பெப் 28 சுவிஸ் வாக்கெடுப்பு முறியடிக்கப்பட வேண்டும்! பூமிபுத்ரன்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

swiss

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னான காலகட்டத்தில் மேற்குலக நாடுகளில் மீண்டுமொருமுறை மிகப் பெரிய பேசுபொருளாக அகதிகள் விவகாரம் மாறியிருக்கின்றது. மத்திய கிழக்கு நாடுகளில் தொடரும் எண்ணெய்க்கான யுத்தங்கள், ‘பயங்கரவாத்துக்கு எதிரான யுத்தம்” என்ற பெயரில் ஆப்கானிலும், ஈராக்கிலும் அமெரிக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட யுத்தங்கள், ‘அரேபிய வசந்தம்” என்ற பெயரில் ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்யும் அமெரிக்க நிகழ்ச்சி நிரலின் கீழ் ரியுனிசியா, லிபியா, எகிப்து, சிரியா என பல நாடுகளில் ஆட்சி மாற்றங்களை முடுக்கி விட்டமையால் ஏற்பட்ட சமநிலை வீழ்ச்சி, அதன் விளைவாக அந்த நாடுகளில் ஏற்பட்ட ஆயுதப் புழக்கம், தீவிரவாத வளர்ச்சி உள்ளிட்ட பல காரணங்களால் ஐரோப்பிய நாடுகளை நோக்கிய அகதிகளின் வருகை என்றுமில்லாதவாறு அதிகரித்துக் காணப்படுகின்றது.

‘ஒரு தாக்கத்துக்கு எதிரான மறுதாக்கம் நிச்சயம்” என்ற நியூட்டனின் மூன்றாம் விதிக்கு ஒப்ப ஆயுத மோதல்கள் எவ்வாறு அகதிகளின் இடப்பெயர்வை ஊக்குவிக்கின்றதோ அதைப்போன்றே அகதிகளின் வருகை உள்நாட்டில் அகதிகளுக்கு எதிரான உணர்வுகளையும் தூண்டி விடுகின்றது. ஆயுத மோதல்களுக்கு ஒரு வகையில் தாங்களும் பொறுப்பாளிகளே என்ற தார்மீக உணர்வாலும், தமது எசமானனான அமெரிக்காவின் உத்தரவிற்கு அடிபணிந்தும் அகதிகளை ஒலிவ் இலையைத் தந்து அரசாங்கங்கள் வரவேற்க வேண்டியுள்ள சூழ்நிலையில், உலகளாவிய ரீதியில் நாடுகள் எதிர்நோக்கிவரும் பொருளாதார வீழ்ச்சி, மனித உழைப்பை இயந்திரங்கள் பெரிதும் சுவீகரித்துக் கொண்டுள்ளமையால் ஏற்பட்டு வரும் தொழில் இழப்பு, பொருளாதார நெருக்கடி காரணமாக நலத்திட்டங்களைச் சுருக்கிக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ள அரசாங்கங்களுக்கு எதிராக உருவாகி வரும் மக்கள் அபிப்பிராயம் என்பவை காரணமாகவும், மேற்குலக ஊடகங்கள் மூலம் திட்டமிட்டு மேற்கொள்ளப் பட்டுவரும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரசாரங்கள் காரணமாகவும் அகதிகளுக்கு எதிரான உணர்வு – குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு எதிரான உணர்வு ஐரோப்பிய நாடுகளில் வெகுவாக அதிகரித்து வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
ஐரோப்பாவை அண்மையில் தாக்கிய அகதிகள் அலையில் பெரும் எண்ணிக்கையைத் தன்வசம் தாங்கிக் கொண்ட நாடு யேர்மனி. அதே நாட்டில்தான் அகதிகளுக்கு எதிரான உணர்வும் அதிகரித்துக் காணப்படுகின்றது. அகதிகளுக்கு எதிரான தாக்குதல்கள் அன்றாடச் செய்தியாகி உள்ள அந்த நாட்டில், அதிபர் அங்கெலா மேர்க்கல் அவர்களுக்கு எதிரான தீவிரமான அலை ஒன்று உருவாகி வருகின்மையையும், அவரது திறந்த அகதிகள் கொள்கைக்கு எதிரான மறுபோக்காக வலதுசாரி

அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரித்து வருகின்மையையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இதேவேளை முன்னாள் கிழக்கு யேர்மன் நகரான டிரஸ்டனில் 2014 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பெகிடா எனப்படும் மேற்கு நாடுகளை இஸ்லாமிய மயப்படுத்தவதற்கு எதிரான தேசபக்த ஐரோப்பியர் அமைப்பு தனது செயற்பாடுகளைத் தற்போதைய சூழçல் உற்சாகத்துடன் அதிகரித்து உள்ளமையைக் காணலாம். யேர்மனியில் ஆரம்பமான இந்த இயக்கம் தற்போது விரிவடைந்து ஐரோப்பாவின் பல நாடுகளிலும் பரவிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஏற்கனவே பிரான்ஸ், செக் குடியரசு, போலந்து போன்ற நாடுகளில் இந்த இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. எதிர்வரும் நாட்களில் வேறு நாடுகளிலும் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருக்கின்றன.

நடுநிலை நாடு எனத் தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் சுவிற்சர்லாந்திலும் இந்த அமைப்பு தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. பாசல், லுற்சர்ண், பிறவன்பெல்ட், பேர்ண் ஆகிய நகரங்களில் ஆர்பாட்டம் நடாத்துவதற்கான அனுமதி கோரப்பட்ட போதிலும், அனுமதி மறுக்கப்பட்டாலும் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டே தீரும் என ஏற்பாட்டாளர்கள் சூழுரைத்து வருகின்றனர்.

‘நாஸிகளின் மீழ் எழுச்சி” என இத்தகைய நடவடிக்கைகள் கருதப்பட்டு வரும் பின்னணியிலேயே சுவிற்சர்லாந்தில் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட சுவிஸ் நாட்டவரை அச்சுறுத்தும் வகையிலான வாக்கெடுப்பு ஒன்று நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டால் சுவிஸ் நாட்டில் வாழும் வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட சுவிஸ் பிரசைகள் குறிப்பாக இளைய தலைமுறையினர் ‘கண்ணில் விளக்கெண்ணையை விட்டவாறே” சீவிக்க வேண்டி ஏற்படும் என எச்சரிக்கப் படுகின்றனர். சாதாரண குற்றச்செயலைப் புரிந்தால் கூட சம்பந்தப்பட்ட நபர் தனது சொந்த(?) நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்.

இதில் சுவிஸ் நாட்டிலேயே பிறந்த – தனது தாய் நாட்டைப் பற்றிய எந்தவித அறிவும் இல்லாத – பிள்ளை கூடப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இத்தகைய அபாயம் குறித்த சட்டத் திருத்தத்தில் இருந்தாலும் வாக்களிக்கத் தகுதி பெற்ற பல வெளிநாட்டவர்கள் இது பற்றி அக்கறை அற்றவர்களாகவே இருந்து வருகின்றனர். இதில் தமிழர்களும் அடக்கம். பொதுவாகவே ஈழத் தமிழர்கள் உள்நாட்டு அரசியலில் அக்கறை அற்றவர்களாகவே இருந்து வருவது கண்கூடு. அரசியல் கட்சிகளில் அங்கத்துவம் பெறாமை, தேர்தலில் வாக்களிக்காமை, நாட்டு நடப்புக்களைத் தெரிந்து கொள்ளாமை என அவர்களின் அக்கறையின்மை பல வழிகளிலும் அவதானிக்கப்பட்டு வருகின்றது.

தாமுன்டு, தமது வேலையுண்டு என இருக்கும் இத்தகைய போக்கு தம்மைப் பாதிக்கும் ஒரு சூழ்நிலையிலும் கடைப்பிடிக்கப்படுவது என்பது சுத்த முட்டாள்தனம். ஒரு சில அதிமேதாவிகள் ‘குற்றவாளிகளைத்தானே சட்டம் பாதிக்கும், எங்களை அது ஒன்றும் செய்து விடாது. ஆகவே, இந்தச் சட்டத்தை நாங்களும் ஆதரிக்கப் போகிறோம்” என வீரவசனம் பேசி வருகிறார்கள். இவ்வாறு பேசுவோர் குற்றச் செயல்கள் என்று உத்தேச சட்டத்தில் அடங்கும் விடயங்கள் என்ன என்பதைக் கூட அறியாதவர்களாகவே இருந்து வருகின்றார்கள்.

குற்றச் செயல்கள் எனப் பொதுவில் நாங்கள் கருதாத குடும்ப வன்முறை, சீட்டு மோசடி, அடிதடி தகராறு, விபத்து, வரி ஏய்ப்பு, தடை செய்யப்பட்ட அமைப்புக்களுக்கு நிதி சேகரித்தல் உள்ளிட்ட பலவும் நாளை எங்களுக்கு எதிரான குற்றங்களாக மாறி நாமோ அல்லது எமது பிள்ளைகளோ அன்றி ஒட்டுமொத்தக் குடும்பமுமோ நாடு கடத்தப்படும் சூழல் இந்த வாக்கெடுப்பின் விளைவாக உருவாகலாம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொண்டு வாக்களிக்கத் தகுதி பெற்ற அனைத்துத் தமிழ் மக்களும் பெ;பரவரி 28 ஆம் திகதி வாக்கெடுப்பில் இல்லை என வாக்களிக்க வேண்டும்.

காலம் எப்போதுமே மாறிக் கொண்டிருக்கின்றது. நாகரீகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படும் இந்த ஐரோப்பாவில்தான் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஹிட்லர் மாபெரும் மனிதப் படுகொலைகளை நிறைவேற்றி வைத்தார். சேர்பியாவில் நடைபெற்ற இனப்படுகொலையும் இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு உட்பட்டதே.
நாஸிசம் மானுடத்துக்கு எதிரானது என்ற சிந்தனையில் மாற்றம் தோன்றி அது தேசபக்தி எனக் கருதப்படும் காலம் உருவாகி வருகின்றது. இத்தகைய அபாயகரமான, மனுக் குலத்திற்கு விரோதமான போக்கு எமது முற்றத்தில் உருவாகி வளர்ந்து வரும் போது, அதனைப் பார்த்துக் கொண்டு நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது.
வெறுமனே, பிரதான நீரோட்ட ஊடகங்களில் கவர்ச்சியான சொல்லாடல்களோடு வெளியிடப்படும் செய்திகளை மாத்திரம் வைத்துக் கொண்டு ‘நாங்களும் இஸ்லாமியர்களை வெறுக்கிறோம், இஸ்லாமியர்கள் உலகத்தில் வாழத் தகுதியற்ற காட்டுமிராண்டிகள்” என்று கூறிக் கொண்டு நமது தலையில் நாமே மண்ணை வாரிக் கொட்டாமல் நிதானமாகச் சிந்தித்து முடிவுகளை எடுப்பதற்குத் தமிழர்கள் பழகிக் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட பல மனித உரிமை அமைப்புக்கள் சுவிஸ் நாட்டின் அகதிகள் தொடர்பான கொள்கைகளைத் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றன. பெப்ரவரி 28 இல் நடைபெறவுள்ள வாக்கெடுப்புத் தொடர்பிலும் கூட அவை தமது கரிசனையை வெளியிட்டு உள்ளன. எனவே, இது தொடர்பில் தமிழ் மக்களும் விழிப்புணர்வைப் பெறுவதுடன் தாம் பழகும் நபர்களுக்கும் விடயங்களை எடுத்துக் கூறி இந்த வாக்கெடுப்பை முறியடிக்க முன்வர வேண்டும். இன்று இதனைச் செய்யத் தவறுவோமேயானால் நாளைய வரலாற்றின் பழிச்சொல்லை நாங்களும் இணைந்தே ஏற்றுக்கொள்ள வேண்டிவரும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit