வெறுப்பு வாழ்க்கையில் கருப்பு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்த நான்கெழுத்து வார்த்தை, மனித வாழ்க்கையை கருப்பாக்கக்கூடியது. அதனால் மற்றவர்களை நீங்கள் வெறுக்கக்கூடாது. உங்களையும் நீங்கள் வெறுக்கக்கூடாது. வெறுப்பு, உங்கள் மீதே உங்களுக்கு இருந்தாலும் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். மற்றவர்கள் மீது உங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டால் நீங்கள் பாதிக்கப்படுவதோடு, சமூகமும் பாதிக்கப்படும். வெறுப்பு ஒருவருக்கு தோன்ற ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. – தான் எதிர்பார்த்தபடி மற்றவர்கள் நடக்காமல் போனால்!

– தான் ஆசைப்பட்டது மற்றவர்களுக்கு கிடைக்கும்போது!

– மற்றவர்கள் பார்வையில் தனது மரியாதை குறைந்து போகும்போது!

– சந்தர்ப்ப சூழ்நிலை தன்னை குற்றவாளியாக்கும்போது!

– தனக்கு பிரியமானவர்கள் எதிராளியாகும் போது!

– சவாலை எதிர்கொள்ள போதிய பலம் இல்லாதபோது!

– மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் தோல்வியடையும் போது!

– உண்மையான உழைப்பு மற்றவர்களின் சூழ்ச்சியால் விரையமாகும் போது!

– நேர்மை தோற்றுப்போகும் போது! – திறமை இருந்தும் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்காதபோது!

– தன்னை மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்ளும்போது!

.. இப்படி ஏகப்பட்ட காரணங்களால் வெறுப்பு உருவாகிறது. இன்னொருவர் மீதோ, ஒரு குழு மீதோ உங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டாலும்

– உங்கள் மீதே உங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டாலும், அந்த வெறுப்பை உடனே உங்கள் மனதில் இருந்து அப்புறப் படுத்திவிடுங்கள்.

அது அப்படியே உங்கள் மனதில் தங்கிவிட்டால் உங்கள் வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கி விடும். உற்சாகத்தை இழக்கச்செய்து விடும். மற்றவர்கள் மீது காட்டும் காரணமற்ற வெறுப்பு அவர்களை உங்களைவிட்டு விலகச் செய்து விடும். உங்களை தவறான முடிவுகள் எடுக்கவும் தூண்டிவிடும். வெறுப்பு நம் மனதிலே இருந்துகொண்டிருந்தால், அதன் மோசமான விளைவுகளை நாம் அறிய சில காலம் பிடிக்கும். ஆண் குழந்தைதான் வேண்டும் என்ற வெறித்தன எதிர்பார்ப்பில் பெண் குழந்தை பிறந்துவிட்டால், அந்த குழந்தை மீது ஏற்படும் தேவையற்ற வெறுப்பு நாளடைவில் அந்த குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மையை வளர்த்து விடும்.

அந்த மனப்பான்மை குழந்தையை பலமிழக்கச்செய்து, அதனை சமூகத்தில் பின்தங்கச்செய்துவிடும். காலங்கள் கடந்த நிலையில், ‘தேவையில்லாமல் குழந்தையை வெறுத்துவிட்டேனே!’ என்று நினைத்து தந்தையும் தனக்குத் தானே தண்டனை அளித்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாகி விடும். காரணமின்றி வெறுத்துத் தள்ளப்படும் குழந்தைகள், பிற்காலத்தில் தீவிரவாதியாகவும் மாற வாய்ப்பிருக்கிறது. மனோதத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, சிறுவயது சூழ்நிலைகளே ஒரு மனிதன் நல்லவனா? கெட்டவனா? என்பதை தீர்மானிக்கிறது.

தேவையின்றி வெறுத்து ஒதுக்கப்படும் குழந்தைகள் தடம் மாறி இரக்கமற்ற செயல்களை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்களில் ஒரு பகுதியினரைத்தான் ‘சைக்கோ’ என்று சொல்கிறார்கள். காரணமின்றி சண்டையிடுவது, இம்சிப்பது, கொலைவெறித்தாக்குதல் நடத்துவது, மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவராக தங்களை காட்டிக்கொள்வது போன்றவை அவர்களது செயலாக இருக்கும். அவர்களை திருத்தி, நல்வழிப்படுத்துவது சவாலாகத்தான் இருக்கும்.

சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் இருக்கும் சிறுவர்களில் ஒருபகுதியினர் இப்படி சிறுவயதில் வெறுக்கப்பட்டவர்கள்தான். ‘என்னை இந்த சமூகம் வெறுத்தது. அதனால் நான் இந்த சமூகத்தினை வெறுக்கிறேன்’ என்பது அவர்களது மன ஓட்டமாக இருக்கும். அன்பும், அரவணைப்பும் கிடைக்காததால் ஏற்பட்ட விபரீதம் இது. அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா ஸ்டேட் யூனிவர்சிட்டியில், ‘சீர்திருத்தப் பள்ளியில் உள்ள குழந்தைகளின் மனநலம்’ பற்றிய ஆய்வினை மேற்கொண்டார்கள்.

விபரீதம் புரியாமல் அவர்கள் செய்யும் கொடூரங்களுக்கு சிறுவயதில் அவர்கள் வெறுக்கப்பட்டதே காரணமாக இருக்கிறது. அமெரிக்காவில் ஒரு மாணவன் துப்பாக்கியால் ஆசிரியரை சுட்டுக் கொன்றான். அவனை மனநல மருத்துவர்கள் விசாரித்தபோது, அவன் வெளிப்படுத்திய விஷயம் அதிர்ச்சிதரத்தக்கதாக இருந்தது. ‘என் அப்பா என்னை வெறுத்தார். காரணம் அவர் என்னுடைய இரண்டாவது அப்பா. நான் என்ன தவறு செய்தேன்? என் வீட்டில் வளரும் நாய் பூனையிடம் காட்டும் அன்பைக்கூட அவர் என் மீது காட்டவில்லை. அதே நேரம் அவருக்கு பிறந்த என் தம்பியை நேசித்தார். நான் மனதளவில் தனிமைபடுத்தப்பட்டேன்.

நான் விளையாட்டு வீரனாகி குடும்பத்திற்கு பெருமை தேடித்தர வேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்காக சிறந்த பயிற்சியாளர் ஒருவரை நியமித்தார். என்னை வெறுத்த அவருக்கு நான் ஏன் பெருமை தேடித்தரவேண்டும்? அவருக்கு நான் அவமானத்தைதான் தேடித்தர விரும்பினேன். குற்ற உணர்வால் அவர் காலமெல்லாம் கண்ணீர் விடவேண்டும் என கருதினேன். அதற்காகத்தான் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டேன் என்றான். அவனுடைய முழு எதிர்காலமும் சேர்ந்து பாழாகிப்போனது அவனுக்கு புரியவில்லை.

தன்னை வெறுத்த அப்பாவை பழிவாங்கிவிட்ட உணர்வு மட்டும் அவனிடம் இருந்தது. ஒரு சிறுவனை கொலைகாரனாக்கியது ஒரு தந்தையின் வெறுப்பு! உறவுகள் மேல் காட்டும் வெறுப்பு நாளடைவில் உறவுகளை விலகச் செய்து விடும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நமக்கு கெடுதல் செய்திருக்கலாம், தாறுமாறாக பேசியிருக்கலாம், நம் விருப்பத்திற்கு மாறாக நடத்தியிருக்கலாம். அதையே நினைத்து மனதில் வெறுப்பை வளர்த்துக் கொண்டால் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் நமக்கே எதிராகிவிடும்.

நாம் விரும்பும் நேரத்தில் உறவுகளை சரிசெய்து சொந்தம் கொண்டாட முடியாமல் போய்விடும். உறவுகள் கடையில் கிடைக்கும் பொருளல்ல, நினைக்கும் போது வாங்கிக் கொள்ள! ஒரு முறை இழந்துவிட்டால் திரும்ப கிடைப்பது அரிது. அதனால் வெறுப்புகளுக்கு மனதில் இடம் கொடுக்காதீர்கள். உங்களிடம் வெறுப்பு உருவாகிவிட்டால் அது உங்களை ஆக்கபூர்வமாக சிந்திக்கவிடாது. ஆக்கபூர்வமாக செயல்படவும் விடாது. அது எப்போதும் உங்கள் மனதை அரித்துக்கொண்டே இருக்கும்.

அதனால் உங்கள் மீதே உங்களுக்கு குறை ஏற்படும். காலப்போக்கில் உங்களையே அது குருட்டுத்தனமான இருட்டு சிந்தனைக்குள் தள்ளிவிடும். நாம் விரும்பும் விஷயங்கள் ஒவ்வொருவரிடமும் நிறைய இருக்கின்றன. அவைகளை நாம் விரும்பி, ரசிக்கவேண்டும். நாம் விரும்பாத விஷயங்கள் எல்லோரிடமும் ஒன்றிரண்டு இருக்கத்தான் செய்யும். அதை பெரிதாக்கி அவர்களை வெறுக்கக்கூடாது. வெறுப்பில்லாத வாழ்க்கை தெய்வீகமானது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*