தண்ணீர் பற்றிய கவலை ஏன் நமக்கு இருப்பதில்லை?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆதிகாலத்திலிருந்து பூமியில் கிடைக்கும் தண்ணீரின் மொத்த அளவு ஏறத்தாழ ஒரே அளவாகத்தான் இருந்து வருகிறது. அதே சமயம், அதனுடைய வடிவம் மாறிவந்திருக்கிறது. சில நேரங்களில் நீர் சுழற்சியின் (hydrological cycle) சில பகுதிகளில் அதிகமாகச் சேருவது உண்டு. துயரம் என்னவெனில், நாம் தண்ணீரை ஒரு புதுப்பிக்கக்கூடிய வளமாகப் பார்க்கப் பழகியிருப்பதுதான். வருடாவருடம் மழை பொழிகிறது. ஆறுகளும் நீர்த்தேக்கங்களும் பொதுவாக நிரம்பிவிடும் – வறட்சி காலங்களைத் தவிர. ஆனால் நிலத்தடி நீரின் நிலை முற்றிலும் வேறானது. அந்த சேமிப்பிலிருந்து அன்றாடம் அதிக நீரை எடுத்துக் கொண்டிருந்தால், நீர் இருப்பு பழைய நிலையை எட்ட முடிவதில்லை.

உண்மையில், வருங்காலத் தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டிய நீர்வளத்தை நாம் இப்போதே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நிலத்தடி நீர் இருப்பை மழை முழுவதுமாக மீட்டுத் தர முடியாது. நாட்டின் பல பகுதிகளில் வேளாண்மை, தொழில், வீட்டு உபயோகம் ஆகியவற்றுக்கு நிலத்தடி நீரே ஆதாரமாக உள்ளது. நீர்த் தேவை அதிகரிக்க அதிகரிக்க மேலும் மேலும் ஆழத்திற்குச் சென்று நிலத்தடி நீரைச் சுரண்டுவதும் அதிகரிப்பதால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளுக்கு வந்துசேரும் தண்ணீரைவிடக் கூடுதலான தண்ணீரை அவற்றிலிருந்து எடுத்துக் கொண்டிருக்கிறோம். வங்கிக் கணக்கில் போடுகிற பணத்தைவிட எடுக்கிற பணம் கூடுதலாக இருக்க முடியுமா? நீர்நிலைகள் சுருங்கிக் கொண்டே வருகின்றன.

எனவே, மழை பெய்து முடித்ததுமே அவை வறண்டு விடுகின்றன. போதுமான அளவில் அல்லது அதற்கும் கூடுதலாக தண்ணீர் கிடைக்கும் காலங்களில் தண்ணீரை வீணாக்குவதில் மனிதர்களை மிஞ்ச முடியாது. அதனால்தான் சென்ற நூற்றாண்டில் உலக அளவில் மக்கள் தொகை அதிகரித்ததைப் போல இருமடங்குக்கு மேலாக தண்ணீர் பயன்பாடு அதிகரித்தது. உலகம் முழுதும் எடுத்துக் கொண்டால், கடந்த 50 ஆண்டுகளில் தரைக்கடியிலிருந்து எடுக்கப்படும் நீர் மூன்று மடங்கு கூடியிருக்கிறது. நம்முடைய வாழ்க்கை முறையும் உணவுப் பழக்கமும் மாறியிருப்பது ஒரு காரணம்.

கிடைக்கும் மொத்த நன்னீரில் 95 வீதம் நாம் உட்கொள்ளும் உணவு, பயன்படுத்தும் ஆற்றல், வாங்கும் பொருட்கள் ஆகியவற்றில் மறைந்திருக்கிறது. பெருமளவுக்கு அனல் மின்சாரத்தையும் புனல் மின்சாரத்தையுமே நாம் சார்ந்திருப்பதால், ஆற்றல் உற்பத்திக்கு தண்ணீர் மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் போன்ற ஆற்றல் உற்பத்தி முறைகளுக்கு மாறினால் தண்ணீர்த் தேவையைக் குறைக்க முடியும். ஒவ்வொரு வீட்டிலும் குழாய்களிலிருந்து கசியும் நீரைக் கணக்கிட்டாலே 50 லீற்றர் தண்ணீர் வீணாகும் எனத் தெரிகிறது. வீடுகளுக்குக் குழாய்கள் வழியே நன்கு சுத்திகரிக்கப்பட்ட தரமான நீர் அனுப்பப்படுகிறது.

இந்த நீரும் அதிக தூரத்திலிருந்து எடுத்துவரப்படுகிறது. இதற்கெல்லாம் ஆற்றல் செலவழிக்கப்படுகிறது. இந்தியாவில் நீர்க்கசிவுகளினால் வீணாகும் தண்ணீர் உலக அளவோடு ஒப்பிடும்போது அதிகம். பெரிய நகரங்களில் கிடைக்கும் நீரில் சுமார் 25 வீதம் இப்படி வீணாகிறது. இந்தியாவில் கிடைக்கும் மழை ஆண்டின் ஒரு சில வாரங்களில் பெய்து முடிந்துவிடுகிறது. இதில் 75 வீதம் பருவகாலங்களில் பெய்யும் மழையே. ஆண்டின் மற்ற மாதங்களில் மழைப் பொழிவு அநேகமாக இருப்பதில்லை. மழைநீரின் பெரும்பகுதி சேமிக்கப்படாமலே வீணாகி விடுகிறது.

நாட்டின் சராசரி மழைப்பொழவு 1,170 மி.மீ. எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் பெய்யும் மழையும் வேறு பகுதியில் பெய்யும் மழையும் கணிசமாக மாறுபடுகிறது. இந்தியாவில் மொத்த மழைநீர் 4000 பில்லியன் கியூபிக் மீட்டர் (பிசிஎம்). ஆனாலும் பயன்பாட்டுக்கு மிஞ்சுவது 1123 பிசிஎம் மட்டுமே. 2050 இற்குள் இந்தியாவில் கிடைக்கும் நன்னீர் தீர்ந்துவிடும் என உலக வங்கி எச்சரித்துள்ளது. சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து இந்த ஆபத்தைத் தடுக்காவிடில் நிலைமை மிக மோசமாகிவிடும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*