சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த எம்.மணிபாலன் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகம்-ஆந்திரா எல்லையில் சித்தூர் மாவட்டம், மல்லவேரிபள்ளம், அரூர் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலத்துடன் கூடிய ஒருங்கிணைந்த தொழில் நகரத்தை ஆந்திர மாநில அரசு அமைக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஸ்ரீசிட்டி நிறுவனத்துடன் கையெழுத்தாகியுள்ளது. தற்போது அனுமதி இல்லாமல் அங்கு மரங்களை ஸ்ரீசிட்டி நிறுவனம் வெட்டுகிறது. இதற்கு தடைவிதிக்கவேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை தீர்ப்பாய உறுப்பினர்கள் நீதிபதி பி.ஜோதிமணி, பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
தொழில் நகரம் அமையும் இடத்தில் 33 சதவீத மரங்களை நட்டு பசுமைப் போர்வை அமைக்கப்படவேண்டும். எனவே சித்தூர் மாவட்ட வன அலுவலரின் அறிவுரைப்படி 10 ஆயிரம் உள்நாட்டு மரக்கன்றுகளை நடுவதோடு அவை சுயமாக வளரும்வரை 5 ஆண்டுகள் பராமரிக்கவேண்டும். இனிமேல் அந்தப் பகுதியில் மரங்களை வெட்டக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.