திடீரென்று ஏற்பட்ட மின் தடையால் படமே நின்றுபோவது போல் முடிகிறது பாகுபலி! (படங்கள்)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பாகுபலி – இந்தியாவிலேயே மிக அதிக செலவில் (250 கோடி) உருவான பிரம்மாண்டமான படம். உண்மைதான். கதையின் நாயகனும் நாயகியும் இடம் பெறும் காதல் காட்சிகளைத் தவிர, மற்ற பெரும்பாலான காட்சிகளில் பிரமிக்கவைக்கும் பிரம்மாண்டத்தை நிகழ்த்திக்காட்டியிருக்கும் இயக்குனர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் மற்றும் இதன் உருவாக்கத்துக்குக் காரணமான அத்தனை பேரும் நம் பாராட்டுக்குரியவர்கள்.

இதுவரை இந்தியாவில் இப்படி ஒரு பிரம்மாண்டமான படத்தை யாரும் எடுத்ததில்லை. பாகுபலியே அதைத் தொடங்கிவைத்திருக்கிறது. ஒரு நல்ல பொழுதுபோக்குச் சித்திரம். அனைவரும் பார்த்து மகிழலாம். ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு அருமை.

வசனம் சில இடங்களில் கவனிக்க வைக்கிறது. (வீரனுக்கும் அரசனுக்கும் உள்ள வித்தியாசத்தை சிவகாமி – ரம்யா கிருஷ்ணன் – சொல்லும் இடம்). சில இடங்களில் மொக்கையாக உள்ளது.

(நாயகனும் நாயகியும் முதல்முதலாகச் சந்தித்து காதல் வசனம் பேசும் இடத்தில், “நீ பெண்; நான் ஆண்” என்று நாயகன் சொல்லும்போது பார்வையாளர்கள் சிரிக்கிறார்கள்). பொதுவாகவே கூர்மையான வசனங்களுக்கு நம்முடைய வசனகர்த்தாக்கள், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் நாவல்களைப் படித்துப் பயிலலாம். அவருடைய பாத்திரங்கள் கூர்மையான ‘நாக்கு’ படைத்தவை.

download (37)

Epic என்பதற்கு பழைய வரலாற்றைச் சொல்லும் பெரும் காவியம் என்று பொருள். அந்தப் பாணியில் (genre) படம் எடுத்துவிட்டு, சராசரி படங்களில் வரும் சராசரி டூயட்டை போட்டால் அது பொருந்தி வராது. ஷிவ்வும் (பிரபாஸ்) அவந்திகாவும் (தமன்னா) காதலிக்கும் இடங்கள் அனைத்துமே படத்தின் பிரம்மாண்டமான சரித்திரப் பின்னணிக்கும், போர்க்களக் காட்சிகளுக்கும் ஒத்துவராமல் போகிறது.

அதிலும், முதல் டூயட்டில் பார்வையாளர்களில் பாதிப் பேர் அரங்கத்தை விட்டு வெளியே போவதைப் பார்த்தேன். இப்படிப்பட்ட பாடல் காட்சிகள், தெலுங்கு சினிமாவுக்கு வேண்டுமானால் ஒத்துவரலாம்.

ஆனால், தமிழ்ப் பார்வையாளர்கள் இதையெல்லாம் ரசிக்கக்கூடிய மனநிலையிலிருந்து மாறி முதிர்ச்சி அடைந்துவிட்டார்கள். மற்றும் ஒரு வரலாற்றுக் காவியத்தின் இடையே, இப்படி ஒரு மொக்கையான டூயட்டை போட்டால், அது அந்தப் படத்தின் ethos-க்கே முரண்பட்டதாக இருக்கிறது.

படத்தின் மற்றொரு முக்கியமான குறை, படத்தின் முடிவில் முடிவே இல்லை. என்னதான் இது படத்தின் முதல் பாகம் என்றாலும்கூட, அதற்கும் ஒரு பொருத்தமான முடிவைக் கொடுத்திருக்க வேண்டும்.

அப்படியில்லாமல், படம் திடீரென்று திடுதிப்பென்று ‘முடிந்ததும்’ பார்வையாளர்கள் அத்தனை பேரும் ‘என்ன நடந்தது?’ என்ற குழப்பத்தில், இருக்கையிலிருந்து நீண்ட நேரம் எழுந்துகொள்ளவே இல்லை.

ஒரு ராஜா ராணி கதையை, இப்படித் திடீரென்று எந்த நியாயமும் இல்லாமல் முடித்தால், பார்வையாளர்கள் ஏமாந்துதான் போவார்கள். அந்த ஏமாற்றத்தை அரங்கில் மிகத் தெளிவாகக் காண முடிந்தது.

அதிலும் ‘நான் ஈ’ (2012) என்ற சுவாரசியமான படத்தை இயக்கிய ராஜமௌலிக்கு, ஒரு படத்தை எங்கே முடிப்பது என்று தெரியவில்லையா என்பது ஆச்சரியமாக உள்ளது.

Lord of the Rings (2001-03), மூன்று பாகங்களாக வெளிவந்த படம். மொத்தம் ஒன்பதரை மணி நேரம். மூன்று மணி நேரத்தில் முதல் பாகம் முடியும்போது, அது அரைகுறையாக முடியவில்லை.

படத்தின் முதல் பாகம் முடியும்போது, மாய மோதிரத்தின் நெடும் பயணத்தில் ஒரு பகுதி முடிகிறது என்பதை நாம் மிகுந்த மனநிறைவோடு புரிந்துகொண்டு அடுத்த பகுதிக்குத் தயாராகிறோம். அப்படிப்பட்ட நிறைவை பாகுபலி அளிக்கவில்லை. திடீரென்று ஏற்பட்ட மின் தடையால் படம் நின்றுபோவதுபோல் முடிகிறது.

images (8)

கதை ஒன்றும் பெரிதாக இல்லை. எல்லா வரலாற்றுக் கதைகளுக்குமான தலைவிதி ஒன்றுதான். ஆட்சியைப் பிடிக்க அடிதடி, தந்தையை மகன் கொல்வது, சகோதரனை இன்னொரு சகோதரனே போட்டுத் தள்ளுவது… இப்படியாக மகாபாரதத்திலிருந்து மொகலாய அரசக் குடும்பங்கள் வரை – ஏன், இன்றைய ஜனநாயக ‘அரச குடும்பங்கள்’ உள்பட – எல்லாக் கதையும் ஒரே கதைதான். அப்படி ஒரு கதைதான் பாகுபலியும்.

எனவே அதைப்பற்றி சொல்லவேண்டியதில்லை. ஆனால், படத்தைப் பற்றிச் சொல்லவும் அதிகம் இல்லை என்பதுதான் பிரச்னை. அதிலும், பிரம்மாண்டம் என்பதில் இந்தியாவிலேயே முதல்முதலாக சாதனை படைத்திருக்கும் ஒரு வரலாற்றுக் காவியத்தைப் பற்றி எழுதுவதற்கு, இரண்டு வரிக்கு மேல் எதுவும் இல்லை என்றால் அது மிகவும் கவலைக்குரிய விஷயம்.

இது பாகுபலியின் பிரச்னை மட்டும் அல்ல. ஒட்டுமொத்தமாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பிரச்னை என்று தோன்றுகிறது. அதைப்பற்றி விசாரிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

பாகுபலி, 2000-ம் ஆண்டு வெளிவந்த க்ளாடியேட்டர் என்ற ஹாலிவுட் படத்துக்கான இந்திய எதிர்வினை என்று பல விமரிசகர்களும் பார்வையாளர்களும் மகிழ்வுடன் சொல்கிறார்கள்.

நல்லது. க்ளாடியேட்டர் படத்தில் பூதக் கண்ணாடி வைத்துத் தேடினாலும் கிடைக்காத வஸ்து, வரலாறு. மார்க்கஸ் ஔரேலியஸ், அவரது மகன் கமோடஸ் போன்ற பெயர்களும், ஜெர்மானிய ஆதிவாசிகளை ஔரேலியஸின் படை ஒடுக்கியது போன்ற சில சம்பவங்களும் மட்டுமே அதில் வரலாறு; மற்றதெல்லாம் வெறும் ஹாலிவுட் கற்பனை.

அப்படிப்பட்ட ஒரு கற்பனையான ஹாலிவுட் மசாலா படத்தின் ஒவ்வொரு காட்சியிலும், கவிதையும் ஞானமும் மிளிர்ந்துகொண்டிருந்ததை நாம் பார்த்தோம். மேக்ஸிமஸ் என்ற கற்பனைப் பாத்திரத்தின் ஆரம்ப வசனமே ஞானத்தின் ஒளிக்கீற்றாக வீசிச் செல்லும். (What we do in life, echoes in eternity!). இன்னொரு இடம், ஔரேலியஸும் மேக்ஸிமஸும், ஔரேலியஸின் தனியறையில் பேசிக் கொள்ளும் காட்சி –

ஔரேலியஸ்: ஜெர்மானிய ஆதிவாசிகளோடு போரிட்டு வென்ற மேக்ஸிமஸுக்கு – ரோமாபுரியின் மிகப்பெரிய தளபதிக்கு – நான் என்ன பரிசு கொடுக்கட்டும்?

மேக்ஸிமஸ்: என் வீட்டுக்குப் போக அனுமதி தாருங்கள்.

ஔரேலியஸ்: நான் இறந்துகொண்டிருக்கிறேன் மேக்ஸிமஸ். ஒரு மனிதன் தன் முடிவைப் பார்த்துவிட்டான் என்றால், அவன் வாழ்ந்த வாழ்க்கையில் ஏதாவது அர்த்தம் இருக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள விரும்புவான். வருங்காலத்தில் வரலாறு என்னை என்னவென்று பேசும்? தத்துவவாதி என்றா? போர் வீரன் என்றா? கொடுங்கோலன் என்றா? ரோமாபுரியின் பழைய பெருமையை மீட்டுத் தந்த பேரரசன் என்றா? ஆம்; ஒரு காலத்தில் ரோமாபுரி என்றோர் மகத்தான கனவு இருந்தது. இப்போது அதைப்பற்றி நீ சத்தமாகக்கூட பேச முடியாது.

பேசினால், அந்தக் கனவு கலைந்துவிடும். அவ்வளவு பலஹீனமாக இருக்கிறது அது. அதைப்பற்றி வெறுமனே கிசுகிசுக்க மட்டுமே முடியும். வரும் குளிர் காலம்வரைகூடத் தாங்குமா என்று தெரியவில்லை. எனவே மேக்ஸிமஸ், சத்தமாக வேண்டாம்; ரகசியமாகவே பேசுவோம். எனக்கு உன் வீட்டைப் பற்றிச் சொல்.

மேக்ஸிமஸ்: மலை உச்சியில் உள்ள ஒரு எளிமையான வீடு அது. சூரிய ஒளியின் கதகதப்பை வாங்கித் தக்கவைத்துக்கொள்ளும் கல் வீடு. தோட்டத்தில் மூலிகைச் செடிகளின் நறுமணம் பகல் முழுவதும் வீசிக்கொண்டிருக்கும். மாலையில் மல்லிகையின் மணம் காற்றில் தவழ்ந்து வரும்.

வாசலில் ஒரு புன்னை மரம். சுற்றி வர ஆப்பிள், அத்தி, பேரிக்காய் மரங்கள். கன்னங்கரேல் என்ற கறுப்பு மண்… என் மனைவியின் தலைமுடியைப்போல. வீட்டிலிருந்து கீழே இறங்கும்போது தெற்கே திராட்சைக் கொடிகள், வடக்கே ஆலிவ் மரங்கள்…

ஔரேலியஸ்: கடைசியாக நீ எப்போது உன் வீட்டுக்குப் போனாய்?

மேக்ஸிமஸ்: இன்று காலையோடு இரண்டு ஆண்டுகள், 264 தினங்கள் முடிந்திருக்கின்றன அரசே.

ஔரேலியஸ்: உன்னைப் பார்த்துப் பொறாமைப்படுகிறேன் மேக்ஸிமஸ்.

க்ளாடியேட்டர் என்ற காவியத்தை விட்டுவிடுவோம்.

மிகச் சாதாரணமான, வணிகரீதியான ஒரு சராசரிப் படம், 50 Shades of Grey (2015). ஏற்கெனவே நாவலாக வெளிவந்து எல்லோராலும் வாசிக்கப்பட்டு, குப்பை என்று விமரிசிக்கப்பட்ட கதை. அந்த நாவலைப் படிக்காத ஒரு ஆங்கில வாசகரைக்கூட நான் இன்னும் சந்திக்கவில்லை. ஆனால், அத்தனை பேருமே அதைக் குப்பை என்கிறார்கள்.

அதிலிருக்கும் பாலியல் சமாசாரமே அதைப் பிரபலமாக்கிவிட்டது. அந்த நாவல் படமாக்கப்பட்டு சமீபத்தில் வெளிவந்தது. 21 வயது நாயகி அனஸ்தாஸியா, கோடீஸ்வரனான கிறிஸ்டியன் க்ரேவைப் பேட்டி எடுக்கச் செல்கிறாள். அனா, இலக்கியம் படிக்கும் மாணவி.

கிறிஸ்டியன், அவளுடைய நடை உடை பாவனையாலும், வித்தியாசமான அழகினாலும் ஈர்க்கப்பட்டு (அவள் ஒரு கன்னிப் பெண் என்பது பிறகு தெரிய வருகிறது), ‘உனக்குப் பிடித்த நாவலாசிரியர் யார்?’ என்று கேட்கிறான். அவள், தாமஸ் ஹார்டி என்கிறாள். ‘ஓ, உனக்கு ஜேன் ஆஸ்டின் அல்லவா பிடிக்கும் என்று நினைத்தேன்?’ என்கிறான் கிறிஸ்டியன்.

இதுதான் கலை நுணுக்கம் (nuance). ஹாலிவுட்டில் ஒரு வணிகப் படத்தில்கூட இது சாத்தியமாகிறது. ஆனால் தென்னிந்தியாவில், ஒரு மாபெரும் வரலாற்றுக் காவியத்தில்கூட இப்படி நினைத்து ரசிக்கக்கூடிய ஒரு இடம் தேறவில்லை.

கூர்ந்து கவனிக்க வேண்டும். இது வெறும் வசனம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. வசனத்துக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. இது முழுக்க முழுக்க Ethos சம்பந்தப்பட்டது. இந்த வார்த்தைக்கு எனக்குத் தமிழ் வார்த்தை தெரியவில்லை. ஓரளவுக்கு சினிமாவின் பண்பு என்று பொருள் கொள்ளலாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*