ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு டக்ளஸ் கோரிக்கை!!!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வடபகுதிக்கு வருகைதரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்கள் நலன்சார்ந்த பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ள நிலையில் அவரது இப்பயணம் வெற்றி பெறுவதற்கும், இதன்மூலம் மக்கள் முழுமையான பயன்களை பெற்றுக் கொள்வதற்கும் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் வடபகுதிக்கான விஜயம் தொடர்பாக இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றுநாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 12 ஆம் திகதி வடபகுதிக்கு வருகைதரவுள்ளார்.

இவ்வாறு வருகைதரும் ஜனாதிபதி 12 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாவட்ட செயலகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் அதேவேளை, மேலும் பல நிகழ்வுகளிலும் பங்கெடுக்கவுள்ளார்.

மறுநாளான 13 ஆம் திகதி 24 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்துக்கான ரயில்சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ள ஜனாதிபதி கொடிகாமம் மற்றும் நாவற்குழி பகுதிகளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரத நிலையங்களை திறந்து வைப்பதுடன் யாழ்ப்பாணத்தில புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதான புகையிரத நிலையத்தையும் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கவுள்ளார்.

தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களை எடுத்தியம்பும் வகையிலும் நவீன வசதிகளை கொண்டமைந்த வகையிலும் மிகச் சிறப்பாகவும் அழகாகவும் மீள் புனரமைக்கப்பட்ட வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களையும் ஒன்றிணைத்த விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தையும் தலைமை தாங்கி நடத்தவுள்ளார்.

அத்துடன் வடமாகாணத்தில் யுத்தத்தால் கடும் பாதிப்புற்றோருக்கான கொடுப்பனவு, சொத்தழிவு நட்டஈட்டு கொடுப்பனவு, சேதமடைந்த வணக்கஸ்தலங்களுக்கான கொடுப்பனவு மற்றும் அரச ஊழியர் நட்டஈட்டு கொடுப்பனவு ஆகியவற்றை பயனாளிகளுக்கு ஜனாதிபதி வழங்கவுள்ளார் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இதனடிப்படையில் யாழ் மாவட்டத்தில் கடும் பாதிப்புற்றோருக்கான கொடுப்பனவை 42 பயனாளிகளும், சொத்தழிவு நட்டஈட்டு கொடுப்பனவை 97 பயனாளிகளும் அரச ஊழியர் நட்டஈட்டுக் கொடுப்பனவை 62 பயனாளிகளும் பெற்றுக்கொள்ளும் அதேவேளை சேதமடைந்த வணக்கஸ்தலங்கள் 18க்கும் இக் கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அரச ஊழியர்களில் மாவட்ட ரீதியில் ஒரு தொகுயினருக்கு மோட்டார் சைக்கிள்களையும் ஜனாதிபதி வழங்கி வைக்கவுள்ளார் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஏனைய நிகழ்வுகளிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இறுதிநாளான 14ம் திகதி நெடுந்தீவுக்குச் செல்லும் ஜனாதிபதி நயிணாதீவு நாகபூசணி அம்மன் கோயிலுக்கும் நாகவிகாரைக்கும் சென்று வழிபாடுகளில் கலந்து கொள்வதுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதேச செயலக கட்டிடத்தை திறந்து வைக்கும் அதேவேளை வேலணை மற்றும் ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார்.

இவ்வாறு வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதியின் பயணம் வெற்றி பெறுவதற்கும் அதன்மூலமாக மக்கள் முழுமையான பயன்களைப் பெற்றுக் கொள்வதற்கும் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமென அமைச்சர் இதன்போது கேட்டுக் கொண்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*