இரா சம்பந்தன் கையில் தமிழர் தலைவிதி?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நண்பர்களே,

இரா சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டமை தொடர்பில் நான் யேர்மனியில் இருந்து வெளிவரும் அகரம் இதழுக்கு எழுதிய கட்டுரை. இதழ் தாமதமாக வெளிவந்ததால் கட்டுரையும் தாமதமாகவே வெளிவருகிறது.

இரா சம்பந்தன் கையில் தமிழர் தலைவிதி?

சண் தவராஜா

மீண்டும் ஒருமுறை ஈழத் தமிழ் மக்களின் கவனம் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை நோக்கிக் குவிந்துள்ளது. ஒரு விதத்தில் இதுவே இறுதிக் கவனக் குவிப்பு என்று கூட வர்ணிக்க முடியும். பல வருடங்களாக ஈழத் தமிழ் மக்களும், அவர்களுக்கு பல தசாப்த காலமாக – குறிப்பாக போரின் இறுதிக் கட்டத்தில் – இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக நீதிவேண்டிப் பாடுபடும் உலகெங்கும் வாழும் மக்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த சிறி லங்கா தொடர்பிலான அறிக்கை இந்த மாத இறுதியில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. அமெரிக்கா தலைமையிலான இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளால் கூட்டாகச் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நடாத்திய விசாரணைகளின் முடிவாக புதிய விதப்புரைகளுடன் கூடியதாக இந்த அறிக்கை அமையலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சிறி லங்காவில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் பன்னாட்டு விசாரணை தேவை என்பதே தமிழர் தரப்பின் நிலைப்பாடாக உள்ள போதிலும் அவ்வாறான ஒன்றுக்கு இந்த அறிக்கையூடாக அழைப்பு விடுக்கப்படும் ஏதுநிலை அரிதாகவே இருப்பதாகத் தெரிகின்றது. தமிழர் தரப்பு இதுவிடயத்தில் விடாப்பிடியாக இருந்தாலும், மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மத்தியில் அதற்கான ஆர்வம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மறுபுறம் அத்தகைய ஒரு விசாரணையை நடாத்துவது தொடர்பில் உறுப்பு நாடுகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு உள்ளமை ஒன்றும் இரகசியமான விடயமுமல்ல. இந்த நிலையில் அறிக்கை எவ்வாறு அமையக் கூடும் என்பதை ஊகிப்பது ஒன்றும் கடினமாக இருக்காது.

இம்முறை சிறி லங்கா அரசாங்கத் தரப்பைப் பொறுத்தவரை மனித உரிமைகள் பேரவைக்கான பயணம் கடினமாக அமையாது. புதிய ஆட்சி மாற்றம், போர்க் குற்றங்களுக்குப் பாத்திரமானவர்கள் எனக் குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் ஒப்புக்கேனும் பதவிகளில் இருந்து அகற்றப் பட்டிருக்கின்றமை, கண்துடைப்புக்கேனும் ஒரு சில சம்பவங்களில் விசாரணைகள் நடைபெற்று குற்றவாளிகளுள் ஓரிருவர் கைது செய்யப் பட்டுள்ளமை, நல்லாட்சி என்ற வரைமுறைகளுக்கு ஒப்ப தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளமை, எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளமை, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக அரசாங்கத் தரப்பில் இருந்து அவ்வப்போது கருத்துகள் வெளியாகின்றமை எனப் பல சாதகமான அம்சங்களுடன் ஜெனீவா செல்கின்றது சிறி லங்கா அரசாங்கத் தரப்பு.

மறுபுறம் பன்னாட்டு விசாரணையே தேவை என்ற முழக்கத்தோடு ஜெனீவா செல்லும் தமிழ்த் தரப்பு வலுக் குறைந்த ஒன்றாகவே தெரிகின்றது. தமிழர் விவகாரம் தொடர்பாக பேசவே முடியாத அல்லது பேசவே விரும்பாத அசரங்கத்துடன் வேலை செய்யும் நிலைமை மாறி, பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர், குழுக்களின் பிரதித் தலைவர், அடுத்தடுத்த நாட்களில் யாழ், வன்னி மற்றும் மட்டக்களப்புத் தேர்தல் மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவிகள் என அரசாங்கத்தில் மறைமுகமாகவேனும் பங்கு கொள்ளும் நிலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறியிருக்கின்றமை, அண்மையத் தேர்தல் மூலம் தமிழர் தரப்பில் வெளிக்கிளம்பி இருக்கும் ஒற்றுமையின்மை, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் மத்தியில் நிலவும் உரசல்கள், கூட்டமைப்பின் ஒருசில தலைவர்கள் மீது உள்ளும் புறமும் பகிரங்கமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், தேர்தலை ஒட்டி பூதாகரமாக வெளிக்கிளம்பிய புலம்பெயர் தமிழர் மத்தியிலான கருத்தொற்றுமையின்மை என தமிழர் தரப்பு பலவீனமாகிக் கிடக்கிறது.

குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு மாத்திரமே பன்னாட்டு விசாரணை என்ற கோரிக்கை சர்வதேச சமூகத்தின் முன்னால் தனித்து முன்கொண்டு செல்லப்பட முடியாத நிலையில், அரசியல் தீர்வு தொடர்பான கோரிக்கையை பன்னாட்டு விசாரணையைக் கைவிடுவதற்கான மாற்றாக முன்மொழியக் கூடும் என்ற எதிர்வு கூறல்கள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி பன்னாட்டு விசாரணைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டது எனக் குற்றச்சாட்டப்பட்டுள்ள நிலையில், ஏனைய பங்காளிக் கட்சிகளான ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் ஆகியவை கூட்டாக பன்னாட்டு விசாரணை கோரி மனித உரிமைகள் ஆணையாளருக்குக் கடிதம் அனுப்பி வைத்துள்ளதையும் நோக்க வேண்டியுள்ளது.
இதேவேளை இம்மாத இறுதியில் இந்தியா செல்லவிருக்கும் இலங்கைத் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தனது பயணத்தின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உள்ளக விசாரணையை ஏற்றுக் கொள்வதற்குச் சம்மதிக்கச் செய்ய இந்தியாவின் உதவியை நாடக் கூடும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தியா கூறினால் கூட்டமைப்பின் தலைவர்கள் மறுப்புக் கூறாமல் சம்மதம் தெரிவிப்பார்கள் என்பது சிறுபிள்ளைக்கும் தெரிந்த விடயமே.
தமிழர்களுக்கான நீதியான அரசியல் தீர்வு வழங்கப்படும், எனவே உள்ளக விசாரணைக்கு ஒரு வாய்ப்பை வழங்கிப் பார்க்கலாம் எனப் பன்னாட்டுச் சமூகம் தமிழர்கள் தரப்புக்கு அழைப்பு விடுக்கும் நிலை உருவானால் அதனை மறுக்கும் நிலையில் தமிழர் தரப்பு இருக்கிறதா? சிறி லங்காவில் நீதி கிடைக்காது என்ற திடமான முடிவின் அடிப்படையிலேயே பன்னாட்டு சமூகத்தை அணுகிய தமிழர்கள், தற்போது பன்னாட்டு சமூகத்தின் முன்மொழிவை நிராகரித்து விட்டு எங்கு சென்று நீதியைக் கோர முடியும்?
இதேவேளை, சிறி லங்காவில் யனவரி 8 இல் புதிய ஆட்சி அமைந்த கையோடு புதிய அரசியலமைப்பு ஒன்றை வடிவமைப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டு இனப்பிரச்சனைக்குத் தீர்வாக தமிழ் மக்களுக்கு பிராந்திய சுயாட்சியுடன் கூடிய வரைவொன்று உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக ஊர்ஜிதமற்ற செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்மதத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வரைவில் முஸ்லிம்களுக்கான தனி அலகும் இடம்பெற்றுள்ளதாக அறியக் கிடைக்கிறது.
தற்போதைய நிலையில் தமிழர்கள் பன்னாட்டு சமூகம் தருவதை ஏற்றுக் கொள்ளப் போகின்றார்களா? அல்லது எதுவுமே வேண்டாம் போர்க்குற்றவாளிகளைத் தண்டிப்பது மாத்திரம் போதும் என நிற்கப் போகின்றார்களா? மரத்தில் இருக்கும் பறவைக்கு ஆசைப்பட்டு கையில் கிடைக்கும் பறவையை விட்டுவிடப் போகின்றார்களா? அதற்கான வல்லமை தமிழர் தரப்பிடம் இருக்கிறதா? எனப் பலப்பல கேள்விகள் இந்த வேளையில் எழுகின்றன.
2008 ஆம் ஆண்டில் சுவிற்சர்லாந்துக்கு வருகை தந்த போது இரா சம்பந்தன் அவர்கள் அப்போதைய அரசியல் நிலை தொடர்பாகக் கூறிய வாசகம் இது. ‘இன்றைய நிலையில் தமிழ் மக்களுக்கு நன்மை கிடைத்தாலும் அதற்குப் பொறுப்பானவர் ஒருவரே. பெருந்தீமை விளைந்தாலும் அதற்குப் பொறுப்பானவர் ஒருவரே.”
அன்று அவர் இவ்வாறு சூறும்போது அவர் மனதில் இருந்தவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன். இன்று வரலாறு இரா சம்பந்தன் அவர்களை இதே இடத்தில் நிறுத்தி இருக்கிறது. தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய பொறுப்பு அவர் தோள்களில் உள்ளது. அவர் சரியான முடிவை எடுத்து தமிழ் மக்களுக்கு நன்மையைப் பெற்றுத் தருவாரா என்பதே மில்லியன் டொலர் பெறுமதியான கேள்வி.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*