நாட்டுப்பற்றாளர் நடராஜா இராஜசூர்யர் அவர்களின் 3ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று

பிறப்பு : - இறப்பு :

தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் அளப்பரிய பணி செய்த நாட்டுப் பற்றாளர் நடராஜா இராஜசூர்யர் (ரங்கன் அல்லது குபேரன்) அவர்களின் 3ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.

ரங்கன் போய்விட்டான் அன்று அதிகாலை வந்த தொலைபேசி.

27ம் திகதி அதிகாலை. விடிந்தும் விடியாத ஒரு இருள்காலையாத பொழுதில் தொலைபேசி அழைப்பொன்று. இப்படியான பொழுதில் வருவது இரண்டு அழைப்புகள்தான். உயிரான உறவின் அழைப்பு.

அது இல்லை என்றால் உறவொன்றின் உயிர்பிரிந்த அழைப்பு. மறுமுனையில் நண்பனொருவன். தொலைபேசிக்குள்ளாக வரப்போகும் செய்திக்காக காதுகளையும் இதயத்தையும் தயார் செய்படியே கேட்டபோதுதான் அவன் சொன்னான் ரங்கன் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முந்தி போய்விட்டானாம்.

வலிக்க வலிக்க மரணங்களை பாத்தும் கேட்டும் மரத்துப்போனதாக நம்பிக்கொண்டிருந்த மனது உடையத்தொடங்கியது. ரங்கன் எத்தகைய உறவாக இருந்தான் என்பதைவிட அவன் தான் நம்பிய இலட்சியத்தின் மீதான நம்பிக்கையையும் அந்த இலட்சியத்துக்காக உறுதியுடன் வழிநடாத்தும் தலைமைமீதான நம்பிக்கையையும் இறுதி வைத்திருந்தானே,அதுதான் அவனுடனான உறவாக இருந்திருக்கும்.

இத்தனைக்கும் ரங்கனின் சொந்தப் பெயர்கூட அவனுடன் பழகிய அனைவருக்கும் தெரிந்திருக்கவில்லை.அவன் தனது இயக்கப்பெயருடனேயே பழகினான். அதனுடாகவே தனது வேலைகளையும் செய்தான். பயிற்சிக்காக வரும் புதியவர்களை மதுரையில் ஒரு தங்குமிடத்தில் வைத்திருந்து அதன்பின்னரேயே பலதரப்பட்ட பயிற்சி முகாம்களுக்கும் பிரித்து அனுப்புவார்கள்.

அப்படியான ஒரு தங்குமிடத்துக்கு சென்றபோதுதான் ரங்கனை முதன்முதலில் சந்திக்க நேர்ந்தது. அங்குதான் அவன் குபேரான மாறினான்.அவனின் இயக்கப் பெயர் குபேரன். அதிலும் ‘சிரிப்புக் குபேரன்’ என்றால்தான் அதிகமானவர்களுக்கு தெரியும்.

3வது பயிற்சி அணியில் பயிற்சி பெற்றபோதே பயிற்சியாளர்களால் சிறந்த வீரனாக இனங்காணப்பட்டு அதன்பின் அதே பயிற்சி முகாமின் 6வது 9வது பயிற்சி அணிகளுக்கு பயிற்சி அளிக்கும் மாஸ்டராகவும் விளங்கினான்.

பொன்னம்மானின் அன்புக்கும் அவரின் வியப்புகளுக்கும் ரங்கன் உரியவனாக இருந்தான்.அதனால்தான் பொன்னம்மான் தாயகம் திரும்பும்போது ரங்கனும் அவருடன் தாயகம் திரும்புகிறான்.தாயகம்வந்ததும் யாழ்அணியில் குபேரனும் ஒருவனாகிறான்.

தளபதி கிட்டுவின் மெயின்பேஸான நம்பர் 3ல் ரங்கனும் உள்வாங்கப்படுகின்றான்.அதன்பின் யாழ்கோட்டைமீதான் முற்றுகைப் போரில் முக்கியபங்காற்றிய நம்பர் 3 முகாம் வீரர்களில் ஒருவனாக ரங்கனும் களமாடுகின்றான்.

அதற்குபின் இந்தியப்படை வருகையின்போது அவர்களுடான சண்டையின்போது பலா அண்ணை தம்பதிகளின் பாதுகாப்புக்கான முக்கியவீரர்களில் ஒருவானாகவும் ரங்கன் விளங்குகின்றான். அதன்பின் பாலா அண்ணையுடனேயே இந்தியாவந்த ரங்கன் அங்கேயே தங்கிவிடுகின்றான்.

கேட்டால் அமைப்பைவிட்டு தான் விலகிவிட்டதாகவும் துண்டுகொடுத்து விட்டு இங்கு இருப்பதாகவும் சென்னையில் சொல்லிக் கொண்டிருந்தான். விலகி வந்துவிட்டதக சொல்லிக்கொண்டே வேறு வேலைகள் செய்துகொண்டிருக்கும் ஒருவனாகவே நினைத்தேன். என்னதான் விலகியதாக சொல்லிக்கொண்டிருந்தாலும் அவனால் தன்னை உருமறைக்க தெரியவில்லை.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி செத்தபோது யாரையாவது பிடித்து தண்டனைவாங்கி கொடுத்தே ஆகவேண்டிய நிர்வாக அழுத்தங்கங்கள் ஆளுவோருக்கும் ஆள்வோரை தாங்கிநிற்கும் காவல்துறைக்கும் உறவுத்துறைக்கும் ஏற்பட்டபோதில் நிறைய கைதுகள் மிகநிறைய மிகமிக நிறைய சித்திரவதைகளும் நடந்தேறின.அவற்றினுடாக கிடைத்த வாக்குமூலங்களை வைத்து வழக்கும் தொடுக்கப்பட்டது.

முதலில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் (இருபதுக்கும் மேற்பட்டோர்) மரண தண்டனையை நீதிமன்றம் வழங்கியது. புலன்விசாரணையை தலைமைதாங்கி நடாத்திய கார்த்திகேயன் இது வாய்மையின் வெற்றி’ என்று புளகாங்கிதம் அடைந்ததார். அப்போது மரணதண்டனை பெற்றவர்களில் ரங்கனும் ஒருவன். ஆனாலும் பின்னர் நடந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பில் ரங்கன் விடுதலையானான். ஆனால் இந்த காலத்தில் பத்துவருடங்களுக்கும் மேலாக ரங்கன் சிறையில் வாடி இருக்கின்றான். அதன்பின்பான ஒரு பொழுதில் லண்டனில் ரங்கனை கண்டபோதும் தமிழீழ விடுதலை மீதான அவனின் பற்றும் உறுதியும் இன்னும் அதிகமாகி இருந்ததையே காண முடிந்திருந்தது. ஏதாவது ஒரு வேலையாக எந்தநேரமும் அலைந்து கொண்டே இருப்பான்.

மிக இக்கட்டான காலப்பகுதியில் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மெய்ப் பாதுகாப்பாளனாகவும் பராமரிப்பாளனாகவும் பணியாற்றி தனக்குத் தரப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்தார்.

முள்ளிவாய்க்கால் எல்லோர் மீதும் எறிந்து விட்டுபோன தாக்கங்கள் ரங்கனிலும் தெரிந்தது. ஆனாலும் அவன் சோர்ந்திருக்கவில்லை. மறுநாளே அங்கிருப்பவர்களுக்கு புனர்வாழ்வுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று வேலை செய்யதொடங்கி விட்டான். இதுதான் ரங்கன் என்று எந்தவொரு வறையறைக்குள்ளும அடக்கி விடமுடியாத ஒரு உற்சாக மனிதன் அவன். இப்போதெல்லாம் அதிகமாக அவனை கோவில்களிலேயே காணமுடிந்தது.

அவன் மரணித்த அந்த நாளின் முன்னிரவும்கூட கோவிலுக்கு போய்விட்டுவந்து அதே வேட்டியுடனேயே படுத்திருந்திருக்கிறான். அதிகாலை மாரடைப்பு அவனை பிரித்துவிட்டது. அதே வேட்டியுடனேயே அவனின் மரணம் நிகழ்ந்தும் இருக்கிறது. இறுதிவரைக்கும் தமிழீழநினைப்புடனேயே வாழ்ந்த ஒருவனாக வரலாறு ரங்கனை பதியும் என்று நம்புகின்றேன்.

d7cd3b18-eb1a-4026-8fbc-6e2a89c3b641

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit