டெல்லி கேரள இல்லத்தில் போலீஸ் நடத்திய சோதனைக்கு கடும் எதிர்ப்பு: பிரதமர் மோடிக்கு உம்மன் சாண்டி கடிதம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பசு மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, டெல்லி கேரள இல்லத்தில் போலீஸ் நடத்திய சோதனைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டெல்லி போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு, கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி கடிதம் எழுதினார்.

டெல்லியில் பசு மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லி கேரள அரசு இல்லத்தில் உள்ள உணவகத்தில் பசு மாட்டிறைச்சி பறிமாறப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், டெல்லி போலீசார் அங்கு நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இதில், அங்கு பசு மாட்டிறைச்சி பரிமாறப்படவில்லை என தெரிய வந்தது. இருப்பினும் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சர்ச்சையை தொடர்ந்து அந்த உணவகத்தின் உணவு பொருட்கள் பட்டியலில் இருந்து மாட்டிறைச்சி நீக்கப்பட்டுள்ளது.

கேரள இல்லத்தில், டெல்லி போலீசாரின் சோதனை நடவடிக்கைக்கு கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி நேற்று கண்டனம் தெரிவித்தார். இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “ கேரள இல்லம் என்பது தனியார் ஓட்டலோ, லாபத்துக்காக நடத்துகிற நிறுவனமோ அல்ல. அது கேரள அரசின் அதிகாரப்பூர்வ விருந்தினர் மாளிகை. அங்கு போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கை துரதிர்ஷ்டவசமானது. சோதனை நடத்துவதற்கு முன்பு போலீசார் நிதானமுடன் நடந்திருக்க வேண்டும்” என கூறினார்..

கேரள இல்லத்தில் போலீஸ் நடத்திய சோதனைக்கு எதிராக கருத்து தெரிவித்த டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், “இது கூட்டாட்சி அமைப்பின்மீதான தாக்குதல்” என வர்ணித்தார்.

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, “ டெல்லி கேரள இல்லத்தில் நடந்த சம்பவம், கடும் கண்டனத்துக்கு உரியது. மக்களின் அடிப்படை உரிமைக்கு கடிவாளம் போடும் விதத்தில் செயல்பட முயற்சித்திருப்பது விவேகமற்றது, ஆரோக்கியமற்றது” என கூறினார்.

ஆனால் அதிரடி சோதனையை நியாயப்படுத்தி டெல்லி போலீஸ் கமிஷனர் பாஸ்சி நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “ எங்களுக்கு புகார் வந்தது. அதன்மீது விசாரணை நடத்த வேண்டியது எங்கள் கடமை. எங்களது நிலையான நடைமுறையை பின்பற்றினோம். இந்து சேனாவின் தலைவர் விஷ்ணு சர்மா, கடந்த காலத்திலும் சட்டத்தை கையில் எடுத்து உள்ளார். இந்த பிரச்சினையின் தீவிரத்தை கருத்தில்கொண்டு, விரைவாக செயல்பட்டோம். ஏதேனும் விஷமத்தனமான செயல்கள் நடக்கக்கூடும் என்பதால் கேரள அரசு இல்லத்தின் பாதுகாப்பு ஊழியர்களை கவனமுடன் இருக்குமாறு உஷார்படுத்தினோம்” என கூறினார். பாரதீய ஜனதா கட்சியும் போலீஸ் நடவடிக்கையை நியாயப்படுத்தி உள்ளது.

இதற்கிடையே டெல்லியில் கேரள அரசு இல்லத்தில், மாநில அரசின் தலைமைச்செயலாளர் ஜிஜி தாம்சன் நேற்று நிருபர்களை சந்தித்தார். கேரள அரசு இல்லத்தில் உள்ள உணவகத்தில் பசு இறைச்சி பரிமாறப்படுவதாக எழுந்த புகாரை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

கேரள அரசு இல்லத்தின் உறைவிட கமிஷனரின் அனுமதியை பெற்றுத்தான் போலீஸ் அங்கு நுழைந்திருக்க வேண்டும் என்று கூறிய அவர், இது தொடர்பாக டெல்லி போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் செய்துள்ளோம் என கூறினார்.

கேரள அரசு இல்லத்தில் டெல்லி போலீசின் சோதனை நடவடிக்கைக்கு கேரள மாநிலம், ஆற்றிங்கால் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி., ஏ. சம்பத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அங்குள்ள உணவகத்தின் உணவு பட்டியலில் மீண்டும் மாட்டிறைச்சியை சேர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

மேலும் டெல்லியில் கேரள அரசு இல்லத்தின் முன்பாக கேரள மாநில எம்.பி.க்கள், பத்திரிகையாளர்கள், டெல்லி போலீசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கேரள அரசு இல்லத்தில் டெல்லி போலீஸ் நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி அவசர கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில் அவர் டெல்லி போலீஸ் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேரள அரசு இல்லத்தில் அத்துமீறி நுழைந்த டெல்லி போலீஸ் மீது உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

அத்துடன், கேரள அரசு இல்ல உணவகத்தில் சைவ உணவு வகைகளும், கேரள சமையல் அசைவ உணவுகளும் மட்டுமே பரிமாறப்படுவதாகவும், உணவுப்பட்டியலில் உள்ள உணவுகள் அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டவைதான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*