சத்யராஜ், அனுமோல், யூகி சேது உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘நைட் ஷோ’. தமிழ் திரையுலகின் முக்கிய எடிட்டராக இருக்கு ஆண்டனி இப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார்.
இயக்குநர் விஜய் தயாரித்திருக்கும் இப்படம் மலையாள படமான ‘ஷட்டர்’ படத்தின் ரீமேக்காகும். ‘நைட் ஷோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்று வருகிறது.
நடிகர் சூர்யா இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட இயக்குநர் கே.வி.ஆனந்த், கெளதம் மேனன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட இயக்குநர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
இவ்விழாவில் நடிகர் சூர்யா பேசியது,
“என்னுடைய முக்கியமான படங்கள் அனைத்திற்கும் ஆண்டனி தான் எடிட்டர். அவருடைய பெயரை திரைக்கதை, எடிட்டர், இயக்குநர் என பார்க்கும் போது மிகவும் சந்தோஷம். எப்போதுமே புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பார். அவருடைய எடிட்டிங் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும். நாங்க கஷ்டப்பட்டு பண்ணியிருப்போம், அதை ரொம்ப கூலாக வேண்டாம் என்று வெட்டி விடுவார்.
‘காக்க காக்க’, ‘கஜினி’ போன்ற படங்களின் ட்ரெய்லருக்கு பெரிய வரவேற்புக்கு காரணம் எடிட்டர் ஆண்டனி. ‘காக்கா காக்க’ ட்ரெய்லர் மூலம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியவர். தற்போது நிறைய இளைஞர்கள் எடிட்டர் ஆண்டனி மாதிரி ஆக வேண்டும் என்று நினைத்து வருகிறார்கள்.
அதற்கு காரணம் அவருடைய உழைப்பு. அவருடைய அடுத்த இயக்குநர் முயற்சிக்கு வாழ்த்துகள். இயக்குநர் விஜய் என்னிடம் 2 கதைகள் சொன்னார். அந்த கதைகள் பண்ணும் அளவுக்கு இன்னும் வளரவில்லை என்று தள்ளி வைத்திருக்கிறேன். ‘ஷட்டர்’ படத்தின் இயக்குநர் ஜான் மேத்யூ இப்படத்தின் கதையை 10 வருடங்கள் எழுதியிருக்கிறார். கதை எவ்வளவு முக்கியம் என்பதை நான் உணர்கிறேன். உங்களுடைய 10 வருட முயற்சிக்கு நான் சல்யூட் அடிக்கிறேன்.
சத்யராஜ் மாமா 2 நிமிடங்கள் வந்தாலும், அதில் எப்படி கவர முடியுமோ கவர்ந்துவிடுவார். அதே போல, அவருடைய படங்கள் தேர்வு என்னை ஆச்சர்யப்படுத்துகிறது. அவருடைய பாத்திரங்கள் தேர்வை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
‘காக்கா முட்டை’, ‘பாகுபலி’ போன்ற படங்கள் எல்லாம் ரொம்ப ஆச்சர்யப்படுத்துகிறது. தற்போது கதை தான் ரொம்ப முக்கியம், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இப்படம் வெற்றியடைய வேண்டும்” என்று சூர்யா தெரிவித்தார்.