ஆசிரியர்களது பெறுமானம் உயர்வானதுதான் என்பதை நினைவூட்டும் ஆசிரியர் தினம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள். இருளை அகற்றி கல்வி எனும் வெளிச்சத்தை ஏற்றும் குருவின் தரம் எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை இவ்வரிகள் மூலம் காணலாம். இறைவன் அல்குர்ஆனில் “(அல்லாஹ்வாகிய) அவன்தான் மனிதன் அறிந்திராதவற்றையெல்லாம் எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்” எனக் கூறுகின்றான். நபிகள் நாயகம் (ஸல்)அவர்களுக்கு கற்பீராக என்கிற திருவசனத்தை முதன் முதலாக கற்றுக் கொடுத்து பெரும் சமூகத்தையே இவ்வுலகில் உருவாக்க காரணமாக இருந்தார். இவ்வாறு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மனிதன் இவ்வுலகில் உருவான காலம் தொட்டே காணப்பட்டு வந்திருக்கின்றது.

ஒருவர் கற்பதாக இருந்தால் அவருக்கு கற்பிப்பவர் ஒருவர் இருந்திருக்க வேண்டும். சிறுகுழந்தை அழுகின்றது என்றால் அங்கே நித்திரை செய்வதற்காக தாய் தலாட்டுப்பாடி குழந்தையை நித்திரை செய்விக்கின்றார். அங்கே ஆசிரியராக தாயும், கற்பவராக சேயும் காணப்படுகின்றனர். குழந்தைகள் தாய், தந்தை, குடும்ப அங்கத்தவர்கள் ஊடாக தன்னுடைய ஆரம்பக் கல்வியை வீட்டிலேயே பெறுகின்றது. ஒரு குழந்தை தரம் ஒன்றில் பாடசாலைக்கு வருகின்றபோது சுமார் 2500க்கும் மேற்பட்ட சொற்கனை கற்றே வருகின்றது.

இருந்தாலும் முறைசார்ந்த கற்றலை சிறந்த முறையில் வழங்குவதற்குரிய இடமாக பாடசாலையும், அங்குள்ள ஆசிரியர்களும் காணப்படுகின்றனர். இங்குதான் மாணவர்கள் தங்களுடைய அறிவார்ந்த விடயங்களையும், சமூகத்திற்குப் பொருத்தப்பாடுடைய அனைத்து விடயங்களையும் கற்றுக் கொள்கின்றனர். ஆசிரியர்களது பணி மிகவும் கஷ்டமான பணியாகும். உண்மையான ஆசிரியர்கள் தன்னிடம் வழங்கப்படுகின்ற மாணவர்களை தன் பிள்ளைகள்போல கவனித்துக் கொள்கின்றார்கள். மாணவர்களும் ஆசிரியர்களுக்கு கட்டுப்பட்டு, ஆசிரியர்கள் சொல்கின்ற விடயங்களை மந்திரம்போல பின்பற்றுகின்றார்கள். வீட்டில் சாப்பாடு சரியாக உண்பதில்லை என்றால்கூட பெற்றோர் ஆசிரியரிடம்கூறி அவனை வீட்டில் சாப்பிடக்கூறுங்கள் என்று கூறுமளவுக்கு ஆசிரியரின் சொல்லை மதிக்கின்ற மாணவர்கள் காணப்படுகின்றனர். ஆசிரியர் மாணவர் உறவு உயர்வானதாகக் காணப்படவேண்டும். ஆனால் அந்த நிலை இன்று அரிதாகி வருகின்றமை கவலையான விடயமாகும்.
ஆசிரியன் என்பதன் பொருள் குற்றமற்றவன் என்பதாகும். அதற்காக ஆசிரியன் எவ்விதமான குற்றமுமே செய்யக்கூடாது என்பதல்ல. மனிதர்களுக்குள்ளே இருக்கின்ற அத்தனை ஆசாபாசங்களையும் ஆசிரியர்கள் கொண்டுள்ளனர். இருந்தாலும் சமூகம் ஆசிரியர்களை உயர்வானவர்களாகவே பார்க்க முற்படுகின்றது.

ஆதலால்தான் ஆசிரியரானவர் சிறந்த முன்மாதிரியான நடத்தை உடையவராக இருக்க வேண்டுமெனவும் சமூகம் எதிர்பார்க்கின்றது. இவ்வாறான ஒரு காலகட்டம் பல வருடங்களுக்கு முன் இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில்; அந்த மதிப்பு இறங்கிவிட்டதுபோலவும் காணப்படுவதாக தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஆசிரியர்கள் கூறுவதுண்டு. முன்னர் ஆசிரியர்களை சிறந்த முறையில் மதிக்கின்ற சமூகம் இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்களை மதிக்கின்ற சமூகத்தையோ, மாணவர்களையோ காண்பது என்பது அரிதானதாகும். அதற்கு காரணம் இன்றுள்ள கல்வி முறைகளையும் சுட்டிக் காண்பிக்கப்படுகின்றது. அதிகரித்துள்ள தனியார் பள்ளிக்கூடங்கள், வீதிக்குவீதி காணப்படும் டியூஷன் நிலையங்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று கற்பிப்பது போன்ற பல விடயங்கள் இந்த மதிப்பின்மைக்கு காரணங்களாக கூறுவோரும் உண்டு.

மாத்திரமன்றி சில ஆசிரியர்கள் தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட மாணவர்களை துன்புறுத்துவதும், துஷ்பிரயோக செற்பாடுகளில் ஈடுபடுத்துவதும் அண்மையக் காலங்களில் கண்டறியப்பட்டுள்ள விடயங்களாகும். இருப்பினும் ஆசிரியர் சமுகத்தில் இவ்வாறானவர்களை இனங்கண்டு அவர்களை இத்தொழிலிருந்து களைந்தெடுக்கப்படவேண்டிய கட்டாயமும் காணப்படுகின்றது. சமூகத்தை பண்படுத்த வேண்டிய ஆசிரியர்கள் உண்மையானவர்களாக விளங்கவேண்டும். அதனைத்தான் சமூகமும் எதிர்பார்க்கின்றது. இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது ஆசிரியர்களையும் புனிதர்களாக மதிக்க வேண்டும் என்பதற்காக உலக அளவில் ஆசிரியர்கள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்த வகையில் இலங்கையிலும் ஒக்டோபர் 6ம் திகதி இத்தினம் கொண்டாடப்படுகின்றது. இத்தினத்தில் மாணவர்கள் தான் கற்கும் பள்ளிகளில் தனக்குரிய அன்பான ஆசிரியர்களை மதித்து அவர்களுக்கு கௌரவம் கொடுக்கின்றனர். தனக்கும் தான் வாழும் சமூகம் இரண்டிற்குமான பிரதிநிதியாக ஆசிரியன் காணப்படுகின்றான் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

எழுத்தறிவித்தவன் இறைவனாவான். அந்த எழுத்தை நாம் ஒவ்வொருவரும் சிறுவர்களாக பாடசாலையில் மாணவர்களாக இருந்தபோது நமக்கு கல்வி புகட்டியவர்கள் ஆசிரியர்கள். அதனால்தான் இத்தரணியில் மேம்பட்டவர்களாக போற்றப்படவேண்டிய உன்னத பிறவிகள் ஆசான்கள். உலகில் கல்வி அறிவே இல்லாமல் வாழ்பவன் தனது இரண்டு கண்களையும் இழந்து வாழ்தற்கு சமனாவான். ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவை புகட்டி இவ்வுலகினை அறிவார்ந்தமாக பார்ப்பதற்கு ஆசிரியர்கள் உதவியிருக்கின்றார்கள். சமூகத்தை உயர்ந்த உயர்வான இடத்திற்கு கொண்டு செல்லும் ஒரு ஏணியாக, கல்விக்கரையை தொட்டுக்காண்பிக்கும் தோணியாக ஆசிரியர்கள் காணப்படுகின்றனர் என்பதை சமூகத்திற்குரிய உணர்வை கொடுக்கிறது இந்நாள்.

எனவேதான், ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக யுனஸ்கோ அமைப்பு ஆசிரியர்களை நினைவுறுத்துவதற்காக உலக ஆசிரியர் தினத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பான மாணவர் சமூகத்தை உருவாக்க தன்னை மெழுகாய் உருக்கிக் கொண்ட ஆசிரியர்களுக்கு இலங்கை அரசு கௌரவம் கொடுத்து வாழ்த்துகின்றது. இந்த கௌரவம் கடந்த 1994ம் ஆண்டு ஆசிரியர் தினத்திலிருந்து அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்த கௌரவத்திலும் பாகுபாடு, அரசியல் கலப்பிருப்பு காணப்படுவதாகவும் சில குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. உண்மையாக தன்னை அர்ப்பணிக்கின்ற ஆசிரியர்கள் கட்டாயம் கௌரவம் பெறவேண்டும்.

ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் ஆசிரியர்கள் வாழ்வியல் ஆசானாக இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி ஒவ்வொரு வகுப்பறைகளிலுமேதான் உருவாக்கப்படுகின்றது. அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிறந்த ஆசிரியர்கள் என்பவர்கள் செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஆசிரியர் பணி சிறப்பாக போற்றப்படும். அதே போல் மாணவர்களை சிறந்த பண்போடு உருவாக்க நினைக்கும் ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டியது அவசியமாகும். பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி, சிறுமியை சில்மிஷம் செய்தார் ஆசிரியர், துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்திய ஆசிரியர் கைது, என்கிற இதுபோன்ற செய்திகளால் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்திவிடுகின்றது.

அதுமாத்திரமன்றி ஒரு வழக்கறிஞர் தவறு செய்தால் அவரை பூமியில் இருந்து ஆறடி உயரத்தில் தொங்க விட்டு விடலாம். அதே போல் ஒரு டாக்டர் தவறு செய்கிறார் என்றால் அவரை பூமியில் இருந்து எட்டடி பள்ளத்தில் புதைத்துவிடலாம். ஆனால் ஒரு ஆசிரியர் தவறு செய்தால் எட்டின அளவிற்கு எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர் என்கிற ஒரு கருத்தும் உண்டு. இதனை உணர்ந்து செயல்பட்டால் ஆசிரியர் பணி சிறக்கும், அதனால் நாடும் சிறக்கும்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பாடசாலைப்பருவம் முக்கியமானது. வெளிஉலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை ஆசிரியரால் தான் தர முடியும் என்கிற உண்மையினை நாம் அனைவரும் தெரிந்தும் வைத்திருக்கின்றோம். மாறிவரும் காலச்சூழலால் கல்வி இன்றி வாழவே முடியாது. கல்வி எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதைச் சொல்லித்தருகின்ற ஆசிரியராவார். அவ்வாறான ஆசிரியர்கள் இல்லாவிட்டால் நாமும் இல்லை. இந்த எழுத்தும் இல்லை. எழுத்தில் முதன்மை பெற்றது அகரம். அந்த அகரத்தை கற்றுத்தருவதால் ஆசிரியரும் இறைவனே. தூய அறிவினை நல்கும் ஆசிரியரின் பணி சிறப்பானதாகும். இவ்வளவு பெருமைகளை உடைய ஆசிரியர்களை போற்றுவதற்குரிய தினமாகவே உலக ஆசிரியர்கள் தினம் நினைவுறுத்தப்படுகின்றது.
ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பதல்ல. ஒழுக்கம், பண்பு, ஆன்மீகம், பொதுஅறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதபணி ஆசிரியர் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமான பணியை மாணவர்களுக்கு அளிக்க தன்னலமற்ற தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும்போதாது. கற்பிக்கும் பணியை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள்தான் உண்மையான ஆசிரியர்கள். மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர்தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல் ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்றி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்துவது ஆசிரியர் பணியாகும். என்பதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
இந்த சமுதாயத்தில்;;;;; நல்ல மனிதர்களை உருவாக்கும் சக்தி ஆசிரியர்களுக்கு மட்டுமே உண்டு. மாணவர்களை தனது பிள்ளைகள் போல் பாவித்து அவர்களுக்கு அறிவூட்டுபவர் ஆசிரியர். மாணவர்களின் சந்தேகங்களை மிகப் பொறுமையுடன் விளக்கி அவர்களுக்கு தெளிவுபடுத்துவபர் ஆசிரியர். ஆகவேதான் மனிதனை மாமனிதனாக, உருவாக்கும் உன்னத சிற்பிகள் ஆசிரியர்கள், அதில் தன்னை அர்ப்பணித்த ஆசிரியர்கள்தான் உண்மையான ஆசிரியர்கள். இவ்வாறு மதிக்கின்ற ஆசிரியர்கள் உருவாக்குகின்ற மாணவர்கள் உலகம் போற்றும் மகாகன்காளாக மாறுகின்றனர். ஆசிரியர் என்பவர் கற்றல் கற்பித்தலில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல் பல்வேறு நடிபங்குடையவராகவும், பல பரிமாணங்களின்ஊடாக தேடலில் வழி செய்பவராக காணப்படுதல் முக்கியமாகும் என அறிஞரும் கல்வியியலாளருமான லுஈஸ் கொகாலே கூறியிருக்கின்றார்.
அதேவேளை ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நோக்குடன் கல்வியமைச்சு அண்மையில் ஆசிரியர்களை உள்ளீர்ப்புக்குள் புதிதாக கொண்டுவந்துள்ளது. அவர்களுக்குரிய வேதனங்களை அதிகரித்துள்ளது. இருந்தாலும் எதிர்பார்த்த அளவு சம்பளத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்ததாக அச்சுற்றுநிருபம் அமையவில்லை என்பது ஆசிரியர்களது ஆதங்கமாகும். குறிப்பாக 1988ஆம் ஆண்டுகாலப்பகுதியில் ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டவர்களுக்கு இந்த உள்ளீர்ப்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. எதிர்காலத்தில் ஆசிரியர்களது உள்ளீர்ப்பு விடயத்தில் அடிக்கடி ஏற்படும் குளறுபடிகளை விடுத்து, அடிக்கடி வெளியிடப்படுகின்ற சுற்றுநிருபங்களால் உளத்தளவில் பாதிக்கப்படவைப்பதையும் தவிர்த்து நியாயமான உயர்ச்சியினை வழங்குவதற்கு புதிய கல்வியமைச்சர், புதிய அரசு கவனத்திற்கொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள் சம்பளத்திற்காக வேலை செய்கின்றவர்கள் அல்ல. சேவையே அவர்களது நோக்கமாகும். அந்த சேவை இன்று பணத்திற்கு விலைபோகும் அளவுக்கு கடந்தகால ஆட்சியாளர்களினதும், அவர்களது திட்டங்களும் ஆசிரியர்கள் வெளியே சென்று பணத்திற்காக கற்பிக்கும் நிலைமையும், ஏன் தொழிலை விட்டு விலகி தனியார் பாடசாலைகளில் கற்பிக்கும் நிலைமைகூட தோற்றம் பெற்றிருந்தது. அண்மையில்கூட கல்வியமைச்சு சில பாடங்களுக்கு ஆசிரியர் தட்டுப்பாடு நிலவுவதாக கூறியிருந்தது. பட்டம் பெற்ற ஆசிரியர்கள் ஆசிரியர் தொழிலிருந்துவிலகி தனியார் பாடசாலைகளில் அதிக சம்பளத்திற்கு கற்பிக்கின்றார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.
உண்மையில் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வேலைகளுக்கு மத்தியில் ஆசிரியர்கள் சிறந்தமுறையில் சேவையாற்றுகின்றார்கள். வேறுதொழிலின்றி ஆசிரியர் வேதனத்தையே நம்பிக் கொண்டிருக்கின்ற ஆசிரியர்களுக்கு இன்றைய வாழ்க்கைச்செலவுக்கு அந்தவேதனம் போதுமானதாக இல்லை. அரச உத்தியோகத்தர் என்கிற வகையில் அவர்களுக்கு வழங்குவதாக கடந்த அரசில் உறுதியளித்திருந்த மோட்டார்சைக்கிளும் கொடுக்கவில்லை. இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்ற காலகட்டங்களில் அரச உத்;தியோகத்தர் என்பதால் அரசின் எவ்விதமான நிவாரணங்களும் பொதுவாக அரச ஊழியர்களுக்குக் கிடைப்பதில்லை. சிலசலுகைகள் கிடைத்தாலும் அது கடனாகவேதான் கிடைக்கும். எனவே, இன்றைய ஆசிரியர் தினத்தின் மகிமையை உணர்ந்து, எதிர்காலத்திலாவது மேற்கூறிய விடயங்களில் அரசும், கல்வியமைச்சும், உரிய அதிகாரிகளும் கவனம் செலுத்துதல் வேண்டும். கல்வியை போதிக்கின்ற ஆசிரியர்கள், மாணவர்களை நல்வழிப்படுத்துவார்கள் என்கிற நம்பிக்கை வளரும் வகையில் ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும். அதற்குப்பகரமாக ஆசிரியனும். அவரது குடும்பமும் சிறப்பான முறையில் வாழ்வதற்கான வழிவகைகளையும் அரசு ஏற்படுத்தவேண்டும். உண்மையான ஆசிரியரின் வலியையும், வேதனையையும் இன்றைய நாளில் சீர்தூக்கிப்பார்ப்பது ஆசிரியர்களுக்கு கொடுக்கின்ற கௌரவமாக அமையும்.
(அட்டாளைச்சேனை மன்சூர்)

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*