பீகார் மூன்றாம்கட்ட தேர்தல் விறுவிறு: 12 மணிவரை 27 சதவீதம் வாக்குப்பதிவு

பிறப்பு : - இறப்பு :

நண்பகல் 12 மணி நிலவரப்படி 26.94 சதவீத வாக்குப்பதிவுடன் பீகார் சட்டசபைக்கான ஐந்துகட்ட தேர்தலில் இன்றைய மூன்றாம்கட்ட தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

ஐந்துகட்ட வாக்குப்பதிவை எதிர்கொள்ளும் பீகார் சட்டசபை தேர்தலில் மூன்றாவது கட்டமாக 50 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

மாநில தலைநகர் பாட்னா, வைஷாலி, சரன், நளந்தா, பக்சர் மற்றும் போஜ்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட இந்த 50 சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இன்றைய வாக்குப்பதிவில் 78,51,593 ஆண்கள், 67,06,687 பெண்கள் என மொத்தம் 1,45,93,980 வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற உள்ளனர்.

71 பெண்கள் உள்பட 808 வேட்பாளர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கவுள்ள இன்றைய வாக்குப்பதிவுக்காக மேற்கண்ட ஐந்து மாவட்டங்களில் 14,170 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 6,747 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும், 1,909 வாக்குச்சாவடிகள் இடதுசாரி தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் நிறைந்த பகுதிகளில் அமைந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு மேற்கண்ட பகுதிகளில் அமைந்துள்ள 10 தொகுதிகளில் மட்டும் காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதர 40 வாக்குச்சாவடிகளிலும் வழக்கம்போல் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும்.

பீகார் முன்னாள் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவின் சொந்த மாவட்டமான சரன் மாவட்டத்துக்குட்பட்ட மஹுவா மற்றும் ரகோபூர் தொகுதிகளில் லல்லுவின் மகன்களான தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் உள்ள மொத்தம் பத்து தொகுதிகளும் இன்று வாக்குப்பதிவை சந்திக்கின்றன.

இதேபோல், தற்போதைய முதல் மந்திரி நிதிஷ் குமாரின் சொந்த மாவட்டமான நளந்தாவில் உள்ள 7 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.

இன்று வாக்குப்பதிவை சந்திக்கும் இந்த 50 தொகுதிகளில் லல்லு, நிதிஷ், காங்கிரஸ் கூட்டணி சார்பில் ராஷ்டரிய ஜனதா தளம் 25 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 18 தொகுதிகளிலும், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. 34 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி 10 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 4 தொகுதிகளிலும், ராஷ்டரிய லோக் சமதா 2 தொகுதிகளும் போட்டியிடுகின்றன.

ஐந்து கட்டங்களிலும் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் இன்றைய மூன்றாம்கட்ட தேர்தலில் வாக்களிக்க காலை 7 மணியில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளின் முன் வரிசையில் காத்திருக்கின்றனர்.

நியாயமாகவும், அமைதியாகவும் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதிப்படுத்தவும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், மாநில போலீசாருடன் சேர்ந்து 1,107 கம்பெனிகளை சேர்ந்த துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆற்றங்கரையோரப் பகுதிகளில் 47 இயந்திரப் படகுகளிலும் போலீசார் ரோந்துச் சுற்றி, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், மேற்கண்ட 50 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் 23 தொகுதிகளிலும், பா.ஜ.க. 19 தொகுதிகளிலும், லல்லுவின் தலைமையிலான ராஷ்டரிய ஜனதா தளம் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார், முன்னாள் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவ், அவரது மனைவியும் முன்னாள் முதல் மந்திரியுமான ரப்ரி தேவி ஆகியோர் தங்களது இல்லங்களுக்கு அருகாமையில் இருக்கும் வாக்குச்சாவடிகள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவு செய்தனர்.

நண்பகல் 12 மணி நிலவரப்படி 26.94 சதவீதம் வாக்குகள் பதிவானதாக பீகார் மாநில தலைமை தேர்தல் ஆணையத்தின் இனையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit