அடுத்த ஆண்டு நடக்கும் ‘டுவென்டி-20’ உலக கோப்பை தொடரின் சில போட்டிகள் சென்னையில் நடக்கப் போகிறது. ஆனால் அதில் ஒரு சிக்கல். என்ன சிக்கல்? சென்னை பக்கமும் உலகக் கோப்பை வருவதெல்லாம் அதிசயம்தான்.
ஆனால் அதற்கு பெரும் முட்டுக்கட்டையாய் சேப்பாக்கம் மைதானத்தின் கேலரி இருந்துவிடுமோ என்பது தான் இப்போது பிரச்னை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2016ஆம் ஆண்டின் ‘டுவென்டி-20’ உலக கோப்பை தொடரின் சில போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளது. இந்நிலையில் ‘கேலரி’ பிரச்னைக்கு தீர்வு கண்டால் மட்டுமே போட்டிகள் திட்டமிட்டபடி இங்கு நடக்கும்.
ஐசிசி சார்பில், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ‘டுவென்டி-20’ உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. முதன் முதலில் 2007ல் நடந்த தொடரில் இந்திய அணிதான் கோப்பையை வென்றது. இதுவரை 5 தொடர்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஆறாவது தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 11 முதல் ஏப்ரல் 3 வரை இந்தியாவில் நடக்கவுள்ளது.
போட்டிகள் நடக்க இருக்கும் மைதானங்களை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. அதன்படி கோல்கட்டா, பெங்களூரு, சென்னை, தரம்சாலா,மொகாலி, மும்பை, நாக்பூர், புதுடில்லி ஆகிய 8 மாநிலங்களில் உள்ள மைதானங்களில் நடக்கஇருக்கிறது.
கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இறுதிப் போட்டி நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சில போட்டிகள் நடக்க இருக்கிறது. இங்குள்ள ஐ,ஜே,கே ஆகிய 3 புதிய ‘கேலரிகள்’ பாதுகாப்பாக இல்லை எனக்கூறி சென்னை மாநகராட்சி அனுமதி மறுத்ததால், அவற்றை இடிக்க உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டது.
ஆனால் இந்த ‘கேலரிகளை’ காலியாக விட்டுவிட்டு போட்டியை நடத்த ஐசிசி தயாராக இல்லாததால் சென்னையில் போட்டிகள் நடக்குமா என்பது சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது.
அதனால் உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு முன் ‘கேலரி’ பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என தமிழக கிரிக்கெட் சங்கத்துக்கு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. இதனை நிறைவேற்ற தவறினால், உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பு சென்னைக்கு அம்போதான்…