இத்தகைய சந்தர்ப்பம் இனி அமைவது கடினமே – சுமந்திரன்

பிறப்பு : - இறப்பு :

நாட்டின் பிரதான கட்சிகள் இரண்டு இணைந்து ஆட்சி அமைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நாம் கவனமாகக் கையாள வேண்டும். இப்படிப்பட்டதோர் சந்தர்ப்பம் இனி அமைவது கடினமே என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு சுமந்திரன் வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தச் செவ்வியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது-

கேள்வி: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏன் எவ்வித எழுத்து மூலமான ஒப்பந்தமும் இன்றி நிபந்தனையற்ற ஆதரவினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கியது ஏன்?

பதில்: பல எழுத்து மூல ஒப்பந்தங்கள் எமது வரலாற்றில் மீறப்பட்டிருக்கின்றன. இறுதியில், எழுத்து மூல ஒப்பந்தம் சிறிசேனவின் தோல்விக்கே வழிகோலியிருக்கும். அப்படியான ஒரு ஒப்பந்தத்தில் பயனில்லை. எம்மைப் பொறுத்தளவில் தமிழ் மக்களுக்கு ராஜபக்சவின் ஆட்சி எரியும் வீட்டிற்குள் இருப்பதைப் போன்றதோர் அனுபவம். அவ் எரியும் வீட்டிலிருந்து வெளியேற வேண்டியதற்கு ஆனதைச் செய்தோம். வெற்றியும் கண்டோம்.

கேள்வி: அரசியற் கைதிகள் விடுதலை போனறதோர் சிறிய காரியத்தைக் கூட உங்களால் செய்யவிக்க முடியவில்லை. அப்படியிருக்க, இந்த அரசாங்கத்தின் மீது உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கின்றதா?

பதில்: அரசியற் கைதிகள் விடயத்தில் போதுமானளவு முன்னேற்றமில்லை என்பது உண்மை. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டிருக்கின்றது என்பதும் உண்மை. இதை நான் பாராளுமன்றத்தில் சுட்டிக் காட்டியிருந்தேன். ஆனால் 39 பேர் பிணையில் வெளிவந்திருக்கிறார்கள். ஆகவே முன்னேற்றமிருக்கிறது. கடந்த அரசின் கீழ் 6 வருடங்களில் இது துப்பரவாக நடைபெறவில்லை.

பொதுவாக நிலைமைகளில் முன்னேற்றம் இருக்கின்றது என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன். என்னை விடத் தமிழ் மக்கள் அதில் தெளிவாக இருக்கின்றனர்.

எனது நம்பிக்கை ரணில் மீதானதோ, சிறிசேன மீதானதோ அல்ல. மாறாக வந்திருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தின் மீதானதே. மூன்று மாதங்களில் எல்லாம் முடிந்து விடுவதில்லை. நிச்சயமாக இன்னும் இந்த அரசியற் சந்தர்ப்பத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

கேள்வி: உங்களை கதிர்காமருடன் ஒப்பிடுகின்றனரே. இதற்கு உங்கள் பதில் என்ன. இதன் பின்னால் இருக்கும் காரணம் என்ன?

பதில்: சிலர் என்னைக் கதிர்காமருடன் ஒப்பிடுகின்றனர். சிலர் என்னை நீலன் திருச்செல்வம் என்கின்றனர். ஆனால் இவ் ஒப்பீடுகளூடாக சூட்சுமமாக இவர்கள் சொல்ல முனைவது நான் ஒரு தமிழ் இனத் துரோகி என்பதையே.

ஆனால் நான் எனது நிலைப்பாடுகளைத் தெளிவாகவே முன்வைத்தே தேர்தலில் போட்டியிட்டேன். இன்று சொன்ன கருத்துக்களை நான் நீண்ட நாட்களாகவே சொல்லி வந்திருக்கின்றேன். இந்தக் கொள்கைகளை மக்கள் நிராகரிக்கும் பட்சத்தில் அரசியலில் இருந்து ஒதுங்குவதாகச் சொல்லியே கடந்த பொதுத் தேர்தலைச் சந்தித்தேன். அவ்வாறு சந்தித்த ஒரே வேட்பாளர் நான் மட்டும் தான். மக்கள் வலிமையான ஆணையை எனக்குத் தந்தார்கள். ஆகவே எனது போக்கும் மக்களது நிலைப்பாடுகளும் வேறுபட்டவை என்ற கருத்து உண்மைக்குப் புறம்பானது.

இன்று இந்தக் கோஷங்களின் பின்னால் இருப்பவர்கள் மக்களால் தேர்தலில் அடியோடு நிராகரிக்கப்பட்டவர்கள். தங்களைத் தீவிரவாதிகளாகக் காட்டிக் கொண்டவர்கள் துளியேனும் மக்களது ஆதரவை வென்றிருக்கவில்லை. இந்தத் தோல்வியின் வெளிப்பாடே இந்தச் செயற்பாடுகள் – பிறிதொன்றுமில்லை.

கேள்வி: அவுஸ்திரேலியாவில் உங்களுக்கு நடந்த சம்பவம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: இதை நான் தனிமைப்படுத்தப்பட்டதோர் சம்பவமாகக் கருதவில்லை. ஜெனிவாவில், பேர்ன் நகரில், ஒஸ்லோவில், கனடாவில் வைத்து எனக்கும், சுவிட்ஸர்லாந்தில் வைத்து மாவை அண்ணைக்கும், பரீஸ் நகரில் வைத்து செல்வம் அடைக்கலநாதனிற்கும் எனக்கு அவுஸ்திரேலியாவில் நடந்தவை போன்ற வேறு பல சம்பவங்கள் நடந்தன. தேர்தல் முடிந்த ஓரிரு மாதங்களுள் இவை யாவும் நடந்தன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து ஒருவராவது தெரிவு செய்யப்பட்டிருந்தால் இவை நடந்திருக்காது.

கேள்வி: வட மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக்கியதில் உங்களுக்கு கணிசமான பங்கிருந்தது. அவரைத் தெரிவு செய்ததன் காரணமென்ன?

பதில்: நாம் வட மாகாண சபைத் தேர்தலை வெறுமனே மற்றொரு தேர்தலாகக் கருதிப் போட்டியிடவில்லை. நாம் வென்று ஆட்சியமைக்கக் கூடியதோர் தேர்தல் என்பதால் அதற்குத் தலைமை வேட்பாளராக யாவரும் மதிக்கக் கூடிய தகமையைப் பெற்ற, யாவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நபரை நியமித்தோம்.

கேள்வி: வட மாகாண சபை முதல்வராக விக்கினேஸ்வரன் தனது கடமையைச் சரிவரச் செய்திருக்கின்றாரா?

பதில்: நான் இது தொடர்பில் கட்சிக் கூட்டத்தில் பேசியதை பகிரங்கமாகப் பேசியதற்காக கட்சித் தலைமையால் கண்டிக்கப்பட்டிருக்கின்றேன். நான் இது மட்டில் கட்சித் தலைமையின் விதிப் படி, அதற்குக் கட்டுப்பட்டே நடக்க விரும்புகின்றேன்.

கேள்வி: அவரை விலக்குமாறு பகிரங்கமாகக் கேட்டிருந்தீர்களே?

பதில்: இல்லை. நடந்தது வேறு. தேர்தல் முடிந்து ஒரு மாத காலமாக முதலமைச்சர் தொடர்பில் நான் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. பலர் என்னிடம் கேட்ட போதும் நான் மௌனம் சாதித்தேன். செப்டம்பர் 11 நடந்த கட்சிக் கூட்டத்திலே தான் நான் எனது நிலைப்பாட்டைச் சொன்னேன். அதை அங்கிருந்த யாவரும் ஏற்றுக் கொண்டனர். யாரும் மறுக்கவில்லை. ஆனால், இந்த விடயத்தை நிதானமாகக் கையாளும் பொறுப்பை நாம் சம்பந்தன் ஐயாவின் கைகளில் கொடுத்தோம். கூட்டம் முடிவதற்குள் நான் பேசிய விடயம் ஊடகங்களில் கசிந்துவிட்டது. அதன் பின்னர் இப்படிச் சொன்னீர்களா என என்னிடம் வினவியவர்களிடம் நான் அதை மறுக்க முடியாது. அப்படி நான் அவுஸ்திரேலியாவில் சொன்ன பதிலே புயலாக உருவெடுத்தது. கட்சிக் கூட்டத்தில் பேசுவதற்கு எனக்கு பூரண உரிமை உண்டு.

கேள்வி: வட மாகாண சபை நிர்வாகம் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்: நிர்வாகத்தின் மீது நிறையவே அதிருப்தி உண்டு. இவை தொடர்பில் முதலமைச்சருடன் இணைந்தும் தனித்தும் பல கட்சிக் கூட்டங்களில் நாம் பேசியிருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக வட மாகாண சபையின் மீது எமக்குப் பொறுப்பு உண்டு. நாம் நினைத்தது போன்று சபை திறம்பட இயங்கவில்லை என்பது யாவருக்கும் தெரிந்த உண்மை.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையின்றி இருப்பதால் தமிழ் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இது தெரிந்தும் நீங்கள் ஒற்றுமையாக உழைக்காமல் இருப்பதேன்?

பதில்: மாற்றுக் கருத்துக்கள் ஒரு கட்சிக்குள்ளேயே இருக்கும். பல கட்சிகளின் சேர்க்கையான கூட்டமைப்புக்குள் வேற்றுமைகள் தவிர்க்கப்பட முடியாதவை. இவற்றைத் தாண்டி நாம் ஒன்றாக இயங்குவதற்கு மக்கள் தான் காரணம். எம்மை அப்படி இயங்க வைப்பது தமிழ் மக்கள் தான். இது நல்ல விடயம். மக்கள் ஒற்றுமையை எந்தளவிற்கு விரும்புகின்றனர் என்பதற்கு இது அத்தாட்சி.

ஒற்றுமை போதாது என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரே அமைப்பாக இயங்குவதால் தான் சர்வதேச சமூகத்திடம் நாம் ஒரே குரலாகப் பேச முடிந்திருக்கின்றது. இதனால் தான் மக்களது அன்றாடப் பிரச்சினைகள் உட்பட – வீட்டுத் திட்டம், காணி விடுவிப்பு என்பன – பல விடயங்கள் சர்வதேச தலையீடு, அனுசரனையுடன் தீர்க்கப்பட்டிருக்கின்றது.

கேள்வி: இந்த அரசாங்கம் புதியதோர் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்தப் போவதாகச் சொல்லி வருகின்றது. இது தொடர்பில் தமிழ்த் தரப்பின் உள்ளீடு என்ன?

பதில்: தேர்தல் முறையிலோ, ஜனாதிபதி முறைமையிலோ மாற்றத்தை ஏற்படுத்த புதிய அரசியலமைப்பு அவசியமல்ல. அரசியலமைப்பின் சில அடிப்படைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் எமக்கும், அரசாங்கத்திற்கும் புரிதல் இருக்கின்றது. இந்த அரசியலமைப்பு வரைபில் எமது பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.

இது வரை அரசியலமைப்பின் உள்ளடக்கங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடத்தப்படவில்லை. ஆனால், எவ்வாறு இந்த அரசியலமைப்பினை நிறுவுவது என்பது தொடர்பில் திட்டங்கள் பிரேரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு அரசியலமைப்பு உருவாக்கத்திற்கென steering committee ஒன்று உருவாக்கப்படும். அந்தக் குழு தான் வரைபினை முன்னெடுக்கும். வரும் ஜனவரி தொடங்கி 6 – 12 மாத கால இடைவெளியில் இந்தச் செயன்முறை பூர்த்தியாக்கப்படும்.

நாட்டின் பிரதான கட்சிகள் இரண்டு இணைந்து ஆட்சி அமைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நாம் கவனமாகக் கையாள வேண்டும். இப்படிப்பட்டதோர் சந்தர்ப்பம் இனி அமைவது கடினமே. நாம், முஸ்லிம் தலைமைகளுடன் இணைந்து ஒரு இணக்கப்பாட்டிற்கு வரும் பட்சத்தில் காரியம் கை கூடும். நாம் யதார்த்த பூர்வமாக நடக்க வேண்டும். சில சொற்பதங்களைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். எவரும் பீதியைக் கிளப்புவதற்கு இடமளிக்கக் கூடாது. யதார்த்தமாகச் செயற்பட வேண்டும்.

வரவிருக்கின்ற அரசியலமைப்பு மக்கள் முன் வைக்கப்பட்டு வெகுஜன வாக்கெடுப்பு மூலம் அனைத்து மக்களது அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதை நாங்களே கோரியிருக்கின்றோம். எமது நிலைப்பாடுகள் நாட்டில் நிச்சயம் பேசப்பட வேண்டும். ஏற்ற காலத்தில், ஏற்ற விதத்தில் வெளிப்படையாகவே பேசப்பட வேண்டும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit