தமிழீழம் சார்ந்த பல புதிய முன்னெடுப்புக்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை முன்மொழிந்துள்ளது !

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நடந்து முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் தமிழீழம் சார்ந்த பல புதிய முன்னெடுப்புக்களுக்கான செயற்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசின் இன அழிப்புக் குற்றத்தினை முன்னிறுத்தி பன்னாட்டு நீதிதளத்தில் போராடுதல், போர்க்கைதிகளின் விடுதலையை வற்புறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தல்,தமிழீழத்துக்கான அரசியல் யாப்பைத் தயாரிப்பதற்கு உலகம் முழுதுமுள்ள தமிழரை ஒன்று திரட்டுதல்

, தமிழீழ மக்களுக்கென மெய் நிகர் (விர்ருவால்) அரசாங்க சேவைகளைத் தொடங்குதல் ஆகிய முக்கிய யோசனைகள் அங்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அரசவை உறுப்பினர்களும் மேலவை உறுப்பினர்களும் இடையில் இடம்பெற்றிருந்த இணைந்த கூட்டத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கெனப் பல புதிய நுண்ணிய கருத்துக்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

திரு அனன் பொன்னம்பலம் அவர்கள் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். மேலவை உறுப்பினர்கள் (Senators) ஜில்ஸ் பிகுவா (Gilles Piquois), டேவிட்; மாட்டஸ் (David Matas), தணி சேரன், சத்யா சிவராமன் ஆகியோர் இப்பொழுது நிலவும் உலகச் சூழ்நிலையையும் இனி நாம் முன்னோக்கிச் செல்லவேண்டிய வழி முறைகளையும் விளக்கினார்கள். மேலவை உறுப்பினர் பிரையன் செனவிரத்ன (Brian Senewiratne) அவர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு காணொளித் தொகுப்பை அனுப்பியிருந்தார். அதில் அவர், எதிர்காலத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு நேரவுள்ள அச்சுறுத்தல்கள் பற்றி விளக்கியதுடன், உடனடியாக என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பது பற்றியும் யோசனைகள் கூறியுள்ளார்.

நடைபெற்று முடிந்த போரில் குற்றம் இழைத்தவர்களையும் மானிடத்துக்கு எதிராகக் குற்றம் இழைத்தவர்களையும் விசாரித்துத் தண்டிப்பதற்காக சிறிலங்கா அரசு ஒரு ‘கலப்பு’ (hybrid) நீதிமன்றத்தை அமைப்பதற்கான சாத்தியக் கூறு இருப்பதற்கு இவ்வாண்டு (2015-ம் ஆண்டு) கடந்த செப்டெம்பரில் நடைபெற்ற ஐ. நா. மனித உரிமை ஆணையத் தீர்மானம் வழிவகை செய்கின்றது. இதனைத் தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ‘கண்காணிப்பு மற்றும் பொறுப்பு கூறுவதற்கான குழு’ (Monitoring and Accountability Panel) ஒன்றை நிறுவியுள்ளது. இக்குழுவில், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த சட்ட வல்லுனர்கள் உறுப்பினர்களாக விளங்குகிறார்கள். இவர்கள், சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளை நன்கு ஆய்வு செய்வதுடன் சிறீலங்கா அமைக்கும் நீதிவழங்கலின்; நம்பகத் தன்மைகளைத் துல்லியமாக ஆராய்ந்து, அவை அனைத்துலகச் சட்ட நியமங்களுக்கு ஏற்பனவாக உள்ளனவா என்பதை அறிவிப்பார்கள்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேலவை உறுப்பினர்கள் மேலே குறிப்பிட்ட ”கலப்பு’ (hybrid)) நீதிமன்றத்தைப் பல கோணங்களில் இருந்தும் ஆராய்ந்து, 2009-ம் ஆண்டில் நடைபெற்ற இன அழிப்புப் போரில் வதை பட்ட ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் எவ்வகையில் அது உதவக்கூடும், எவ்விதமான குறைபாடுகளைக் கொண்டிருக்கும் என்பவற்றை ஆய்ந்து, அவர்களுடைய கருத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்றம் மற்றும் மேலவை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன் நாடாளுமன்றக் கூட்டத்தில் புகழ்பெற்ற சட்டப் பேராசிரியர் டெர்மற் குரூம் ( Professor Dermot Groomeந) அவர்கள் ஆற்றிய சிறப்புரையினை மேற்கோள்காட்டி, சிறிலங்கா அரசின் மீது இன அழிப்புக் குற்றத்தைத் தொடரவேண்டும் என்றும் அதற்கான சட்டம் மற்றும் இதர தகவல்களைத் திரட்ட வேண்டும் என்றும் மேலவை பரிந்துரைத்துள்ளது.

தமிழர்களின் பொதுவான கோரிக்கைகளை அனைத்துலக சமூகம் கவனமாகச் செவிமடுத்து ஆவன செய்ய வேண்டுமெனில், உலகளாவிய தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் ஒரு குரலுடன் இயங்க வேண்டுமென மேலவை கேட்டுக்கொள்கின்றது.

காணாமல் போன மக்களின் கதி என்னவாயிற்று என்பதை உலகின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு, போர்க்கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என வற்புறுத்தி உலகம் முழுவதும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பரப்புரை மேற்கொள்ள வேண்டுமென ஜில்ஸ் பிகுவா அவர்கள் வலியுறுத்தியதோடு ‘எத்தனை போர்க்கைதிகள் உள்ளனர்? அவர்கள் யார் யார்? அவர்களுக்கு என்ன நடக்கின்றது? என்ற கேள்விகளை தொடர்ந்து எழுப்ப வேண்டுமெனவும் 2009-ம் ஆண்டில் இருந்து ‘காணாமல் செய்யப்பட்டுள்ள’ பல்லாயிரக் கணக்கான மக்கள் எவ்விதமான குற்றச்சாட்டும் இல்லாமல், அவர்கள் சிங்கள இராணுவத்தால் கடத்தப் பட்டும்;, கொல்லப்பட்டும் அல்லது கொடுஞ்சிறையில் துன்புறுத்தப் பட்டுமுள்ளார்கள் என்றார்.

மேலவை உறுப்பினர்கள் கொடுத்த வேறு பல முன்மொழிவுகள் கவனத்தில் வைக்கப்பட்டு நடைமுறைப் படுத்துவது பற்றி மேலும் கலந்துரையாடி ஆராயப்பட வேண்டும். ஆராயப் படுவதற்கும் அல்லது நடைமுறைப் படுத்துவதற்கும் ஏற்றவாறு இணைந்த கூட்டத்தில் மேலவை மூன்று இடைக்காலத் திட்டங்களை முன்மொழிந்துள்ளது. அவை பின்வருமாறு:

அ) உலக அரசுகளில் பல தங்கள் குடிமக்களுக்கென பல்வேறு எலெக்றோனிக் (மெய் நிகர்); சேவைகளை இணையம், அலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றின் வழியாக வழங்கி வருகின்றன. உலகம் முழுதும் பரந்து வாழும் ஈழத் தமிழர்கள், குறிப்பாக தாயகத் தமிழர்கள், அனைவரும் பயன்பெறும் வண்ணம் இவ்வகை சேவைகள் பலவற்றை அமைக்கும் சாத்தியக் கூறுகள் பற்றி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆராய வேண்டும் என்று வலியுறுத்தப் படுகின்றது. இது ஒரு ‘உருவம் அற்ற’ மெய் நிகர் அரசாங்கம் (Virtual Government ) போல் செயலாற்றி, கல்வி, உடல்நலம், செய்திறன் வளர்த்தல், ஆற்றுப் படுத்தல் போன்ற பல துறைகளில் மக்கள் தேவைகளை நிரப்பும்;. இதன் நடைமுறைச் சாத்தியம், மற்றைய தேவைகள, சேவைகள் வழங்கும் முறை என்பவற்றை ஆய்வதற்கு தனியாக ஒரு துணைக்குழுவை அமைக்க வேண்டும். இந்த ‘மெய் நிகர் அரசாங்கம்’ என்பது தமிழீழ நிலப் பரப்பில் அமையவுள்ள தன்னாட்சியுடைய தாயக அரசுக்கு மாற்றீடானது அல்ல என்பதை நினைவில் கொள்ளும் அதே வேளையில் எமது தேசத்தின் அடித்தளமாக உள்ளது நிலம் தான் எனும் உண்மையை எக்கணமும் நாம் நினைவில் நிலைநிறுத்தி செயல் ஆற்றவேண்டும்.

ஆ) 1976-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம், இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைத் தீர்மானம் (Interim Self-Governing Authority – ISGA) , மற்றும் தமிழீழ விடுதலை வரைவு (Tamil Eelam Freedom Charter ) ஆகியவற்றின் அடிப்படையில் தமிழீழ அரசியல் யாப்பு (Constitution of Tamil Eelam) எழுதுவதற்கான நடவடிக்கையைத் தொடங்குவது. இந்த நடவடிக்கையில் அரசியல் வேறுபாடுகள், மற்றைய வேறுபாடுகள் அனைத்தையும் தாண்டி அவற்றுக்கு அப்பால் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பங்கெடுக்க வேண்டும்;. தமிழீழ அரசியல் யாப்பு தயாரிப்பதில் அனைவரும் பொதுவாக ஏற்றுக்கொள்ளத் தக்கவாறு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும், அதேவேளை, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி இதை ஒரு வரலாற்று நிகழ்வாகவும், அனைவரையும் இதில் பங்குதாரர்களாக்கி;, முன்னோக்கிய பார்வை கொண்டதாகவும்; தொடங்கவேண்டும் என்றும் உணரப்படுகின்றது. இந்த அரசியல் யாப்பு வரைதலை நிறைவேற்றி, தனித் தமிழீழமே தீர்வு என்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40-ஆம் ஆண்டு நிறைவின்போது இந்த அரசியல் யாப்பை அனைவருக்கும் அறிவிப்பது சாலவும் சிறப்புடைத்து என்றும் உணரப்படுகின்றது.

இ) புதிய தமிழீழ நாணயம் (Tamil Eelam currency) தொடங்கலாமா என்பதும், நடைமுறையில் எவ்வளவு சாத்தியமானது என்பது குறித்தும் விவாதிக்கப் பட்டது. பொருளியல்;, சட்டம் மற்றும் அரசியல் துறைசார் நிபுணர்களைக் கொண்ட துணைக்குழு ஒன்று தமிழீழ நாணயம் பற்றிய யோசனையை ஆராய வேண்டும். தமிழீழ நாணயம் செயற் திட்டத்தினை பிரபலப் படுத்தி ஊக்கம் பெருக்குவதற்கு ஏற்ப உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களிடையே நாணய உருவாக்கம் செய்யும் ஒரு போட்டியை வைத்து, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கலாம் என்ற யோசனையும் முன்வைக்கப் பட்டது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*