பொறியியலாளர் கோகுல்ராஜின் கொலை செல்போனில் வீடியோ எடுக்கப்பட்டதா???

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (வயது 23). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் கடந்த 24–ந்தேதி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த தொட்டிப்பாளையம் பகுதியில் மர்மமான முறையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.

கோகுல்ராஜ் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது தாய் சித்ரா போலீசில் புகார் செய்தார். மேலும் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மறியல் போராட்டம், உள்ளிருப்பு போராட்டம் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.

இதற்கிடையில் சம்பவத்தன்று திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவிலுக்கு கோகுல்ராஜ் ஒரு இளம்பெண்ணுடன் சாமி கும்பிட சென்றதும், அப்போது அவரை ஒரு கும்பல் மிரட்டி அழைத்து சென்றதும் கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தன. இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

மேலும் ஐகோர்ட்டு உத்தரவுபடி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கோகுல்ராஜ் உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட போது அவர் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது. உடனே போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி கோகுல்ராஜ் கொலை தொடர்பாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர், அவரது மனைவி ஜோதிமணி, சதீஷ்குமார், செல்வராஜ், ரஞ்சித், ஸ்ரீதரன் என்ற ரகு ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்த குமார் (வயது 37) என்பவர் நேற்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரண் அடைந்தார். இவர் சேலம் மாநகர தீரன்சின்னமலை பேரவை பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த ரிக் அதிபரும், தீரன் சின்னமலை பேரவை தலைவருமான யுவராஜ் மற்றும் அருண் உள்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த கொலைக்கு யுவராஜ் தான் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும் அவர் தலைமறைவாகி விட்டார். அவர் தற்போது எங்கே உள்ளார்? என்பது புரியாத புதிராக உள்ளது.

சென்னையில் உள்ள ஒரு முக்கிய பிரமுகர் வீட்டில் அவர் பதுங்கி இருக்கலாம் என்றும், அல்லது வெளி மாநிலத்திற்கு தப்பி சென்றிருக்கலாம் என்றும் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

தனிப்படை போலீசார் அவரை பல்வேறு இடங்களில் தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். யுவராஜ் போலீசில் சிக்கினால் தான் கோகுல்ராஜ் எப்படி கொலை செய்யப்பட்டார்? என்ற முழு விவரம் தெரியவரும்.

சம்பவம் நடந்த அன்று (ஜூன் 23–ந்தேதி) யுவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் அருண், சிவக்குமார் ஆகியோர் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு சென்றனர். அங்கு மலைப்பாதையில் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடிகளிடம் பெயர், முகவரி, ஜாதி பற்றி விசாரித்தனர். பின்னர் அவர்கள் சில காதல் ஜோடிகளை அங்கிருந்து விரட்டி விட்டனர்.

அந்த சமயத்தில் தான் ஓமலூர் என்ஜினீயர் கோகுல்ராஜ் தன்னுடன் படித்த இளம்பெண் ஒருவருடன் கோவிலுக்கு வந்திருந்தார். யுவராஜ் கண்ணில் அவர்கள் தென்பட்டனர். வழக்கம் போல தனது பாணியில் யுவராஜ் அவர்களை மிரட்டி கேட்டபோது 2 பேரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதுவும் அந்த இளம்பெண் தன்னுடைய ஜாதியை சேர்ந்தவர் என்பதை அறிந்த யுவராஜ் ஆத்திரம் அடைந்தார்.

கோகுல்ராஜை அவர் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே யுவராஜ் தங்களது நண்பர்களுக்கு போன் செய்து உடனே மலைக்கோவிலுக்கு வருமாறு கூறினார். உடனடியாக அவர்களும் அங்கு விரைந்து சென்றனர். அவர்களிடம் காரை கொடுத்த யுவராஜ் கோகுல்ராஜை தனியாக அழைத்து வருமாறு கூறினார்.

அவர்களும் கோகுல் ராஜிடம் கோவிலுக்கு வந்த இளம்பெண்ணை மிரட்டி அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கோகுல்ராஜின் கண்களை கட்டி கத்தியை வைத்து மிரட்டி காரில் அழைத்து சென்றனர். அதன்பிறகு தான் கோகுல்ராஜ் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.

போலீசாரிடம் கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் இந்த பகீர் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த கொலையில் நேரடியாக எத்தனை பேர் ஈடுபட்டார்கள்? என்பது தெரியவில்லை. தலைமறைவாக இருக்கும் யுவராஜ் மற்றும் அவரது நண்பர்களை பிடித்தால் தான் இதற்கு விடை கிடைக்கும்.

இதற்கிடையில் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதை கொலைகார கும்பல் செல்போனில் வீடியோ எடுத்ததாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

தீவிரவாதிகள் தங்களுக்கு எதிரானவர்களை கடத்திச் சென்று அவர்களை கொடூரமாக கொலை செய்யும் காட்சியை அவர்கள் வீடியோவில் பதிவு செய்வார்கள். அதேபோன்று தான் கோகுல்ராஜை கொன்ற கொலையாளிகளும் தீவிரவாதிகள் போன்று கொடூர செயலை அரங்கேற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோகுல் ராஜ் தற்கொலை செய்யப் போவதாக ஆடியோ பேச்சு ‘வாட்ஸ் அப்’பில் வெளியானது. இந்த பேச்சை கொலை நடப்பதற்கு முன்பு கொலை கும்பல் கோகுல்ராஜை மிரட்டி அவ்வாறு பேச வைத்ததாக தெரியவந்துள்ளது.

மர்ம கும்பல் அவர் தற்கொலை செய்வது போல நாடகம் ஆடுவதற்காக இப்படி மிரட்டி அவரை பேச வைத்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அவர் எழுதியது போன்ற கடிதமும் சிக்கியது. இதுவும் கொலை கும்பல் அவரை மிரட்டி எழுத வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

போலீசாரால் தேடப்பட்டு வரும் அரசியல் பிரமுகர் யுவராஜ் மீது ஏற்கனவே சங்ககிரி கோர்ட்டில் வழக்குகள் உள்ளது. ‘காதலை பிரிப்போர் சங்கம்’ ஏற்படுத்தி அதன் மூலம் தங்களது ஜாதியை சேர்ந்தவர்கள் வேறு யாரையாவது காதலிப்பது தெரிந்தால் அவர்களை அழைத்து மிரட்டி பிரித்து விடுவதையே யுவராஜ் வாடிக்கையாக கொண்டிருந்தார்.

ரிக் தொழிலிலும் அவர் கொடி கட்டி பறந்தார். சங்ககிரி – திருச்செங்கோடு பிரிவு ரோட்டில் அவருக்கு சொந்தமான அலுவலகம் உள்ளது. தற்போது அந்த அலுவலகம் பூட்டப்பட்டு உள்ளது.

யுவராஜ் சங்ககிரிக்கு வரலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீடு மற்றும் அலுவலகத்தையும் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

யுவராஜை போலீசார் கைது செய்தால் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*