பின்லேடன் கொலையில் ரகசிய தகவல்கள் அம்பலம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பின்லேடன் கொலையில் ஒபாமாவுக்கு சட்ட வழிமுறைகள் வகுத்து தந்தது 4 வக்கீல்கள்தான் என்பது உள்ளிட்ட ரகசிய தகவல்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன.

அமெரிக்காவில் வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையம் மீதும் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி விமானங்களை மோதி அல்கொய்தா தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்கள் நடத்தி 3 ஆயிரம் பேரை கொன்று குவிக்க பின்னணியில் இருந்து இயக்கியவர், அந்த இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன்.

அந்த தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் கழித்து, பின்லேடன் பாகிஸ்தானில் அப்போதாபாத்தில் பதுங்கி இருந்தபோது, 2011-ம் ஆண்டு மே மாதம் 2-ந் தேதி அமெரிக்காவின் அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்டார். அமெரிக்க தாக்குதலும் சரி, பின்லேடன் படுகொலையும் சரி உலக வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வுகளாக பதிவாகி உள்ளன.

பின்லேடனை கொல்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா முடிவு எடுத்து, அதை மிகவும் ரகசியமாகவும், அதிரடியாகவும் செயல்படுத்துவதற்கு மேற்கொண்ட பிரயத்தனங்கள் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளன.

பாகிஸ்தான் மண்ணில், பாகிஸ்தான் அரசின் அனுமதியின்றி சென்று பின்லேடனை தீர்த்துக்கட்டுவதற்கான வழிமுறைகளை ஒபாமாவின் 4 வக்கீல்கள் வகுத்துக்கொடுத்துள்ளனர்.

அவர்கள் அமெரிக்க புலனாய்வு முகமை சி.ஐ.ஏ.யின் வக்கீல் ஸ்டீபன் பிரஸ்டன், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் சட்ட ஆலோசகர் மேரி டிரோசா, பென்டகன் வக்கீல் ஜெஹ் ஜான்சன், கூட்டுப்படைகளின் சட்ட ஆலோசகர் ரியர் அட்மிரல் ஜேம்ஸ் கிராபோர்டு ஆகிய 4 பேர்தான் மிகவும் ரகசியமாக செயல்பட்டு திட்டம் போட்டு கொடுத்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் அட்டார்னி ஜெனரல் எரிக் ஹோல்டருடன் 4 வக்கீல்களும் ஆலோசனை நடத்தினால், அது வெளியே கசிந்து விடக்கூடும் என்பதற்காக, அதற்கு அவர்களுக்கு வெள்ளை மாளிகை அனுமதி தரவில்லை.

பின்லேடனை கொல்லப்படுவதற்கு முந்தைய நாள்தான், அமெரிக்காவின் அட்டார்னி ஜெனரல் ஹோல்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பின்லேடன் கொலை தொடர்பாக 5 சட்ட ஆலோசனை குறிப்பாணைகளை தயார் செய்திருக்கிறார்கள். அதை உச்சகட்ட பாதுகாப்புமிக்க லேப்-டாப்களில் பதிவேற்றம் செய்து, நம்பிக்கைக்குரிய தூதுவர்கள் மூலம் கொடுத்து அனுப்பி உள்ளனர்.

பின்லேடனை கொல்வதற்கு சில தினங்களுக்கு முன் பென்டகன் வக்கீல் ஜெஹ் ஜான்சன், பாகிஸ்தானுடன் போர் தொடுக்காத நிலையில், அந்த மண்ணில், அந்த நாட்டு அரசின் அனுமதியின்றி தாக்குதல் நடத்தினால், அது சர்வதேச சட்டத்தை மீறிய செயல் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் பின்லேடனை கைது செய்யுமாறு பாகிஸ்தானை கூறினாலோ அல்லது அமெரிக்க தாக்குதலுக்கு அனுமதியை நாடினாலோ அது அமெரிக்காவின் திட்டத்தில் சமரசம் செய்துகொள்வது போலாகி விடும் என வெள்ளை மாளிகை கருதியது. பாகிஸ்தான் உளவுத்துறைக்கு பின்லேடன் அவசியம் என்று கருதி, அவர் தப்பி செல்வதற்கு அந்த நாட்டு அரசின் உதவியை நாடி விடக்கூடும் எனவும் வெள்ளை மாளிகை அஞ்சி இருக்கிறது.

பாகிஸ்தானுக்குள் அந்த நாட்டின் அனுமதியின்றி ஏதேச்சதிகாரமாக அமெரிக்க ராணுவம் ஊடுருவுவதை விதிவிலக்காகக் கொள்ளலாம் என வக்கீல்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கூட்டுப்படைகளின் சட்ட ஆலோசகர் ரியர் அட்மிரல் ஜேம்ஸ் கிராபோர்டுதான், பின்லேடனை கொன்றால், அவரது உடலை கடலில் புதைப்பது மத ரீதியில் ஏற்கத்தக்க ஒன்றுதான் என கூறி உள்ளார்.

ஒட்டுமொத்தமாக வக்கீல்கள் விவாதித்து, பின்லேடனின் உடலை அவரது சொந்த நாடான சவுதி அரேபியா கேட்டால் கொடுத்து விடலாம், சவுதி அரேபியா ஏற்க மறுத்து விட்டால் கடலில் புதைத்து விடலாம் என முடிவுக்கு வந்து கூறி உள்ளனர்.

எதிர்பார்த்ததுபோன்றே பின்லேடனின் உடலைப் பெற்றுக்கொள்ள சவுதி அரேபியா மறுத்து விட்டது. அதன்பின்னர்தான் பின்லேடன் கொல்லப்பட்டு, உடல் கடலில் புதைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் பின்லேடன் கொல்லப்பட்டு 4 ஆண்டுகள் முடிந்த நிலையில் கசிந்து, ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*