தமிழ் மக்கள் தலையில் திணிக்கப்படவுள்ள தீர்வு – பரிகாரம் ஆகுமா?

பிறப்பு : - இறப்பு :

யேர்மனியில் இருந்து வெளிவரும் அகரம் இதழுக்கு இம்மாத ஆரம்பத்தில் நான் எழுதிய கட்டுரை.
தமிழ் மக்கள் தலையில் திணிக்கப்படவுள்ள தீர்வு – பரிகாரம் ஆகுமா?
சண் தவராஜா
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிவடைந்து 2,3 வாரங்கள் கடந்த நிலையிலும் தேர்தல் பரபரப்பு இன்னமும் ஓய்ந்த பாடாக இல்லை. யனவரி 8 இல் நடைபெற்ற ஆட்சிமாற்றம் வழங்கிய நன்மைகள் ஒவ்வொன்றாக அறுவடையாகுவது போன்று காட்சிகள் தோன்றினாலும் இனப் பிரச்சினை விடயத்தில் இப்போதைக்கு எதுவும் நடவாது என்பது மாத்திரம் துலாம்பரமாகத் தெரிகிறது. தேசிய அரசாங்கம் என்ற உறுதிமொழி கட்டிக் காக்கப்படும் என்பது 2 வருடத்துக்காகவாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இனவாதிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவரது நியமனத்திற்கு முதற்கட்ட எதிர்ப்பை விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோர் வெளியிட்டுள்ள நிலையில், எதிர்ப்பாளர்கள் என்ன நடவடிக்கையைத் தொடர்வார்கள் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.
தேசிய அரசாங்கம் என்பது தேசத்தின் நன்மைக்காகவே என்பது புரிந்து கொள்ளப்படக் கூடியதே என்றாலும், ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் வாழும் நாட்டில் அனைத்துத் தேசங்களினதும் அரசாங்கமாக அது அமையுமா என்ற கேள்வி பூதாகரமாக முன்நிற்கிறது. அமைச்சுப் பதவிகளைப் பங்கிடுவதில் ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கல்கள், ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராகத் தொடரும் விசாரணைகளில் தலையீடுகள் இடம்பெறுவதாக எழும் குற்றச்சாட்டுக்கள், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரைக் காட்டிக் கொடுப்பதாக எழும் கூக்குரல்கள் எனப் பலவாறாக இலங்கையின் அரசியல் களம் நிச்சயமற்ற ஒன்றாகவே தற்போதும் தென்படுகின்றது.
அரசாங்கத்தை அமைத்த கையோடு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்குப் பயணமாக இருக்கிறார். முன்னோட்டமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மேடியைச் சந்தித்துப் பேசி இருக்கிறார். முன்னதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பதவியேற்ற கையோடு புதுடில்லி சென்று வந்திருந்தமை தெரிந்ததே. இவை யாவும், இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் செல்வாக்கை தெளிவாகக் காட்டி நிற்கின்றன.
இந்தியா மாத்திரமல்ல, அமெரிக்காவும் கூட இலங்கை விவகாரத்தில் அதீத அக்கறை கொண்டுள்ளது. அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி நிஷா பிஷ்வால் அண்மையில் இலங்கை வந்து அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து போர்க் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாகத் தமிழர் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அதேவேளை, சிறி லங்கா இனப்படுகொலை தொடர்பில் பன்னாட்டு விசாரணை தேவை என்ற தீர்மானம் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

இலங்கையில் ஆட்சி மாற்றம் என்பது அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் கூட்டுத்திட்டம் என்பது பல்வேறு ஆய்வாளர்களால் ஆதாரங்களோடு முன்வைக்கப்பட்ட கருத்தாக இருக்கிறது. ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய அந்தத் திட்டத்தின் அத்தியாயங்களாகவே நடப்பு நிகழ்வுகளைப் பார்க்க வேண்டி இருக்கின்றது. இரா சம்பந்தன் அவர்களின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் இந்தத் திட்டத்தின் ஒரு அங்கமாகவே பார்க்கப்பட வேண்டும்.

யனவரி 8 தேர்தல் நடைபெற்று முடிந்த மறுநாள் காலையில் இராணுவச் சதி மூலம் ஆட்சியைக் கைப்பற்ற மகிந்த ராஜபக்ஷ நினைத்தபோது, தற்போதைய தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகைக்குச் சென்று ராஜபக்ஷவை பாதுகாப்பாகக் கூட்டிச் சென்று உலங்கு வானூர்தியில் ஏற்றி அவரை மெதமுலனவிற்கு அனுப்பி வைத்தமையை அநேகர் மறந்திருக்க மாட்டார்கள். அந்த வேளையில் ரணில் அங்கு செல்வதற்குக் காரணமாக அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஜோண் கெரி இருந்தார் என்பதுவும் நினைவில் இருக்கலாம்.

அதன்போது மகிந்தவுக்கு வழங்கிய வாக்குறுதி என்ன என்பதை யாரும் அறியாது விட்டாலும் ஊகிக்கக் கூடியதே. அதனையும், தற்போது அமெரிக்கா இலங்கையைக் காப்பாற்ற முனைவதாக முன்வைக்கப்படும் குற்றச் சாட்டையும் இணைத்துப் பார்த்தால் உண்மை புரியும்.

முதலாவதாக ஒரு விடயத்தை ஒத்துக் கொண்டேயாக வேண்டும். ஐ.நா. மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் கொண்டுவர முனைந்து நிற்கும் அமெரிக்காவோ, அதன் ஆதரவு நாடுகளோ உள்நாட்டு விசாரணையையே வேண்டி நிற்கின்றன. தமிழர் தரப்பில் இருந்து பன்னாட்டு விசாரணைக் கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும் அது காத்திரமானதாகவோ, ஏனைய நாடுகளின் ஆதரவு பெற்றதாகவோ இல்லை.

உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கை இல்லை. கடந்தகால அனுபவங்கள் அதனைக் காட்டி நிற்கின்றன என்ற தமிழ்த் தரப்பின் நியாயமான சந்தேகத்துக்கு ஏதாவது வகையில் பரிகாரம் கண்டுவிட்டால் இந்தப் பன்னாட்டு விசாரணை என்ற கோரிக்கை தானாகவே வலுவிழந்து விடும் என்பது இலங்கை அரசுக்கும், அமெரிக்காவிற்கும் புரிந்துள்ளது என்பதன் வெளிப்பாடே கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட போன்றோரின் விவகாரத்தில் அண்மைக்காலமாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள். அது மாத்திரமன்றி, தேர்தல் சமயத்தில் தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட சமஷ்டிக் கோரிக்கைக்கு எதிராக இரண்டு பிரதான கட்சிகளும் பகிரங்க எதிர்ப்பை வெளியிட்டிருந்தாலும் கூட அண்மைக்காலமாக அரசாங்கத் தரப்பில் இருந்து சமஷ்டிக் கோரிக்கைக்கு, அல்லது அதிகாரப் பரவலாக்கலுக்குச் சாதகமான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது.

இவை சொல்லுகின்ற சேதியைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. கிட்டிய எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விவகாரத்திற்கு ஏதோவொரு தீர்வு வழங்கப்பட இருக்கிறது. அது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யுமா என்ற கேள்வி இருந்தாலும் தீர்வு எம்மீது திணிக்கப்பட்டே ஆகும். இதற்கான நிபந்தனை பன்னாட்டு விசாரணை என்ற கோரிக்கையைத் தமிழர் கைவிட வேண்டும், உள்நாட்டு விசாரணையை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் என்பதாகவே இருக்க முடியும்.
மறுபுறம், கிடைக்கப்போகும் தீர்வில் தமக்கேற்ற மாற்றங்களைச் செய்து கொள்ள தமிழர்கள் ஒன்றுபட வேண்டும். தூரதிர்ஷ்ட வசமாக தமிழர்கள் ஒன்றுபட வேண்டிய வேளைகளில் எல்லாம், பிரிந்து நின்று தமது தலையில் தாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதே கடந்தகால வரலாறாக இருந்திருக்கிறது. தற்போதைய நிலவரமும் அவ்வாறே இருக்கிறது.

தவிர்க்க முடியாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தீர்வொன்றின் மூலம் கிட்டக்கூடிய நன்மைகளுக்கும், அதனால் உருவாகக் கூடிய தமிழ் மக்களின் தேசியப் போராட்டத்திற்கு ஏற்படக் கூடிய பின்னடைவுக்கும் உரிமை கோர வேண்டிய நிலையில் உள்ளது.
1987 இல் மேற்கொள்ளப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் விளைவாக உருவான மாகாணசபை விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் விளைவாகவே உருவானதாயினும், ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் நிரகரித்ததால் இன்றுவரை மாகாணசபையை அமைத்த பெருமைக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியே சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

இன்று சர்வதேச தலையீடு காரணமாக தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு வழங்கப்பட உள்ள தருணத்தில் கூட அத்தகைய தீர்வுக்கான பெருமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சென்றடைய இருக்கிறது. வழக்கம் போல விடுதலைப் புலிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்வோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தீவிரமாக எதிர்ப்பதிலேயே தமது கவனத்தைச் செலுத்திவரும் நிலையில் உயிரைக் கொடுத்துப் போராடிய மாவீரர்களின் உண்மையான தியாகத்தின் பெருமை யாரையோ சென்றடையும் முரண்நகையே இன்றைய யதார்த்தமாக உள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit