செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரம்: நீதிபதி தலைமையில் உயர்மட்ட குழு அமைக்க கோரிய வழக்கு நாளை விசாரணை

பிறப்பு : - இறப்பு :

சென்னை எழும்பூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜீவ்ராய் என்பவர், ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருந்ததாவது:–

‘அண்மையில் பெய்த கனமழையினால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளில் சுமார் 280 பேர் பலியாகியுள்ளனர்.

பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மின்சார இணைப்பு, தொலைத்தொடர்பு இணைப்பு துண்டிக்கப்பட்டது. மழை வெள்ளம் புகுந்ததால், விமான நிலையங்கள் 6 நாட்கள் இழுத்து மூடப்பட்டது. நவம்பர் மாதம் கடைசி வாரத்தில், செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. இதனால், தண்ணீரை திறப்பதற்கு அனுமதி கேட்டு தலைமை செயலருக்கு, கடந்த நவம்பர் 29–ந்தேதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். அதன் மீது தலைமை செயலர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், டிசம்பர் 1–ந்தேதி நடுஇரவில் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு, உடனடியாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 39 ஆயிரம் கனஅடி தண்ணீரை அதிகாரிகள் திறந்து விட்டுள்ளனர். இதனால், பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை செய்தும், தலைமை செயலர் தன்னுடைய கடமையை செய்யவில்லை.

எனவே சென்னையில் மழை வெள்ளம் புகுந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அல்லது ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், அரசு அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள், மூத்த வக்கீல்கள், விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகியோரை கொண்ட உயர்மட்ட குழுவை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘மழை வெள்ளம், செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் திறப்பு உள்ளிட்டவைகளுக்காக ஏற்கனவே நாங்கள் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. அந்த வழக்கு நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்குடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்கப்படும்’ என்று உத்தரவிட்டார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends


Submit