எதுவரை நீடிக்கும் சம்பந்தனின் பதவி? -தொல்காப்பியன் –

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் அறிவிக்கப்பட்ட போதிலும், அதுபற்றிய சர்ச்சைகள் அரசியல் அரங்கில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

வரும் 22ம் ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போதும், இந்த விவகாரத்தைப் பிரச்சினையாக எழுப்புவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் காத்திருக்கிறார்கள்.

அவர்கள் நாடாளுமன்றத்தில் தம்மை ஒரு தனி அணியாக அங்கீகரிக்குமாறும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமக்குத் தர வேண்டும் என்று கோரவுள்ளதாகவும் கூட தெரிவித்திருக்கின்றனர்.

ஏற்கனவே நியமிக்கப்பட்ட சபாநாயகரை மாற்றிய முன்னுதாரணம் உள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், சபாநாயகர் கரு ஜெயசூரிய, அவர்களை எதிர்க்கட்சியில் தனி அணியாக அங்கீகாரம் அளித்தாலும், அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவார் என்று கருதுவதற்கில்லை.

ஏனென்றால், வழக்கமாக நாடாளுமன்றத்தில் தேர்தலில் எந்தக் கட்சியின் ஊடாகப் போட்டியிட்டார்கள், எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள் என்று தான் கணக்கெடுக்கப்படும்.

அவ்வாறு பார்த்தால், இவர்களால் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு உரிமை கோர முடியாது. ஏனெனில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கின்றனர்.

அதைவிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்க்கட்சியாகச் செயற்படவுள்ளதாயின், அதன் பொதுச்செயலாளர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால தான், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமது கட்சியினருக்குத் தருமாறு சபாநாயகருக்கு உரிமை கோர வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட அவர், அவ்வாறு கோரப் போவதில்லை.

எனவே, எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் தான் தொடரப் போகிறார் என்பது உறுதி. என்றபோதும், இந்த விவகாரத்தை, மகிந்த தரப்பினர் சும்மா விட்டுவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

அதனால், நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரிலும் இது சலசலப்பை ஏற்படுத்தலாம். ஆனால், அது பூகம்பமாக வெடிப்பதற்கு வாய்ப்பில்லை.
இப்போது, எதிர்க்கட்சித் தலைவர் பதவி இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளதை, மகிந்த அணியினர் தவிர்ந்த மற்றெல்லாத் தரப்பினரும் வரவேற்கின்றனர் என்பது முக்கியமான விடயம்.

அதிலும் சிங்கள அரசியல்வாதிகள் பலரும் இதனை முற்போக்கான விடயமாகவே பார்ப்பதும் கவனிக்கத்தக்கது.
ஆனாலும் அவர்கள் இரா.சம்பந்தன் எவ்வாறான எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என வெளியிடும் எதிர்பார்ப்புகளும் சரி, சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கக் கூடாது என வலியுறுத்துவோர் வெளியிடும் கருத்துகளும் சரி ஒருமித்ததாகவே இருக்கிறது.

அதில் முக்கியமான விடயம், இரா.சம்பந்தன், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்வதேச விசாரணையை ஆதரிக்கிறார் என்பது.
இரா.சம்பந்தனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதால், எதிர்க்கட்சித் தலைவராக பதவியில் இருக்க அருகதையற்றவர் என்று உதய கம்மன்பில, தினேஸ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச போன்றவர்கள் கூறியிருக்கின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது, நாடாளுமன்றத்தில் பெறும் ஆசனங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் ஒரு தகுதி நிலை.

ஆனால், சர்வதேச விசாரணை என்பது ஒரு தரப்பின் நிலைப்பாடு- அது கொள்கை சார்ந்த விடயம். இந்த இரண்டையும் ஒரே கோட்டுக்குள் கொண்டு வர முடியாது.

அதுபோலத் தான், சம்பந்தனும் கூட்டமைப்பும் சமஸ்டியைக் கோருவதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அவர்களுக்கு வழங்க முடியாது என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

சமஸ்டி என்பது பிரிவினை என்றும், அது நாட்டைப் பிளவுபடுத்தும் என்றும் இவர்களே தீர்மானித்துக் கொண்டுள்ளனர்.
ஆறாவது திருத்தச்சட்டத்தின் படி, நாடாளுமன்றத்தில் பிரிவினைவாதக் கருத்துக்களைப் பேசவோ நாட்டைப் பிளவுபடுத்துவது குறித்து கருத்து வெளியிடவோ முடியாது.

எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் இதற்கான எழுத்துமூல உறுதிமொழி பெறப்பட்டுள்ளது.
இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டே, இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் பதவியேற்றுள்ளனர்.
எனவே, அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வைத்து பிரிவினைவாதம் பேச முடியாது.

சமஸ்டி என்பது உலகில் நடைமுறையில் உள்ள ஒரு ஆட்சிமுறையே தவிர, அது ஒன்றும் சட்டவிரோதமானது அல்ல.
சமஸ்டி ஆட்சிமுறையை வலியுறுத்தும் எவரும், எதிர்க்கட்சித் தலைவராக வர முடியாது என்று இலங்கையின் அரசியலமைப்பில் எங்குமே கூறப்படவில்லை.
அதுபோலவே, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறும் எவரும், இத்தகைய கொள்கையைத் தான் கொண்டிருக்க வேண்டும் என்ற விதிமுறையும் கிடையாது.
1977ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், தனிநாட்டுக் கோரிக்கையை வலியுறுத்தும், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்னிறுத்தியே வெற்றி பெற்றது தமிழர் விடுதலைக் கூட்டணி.

18 ஆசனங்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக நாடாளுமன்றம் சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட போது, யாரும் அவரது கட்சியின் கொள்கையைக் காரணம் காட்டி, இப்படியான எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை.
இப்போது, தான், சமஸ்டி கோருபவர் – சர்வதேச விசாரணையைக் கோருபவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியாது என்று புதிய புதிய நிபந்தனைகளை சிங்கள பேரினவாத அரசியல் சக்திகள் முன் வைக்கின்றன.

இவை எல்லாவற்றினதும் அடிப்படை, தமிழர்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாதச் சிந்தனை தான்.
தமிழர் ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளும் பக்குவம், விமல் வீரவன்சவுக்கு, தினேஸ் குணவர்த்தனவுக்கு, உதய கம்மன்பிலவுக்கு இல்லாமல் இருப்பது ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல.

சம்பிக்க ரணவக்க போன்றவர்களே அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தைப் பெற்றுள்ள நிலையில், வாசுதேவ நாணயக்கார போன்ற இடதுசாரித் தத்துவம் பேசுவோரால் கூட, இதனை அது ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பது தான் வேடிக்கை.

தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக வரக் கூடாது என்று நேரடியாகப் பிரசாரம் செய்தால் அது இனவாதமாக எடுத்துக் கொள்ளப்படும் என்பதால் தான், இவ்வாறு பொருத்தமற்ற நிபந்தனைகளை இவர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

மகிந்த ராஜபக்ச அணியினர் மட்டும் தான் இதே நிலைப்பாட்டில் இருக்கின்றனர் என்று கூறமுடியாது.
மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் உள்ளவர்களில் பலருக்கும் கூட, இதில் இணக்கம் இருப்பதாக கருதமுடியாது.
அவர்களில் பலரும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தனுக்கு கொடுத்துள்ளதன் மூலம், சர்வதேச ஆதரவைப் பெற்றுக் கொள்ளலாம் என்றே சிந்திக்கின்றனர்.

அவர்கள் அளிக்கின்ற ஆதரவின் பின்னால், நரித்தந்திரம் தான் இருக்கிறது.சிறுபான்மைத் தமிழர்களால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் பெற முடிந்திருக்கிறது. அந்தளவுக்கு தற்போதைய ஆட்சி மேன்மையானது என்ற கருத்தை ஏற்படுத்த, இவர்கள் விரும்புகின்றனர்.

இது, இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களைக் குறைக்கும் என்றும், அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதேவேளை, எந்தக் கட்டத்தில் இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி, இலங்கை அரசாங்கத்துக்குப் பாதகமாக அமைகிறதோ அப்போதே அவரைத் தாம் வீழ்த்தி விடவும் தயங்கோம் என்பதையும், இவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

உதாரணத்துக்கு அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க வெளியிட்ட கருத்து முக்கியமானது.எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் பதவி அறிவிக்கப்பட்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க, அதனை வரவேற்பதாக கூறியிருந்தார்.

அதேவேளை, அவர் படையிரைச் சர்வதேச விசாரணைக்கு கொண்டு சென்று தண்டிக்க முனைந்தால், அவரை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்குவோம் என்றும் எச்சரித்திருந்தார். இது, தமது வசதிக்கேற்றவராக இருந்தால் மட்டுமே சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்கமுடியும் என்ற சிங்களப் பேரினவாதச் சிந்தனையைத் தான் வெளிப்படுத்தியிருக்கிறது.

சிங்கள அதிகார வர்க்கம், தமது நலன்களைப் பாதுகாப்பதற்காக மட்டுமே, இரா.சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக இருக்க விட்டிருக்கிறதே, தவிர, தமிழர்களுக்கு சம உரிமை வழங்குவதற்காக அல்ல. இதனைக் கொண்டு பார்க்கும் போது, சிங்களப் பேரினவாதிகளால் வரையப்பட்டுள்ள அந்த எல்லையைத் தாண்டும் போது, அவரால், எதிர்க்கட்சித் தலைவராக நீடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*