செக்ஸ் என்பது அசிங்கமா?

பிறப்பு : - இறப்பு :

sadhguru-intense-01கேள்வி:
“சாமி கும்பிடுவதற்காகப் போகும் கோயில்களில் எதற்காகக் காம விளையாட்டுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன? பருவ வயதில் இருக்கும் மகளுடன் கோயிலுக்குப் போகும் என் போன்ற தாய்மார்களுக்கு எவ்வளவு பெரிய தர்மசங்கடம்?”

சத்குரு பதில்: கடவுள் என்பது உங்களைப் பொறுத்தவரை என்ன? தெய்வீகமாக எதைக் கருதுகிறீர்கள்? ஒரு படைப்பின் மூலாதாரம்தான் கடவுள் என்று கருதுவீர்களேயானால், அதுதானே அங்கு சித்தரிக்கப்பட்டு இருக்கிறது?
செக்ஸ் என்பதை அசிங்கம் என்றோ, குற்றம் என்றோ நம் கலாச்சாரம் பார்க்கவில்லை. சரியா, தவறா என்றெல்லாம் விவாதம் செய்யாமல், வாழ்க்கையின் பரிமாணத்தை அது நேருக்கு நேராகச் சந்தித்தது.
பொதுவாக, இந்த மாதிரி சிற்பங்கள் கோயிலின் வெளிப் பரிகாரத்தில்தான் காணப்படுகின்றன. இந்தச் சிற்பங்களாவது வெளிப் பிராகாரத்தோடு நின்று போகின்றன. பருவ வயதில் இருக்கும் ஓர் ஆணுக்கும், பெண்ணுக்குமான பார்வைப் பரிமாற்றங்கள் சந்நிதியிலும் தொடர்வதைக் கவனித்து இருக்கிறீர்களா?

Khajuraho Group of Monuments - India (4)

செக்ஸ் என்பதை அசிங்கம் என்றோ, குற்றம் என்றோ நம் கலாச்சாரம் பார்க்கவில்லை. சரியா, தவறா என்றெல்லாம் விவாதம் செய்யாமல், வாழ்க்கையின் பரிமாணத்தை அது நேருக்கு நேராகச் சந்தித்தது.
“அம்மா, நான் எப்படிப் பிறந்தேன்?” என்று கேட்டாள், எட்டு வயது மகள்.
சிறுமியிடம் இதைப்பற்றியெல்லாம் எப்படிப் பேசுவது என்று அம்மாவுக்கு சங்கடம். அதனால் அவள் சொன்னாள்… “அதோ, அந்தக் குருவிதான் உன்னைக் கொண்டுவந்து என் மடியில் போட்டது கண்ணு?”
“நீ எப்படி அம்மா பிறந்தாய்?”
“என்னையும் இந்தக் குருவியின் அம்மாதான் கொண்டு வந்து போட்டது!”
“அப்படியானால், பாட்டியையும் இந்தக் குருவியின் பாட்டிதான் கொண்டு வந்து போட்டதா?
“ஆமாடா செல்லம்!”
“அப்படியானால், நம் குடும்பத்தில் யாருக்குமே ஒழுங்கான பிறப்பில்லையா அம்மா?” என்று திகைத்துப் போய்க் கேட்டாள் சிறுமி.
இதுதான் உண்மை நிலை. குழந்தைகளுக்கே பாதி விஷயம் தெரியும்போது, உங்கள் மகளுக்குத் தெரியாதா, என்ன?
சிற்பங்களைப் பெயர்த்து எடுப்பதாலோ, மூடி மறைப்பதாலோ, உங்கள் மகளின் மனம் அது பற்றிச் சிந்தக்காது என்று நினைத்துவிடாதீர்கள்.
கோயில் என்பது வாழ்க்கையின் மேன்மையை உணர்ந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. உங்களுக்குள் அமிழ்ந்துள்ள உச்சபட்ச சக்தியை தட்டி எழுப்புவதற்கான ஒரு கருவி.
இந்த உடல்ரீதியான இன்பங்களைக் கடந்து போனால்தான், வாழ்க்கையின் மேலான கட்டங்களுக்குப் போக முடியும். இந்த உண்மையை உறுதியாக எடுத்துச் சொல்வதுபோல்தான் மூலவரின் சந்நிதி உள்ளே அமைந்துள்ளது.
அந்தச் சிற்பங்களைக் கேவலம் என்று ஏன் பார்க்கிறீர்கள்? அது நிகழ்ந்ததால்தானே நீங்கள் உருவானீர்கள்? உங்கள் மகள் உருவானாள்? அது தவறென்று நினைத்தால், நீங்கள் படைக்கப்பட்டதே தவறென்று ஆகிவிடும்.

கேள்வி:
“நான்கு சுவர்களுக்குள் வைத்திருக்க வேண்டிய விஷயமல்லவா இது? இதை இப்படி அம்பலத்துக்குக் கொண்டுவர வேண்டுமா?”

சத்குரு பதில்:
யாரும் உங்களை இதைத் தெருவுக்குக் கொண்டுவரச் சொல்லவில்லை. நீங்கள் பருவ வயதில் இருந்தபோது, உங்களுக்கு இது பெரிய உறுத்தலாக இருந்திருக்காது. இன்றைக்கு உங்கள் மகள் பார்த்துவிடக்கூடாது என்பதுதான் உங்கள் பதற்றத்துக்கான காரணம்.

உயிரினம் பெருகிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காக இயற்கை அவற்றுக்கு ஆண், பெண் எனத் தனித்தனி வடிவங்கள் கொடுத்தது. ஒன்றின் மீது மற்றதற்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. உடல்ரீதியான வேறுபாடுகள் தவிர, இருவரும் ஒரே அளவு மதிப்பு கொண்டவர்கள்தாம்.
இதை இன்றைய இளைஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள். பெரும் வளர்ச்சி கண்டுள்ள நிறுவனங்களில் ஆண், பெண் என்ற பேதங்கள் களையப்பட்டு விட்டதை இன்றைக்குப் பரவலாகக் காண முடிகிறது.
மிக நுண்ணிய உயிரினம் ஆனாலும் சரி, மனிதர் ஆனாலும் சரி… இயற்கை அதன் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கும். எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எதைக் கடந்து போக வேண்டும் என்று முடிவு எடுக்க வேண்டியது நாம்தான்.
கோயிலுக்கு வருகையில் உங்கள் மனதை ஆக்கிரமித்திருக்கும் எண்ணங்கள் எல்லாவற்றையும் வெளிப் பிரகாரத்தோடு விட்டுவிட்டு, முழுமையான ஈடுபாட்டுடன் உள்ளே வரச்சொல்லும் கலாச்சாரம் இது. அங்கே நீங்கள் தேவையற்ற பதற்றத்தைக் காட்டினால், அதுதான் உங்கள் மகளைத் திரும்பிப் பார்க்க வைக்கும்.
எது ஒழுக்கம், எது ஒழுக்கமின்மை என்று நீங்கள் எழுதிய விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது கோயில் என்ற அமைப்பு. அதை உங்கள் மேம்பாட்டுக்கு எப்படிப் பூரணமாகப் பயன்படுத்திக் கொள்வது என்று மட்டும் பாருங்கள்.
அமுதம் தேடி வந்துவிட்டு, அமுதக் கலசத்தின் மீது அமர்ந்துள்ள ஈக்களின் மீது ஏன் உங்கள் கவனம் போகிறது?

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit