இலங்கையில் தமிழினமும் அரசியல் தீர்வும்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Sri Lankan ethnic Tamil women cry holding portraits of their missing relatives during a protest in Jaffna, Sri Lanka, Friday, Nov. 15, 2013. Hundreds of ethnic Tamils protested in the main northern city of Jaffna before British Prime Minister David Cameron's arrival for the Commonwealth summit, demanding answers about the thousands who went missing near the worst war's end in 2009 between soldiers and ethnic Tamil rebels fighting for a homeland. (AP Photo/Eranga Jayawardena)

இலங்கையில் தமது உரிமைகளை வென்றெடுத்து சுதந்திர பிரஜைகளாக வாழ்வதற்காக  தமிழ் மக்கள் பல வழிகளில் போராடியமை வரலாற்று உண்மையாகும் . அரசியல் ரீதியில் பல்வேறு போராட்டங்களில் சம உரிமைக்காக போராடிய தமிழினம் காலப்போக்கில் உரிமைகளை ஆயுதம் ஏந்திப்பெற்றுக் கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டது. இதன் பின்னரே இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் சர்வதேச அரங்கிற்கு சென்றது.

குறிப்பாக மேற்குலக நாடுகளின் பார்வையும் தமிழினத்தின் ஆயுதப்போராட்டத்தின் பின்னர் தான் இலங்கை மீது வலுவடைந்தது . எவ்வாறாயினும் மூன்று தசாப்தகால உரிமைகளை வென்றெடுப்பதற்கான தமிழினத்தின் ஆயுதவழிப் போராட்டம் ஓய்ந்தபோது , தமிழ் மக்களின் அரசியல் தீர்விற்கான பொறுப்பை சர்வதேசத்திடமே பாரப்படுத்தி விட்டு ஓய்ந்தது.

பிறந்த மண்ணிலேயே ஒரு இனம் அரசியல் ரீதியில் ஒடுக்கப்படும் போது அதன் தாக்கம் தேசிய அரசியலில் மாத்திரம் அல்ல அந்த நாட்டின் அனைத்து உயர் வேர்களுக்கும் தாக்கம் செலுத்தும். இதனையே கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தில் இலங்கை சந்தித்தது. பல்வேறு உள்நாட்டு நெருக்கடிகளை எதிர் கொண்ட உலக நாடுகளின் நிலையும் இது தான்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியுடன் இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவிற்கு கொண்டு வரப்பட்டதாக அப்போதைய ஆட்சியாளராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் அரசு அறிவித்தது. இதன் பின்னர் அரசியல் ரீதியில் பல்வேறு கருத்துக்கள் இலங்கை தமிழர்களின் அரசியல் தீர்வு  தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பேசப்பட்டது.

அது மாத்திரம் அல்ல பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பேரில் இலங்கையில் தமிழினம் திட்டமிட்டு அழிக்கப்பட்டதாக சர்வதேச சமூகம் அப்போதைய ஆட்சிக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் , மனித உரிமை மீறல்கள் என பல்வேறு நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுத்தது.

அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சர்வதேசம் எம்மீது அக்கறையுடன் உள்ளது. அவர்கள் எமது உரிமைகளை பெற்றுக் கொடுப்பார்கள், அநியாயமாக கொல்லப்பட்டும் காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கிடைக்கப் போகின்றது என ஒரு பக்கம் ஆறுதல் அடைந்தார்கள்.

மறுபக்கம் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனக் கூறி, அரசாங்கம் எம் இனத்தை வேரறுத்து விட்டதே என்று வேதனைப்பட்டனர். இவ்வாறு வேதனைகளும் சோதனைகளும் ஏமாற்றங்களும் யுத்தம் முடிவடைந்த பின்னரும் தமிழ் மக்கள் அனுபவித்தமையை யாரும் மறுத்து விட முடியாது.

2009 ஆம் ஆண்டின் பின்னர் பொறுப்புக் கூறல் எனக் கூறி ஐக்கிய நாடுகள் சபையிலும் இலங்கையை சர்வதேச சமூகம் நெருக்கடிக்குள் தள்ளியது. இவ்வாறு விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக தோல்வியடையச் செய்த பின்னர் சர்வதேசம் கடந்த ஆட்சியில் தமிழர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் செயற்பட்டது.

ஆனால் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் தேசிய அரசியலில் இருந்து மாத்திரம் அல்ல சர்வதேசத்தின் பிடியில் இருந்தும் தமிழர்களின் உரிமைக்கான அழுத்தம் நளுவிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஐ . நா. மனித உரிமைகள் பேரவையில் கூட தற்போதைய நல்லாட்சிக்கு ஆதரவான பிரேரணையே நிறைவேற்றப்பட்டது.

அண்மைக்காலமாக இலங்கைக்குப் படையெடுக்கும் மேற்குலக முக்கியஸ்தர்ளும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து வர்த்தக ரீதியான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டு விட்டு வெறுமனே தமிழ் அரசியல் தலைமைத்துவங்களை சந்தித்து விட்டு போகின்றனேரே தவிர இழப்புகளை சந்தித்த தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதாக தெரியவில்லை.

கடந்த ஆட்சியில் தமிழர்களின் உரிமையைப்பற்றி சர்வதேசம் ஈடுபாட்டுடன் செயற்பட்டது சுய அரசியல் தேவைகளுக்காகவா ? என்ற சந்தேகம் கூட இன்று தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அரசாங்கம் உத்தேசித்துள்ள புதிய அரசியலமைப்பு யாப்பில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா ? அல்லது அந்த இறுதி சந்தர்ப்பமும் கைநழுவிப் போய் விடுமா என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.

கைக்கெட்டியது வாய்க்கு எட்டாத நிலையிலேயே தமிழர்களின் அனைத்து விடயங்களும் இறுதி சந்தர்ப்பத்தில் இல்லாமல் போனது. இலங்கை தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவிற்கு பாரிய பொறுப்புள்ளமையை சொல்லிக் காட்ட வேண்டிய தேவை கிடையாது. ஆனால் கடந்த ஆட்சியில் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் மேலோங்கியமையினால் அதனை சீர் செய்யும் நோக்கில் இந்தியா செயற்படுகின்றதே தவிர தமிழர்களின்அரசியல் தீர்வு விடயத்தில் அழுத்தம் கொடுக்கும் நிலையை தமிழர்களால் உணரக் கூடிய வகையில் இல்லை .

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படும் போக்கினையே சர்வதேசம் வெளிப்படுத்துகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் தமிழர்களின்அரசியல் பிரச்சினைக்கான நியாயமான தீர்வுத் திட்டம் ஒரு நம்பிக்கையில்லா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது .

இது போதாதென்று இது வரைகாலமும் அரசியல் தீர்வு என குரல் கொடுத்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிளவுபட்டுப் போயுள்ளது. கூட்டமைப்பில் போட்டியிட்டு வட மாகாண முதலமைச்சரான முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் கூட்டமைப்பிற்கு எதிராக வெளிப்படையாகவே பேசுவதும் தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கி அதனூடாக அரசியல் காய்நகர்த்தல்களை முன்னெடுப்பதும் தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

நிலைமை முத்திப்போய் நம்பிக்கையில்லா பிரேரணை தொடரபில் பேச்சையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு ஒரு முரண்பாட்டு தன்மையை தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ளமையானது, இந்த அரசாங்கம் தனது புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு குறைந்தபட்ச முன்னெடுப்புகளுக்கும் முட்டுக்கட்டையான நிலையே ஏற்படும்.

எனவே உள்நாட்டில் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய சம அரசியல் உரிமைகள் இன்று பல்வேறு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. ஒற்றுமையுடன் செயற்பட்டால் தற்போதைய அரசாங்கம் உத்தேசித்துள்ள புதிய அரசியல் யாப்பில் குறிப்பிட்டளவு தீர்வு விடயத்தில் முன்னேற்றம் காண முடியும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

ஆனால் புதிய யாப்பில் அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் நானும் யோசனைகளை முன்வைப்பேன் என போட்டிபோட்டுக் கொண்டு தமிழ் தலைமைத்துவங்கள் செயற்படுமேயானால் கிடைக்கின்றதும் கிடைக்காமல் போய் விடும். அவ்வாறான நிலைமை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டால் அது தன்னினத்திற்கு எதிரான துரோக செயலாகவே தமிழ் மக்கள் கருதுவர் .

எதிர் நீச்சல் போட்டு தீர்வைப் பெற்று விடலாம் என்று அன்று பல குழுக்கள் ஆயுதம் ஏந்தி போராடியது . ஆனால் தமக்கிடையே பிளவுகள் ஏற்பட்டு ஒற்றுமையை இழந்து மோதிக் கொண்டமையினால் உயிரும் பறிபோய் தமிழினத்தின் பேரழிவிற்கு காரணமாகியது. அவ்வாறானதொரு அரசியல் பிளவுகள் எஞ்சியுள்ள தமிழினத்திற்கும் அழிவை ஏற்படுத்தி விடும்.

தமிழ் மக்கள் தமது அரசியல் தீர்விற்கான போராட்ட வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் பாடங்களைக் கற்றுக்கொண்டது. பிற நாடுகளையும் பிற நபர்களையும் நம்பி துரோகங்களுக்குள் சிக்கியதே தவிர மக்களின் அரசியல் உரிமைகள் நிறைவேறாத கனவாகியது. இது தமிழர்களின் வரலாற்றுப் பாடம்.

ஆகவே இன்றைய நிலைமையை உணர்ந்து செயற்பட வேண்டியது தமிழ் அரசியல் தலைமைத்துவங்களின் கடப்பாடாகும். தமிழ் மக்கள் மிகவும் கூர்மையாக அவதானிக்கின்றனர். பன்னாட்டுத் தலைவர் வந்து தமிழர்களுக்கான அரசியல் உரிமையை எமது கையில் வைத்து விட்டு செல்வார்கள் என்று எண்ணி அவர்களிடம் உரிமைக்கான போராட்டத்தை காட்டிக்கொடுத்து விடக்கூடாது.

ஏனெனில் , இன்று சர்வதேச அரசியல் வேறு திசையில் செல்கின்றது. தத்தமது அதிகாரம் மற்றும் பலத்தை மையப்படுத்தி பிராந்தியத்தில் பலமிக்க நாடுகள் காய்நகர்த்தல்களில் தற்போது ஈடுபடுகின்றன. இந்த நிலையில் இலங்கையில் வாழும் தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அந்த நாடுகள் முழு அளவில் பங்களிப்பு செய்யும் என்ற நம்பிக்கையும்பொறுத்தமற்றது.

இதே வேளை , உள்நாட்டிலும்அரசியல் ரீதியிலான அங்கீகாரத்திற்கே சட்டவாக்கசபையில் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றதே தவிர, உண்மையான பிரச்சினைகளையோ, தீர்வுகளையோ கருத்தில் கொண்டதாக தெரியவில்லை. அரசியல் தரப்புகளின் மேடைப் பேச்சுகள் இதற்கு நற்சான்று பகிர்கின்றன.

இந்நிலையில் இலங்கையில் தமிழர்களின் தீர்வு விடயம் பல நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. இதனை மேலும் பாதாளத்தில் தள்ளி விடுவதாக எம்மவர்களின் செயற்பாடுகள் அமைந்து விடக் கூடாது என்பது தமிழர்களின் வேண்டுதலாகும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit