ஆசாராம் பாபுவுக்கு எதிரான கற்பழிப்பு வழக்கில் சாட்சி சுட்டுக் கொலை: சி.பி.ஐ. விசாரணை கோரும் தந்தை!

பிறப்பு : - இறப்பு :

கற்பழிப்பு வழக்கில் சிக்கி சுமார் இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுவுக்கு எதிரான அரசுதரப்பு சாட்சியான கிர்பால் சிங் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது தந்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

குஜராத் உள்ளிட்ட ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் ஆசிரமங்களை அமைத்து ஆன்மிகவாதியாகவும், யோகாசன ஆசானாகவும் வலம்வந்த ஆசாராம் பாபு(73) தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.

கடந்த 2001 மற்றும் 2006-க்கு இடைப்பட்ட காலங்களில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் உள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் இச்சம்பவம் நடைபெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், ஆசாராம் பாபுவை கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்தனர். தற்போது ராஜஸ்தான் மாநில சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என அவர் தாக்கல் செய்திருந்த பல மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த கற்பழிப்பு வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு எதிரான போலீஸ் தரப்பு சாட்சியாக உள்ள ஒருவரை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நேற்றிரவு சிலர் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசாரம் பாபு மீது கற்பழிப்பு புகார் கூறிய பெண்ணின் தந்தைக்கு சொந்தமான நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருபவர் கிர்பால் சிங்(35) என்பவரை இந்த வழக்கில் ஒரு சாட்சியாக போலீசார் இணைத்திருந்தனர். பரேலி மாவட்டம், ஷாஜஹான்பூரில் உள்ள புவாயான் பகுதியில் நேற்று முன்தினம் இரவு அவர் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டனர்.

துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த பல தோட்டாக்கள் உடலை துளைத்த நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்த கிர்பால் சிங், உயிருக்கு ஆபத்தான நிலையில் பரேலி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த கிர்பால் சிங், ஆசாராம் பாபுவுக்கு எதிராக சாட்சி சொல்ல கூடாது என்று தன்னை துப்பாக்கியால் சுட்ட நபர்கள் மிரட்டிவிட்டு சென்றதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி கிர்பால் சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆசாராம் பாபு மீதான கற்பழிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு சமீபத்தில் ஆஜரான இவர், கடந்த சில நாட்களாக ஆசாராம் பாபுவுக்கு நெருக்கமான சிலர் தன்னை கொன்று விடுவதாக மிரட்டி வருவதாக ஏற்கனவே நகர கூடுதல் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.

கிர்பால் சிங்கை கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வந்தனர். தற்போது அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளனர். தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என கிர்பால் சிங்கின் தந்தை கேட்டுக் கொண்டுள்ளார். ஆசாராம் பாபுவுக்கு எதிரான சாட்சிகள் அடிக்கடி இப்படி கொல்லப்படும் நிலையில் அவருக்கு எதிராக சாட்சி சொல்ல யாரும் முன்வர மாட்டார்கள். எனவே, இந்த கொலைகளின் பின்னணி பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கிர்பால் சிங்குடன் சேர்த்து ஆசாராம் பாபுவுக்கு எதிரான இதே வழக்கில் சாட்சியாக இணைக்கப்பட்டிருந்த ஆசாராமின் சமையல்காரர் உள்பட மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டதும், இதர சாட்சிகள் மீது ஒன்பது முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதும், குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit