யாழ்ப்பாணத்தாருக்கு காசியில் நான் கருமாதி செய்து விட்டேன்! – அன்றே சொன்னார் யோகர் சுவாமி!

பிறப்பு : - இறப்பு :

‘முதலமைச்சரை நீக்க வேண்டுமென்ற கருத்து சுமந்திரனின் கருத்தாக இருக்கலாம். ஆனால் அதுவே கட்சியின் முடிவாக இருக்காது. இந் நிலையில் சுமந்திரனின் கருத்துக் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும். ஆகவே இதனை யாரும் விமர்சிப்பதில் அர்த்தம் இல்லை’ இவ்வாறு கூறியிருக்கின்றார் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா.

மற்றவர்கள் விமர்சிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இதுவரை எந்த விடயத்துக்கு சுமந்திரனிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது என்பதை மாவை சேனாதிராஜா அவர்கள் தன்னை விட அர்த்தம் தெரியாதவர்களுக்கு புரியவைக்க வேண்டியுள்ளது.

01. கட்சியில் யாரிடம் அனுமதி பெற்று அரசுத்தரப்பினரோடு கிரிக்கெட்ஆடினார்?

02. விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் என்று தமிழரசுக்கட்சி கருதுகின்றதா? கருதவில்லையாயின் தென்னிந்தியச் திருச்சபை தொடர்பான வழக்கொன்று கிளிநொச்சி நீதிமன்றதில் முன்னெடுக்கப்பட்ட போது புலிகளைப் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டமை தொடர்பாக அவர் மீது கட்சி எடுத்த நடவடிக்கை என்ன?

03. புலிகளைப் பயங்கரவாதிகள் எனக் குறிப்பிடும் சுமந்திரன் ஸ்ரீலங்கா படையினரைக் கௌரவிக்கும் வகையில் ஓர்கிட் மலரைத் தனது கோட்டில் சூடிக் கொண்டு பாராளுமன்றம் சென்றாரே. இந் நடவடிக்கையானது கட்சியின் நிலைப்பாட்டின் வெளிப்பாடா?

04. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட வடக்கு மாகாணசபையின் சகல உறுப்பினர்களும் இணைந்து ஏகமனதாக இறுதியுத்தத்தில் இடம்பெற்றது இனப் படுகொலையே என்று தீர்மானம் நிறை வேற்றினர். இதை விமர்சிக்கும் உரிமையை இவருக்கு யார் கொடுத்தது? இப்படியான வீட்டோ அதிகாரம் நிச்சயமாக மாவைக்கு இல்லைத் தான். சுமந்திரனைத் தவிர வேறு யாருக்கு இவ்வாறான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது?

05. வட புல முஸ்லிம்களின் வெளியேற்றம் இனச் சுத்திகரிப்பு என்ற தீர்மானத்தை கட்சி உத்தியோக பூர்வமாக எடுத்துள்ளதா? அவ்வாறில்லையாயின் இப்படியெல்லாம் உளற அவரால் எப்படி முடிகிறது? சமாதானம் நிலவிய கால கட்டத்தில் மீண்டும் மெல்லத் தளிர்த்ததமிழ் – முஸ்லீம் உறவுகளைச் சீர்குலைக்கும் முகமாக வரலாறு தெரியாத வகையில் உரையாற்றியமை தொடர்பாக கட்சி எடுத்த நடவடிக்கை என்ன? முஸ்லிம்களின் வெளியேற்றம் நியாயப்படுத்த முடியாததுதான். எனினும் தொடர்ந்து இடம் பெற்ற சம்பவங்களால் இது இரு தரப்பு விவகாரம் என்ற நிலையை அடைந்தது.

வீரமுனைப்பிள்ளையார் ஆலயம், திராய்க்கேணி, அட்டப்பள்ளம் முதலான இடங்களில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் குறிப்பாக ஆண்கள் முஸ்லிம்களால் படுகொலை செய்யப்படமை தமிழரின் விகிதாசாரத்தை குறிப்பாக இனப் பெருக்கத்தைப் பாதிக்கும் செயல்கள் என்ற விடயத்தை தேசியப் பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட போது அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த மாவை அறியாரா? நிலைமை இவ்வாறிருக்க ஒரு தலைப்பட்சமாக இனச் சுத்திகரிப்பு என்ற பதத்தை ஏன் சுமந்திரன் பயன்படுத்தனார்.

06. கட்சியிடம் ரிக்கற் கேட்டு விண்ணப்பிக்கவில்லை முதல்வர். கூட்டமையிலுள்ள சகல கட்சிகளும் ஒரு மனதாக கையொப்பமிட்டு வலிந்து கேட்டதால் தான் போட்டியிடச் சம்மதித்தவர். உயர் நீதிமன்றநீதியரசராக இருந்த ஒருவரை அவமானப்படுத்தும் வகையில் தன்னைத் தானே பி.எம்.டபிள்யூகார் என்று சொல்லிக் கொள்ளும் சட்டத்தரணி சுமந்திரன் வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்யகட்சியின் எந்தப் பிரிவு அனுமதித்தது?

07. சுமந்திரன் சொன்னது போன்று முரண்பாடான ஒரு கருத்தை அனந்தி சொல்லியிருந்தால் அவர் மீது கட்சி எத்தனை வாரம் அல்லது நாள், மணித்தியாலம், நிமிடம், செக்கனில் நடவடிக்கை எடுத்திருக்கும்?

நடக்கப் போவது எதுவுமே இல்லை. பிறகெதற்கு பந்தா பேச்சு? கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களை எவருமே கணக்கில் எடுப்பதில்லை. எடுத்திருந்தால் வல்வை நகரசபை, வலிகிழக்கு, வலி தென்மேற்கு, காரைதீவு முதலான உள்ளூராட்சி சபைகளில் குழப்பம் நிகழாதிருந்திருக்கும். இவர்களின் எச்சரிக்கை கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகத்தையே கட்டுப்படுத்தவில்லை,

இந்நிலையில்சம்பந்தன் ஐயாவின் முழுமையான ஆசீர்வாதம் பெற்ற சுமந்திரனை கேள்வி கேட்கவோ ஏன் முறைத்துப் பாரக்கவோ முடியாது ‘ஏன் என்னிடம் விளக்கம் கேட்கப்போகிறீளோ? என்று சுமந்திரன் கேட்டால்’ இந்தப் பத்திரிகைகளுக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது’ என்று தலையைச் சொறிந்து கொண்டு சொல்லும் நிலை தான் அவருக்கு ஏற்படும். இளைஞர் பேரவைக்கால மாவைக்கும் , 50 வருடத்துக்கு மேல்கட்சியில் அங்கத்துவம் உள்ள பேராசிரியர் சிற்றம்பலத்துக்கும் கொடுக்கும் மதிப்பு என்ன, சுமந்திரனின் உயரம் என்ன என்பதைச் சகலரும் அறிவர்.

மாவையின் செய்தி வந்த அதே நாள் வேறொரு நாளிதழில் சம்பந்தன் ஐயாவின் செய்தி வெளி வந்தது. ‘நாடாளுமன்றதேர்தல் காலத்தில் முதலமைச்சர் வெளியிட்ட சில கூற்றுக்கள் மற்றும் அவரின் நடவடிக்கைகள் சம்பந்தமாகச் சில கேள்விகள் எழுப்பட்டது உண்மை. அது தொடர்பாக அவரிடம் நாங்கள் பேசவில்லை. பேச இருக்கிறோம். விரைவில் பேச்சு இடம் பெறும்’ என்றே கூறினார்.

இதில் எந்த இடத்திலும் சுமந்திரனிடம் கட்சி விளக்கம் கோரும் என்று அவர் கூறவில்லை. முதலமைச்சரை நீக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டதாக எவரும் கூறியிருந்தால் அது தவறு என்றும் அவர் குறிப்பிட்டார். சுமந்திரன் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோணேச்சரப்பெருமான் ஒரு போதும் சம்பந்தன் ஐயாவின் கனவில் வந்து சொல்லா மாட்டார். இப்போதுதெல்லாம் யாருக்கு தேசியப்பட்டியலில் எம்.பி பதவி என்பதைக் கூட கோணேச்சரப் பெருமான் கனவில் தான் காட்டுகிறார்.

என்ன செய்வது சுமந்திரனுக்கு வாக்களித்த யாழ்.கிளிநொச்சி மாவட்ட மக்கள் 58.043 பேரும் தங்கள் தலையை மோதுவதற்குப் பலமான சுவரொன்றைத் தேட வேண்டியது தான். சும்மாவா சொன்னார் யோகர் சுவாமிகள் ‘யாழ்ப்பாணத்தாருக்கு காசியில் நான் கருமாதி செய்து விட்டேன்’ என்று.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit