‘சுயமரியாதையுடனும் – பகுத்தறிவுடனும்’ வாழத்துடிக்கும் ஒரு சமுகத்தின், அரசியல் அபிலாசையின் வெளிப்பாடே முற்றுகைப்போராட்டம் !!!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கூட்டமைப்பின் அலுவலகங்களை முற்றுகையிடும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கத்தின் போராட்டத்துக்கு, தமது ஏகோபித்த ஆதரவை தெரிவித்து ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே மேலே குறிப்பிட்டுள்ளவாறு தெரிவித்துள்ளது.

‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’வின் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் உறவுகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்காக நீதி கோரி வீதியில் இறங்கிப்போராடாமல் – சிறீலங்கா அரசாங்கத்துக்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்காமல், தமது போராட்டங்களின் நியாயப்பாடுகளை நீர்த்துப்போகச்செய்து,

‘காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களே இலங்கையில் நடைபெறவில்லை’ என்றவாறான ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி, அரசாங்கத்தை பாதுகாக்கும் ‘மென்போக்கு அரசியல்’ செயல்பாடுகளில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஈடுபட்டு வரும் பல சம்பவங்களை தம்மால் அவதானிக்க முடிவதாகவும்,

உரிமை அரசியலை விடுத்து சலுகை அரசியலை நோக்கி தமிழ் இனத்தை நகர்த்தும் கேடு கெட்ட அரசியலை கூட்டமைப்பினர் செய்வதை தம்மால் உணர முடிவதாகவும் தெரிவித்துள்ள வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கத்தினர்,

கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கள்ள மௌனத்தை களைத்து உண்மைநிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தி, வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அலுவலகங்களை மாவட்டந்தோறும் சமநேரத்தில் முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

‘சுயமரியாதையுடனும் – பகுத்தறிவுடனும்’ வாழத்துடிக்கும் ஒரு சமுகத்தின் அரசியல் அபிலாசையின் வெளிப்பாடாகவே குறித்த முற்றுகைப்போராட்டத்தை ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’ நோக்கும் சமவேளையில், தமிழ் இனத்தின் இருப்பை தீர்மானிக்கப்போகும் அரசியல் சாசன திருத்தத்துடன் கூடிய அரசியல் தீர்வுக்கான காலத்தில்,

விடுதலை எனும் உன்னத இலட்சியத்துக்காக அளவிட முடியாத இழப்புகளையும் வலிகளையும் சந்தித்து, உச்சபட்ச தியாகங்களை செய்துள்ள தமிழ் தேசிய இனத்துக்கு, தமிழ் தேசியக்கூட்டமைப்பு அடிமைச்சாசனம் எழுதத்துடிப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை ஒலி எழுப்பும் சூழலில்,

எங்கே தமிழ் இனம் கூச்சநாச்சமின்றி, சூடு சொரணை எதுவுமின்றி இருந்துவிடுமோ? என்று நம்மை பீடித்து உலுக்கிக்கொண்டிருந்த அச்சம் நீங்கி, உளத்தூய்மையுடனும் – நெஞ்சுரத்துடனும் ‘வவுனியா பிரஜைகள் குழு’ தனது முழுமையான ஆதரவை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கத்தின் முற்றுகைப்போராட்டத்துக்கு வழங்குகின்றது.

எப்போது ஒரு இனம், ‘தன்னைத்தானே அடிமை’ என்று உணருகின்றதோ, அத்தகையதொரு உணர்வு அந்த இனத்தை கௌவியிருக்கும் வரை, அந்த கோழை உணர்விலிருந்து அந்த இனம் சுயமாக விடுபட்டு விலகி வெளியே வரும் வரை, அந்த இனத்துக்கு எவராலும் விடுதலையை பெற்றுக்கொடுக்கவோ, அன்றி அந்த இனம் தாமாகவே விடுதலை அடையவோ முடியாது.

இந்த உலக நியதியின் பிரகாரம், தமிழ் சமுகத்திடம் ‘நாங்கள் எவருக்கும் அடிமை இல்லை’ என்ற இனமான உணர்வு முகடுடைத்து கொப்பளித்து மேலெழுந்து வரும் நிலைமைகள் கண்டு, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு பெருமையும் – மகிழ்ச்சியும் கொள்ளுகின்றது.

என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*