இந்தியா – ஜிம்பாவே அணிகளுக்கிடையிலான 2வது மோதல் இன்று!

பிறப்பு : - இறப்பு :

ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள ரஹானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

ஹராரேயில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அதே ஹராரே மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

முதலாவது ஆட்டத்தை எடுத்துக் கொண்டால் முன்னணி வீரர்களின் சொதப்பலால் இந்திய அணி 200 ரன்களை தாண்டுமா? என்பதே கேள்விக்குறியாக தெரிந்தது. அம்பத்தி ராயுடுவின் சதமும் (124 ரன்), ஸ்டூவர்ட் பின்னியின் அரைசதமும் தான் (77 ரன்) இந்திய அணி 250 ரன்களை கடக்க உதவியதுடன் வெற்றிக்கும் வித்திட்டது.

ஆடுகளம் காலையில் பேட்டிங் செய்வதற்கு கடினமாகவும், போக போக எளிதாக இருப்பதாகவும் கேப்டன்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. அதே ஆடுகளத்தில் தான் இன்றைய ஆட்டமும் நடப்பதால் அதை உணர்ந்து விளையாட வேண்டும்.

ஒற்றை இலக்கில் நடையை கட்டிய முரளிவிஜய், ராபின் உத்தப்பா, மனோஜ் திவாரி உள்ளிட்டோர் தவறுகளை திருத்திக்கொண்டு விளையாட முயற்சிப்பார்கள். 4 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒரு நாள் போட்டி அணிக்கு திரும்பிய மூத்த சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இன்றைய ஆட்டத்திலாவது அவர் எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பாரா? என்று பார்க்கலாம். மொத்தத்தில் நமது அணிவீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்தினால் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுவதில் சிரமம் இருக்காது.

ஜிம்பாப்வே அணி, தொடக்க ஆட்டத்தில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது. அந்த அணியின் கேப்டன் சிகும்புரா 104 ரன்களுடன் கடைசி வரை போராடியும் பலன் இல்லாமல் போய் விட்டது.

சிகும்புரா கூறும் போது, ‘இலக்கை நெருங்கியும் தோல்வியை தழுவியது மிகுந்த ஏமாற்றம் அளித்தது. விக்கெட்டுகளை அடுத்தடுத்து மொத்தமாக இழந்ததால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இந்த ஆட்டத்தில் நான் நன்றாக செயல்பட்டு ரன் குவித்தேன். அடுத்த ஆட்டத்தில் இதே போல் விளையாடி அணியின் வெற்றிக்கு உதவுவேன் என்று நம்புகிறேன்’ என்றார்.

தொடரை சமன் செய்யும் முனைப்புடன் ஜிம்பாப்வே வீரர்கள் முழுமூச்சுடன் போராடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டமும் இந்தியாவுக்கு கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அனேகமாக இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது. ஜிம்பாப்வே அணியில் முந்தைய ஆட்டத்தில் காயத்தால் அவதிப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பன்யன்கராவுக்கு பதிலாக உத்செயா இடம் பெறுவார் என்று தெரிகிறது.

இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் டென் கிரிக்கெட் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit