2016 சுவிஸ் அரசியல்சட்டவரம்பும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பும் – ஓர்பார்வை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறியிருக்கும் வெளிநாட்டவர்கள் குற்றச்செயல்களிலும் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கும் நிலையில் சுவிட்சர்லாந்தில் புதியசட்டம் ஒன்றுக்கான முன்மொழிவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

குற்றம்புரியும்வெளிநாட்டவர்களை நாடுகடத்துவதற்கான சட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என வலதுசாரி கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி பிரேரணையை முன்வைத்துள்ளது.

இந்த பிரேரணை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டுமாக இருந்தால் நாடு தழுவிய ரீதியில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

எதிர்வரும் 28.02.2016 அன்று குற்றம்புரியும் வெளிநாட்டவர்களை நாடுகடத்த வேண்டுமா? இல்லையா? என்றகருத்தறியும் வாக்கெடுப்பு 26 மாநிலங்களிலும் நடத்தப்படும் என சுவிஸ் அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

சுவிட்சர்லாந்து சமஷ்டி அரசியல்யாப்பின்படி எந்தஒரு பிரேரணையாக இருந்தாலும் நேரடியாக மக்களின் அங்கீகாரத்திற்கு விடப்படவேண்டும். மக்கள் அங்கீகரித்தால் மட்டுமே அதனை சட்டமாக்க முடியும்.

எதிர்வரும் மார்ச் 28ஆம்திகதி நடைபெறும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் குற்றம்புரியும் வெளிநாட்டவர்களை நாடுகடத்துவது பற்றிய பிரேரணை, மற்றும் திருமண சட்டதிருத்தம் உட்பட நான்கு பிரேரணை மீது மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

திருமணச் சட்டதிருத்தம் பற்றி சுவிஸில் குடியேறியுள்ள ஆசிய நாட்டவர்கள் பெரியஅளவில் அக்கறை கொள்ளப்போவதில்லை.

சுவிட்சர்லாந்தில் ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்ந்தாலும் அவர்கள் சட்டரீதியாக திருமணம் செய்து கொள்வதில்லை, பிள்ளை ஒன்றை பெற்றெடுக்கப்போகும் சந்தர்ப்பத்தில்தான் அவர்கள் சட்டரீதியான பதிவு திருமணத்தை செய்து கொள்வார்கள்.

ஆணும் பெண்ணும் சட்டரீதியாக திருமணம் செய்யாது குடும்ப பங்காளிகளாக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்வதற்கு சுவிஸ் சட்டத்தில் இடமுண்டு. அவர்கள் விரும்பிய நேரத்தில் பிரிந்து செல்லலாம். விவாகரத்து பெறவேண்டிய அவசியம் கிடையாது.

சட்டரீதியாக திருமணம் செய்யாது தம்பதிகளாக ஒன்றாக வாழ்வதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக வருமானவரி பிரச்சினையே காரணம் என கூறப்படுகிறது.

சட்டரீதியாக திருமணம் முடிக்காது இருந்தால் அவர்கள் குறைவான வருமானவரியையே கட்ட வேண்டி இருக்கும். சட்டரீதியாக திருமணம் முடிக்கும்போது இருவரின் வருமானத்தையும் சேர்த்து குடும்ப மொத்தவருமானமாக கணிக்கின்றபோது வரித்தொகை அதிகமாகும்.

அவர்களுக்கு பிள்ளை பிறக்கின்றபோது வருமானவரி குறைவடையும். இதனால்தான் பெரும்பாலானவர்கள் சட்டரீதியாக திருமணம் செய்யாது ஒன்றாக வாழ்கின்றனர். பிள்ளை பிறக்கப்போகும் வேளையில் பதிவுத்திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இதனால் சட்டரீதியாக திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே சட்டரீதியாக பதிவுத் திருமணங்களை அதிகரிக்கும் நோக்கில் சுவிஸ் சமஷ்டிக்கட்சி திருமணசட்டதிருத்தம் தொடர்பான பிரேரணையை முன்வைத்திருக்கிறது.

திருமண திருத்தசட்டம் பற்றி ஆசிய நாட்டவர்கள் குறிப்பாக சுவிஸில் உள்ள இலங்கையர்கள் கவனம் செலுத்தமாட்டார்கள். சுவிட்சர்லாந்தில் பிறந்து வளர்ந்த ஈழத்தமிழரின் இளையதலைமுறையினரில் பெரும்பாலானவர்கள் தமது நாட்டின் கலாசாரத்தையே பேணிவருகின்றனர். முறைப்படி பதிவுதிருமணம் செய்த பின்னரே ஒன்றாக வாழ்கின்றனர்.

எனவே இச்சட்டதிருத்தம் பற்றி சுவிஸில் உள்ள ஈழத்தமிழர்கள் அக்கறை கொள்ளப்போவதில்லை.

ஆனால் குற்றம்புரியும் வெளிநாட்டவர்களை நாடுகடத்த வேண்டும் என்ற பிரேரணை சுவிஸில் உள்ள வெளிநாட்டவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பிரேரணையை பொறுத்தவரை சாதகமான விடயங்களும் உள்ளன. பாதகமான விடயங்களும் உள்ளன. குற்றம்புரியும் வெளிநாட்டவர்கள் இச்சட்டத்தால் நேரடியாக பாதிக்கப்படுவார்கள்.

சுவிட்சர்லாந்தில் கடந்தவருட புள்ளிவிபரங்களின்படி 82வீதமான குற்றங்களை புரிந்தவர்கள் வெளிநாட்டவர்கள் என்றும் 18வீதமான குற்றங்களை புரிந்தவர்கள் சுவிஸ் பிரஜைகள் என்றும் கூறப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் குற்றங்களை குறைத்து சட்டத்தையும் ஒழுங்கையும் பேணவேண்டுமாக இருந்தால் குற்றம்புரியும் வெளிநாட்டவர்களை அவர்களின் நாடுகளுக்கு நாடுகடத்த வேண்டும் என இப்பிரேரணையை முன்வைத்திருக்கும் சுவிஸ் மக்கள் கட்சி கூறுகிறது.

இதில் நியாயமும் இருக்கிறது. வன்முறைகளும் அடாவடித்தனங்களும் இன்றி அமைதியாக வாழவேண்டும் என சுவிஸில் உள்ள பூர்வீககுடிகள் எண்ணுவதில் எந்த தவறும் இல்லை.

இஸ்லாமிய பயங்கரவாத வன்செயல்கள், போதைப்பொருள் கடத்தல், கடனட்டைமோசடி, குழுமோதல்கள் போன்றவற்றில் வெளிநாட்டவர்களே ஈடுபடுகின்றனர் என அக்கட்சி சுட்டிக்காட்டியிருக்கிறது.

கடந்த 15 வருடங்களுக்கு முதல் சுவிட்சர்லாந்தில் பாம்புக்குழு, பல்லிக்குழு என பல வன்முறைக்குழுக்கள் தமிழர்கள் மத்தியில் இருந்தன. சுவிஸ் காவல்துறையினர் எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக இக்குழுக்கள் செயல்பாடுகளை இழந்துள்ளன. ஆனால் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் 30க்கு மேற்பட்ட வன்முறைக்குழுக்கள் தமிழர்கள் மத்தியில் காணப்படுகின்றன.

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் லாச்சப்பல் என்ற தமிழர்களின் வர்த்தக நடவடிக்கைகள் காணப்படும் இடத்தில் இந்த வன்முறை குழுக்களின் ஆதிக்கம் இன்றும் காணப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் பரிஸ் நகரைப் போன்று வன்முறைக் குழுக்களின் ஆதிக்கம் இல்லை என்றாலும் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டவர்கள் தான்.

எனவேதான் குற்றம்புரியும் வெளிநாட்டவர்களை நாடுகடத்திவிட்டால் நாட்டில் குற்றச்செயல்கள் குறைந்துவிடும். ஐரோப்பாவில் அமைதியான நாடாக சுவிட்சர்லாந்தை கட்டிக்காக்க முடியும் என்பது சுவிஸ் மக்கள் கட்சியின் வாதம்.

சுவிஸ் மக்கள் கட்சியின் இந்த பிரேரணையை சுவிட்சர்லாந்தில் உள்ள ஏனைய கட்சிகளான ஜனநாயக சோசலிசக் கட்சி, சுவிஸ் சமஷ்டிக் கட்சி, உட்பட அனைத்து கட்சிகளும் எதிர்க்கின்றன.

இப்பிரேரணையை முன்வைத்திருக்கும் சுவிஸ் மக்கள் கட்சி, வெளிநாட்டவர்கள் சுவிஸில் குடியேறுவதை இனவாத நோக்கோடு எதிர்க்கும் கட்சியினர் என்ற குற்றச்சாட்டு காணப்படுகிறது.

கடந்த பொதுத்தேர்தலில் சுவிஸ் மக்கள் கட்சியே விகிதாசார ரீதியிலும், பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற பெரியகட்சியாக காணப்படுகிறது.

வெளிநாட்டவர்களின் குடியேற்றத்திற்கு எதிராக பிரசாரம் செய்த சுவிஸ் மக்கள் கட்சி சுவிஸ் பூர்வீக குடிமக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற கட்சியாக வளர்ந்து வருகிறது.

கடந்தகாலங்களில் மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க பலமான கட்சிகளான ஜனநாயக சோசலிசக் கட்சி, சுவிஸ் சமஷ்டிக் கட்சி ஆகியன கடந்ததேர்தலில் பின்னடைவை சந்தித்திருந்தன. இந்நிலையிலேயே சுவிஸ் மக்கள் கட்சி இப்பிரேரணையை முன்வைத்திருக்கிறது.

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்களை முற்றாக புறம்தள்ளிவிட முடியாது. சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்தில் வெளிநாட்டவர்கள் முக்கிய பங்களித்திருக்கிறார்கள்.

உதாரணமாக சுவிட்சர்லாந்தில் உள்ள வெளிநாட்டவர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டால் சுவிட்சர்லாந்தின் உற்பத்தி மற்றும் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்து விடும்.

தொழிற்சாலைகள், ஹொட்டல்கள், உணவுவிடுதிகள், என பல தளங்களில் வெளிநாட்டு தொழிலாளர்களே பணியாற்றுகின்றனர். எனவே சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்தில் முக்கியபங்கு வகிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களை புறந்தள்ளிவிட முடியாது என்பது ஜனநாயக சோசலிசக் கட்சியின் வாதமாகும்.

ஆனால் இச்சட்டம் சுவிஸில் வாழும் அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் எதிரானது அல்ல. குற்றம்புரிபவர்களுக்கு மட்டுமே எதிரானது. குற்றம்புரியாது அமைதியானசூழலை உருவாக்க வேண்டும் என்பதுதான் தமது நோக்கம் என சுவிஸ் மக்கள் கட்சியினர் வாதிடுகின்றனர்.

குற்றவாளிகள் தமது நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு தாம் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதையே சுவிஸில் உள்ள பூர்வீககுடிகள் விரும்புவார்கள். சுவிஸ் மக்கள் மட்டுமன்றி அமைதியான சூழலையும் வாழ்க்கையையும் விரும்பும் வெளிநாட்டவர்களும் இச்சட்டத்தை வரவேற்கலாம்.

எனினும் இது இனவாத நோக்கத்தோடு கொண்டு வரப்படும் பிரேரணை என இடதுசாரிகட்சிகள் எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றன.

சுவிஸில் உள்ள தமிழர் நலன்சாரமைப்புக்களும் சுவிஸ் ஈழத்தமிழரவை நாடுகடந்த தமிழீழ அரசு உள்ளிட்ட அரசியல் அமைப்புக்களும் இப்பிரேரணைக்கு எதிராக தமிழர்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகின்றன.

சிறியகுற்றம் செய்தாலும் நாம் இனவாத ரீதியாக குற்றம்சாட்டப்பட்டு நாடுகடத்தப்படலாம் என சுவிஸ் ஈழத்தமிழரவை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இச்சட்டம் குற்றம்புரிபவரின் குடும்பத்தையும் பாதிக்கும் என கூறப்படுகிறது.

உதாரணத்திற்கு வதிவிடஅனுமதியுடன் வாழும் கணவன் குற்றம்சாட்டப்பட்டு நாடுகடத்தப்பட்டால் அவரின் மனைவி மற்றும் 18வயதுக்கு குறைந்த பிள்ளைகள் ஆகியோரும் நாடுகடத்தப்படுவார்கள். இது மனித உரிமை மீறலாகும். ஒருவர் செய்த குற்றத்திற்காக குடும்பத்தில் உள்ள அனைவரும் தண்டனை அனுபவிக்கும் நிலை ஏற்படலாம்.

இச்சட்டத்தின் பாதகமான மற்றொரு விடயம். நீதிமன்ற உத்தரவு இன்றியே ஒருவர் குற்றவாளி என காவல்துறையினர் தீர்மானித்தால் அவர்களை நாடுகடத்துவதற்கு காவல்துறையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாகும். இது காவல்துறையினருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் செயல் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் குடியுரிமை வழங்குவதிலும் கடுமையான சட்டங்கள் காணப்படுகின்றன. சுவிட்சர்லாந்தில் குடியேறும் வெளிநாட்டவர் ஒருவர் 12 வருடங்களின் பின்னரே சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.

லண்டன், பிரான்ஸ் உட்பட ஏனைய ஐரோப்பிய நாடுகளில் குடியேறி 5 வருடங்களின் பின்னர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் சுவிட்சர்லாந்தில் மட்டும் 12 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அத்துடன் சுவிட்சர்லாந்தின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளான ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி, றொமான்ஸ் ஆகிய மொழிகளில் அவர் வாழும் மாநிலமொழியில் நன்கு கற்றுதேர்ந்தவராக இருக்க வேண்டும். கிரிமினல் குற்றம்செய்யாதவராக இருக்க வேண்டும். வரி உட்பட உரிய கட்டணங்களை தவறாது செலுத்தியிருக்க வேண்டும் என்ற பல நிபந்தனைகளின் பின்பே குடியுரிமை வழங்கப்படுகிறது.

சில மாநிலங்களில் புவியியல் அரசியல் மொழி பரீட்சைகளுக்கு தோற்றி அதில் சித்தியடைபவர்களுக்கே குடியுரிமை வழங்கப்படுகிறது.

இதனால் சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்று வாழும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுவிஸில் மிகக்குறைவாகும்.

90 வீதமானவர்கள் தற்காலிக வதிவிடஉரிமை அல்லது நிரந்தரவதிவிட உரிமையுடனேயே வாழ்கின்றனர்.

எனவே இச்சட்டம் பெரும்பாலான வெளிநாட்டவர்களை அச்சமடைய வைத்திருக்கிறது. மறுபுறத்தில் குற்றம்செய்யாது அமைதியான வாழ்க்கை வாழ்பவர்கள் அச்சமடைய தேவையில்லை.

– துரைரத்தினம் –

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*