கொட்டிக் கொட்டிப் பறைமுழக்கு – உன் குருதி முறுக்கேற தாளமிருக்கு – காலமெல்லாம் பறைப் பாட்டிசைத்த கே.ஏ. குணசேகரன்.

பிறப்பு : - இறப்பு :

1982-ன் ஒரு இரவு. மதுரை வடக்கு வெளிவீதி; தேவி திரையரங்கம் அருகில் கலைநிகழ்ச்சி கே.ஏ .குணசேகரனின் கலை நிகழ்வு. மதுரைப் பல்கலையில் அவர் ஆய்வு மாணவர்.அப்போது ; தொடங்குமுன் நடைபெறும் சொற்பொழிவுச் சடங்கில் நானும் பங்கேற்றேன் . சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் . உடல்நலமில்லாமலிருந்த என் தந்தையாரைப் பேணுதற்காக மதுரை வந்து தங்கியிருந்தேன்.மேடையில் அமர்ந்திருந்த போது, என் தந்தை இறந்துவிட்ட சேதி கிடைத்தது.குணசேகரனிடம் தெரிவித்துவிட்டு கீழே இறங்கினேன்.” உடனே புறப்படுங்க” என்று அவசரப்படுத்தி அனுப்பினார்.மறுநாட் காலை எங்கள் வீட்டுக்கு வந்து என் தந்தையின் உடலுக்கு அஞ்சலி செய்து திரும்பினார். 34- ஆண்டுகளின் பின்னர் அதே குணசேகரனின் உயிர்நீத்த உடலுக்கு நான் இறுதிவணக்கம் செலுத்த வேண்டியதாயிற்று . முந்திய நிகழ்வு மதுரை. இது புதுச்சேரி என்னும் பாண்டிச்சேரி.

அவர் அறுபதை முடிக்கவில்லை.நான் தற்சமயம் 73-ல் நிற்கிறேன்.என்னை அவர் தொட இன்னும் 13- ஆண்டுகள் உள்ளன. என் போன்றவர்களை அனுப்பிவிட்டு அவர் புறப்பட்டுப் போயிருந்தால் சரியாயிருந்திருக்கும்.அவ்வாறுதான் நிகழும் என நினைத்திருந்தேன்..ஒராண்டுக்கு முன் அவர் மாற்றுச் சிறுநீரக அறுவை மருத்துவம் செய்திருந்தார்.அவருடைய அண்ணன் கருணாநிதியின் ஒரு சிறுநீரகம் இடப்பெயர்வாகியிருந்தது. இடப்பெயர்வு, புலப்பெயர்வு ஆகிற வேளையில் மானுடக் கூட்டம் படும்பாட்டை , அலைப்புறும் வாழ்க்கையை, சிறுநீரக மாற்றுக்குப் பின் அவர் தொடர்ந்து பெற்று வந்தார். அகதியாய் தஞ்சம்கொண்டு விடும் வாழ்க்கை.என்னதான் சொகுசாய் இருப்பினும், சொந்த நாட்டில் சொந்த ஊரை நோக்கிச் செல்லும் பாதை போல் இனிமைதருவது வேரொன்றும் இல்லை.அருவை மருத்துவம் முடிந்தும் அவர் ஓய்வெடுத்திருக்க வேண்டும்.ஆனால் தொடர்ந்து பணியிலிருக்க வேண்டிய நிகழ்த்து கலைத்துறையின் புலமுதன்மையர், துறைத் தலைவர் என்ற அதே கட்டமைப்பில் முன்னர் இருந்ததினும் தீவிரமாய் ,காற்றுச் சல்லடையை முகத்தில் கட்டிக் கொண்டு பணியாற்றத் தொடங்கினார். தொற்றுநோய்( INFECTION) ஏற்பட்டு தொடரத் தொடர சென்னை இராமச்சந்திரா மருத்துவ மனைக்கும் புதுச்சேரிக்குமாக அலைய அதுதான் வழிகோலிவிட்டது.

16jan16 (1) 16jan16 (2) 16jan16 (3)

பல்கலை மாணவராயிருந்த நாட்களில் குணசேகரன் பிறந்த ஊரான சிவகங்கையில், கிராமிய ஆட்டக்கலைப் பயிற்சி முகாமை நடத்தியிருந்தார். ஆட்டக்கலைப் பயிற்சியை நடத்திய ‘ கிராமியக் கலையகம்’ , “ கிராமிய இசைப்பயிற்சி முகாம்” ஒன்றினை கீழ்க்கண்ட நாட்களில் நடத்தியது.

27-5-1983- இசை உத்தி முறை28-5-1983 இசைக் கருவிகள் இயக்குமுறை,29-5-1983 பாடல்கள் பயிற்சி முறை என மூவகையாகப் பயிற்சி முகாம் பகுக்கப்பட்டிருந்தது.

அப்போது மக்கள் கலாச்சாரக் கழகம் என்ற அமைப்பின் இதழாக நாங்கள் நடத்திக் கொண்டிருந்த ” மனஓசை” 1983- மே இதழில் இந்த அறிவிப்பை அவரிடமிருந்து பெற்று வெளியிட்டிருந்தோம்.பயிற்சி முகாம் மதுரைக்கு மேற்கில் பாலமேடு செல்லும் வழியில் 20 கி.மீ.தொலைவில் சாத்தையாறு அணைக்கட்டு மாந்தோப்பில் நடந்தது. அப்போது குணசேகரனின் அண்ணன் கருணாநிதி அங்கு மீன்வளத்துறையில் ஆய்வாளராக (FISHERIES INSPECTOR ) இருந்தார்.இசைப் பயிற்சி முகாம் கிரமமாக நடைபெற கருணாநிதியின் ஒத்துழைப்பும் முன்முற்சியும் அடிப்படைமூலங்களாக இருந்தன.சாத்தையாறு அணையில் நடந்த மூன்று நாள் இசைப் பயிற்சி முகாமில் .மக்கள் கலாச்சாரக் கழகம் சார்பில் மூவர் இசைப் பயிற்சி எடுத்தோம். இசைப் பயிற்சி முகாமில் நானும் கே.ஏ. குணசேகரனின் மாணவன்.
அவருக்குள் ஒரு கலைஞனிருந்தான்;அவன் கிராமியக் கலைஞனாக இருந்தான்.அவன் ஒரு ஒடுக்கப் பட்ட மனிதன், சாதிஆணவத் தேர்ச்சக்கரம் ஏறி நசுக்கப்பட்டவன். விடுதலை முண்டுதலின் வேணவா கிராமியக்கலைகளின் தேடுதலாகப் புறப்பட்டிருக்க வேண்டும்.கலையும் இலக்கியமும் அவனது விடுதலைக்கு அல்லாமல் வேறு என்னத்துக்காம்? விழலுக்கு நீர் பாய்ச்சவோ?தேடுதலின் தொடக்கப்புள்ளி கிராமிய ஆட்டக் கலைப் பயிற்சி முகாம், கிராமிய இசைப் பயிற்சி முகாம்; அவனளவுக்கு அந்தப் புதையுண்ட செல்வத்தை தேடியவருமில்லை.அவனளவுக்கு பயன்பாட்டுக்கு எடுத்துச் சுமந்தவரும் இல்லை.

” கொட்டிக் கொட்டிப் பறைமுழக்கு-உன்குருதி முறுக்கேற தாளமிருக்குபட்டிதொட்டி யெங்கும் ஒழிச்சிப்புட்டான்- ஆனா
பறையனென்ற பட்டம் போச்சா, என்ன கிழிச்சான் ?

கொட்டிக் கொட்டிப் பறைமுழக்கு – உன் குருதி முருக்கேற தாளமிருக்கு.”இது தமிழ்மண் மக்களிசைக் குழுப் பாவலர் மு.வ. வின் பாடல். மண்னின் பாடல் என்பது இந்த தலித் கலைஞரைப் பொறுத்தவரை விடுதலை கீதங்களே. ஒரு தொலைக்காட்சி நிலைய அழைப்பின் பேரில் இந்தப் பறையைக் கக்கத்தில் இடுக்கியபடி குணசேகரன் போனார்.தொலைகட்சி நிலையத்தார் கிராமிய இசைக் கலஞராக, நாட்டுப்புறப் பாடகராக மட்டும் இவரைப் பார்த்தார்கள்.நாட்டுப் புற இசைப்பாடலை, அதுவும் சுகமான பாடல்களை கேட்க, ஒளிபரப்ப காத்திருந்தனர்.பறை இசைத்தபடி அவர் பாடத் தொடங்கியதும் அதிர்ந்தனர்.பறையை அவர்கள் இசைக் கருவியாக கனவிலும் கருதவில்லை. தமிழரின் புராதன இசைக்கருவி பறை என அறிந்தவர்களில்லை அவர்கள். தாய்த் தமிழ்மண்ணில் மட்டுமன்று,ஈழத்தமிழ் மண்ணின் தொன்மைக் கலையான தென்மோடிக் கூத்துக் கலையைச் சுருதி சுத்தமாகவும்,அழுத்தம் திருத்தமான தமிழ் உச்சரிப்புடனும் நிகழ்த்திக்காட்ட புராதன இசைக்கருவிகளில் ஒன்றான பறைதான் பிரதான வாத்தியமாக இருந்துவருகிறது என்னும் அங்கத்திய கலைவரலாறும் அவர்கள் அறியார்.

தமிழ்மண்ணின் இசைப்புல வரலாறு அறியாதவர்களாதலால், குணசேகரண் பறைஇசைத்துப் பாடத் தொடங்கியதும், இது அனுமதிக்கப்படுவதில்லை என எதிர்ப்புக் காட்டினர்.வாய்ப்பாட்டு மட்டுமே பாடுமாறு கேட்டுக் கொண்டனர்.” பறை இசைக்காமல் நாம் பாடுவதில்லை” என்று தொலைக்காட்சி நிலையத்திலிருந்து வெளியேறினார் கே.ஏ. குணசேகரன்.
ஈழத்தின் தொன்மையான நிகழ்த்து கலைகளில் சுடர்மிகு இரு விழிகளாகத் திகழ்பவை – தென்மோடிக் கூத்து : வடமோடிக் கூத்து. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை தென்மோடிக் கூத்து அதிகமாகவும் பிரதானமாயும் திகழ்ந்தது. தமிழ்நாட்டில் கூத்துக்கலைகள் பயிற்றுவிப்போரை ’வாத்தியார்’ என அழைப்பதுபோல், ஈழத்தில் ‘ அண்ணாவியர் ’ என அழைத்திடுதல் சொல்வழக்கு; .பிப்ரவரி 2015-ல் கனடாவிலிருந்து அண்ணாவியர் ச.மிக்கேல்தாஸ், நோர்வேயிலிருந்து அவரது இளவல் அண்ணாவியார் ச. ஜெயராஜா ஆகிய தென்மோடிக் கூத்துக் கலைஞர்கள் தமிழகம் வந்திருந்தார்கள்.புலம்பெயர்வுக்கு ஆளான பின்னும் இவர்கள் கூத்து ஆட்டத்தினை தம்முடன் கொண்டு சென்றிருந்தனர்.

பல புதிய பிரதிகளின் ஏடுகளை உருவாக்கியது மட்டுமல்லாது, புராண இதிகாசக் கதைகளிலிருந்தும், கத்தோலிக்கக் கதைகளிலிருந்தும் கூத்துப் பிரதிகளை, சமூகக் கதைக் கருக்களைப் பாடுபொருளாக பரிணாமப்படுத்தியவர் அண்ணாவியர் ச.மிக்கேல்தாஸ். வேறு வேறு நாடுகளில் வாழ்கிற புதிய இளங்கலைஞர்களை நார்வேயில் ஒன்றிணைக்கிறவர் அண்ணாவியார் ச. ஜெயராஜா – நல்லதோர் நடிகர், பயிற்சியாளர், நெறியாளர் எனப் பன்முக ஆற்றல் கைக்கொண்டவர் .

தென்மோடிக் கூத்துக்கலை நாற்றங்கால்களை உருவாக்கி வளர்க்கும் அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸ் அவர்களின் கலைச்சேவையைப் பாராட்டி ஒருவிருது ”புதுவைப் பல்கலைக்கழக நாடகப்பள்ளி( school of performing arts ) சார்பில் வழங்கப் படவேண்டும் என குணசேகரினிடம் நான் தெரிவித்த போது, சிறு தயக்கமும் கொள்ளாமல் ஏற்றார். . ’கலைச் செம்மல்’ என்று வழங்கலாமா என முதலில் நான் கேட்டபோது, ” இல்லை, கூத்துக் கலைச் செம்மல் ” என வழங்கலாம் என்று விருதை வளபடுத்தினார்.. புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் நிகழ்கலைத்துறைத் தலைவர், பேரா.முனைவர் கே.ஏ. குணசேகரன் முன்னின்று நிகழ்த்திட பல்கலைக் கழகப் பதிவாளர் விருது வழங்கினார். வாழும்காலத்திலேயே கலைஞர்கள் கனம் பண்ணுதலுக்கும் கௌரவித்தலுக்கும் உரியவர்கள் என்பதனை உணர்ந்து விருது வழங்கியமை , ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராய் ஆவதற்கு அவர் முயற்சி செய்தபோது. அவர் புறக்கணிக்கப்பட்டதின் ஆறாவடு ரணம் கொண்டபச்சைக்காயமாய் அவர் உள்ளில் கிடந்தது என அறிய முடிந்தது.
”அக்கினி ஸ்வரங்கள்” என்னும் அவரது இசைப்பாடல் நூல் தொடக்க காலத்தில் வெளியாயிற்று. அதற்கு நான்

அணிந்துரை எழுதினேன்.. ஒலிப்பேழை, குறுந்தகடு போன்ற அறிவியல் தொழில் நுட்பங்கள் இன்றைய காலம் போலில்லாது , புத்தக வாசிப்பு வடிவம் மட்டுமே நிலவிய நாட்கள் அவை.கிராமியக் கலைகள், இசை என அறியப்படும் மண்ணின் கலைகளைப் பற்றி மட்டுமின்றி, முன்னைத் தமிழ் பற்றிய ஆய்வுகள் பலவும் அவர் செய்தார். ” பட்டினப்பாலை- மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும் “ என்ற நூல் அவரது ஆய்வு வெளிப்பாட்டில் இறுதியில் வந்த நூல்.( 04-11-2015) அன்று இந்நூலினை ’ அருமைத் தோழருக்கு’ என அவர் கையெழுத்திட்டு வழங்கியிருந்தார்). ”வடு” தன்வரலாற்றுப் புதினமும், தலித்தியம், பெண்ணிய விடுதலையை முன்னிறுத்தும்.”பலியாடுகள்’ நாடகமும் பரவலாக அறியப்பெற்றவை.

தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக் கோட்பாட்டை வழங்கியவர் அம்பேத்கர் . .அம்மக்களின் விடுதலையை கலை. வடிவில் எடுத்துச் சென்றவர் கே.ஏ.குணசேகரன். மக்கள் பாவலர் இன்குலாப் எழுதிய ‘ மனுஷங்கடா, நாங்க மனுஷங்கடா” பாடல் தமிழகத்திலும் உலகத் தமிழர்வீதிகளிலும் ஒலிக்கச் செய்த அந்த கணீர்க் குரலை, அவர்பாட நேரில் இனி கேட்க இயலுமா?

“ சாமான்ய மக்களின் சஞ்சலத்தை வெளிக் காட்ட
அக்கினிச் சுரம் எடுத்து அதிர வைத்தாய்;
அகிலத்தை என்னான்னு கேட்க, யாருமிலா எங்களுக்கு
‘தன்னானே’ என்று தாளம் சொல்லித் தந்தாய்
ஒட்டுப் போட்டு தச்ச சேலையை ,
ஊரணியில் துவைக்கப் போன தாயிடம்
“ பாவாடை சட்டை கிழிஞ்ச பள்ளிக்கூடத்துப்
பிள்ளைவிடும் கண்ணீரையும்”
இளைய குஞ்சிக்கு இரைதேடப் போயி
கண்ணிக்குள்ளே மாட்டிக் கொண்ட
” ஆக்காட்டிக் குருவியின் கண்ணீரையும்”
எமக்குக் காட்டியவரே,
எம் கண்ணீரை யார் துடைப்பார் ! “

புதுச்சேரி மயானத்தில் நாடகத் தந்தை சங்கரதாஸின் கல்லறையினை ஒட்டி அமைதியாய்த் துயிலும் குணசேகரனின் புதைமேட்டில் நின்றழுத பாவலர் மு.வ.வுடன் இப்பாடலை எல்லோரும் சேர்ந்திசைத்தோம்.

– Jeya Pirakasam –

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit