தலித் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்போர் தலித்துகளாகவே இருக்க வேண்டும், பெண் விடுதலைக்காகக் குரல் கொடுப்போர் பெண்களாகவே இருக்க வேண்டும் எனக் கூறுவது எவ்வளவு அபத்தமானதோ, அதைப் போன்றதே இதுவும். கம்பராமாயணத்தைப் படைத்த கம்பர் இராமனின் மற்றொரு சகோதரனா என்ன?

ஆனால் கவிஞர் வைரமுத்து தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கும் பெரும்பாலானோரின் ஒட்டுமொத்தக் கருத்தியலையும் ஒரு நிரலுக்குள் அடக்கிப் பார்த்தால் அவர்களது விமர்சனம் வைரமுத்துவின் ஈழகாவியம் படைப்பதற்கான வல்லமை பற்றியதல்ல. மாறாக, அந்தக் காவியத்தைப் படைப்பதற்கான அவரின் தகுதி பற்றியதாகவே கருத்துக்கள் உள்ளன.

தென்னிந்திய திரைப்படங்களில் பாடல் எழுதிக் கொண்டிருக்கும் பாடலாசிரியர்களுள் முன்னணியில் வைத்துப் பார்க்கப்பட வேண்டிய கவிஞர்களுள் வைரமுத்துவும் ஒருவர். காலத்தால் அழியாத பாடல்கள் பலவற்றை அவர் வழங்கியுள்ளார். இனிமேலும் வழங்குவார் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ‘

மணலாலே கயிறு திரித்து செவ்வாய்க் கிரகத்துக்கே தன்னோடு சேர்த்து எம்மையும் அழைத்துச் செல்லும்” வல்லமை அவரது கவிதைகளுக்கு இருக்கிறது.

தமிழ்க் கவிஞர்களிலேயே இன்றுவரை மகாகவி எனக் கொண்டாடப் படுபவர் பாரதியார். எட்டயபுரம் அரண்மனையிலே புலவராக இருந்தபோது அவர் பாடிய பாடல்கள் எவையுமே இன்று எம்மத்தியில் இல்லை. ஆனால், அவர் புரட்சிக் கவிஞராக மாறி இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடிய பாடல்களே அவரை மகாகவி என்ற உச்சத்திற்குக் கொண்டு சென்றது. வெள்ளையர்களின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், தனது உயிரையும் துச்சமென மதித்து அவர் மக்களைத் தட்டியெழுப்பும் விதமாகப் பாடினார். பேசினார். செயற்பட்டார்.

ஈழ மக்களுக்கும் அத்தகைய கவிஞர்கள் தேவைப்பட்டார்கள். ஈழத்தில் மாத்திரமன்றி தாய்த் தமிழகத்தில் கூட அத்தகையோர் பலர் இருந்தார்கள். ஈழத் தீ அணைந்துவிடாமல் பார்த்துக் கொண்டார்கள். அத்தகைய வேளைகளில் கவிஞர் வைரமுத்து போன்றோர் ‘தானுண்டு தன் வேலையுண்டு” என இருந்து விட்டார்கள்.

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் வஞ்சமாகக் கொன்றொழிக்கப்பட்ட வேளையில் கூட வைரமுத்துவின் குரல் ஓங்கி ஒலிக்கவில்லை. அதன் பிறகு இன்று ஆறு ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. எதிர்பார்த்த வேளைகளில் என்றுமே ஒலிக்காத வைரமுத்து அவர்களின் குரல், தமிழ் மக்கள் அனைத்தையும் இழந்து கையறு நிலையில் நிற்கும் இவ் வேளையில் ஒலிக்க இருக்கிறது.

என்றுமே ஒலிக்காத குரல் தாமதமாகவாவது ஒலிக்க இருக்கிறது என்பது மகிழ்ச்சிக்கு உரியதே. ஆனால் மழை வேளையில் தேவைப்படும் குடையை மழை ஓய்ந்த பின்னர் பரிசளிப்பது என்பது எத்துணை பொருத்தப்பாடானது என்பது சிந்தனைக்குரியது.

இந்தப் பத்தியை வாசிப்பதாலோ அன்றி தமிழ்ப் பரப்பில் அவரது ஈழ காவியம் தொடர்பான அறிவிப்பு வெளிவந்ததால் நிகழும் கருத்தாடல்களாலோ கவிஞர் வைரமுத்து தனது படைப்பு முயற்சியைக் கைவிடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அவ்வாறு எதிர்பார்ப்பதும் தவறு. ஆனால், அவர் தொடர்பில் – ஒரு சில அடிவருடிகளைப் புறந்தள்ளி – ஈழத் தமிழ் மக்கள் எத்தகையை அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்துடன், ஈழ காவியம் படைப்பதற்கான தனது தகுதி பற்றி அவர் மனப்பூர்வமாக சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னரும் அவர் தான் ஈழ காவியத்தைப் படைத்தே தீர்வேன் என ஒற்றைக் காலில் நின்று அடம் பிடித்தால் மற்றொரு நூலாக அதுவும் இருந்துவிட்டுப் போகட்டும். அது பயனுள்ள நூலா இல்லையா என்பதைக் காலம் தீர்மானிக்கட்டும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit