இனி யாரிடம் அதிகாரம்?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழக அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய அரசியல் வரலாற்றிலும் செப்டெம்பர் 27 என்பது முக்கியமான நாளாகிவிட்டது. அன்று தான் தமிழக முதல்வரான ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் வழங்கப்பட்டது.

அன்றைய தினத்தில், ஜெயலலிதா, சசிகலா, வி.என்.சுதாகரன், இளவரசி ஆகிய அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்கள்.

நீதிமன்றத்துக்கு வெளியே தமிழக அமைச்சர்கள், முன்னணி அ.தி.மு.க. நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரும் குவிந்திருந்தனர். கடும் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில், சரியாக முற்பகல் 11.30 மணியளவில், ஷஉங்களுக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதாக அறிவிக்கிறேன்| என்று ஜெயலலிதாவைப் பார்த்துச் சொன்னார் சிறப்பு நீதிபதி ஜோன் மைக்கெல் குன்ஹா.

அதன் பிறகு, பிற்பகலில் வழங்கப்பட்ட தீர்ப்பில், வருமானத்துக்கு  மீறிய சொத்துக்களைக் குவித்த வழக்கில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நான்கு வருடம் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

அவருடன் குற்றஞ்சாட்டப்பட்ட சசிகலா, வி.என்.சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் அதே நான்கு வருட சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

சிறை தண்டனை என்ற விடயம் இந்த வழக்கில் சர்ச்சையாகவில்லை. ஆனால், ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட நூறு கோடி இந்திய ரூபாய் அபராதமும் மற்ற மூவருக்கும் விதிக்கப்பட்டுள்ள தலா பத்து கோடி இந்திய ரூபாய் அபராதமுமே  இந்திய ஊழல் ஒழிப்பு போராட்டத்தில் முதன்மையானது.

அதனால்தான், பெங்களூர் சிறப்பு நீதிபதி ஜோன் மைக்கெல் குன்ஹா வழங்கிய இந்த அபராதம், நாடு முழுவதும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

1996இல் தாக்கல் செய்யப்பட்ட இந்த சொத்துக் குவிப்பு வழக்கு, ஜெயலலிதாவின் தலைக்கு மேல் தொங்கிய கத்தியாக இருந்தது.

இப்போது 18 வருடங்கள் கழித்து அந்த கத்தி அவரது தலையைப் பதம் பார்த்துவிட்டது.

தேர்தல் போராட்டத்தில் அபரிமிதமான வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்த அவர், சட்டப் போராட்டத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறார்.

இதன் பிறகு இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களுக்கு அவர் மேல்முறையீடு செய்யமுடியும் என்றாலும், முதலில் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோய் விட்டது.

அடுத்து முதலமைச்சர் பதவியும் போயிருக்கிறது. இனி அவர் அடைக்கப்பட்டுள்ள பார்ப்பன அக்ரஹாரம்  சிறையில் இருந்து பிணையில் வெளிவருவதுதான் முக்கிய பணியாக இருக்கப் போகிறது.

பிணை மனு கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் ஜெயலலிதா. தசரா விடுமுறையை முன்னிட்டு உயர்நீதிமன்றம் விடுமுறையில் இருக்கிறது.

விடுமுறை கால நீதிபதிகள் முன்பு இந்த பிணை கோரும் மனு விசாரணைக்கு வரும். அதன் பிறகு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி, பிணை  கொடுப்பதா, வேண்டாமா என்பதை கர்நாடக உயர்நீதிமன்றம் முடிவு செய்யும்.

இதற்கிடையில் நூறு கோடி இந்திய ரூபாய் அபராதத்தைக் கட்டி விட்டுத்தான் பிணையில் வெளிவர வேண்டும் என்ற நிபந்தனையும் இருக்கிறது.

அதாவது, பிணை மனு தாக்கல் செய்யும் போதே இந்த தொகையைக் கட்ட வேண்டும் என்பதுதான் நடைமுறை. அதற்கு ஏதாவது விதிவிலக்கு கேட்கப்பட்டு, அது கொடுக்கப்படுகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிணையில் வெளிவந்த பிறகுதான் இந்த தீர்ப்பு பற்றிய தனது அறிக்கையை விடுவார் ஜெயலலிதா என்பதுதான் தற்போதுள்ள நிலைமை. வழக்கு வேறு மாநிலத்தில் நடப்பதால், இப்போது அறிக்கை விட்டு ஏதேனும் சிக்கல் வந்து விடக் கூடாது என்பதில் அவர் மட்டுமல்ல, அவரது வழக்கறிஞர்களும் கவனமாக இருக்கிறார்கள்.

இதற்கிடையில், தமிழகத்தின் முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் தெரிவு செய்யப்பட்டு பதவியேற்றார். இந்த ஊழல் வழக்கைப் பொறுத்தமட்டில், ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை சீர்குலைத்துள்ளது என்பதுதான் மிக கவலைக்குரிய விடயமாகஇ அ.தி.மு.க.வினரால் கருதப்படுகிறது.

இதற்கு முன்பு சில வழக்குகளில் ஜெயலலிதா முதலில் தண்டிக்கப்பட்ட பிறகு உயர்நீதிமன்றத்துக்கோ உச்சநீதிமன்றத்துக்கோ சென்று விடுதலை பெற்று வந்தார்.

அவற்றுள் முக்கியமான வழக்கு, டான்சி நிலப்பேர வழக்கு. ஆனால் இந்த முறை வழக்கை விசாரித்த நீதிமன்றமும் அதன் மீது மேன்முறையீடு செய்ய வேண்டிய உயர்நீதிமன்றமும் கர்நாடகா மாநிலத்தில் உள்ளது.

அதுவும் இது ஊழல் வழக்கு. அதாவது 66 கோடி இந்திய ரூபாய் சொத்துக் குவித்த வழக்கு. அதனால் இந்த வழக்கில் அவ்வளவு விரைவாக விடுதலை வாங்கிவிட முடியுமா என்ற சந்தேகமான கேள்வியைத்தான் சட்ட வல்லுநர்கள் எழுப்புகிறார்கள்.
இதற்கு முன்பு தமிழகத்தில் அ.தி.மு.க. அமைச்சரவையில் இருந்த பொன்னுச்சாமி என்ற அமைச்சர், இதுபோன்ற ஊழல் வழக்கில் சிக்கினார்.

அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அது சென்னை உயர்நீதிமன்றத்திலும் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்திலுமே உறுதி செய்யப்பட்டது. அதனால், அவர் தன் சிறை தண்டனைக் காலம் முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அமைச்சராக இருந்தவர் கவுன்சிலர் பதவிக்குக்கூட போட்டி போட முடியவில்லை. இந்நிலையில் லோக்பால், லோக் அயுக்தா என்றெல்லாம் அமைப்புகள் ஆரம்பித்து சட்டங்கள் கொண்டு வந்துள்ள இந்த நேரத்தில், ஊழல் வழக்குகளில் இருந்து ஒருவரை விடுவிக்கும் முன்பு கண்ணில் விளக்கெண்ணைய் விட்டு கவனமாக நீதிபதிகள் பார்ப்பார்கள் என்பதே மூத்த வழக்கறிஞர்களின் கருத்தாக இருக்கிறது.

இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்துமே பாராட்டி கருத்து தெரிவித்துள்ளன. அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக இருக்கும் கட்சிகள் இதை கண்டித்துள்ளன. ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதியோ இதுவரை வாய் திறக்கவில்லை. தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோருக்கு கடிதம் எழுதிய கருணாநிதி, தமிழகத்தில் அரசியல் சட்ட இயந்திரம் தோல்வியடைந்து விட்டது என்று குற்றஞ்சாட்டினார்.

அவரது வீட்டின் மீதும் தி.மு.க.வினர் மீதும் டாக்டர் சுப்ரமணிய சுவாமியின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தியதுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.

இதில், அரசியல் சட்ட இயந்திரம் தோல்வியடைந்து விட்டது என்ற கூற்று, இந்திய அரசியல் சட்டம் 356ஆவது பிரிவின் படி ஒரு மாநில அரசை கலைப்பதற்கு மத்திய அரசு சொல்லும் காரணமாகும்.

அக்காரணத்தை கருணாநிதி சுட்டிக்காட்டவே உடனே அவசர அவசரமாக கலவரங்கள், வன்முறைகள், எதிர்கட்சியினர் மீது தாக்குதல்கள் எல்லாம் குறைக்கப்பட்டது. தீர்ப்பு வழங்கப்பட்டு மூன்றாவது நாளான நேற்று, தமிழகத்தில் அமைதி திரும்பியுள்ளது.

இந்த அமைதியின் பின்னனியில் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார். இவர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது நிதி அமைச்சராக இருந்தவர்.

இதற்கு முன்பு ஒருமுறை ஜெயலலிதா, உச்சநீதிமன்ற தீர்ப்பால் பதவி விலகிய போது இடைக்கால முதலமைச்சராக இருந்தவர். அப்போது அவர் முதல்வரானதும், வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலையாகி முதலமைச்சராவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அப்படியே நடக்கவும் செய்தது.

ஆனால், இந்த முறை அது மாதிரி எதிர்பார்ப்பு எதுவுமில்லை. அதனால், ஓ.பன்னீர்செல்வம் எஞ்சிய ஒன்றரை ஆண்டுகளும் தமிழக முதலமைச்சராக இருக்க வேண்டிய சூழல் உருவாகலாம் என்பதுதான் இன்றைய சூழ்நிலை.

மஹாராஷ்டிரா தேர்தலில் போட்டியிட முடியாது என்று தகுதி இழப்பு செய்யப்பட்ட பால் தாக்ரே, வேறு ஒருவரை முதல்வராக வைத்துவிட்டு ஆட்சி செலுத்தினார்.

அதேபோல் தான், பிரதமராக முடியாது என்ற சூழல் உருவானதும் மன்மோகன் சிங்கை பிரதமராக்கி விட்டு, தன் அதிகாரத்தைச் செலுத்தினார் சோனியா காந்தி. அதேபோல் இப்போது, தமிழகத்தில் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தகுதி இழப்பு பெற்றுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக்கி, ஆட்சியை நடத்தப் போகிறார்.

இந்த மூன்று விடயங்களிலுமே அதிகாரத்தில் பால்தாக்ரே, சோனியா, ஜெயலலிதா இருக்க முடியவில்லையே தவிர, ஆட்சி அதிகாரம் சோனியா, பால்தாக்ரே காட்டும் திசையில்தான் பயணித்தது.

அதேபோல்தான், ஜெயலலிதா விடயத்திலும் தமிழக ஆட்சி அதிகாரம் பயணிக்கப் போகிறது.

புதிய அரசுக்கும், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் எப்படி உறவு இருக்கப் போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும். ஏனென்றால் ஜெயலலிதாவுக்கும் மோடிக்கும் வெளிப்படையாக அரசியல் ரீதியான நட்பு தெரிந்தாலும், உள்ளுக்குள் கடும் பனிப்போர்தான் நடைபெற்றது.

அதை கடந்த நூறு நாட்களுக்கும் மேற்பட்ட மத்திய – தமிழக அரசின் உறவுகளில் தெரிந்துகொள்ள முடிந்தது.

மோடி எப்படி டீ விற்றேன் என்று பெருமிதமாக கூறுகிறாரோ, அதே மாதிரி டீக் கடை நடத்தியவன் என்று பெருமிதமாகக் கூறியவர்தான் ஓ.பன்னீர்செல்வம். அந்த வகையில் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் சாமான்ய மக்களின் பிரதிநிதியாக எப்படி நரேந்திர மோடி பிரதமராக இருக்கிறாரோ, அதேபோல் சாதரண, சாமான்ய மக்களின் பிரதிநிதியாக தமிழக முதலமைச்சராகியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*