‘யான்’ விமர்சனம்

பிறப்பு : - இறப்பு :

அம்மா, அப்பாவை சிறு வயதிலேயே இழந்த நாயகன் ஜீவா, தனது பாட்டி அரவணைப்பில் செல்லமாக வளர்க்கப்படுகிறார். எம்.பி.ஏ படித்துவிட்டு, வேலைக்குப் போகாமல் சந்தோஷமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஜீவா, பணி ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரியான நாசரின் மகள் துளசியை கண்டதும் காதல் கொள்கிறார். ஜீவாவை சற்று அலைய விட்டு பிறகு காதலை ஏற்றுக் கொள்கிறார் துளசி. இவர்களுடைய காதலுக்கு துளசியின் முறை பையன் முட்டுக்கட்டையாக வர, அந்த நேரத்தில் ஜீவாவை அழைத்து பேசும் துளசியின் அப்பாவான நாசர், ஜீவா வேலைக்கு செல்லாமல், தனது பாட்டியின் பணத்தில் வாழ்வதை சொல்லி அவமானப் படுத்துகிறார்.
இதனால் கோபமடையும், ஜீவா விரைவில் ஒரு நல்ல வேலையைத் தேடிக்கொண்டு, உங்களது பெண்ணை திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறி, வேலை தேட, ஒரு கட்டத்தில் மும்பையில் எங்குமே அவருக்கு வேலை கிடைக்காததால், டிராவல் ஏஜென்ட் போஸ் வெங்கட் மூலம் அரபு நாடு ஒன்றில் வேலை கிடைக்கிறது.
அந்த வேலைக்காக அரபு நாட்டுக்கு செல்லும் ஜீவாவின், பேக்கில் அவருக்கே தெரியாமல் போதை பொருளை வைத்து அனுப்பி விடுகிறார்கள். போதை பொருளுடன் அரபு நாட்டில் சிக்கும் ஜீவா, அங்கு சிறைக்குச் செல்வதுடன், கடுமையான சட்டங்கள் கொண்ட அந்த நாட்டு வழக்கப்படி, போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக மரண தண்டனைக்கு ஆளாகிறார்.
தனது பக்க நியாயத்தை கூட சொல்ல முடியாமல் தவிக்கும் ஜீவாவை, மக்கள் முன்னிலையில் தலையை துண்டித்து கொலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிடுகிறார். இதற்கிடையில் அதே சிறைச்சாலையில் உள்ள தமிழரான தம்பி ராமையா மூலம், ஜீவாவின் நிலைமை அவருடைய பாட்டிக்கு தெரிய வர, அவர் நெஞ்சுவலி எற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இதே விஷயம் துளசிக்கும் தெரியவர, தன்னால் தானே ஜீவாவுக்கு இப்படி ஆனது, என்று கருதும் துளசி, ஜீவாவை மீட்க அந்த அரபு நாட்டுக்கு செல்கிறார். அப்படி செல்லும் அவர் ஜீவாவை காப்பாற்றினாரா இல்லையா என்பது தான் க்ளைமாக்ஸ்.
வேலைக்காக அரபு நாட்டுக்கு செல்லும் நாயகன், அங்கு ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ள, அதில் இருந்து எப்படி மீள்கிறார் என்பது தான் கதை. இந்த கதையை இரண்டு மணிநேரம் படமாக சொல்வதற்குக்குள், இயக்குனர் ரவி கே.சந்திரனின், விழிகள் பிதுங்கியிருப்பது படத்தின் முதல் பாதியில் ரொம்ப நன்றாகவே தெரிகிறது.
எந்த விதத்திலும் கஷ்ட்டப்படாமல், ரொம்ப சாதாரணமாக நடிக்க வேண்டிய கதாபாத்திரம் தான் ஜீவாவுக்கு. அதை சரியாக செய்திருக்கிறார்.
ஜீவாவைக் காட்டிலும், பல இடங்களில் துளசிக்கு நடிக்க வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், நாயகன் நாகரீகம் கருதி அடக்கி வாசிக்க வைக்கப்பட்டுள்ளார். பாடல்களில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார்.
சிறைச்சாலையில் உள்ள தம்பி ராமையா, அரபு நாட்டில் டாக்சி டிரைவரான கருணாகரன், டிராவல் ஏஜெண்டான போஸ் வெங்கட், போலீஸ் அதிகாரியான ஜெயப்பிரகாஷ், துளசியின் அப்பாவாக நடித்துள்ள நாசர் என்று அனைத்து நடிகர்களின் கதாபாத்திரங்களும் ரசிகர்களின் மனதிற்குள் ஓட்ட மறுக்கிறது.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் என்பதை கூட ஏற்றுக்கொண்டு, ஏதோ சப்தத்திற்காக ரசிக்கலாம், ஆனால், அந்த திருமண பாடலில், கானா பாலாவின் குரலைத் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பின்னணி இசையில் சில இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார் ஹாரிஸ்.
மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு ஒன்று மட்டுமே படத்தை ரசிக்க வைக்கிறது. கதை நடக்கும் மும்பையையே ரொம்ப அழகாக காட்டியிருக்கிறது இவருடைய கேமரா.
ஸ்ரீகர் பிரசாத், தனது கத்திரியை தாறுமாறாக போட்டு, படத்தை கூடுதல் பலவீனமாக மாற்றியுள்ளார். அதிலும் அந்த விசிட்டிங் கார்டு சேசிங், ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது. அங்கேயாவது ஸ்ரீகர் பிரசாத், சற்று வேலை செய்திருக்கலாம்.
எடுத்துக்கொண்ட கருவை, சுவாரஸ்யமாக சொல்ல, இயக்குனர் ரவி.கே.சந்திரன், ரொம்ப தடுமாறியிருக்கிறார். அதிலும் படத்தின் முதல் பாதி, படம் பார்க்க வரும் குறைவான ரசிகர்களையும் குறட்டைவிட செய்கிறது.
ஒரு வழியாக இடைவேளைக்குப் பிறகு கதை தொடங்க, துங்க்கியவர்கள் எழுந்திருக்க, கிளைமாக்ஸ் நெருங்கும் போது, “வீட்டுக்கே போய் தூங்கலாம்” என்று ரசிகர்கள் கிளம்பி விடுகிறார்கள்.
முன்னணி ஒளிப்பதிவாளர்கள் பலரும், இயக்குனர்களாக வெற்றி பெற்றிருப்பதால் , ரவி கே.சந்திரன், இயக்குனராக அறிமுகாகும் இப்படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த எதிர்ப்பார்ப்புகளை யான் ஏமாற்றமாக மாற்றிவிட்டது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit