மிருசுவில் படுகொலைகள் – நடந்தது என்ன?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

‘பதினைந்து ஆண்டுகள் என்பது மிகவும் நீண்ட காலம். நீதி கிடைப்பதற்கு நீண்ட காலம் எடுத்துள்ளது. இருப்பினும் இறுதியில் நீதியைப் பெற்றுத் தந்தமைக்காக நாங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம்’ என மிருசுவிலில் இடம்பெற்ற படுகொலையில் கொல்லப்பட்ட கதிரன் ஞானச்சந்திரனின் மனைவியும் ஞானச்சந்திரன் சாந்தனின் தாயுமான ஞானச்சந்திரன் பரமேஸ்வரி தெரிவித்தார்.

19 டிசம்பர் 2000 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள மிருசுவிலில் இடம்பெற்ற சம்பவத்தில் எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஞானச்சந்திரன், சாந்தன், ஞானபாலன் ரவிவீரன், செல்லமுத்து தெய்வகுலசிங்கம், வில்வராஜா பிரதீபன், சின்னையா வில்வராஜா, நடேசு ஜெயச்சந்திரன், மற்றும் வில்வராஜா பிரசாத் ஆகிய எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த எண்மரும் ஐந்து சிறிலங்கா இராணுவ வீரர்களால் படுகொலை செய்யப்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டது. இதில் படுகொலை செய்யப்பட்ட பிரசாத்திற்கு அப்போது ஐந்து வயது மட்டுமே ஆகியிருந்தது.

இப்படுகொலை தொடர்பான வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சிறிலங்கா இராணுவ இளநிலை அதிகாரியான ஆர்.எம்.சுனில் ரத்னாயக்க மீது கடந்த வியாழன் (25) அன்று மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த எண்மரும் மிருசுவிலுள்ள தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற போது சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு மலசலகூடக் குழிக்குள் புதைக்கப்பட்டனர்.

இந்தக் குற்றச்செயலில் ஐந்து இராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் ஒருவருக்கே கடந்த வியாழனன்று கொழும்பு உச்ச நீதிமன்றில் மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இவருக்கு எதிராக 15 குற்றங்கள் முன்வைக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவ வீரர்களான ஆர்.டபிள்யூ.சேனக்க முனசிங்க, எச்.எம்.ஜெயரட்ன, எஸ்.ஏ புஸ்பகுமார, காமினி முனசிங்க ஆகிய நால்வருமே இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது குற்றவாளிகள் ஆவர். இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கத்தக்க சாட்சியங்கள் முன்வைக்கப்படவில்லை.

sunil-rathnayake

பரமேஸ்வரியின் ஐந்து பிள்ளைகளில் தற்போது மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். இவர்களுள் மூன்று பெண்பிள்ளைகளும் திருமணம் செய்துவிட்டனர். இளைய மகன் தற்போது தரம் 09ல் கல்வி கற்கிறார்.

திருமணம் செய்த மூன்று பெண்களுள் ஒருவர் தனது புகுந்த வீட்டினரின் சீதனக் கொடுமையால் தற்போது தாயுடன் வாழ்கிறார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தக் குடும்பத்தைத் தனியாக நின்று பராமரிக்க வேண்டிய முழுப்பொறுப்பும் பரமேஸ்வரிக்கே உள்ளது.

இவர் தனது கணவனையும் தனது மூத்த மகனையும் மிருசுவில் படுகொலையின் போது இழந்து விட்டுத் தனிமரமாகத் தனது குடும்பத்தைச் சுமந்து வருகிறார்.

‘கடந்த பதினைந்து ஆண்டுகளாக எமது வாழ்வு பல்வேறு கடினங்களைச் சந்தித்துள்ளது. எனது குடும்பத்தில் நான் மட்டுமே உழைப்பாளி. வயல்களில் கூலி வேலைக்குச் சென்று நாளொன்றுக்கு ரூ400 மட்டுமே சம்பாதிக்கிறேன். இச்சிறிய வருமானத்திலேயே நான் எனது குடும்பத்தைப் பராமரித்து வருகிறேன்’ என பரமேஸ்வரி தெரிவித்தார்.

வயல் வேலை என்பது நிரந்தரமானதல்ல. அறுவடையைப் பொறுத்தே வயலில் வேலை செய்ய முடியும். வயலில் வேலையில்லாத காலத்தில் விறகுகளை விற்றே பரமேஸ்வரி தனது குடும்பத்தைப் பராமரிக்கிறார்.

தனது கணவனும் மகனும் கொல்லப்பட்ட இடத்திலேயே தற்போது பரமேஸ்வரி வசிக்கிறார். இதில் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடொன்றை அமைப்பதற்கான நிதியில் சிறியதொரு வீடொன்றை பரமேஸ்வரி அமைத்துள்ளார்.

‘ஆரம்பத்தில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று ரூ100,000 நிதியை வழங்கியது’ என பரமேஸ்வரி கூறுகிறார். எனது கணவன் மற்றும் மகன் உட்பட எண்மர் கொல்லப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த பின்னர் தற்போது இது தொடர்பில் நீதி வழங்கப்பட்டுள்ளதாக பரமேஸ்வரி கூறுகிறார்.

‘இப்படுகொலைச் சம்பவம் இடம்பெற்று பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தச் சம்பவம் இடம்பெற்ற போது சிறிலங்கா அரசாங்கத்தின் மீது பல்வேறு அழுத்தங்கள் இடப்பட்டன. ஆனாலும் அப்போதைய அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை’ என இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் வாதிட்ட வழக்கறிஞர் கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்.

இப்படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற பின்னர் பிரதம நீதியரசர் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நீதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்தார். இதில் உச்சநீதிமன்ற நீதிபதிகளான எஸ்.ஐ.இமாம் (தலைவர்), சரத் அம்பேபிற்றிய மற்றும் குமார் எக்கரட்ன ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டனர்.

பின்னர், நீதிபதி அம்பேபிற்றிய படுகொலை செய்யப்பட்டார். ஏனைய நீதிபதிகள் பதவி உயர்த்தப்பட்டதால் இந்த வழக்கை விசாரணை செய்வதில் காலாதாமதம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆரம்பத்தில் வாதிட்ட சட்டவாளர்களில் ஒருவரான ரட்ணவேல் தெரிவித்தார்.

‘இவ்வழக்கு விசாரணையின் ஆரம்ப நாட்களில் இதனை நேரில் பார்த்த சாட்சியக்காரர்களை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்குக் கொண்டு செல்வதில் பல்வேறு தடைகள் காணப்பட்டன. இவர்களைக் கொழும்பில் தங்கவைப்பது உட்பட பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. சாவகச்சேரி நீதிமன்றில் இடம்பெறவிருந்த அடையாள அணிவகுப்பு பருத்தித்துறைக்கு மாற்றப்பட்டது. பின்னர் யுத்தம் தீவிரமடைந்ததால் யாழ்ப்பாணத்தில் இந்த வழக்கு விசாரணை மேலும் காலதாமதமானது’ என ரட்ணவேல் குறிப்பிட்டார்.

இவ்வழக்கில் சாட்சியமளிப்பதற்கு 20-30 பேர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இவர்களுள் மிருசுவிலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் உள்ளடங்குவர்.

‘திருகோணமலையில் 17 தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்ட வழக்கைப் போலன்றி இந்த வழக்கானது இராணுவ மற்றும் இராணுவ காவற்துறை அதிகாரிகளால் மிக ஆழமாக விசாரணை செய்யப்பட்டது. இந்த வழக்கானது இராணுவத்தினருக்கும் தமிழ்ப் பொதுமக்களுக்கும் இடையில் போர்க்காலத்தில் இடம்பெற்ற வழக்கு என்பது மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாகும்’ என ரட்ணவேல் சுட்டிக்காட்டினார்.

மிருசுவிலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என வழக்கறிஞர் ரட்ணவேல், சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியிருந்தார்.

‘நீதிமன்றத் தீர்ப்பென்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அரச இராணுவம் இத்தகைய குற்றச்செயலில் ஈடுபட்டதால் சிறிலங்கா அரசாங்கம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்க வேண்டும் என நாம் கோரியுள்ளோம். நட்ட ஈடு வழங்குவதென்பது அரசாங்கத்தின் தார்மீகக் கடப்பாடாகும்’ என வழக்கறிஞர் ரட்ணவேல் தெரிவித்தார்.

மிருசுவில் படுகொலை வழக்கின் பிரதம நீதிபதியான மேலதிக பொது வழக்கறிஞர் சரத் ஜெயமன்னே இது தொடர்பான தனது கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறார்:

‘2000 ஆம் ஆண்டில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தீவிர யுத்தம் இடம்பெற்றிருந்தது. ஆனால் குறுகிய காலம் யுத்த நிறுத்தம் நடைமுறையிலிருந்தது. அப்போது மிருசுவிலுள்ள தமது காணிகளைப் பார்வையிடுவதற்காக சிலர் உடுப்பிட்டியிலிருந்து மிருசுவிலுக்குச் சென்றிருந்தனர். இவர்கள் வழமையாக தமது காணிகளைப் பார்வையிட்டு விறகுகளை எடுத்து வருவது வழமையான செயலாகும்’

‘அப்பா, ஐந்து மற்றும் 13 வயது இரண்டு பிள்ளைகள், பிறிதொரு தந்தை மற்றும் அவரது 13 வயது மகன், இரண்டு மைத்துனர்கள் ஆகியோர் மிருசுவிலில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கின் பிரதான சாட்சியம் பொன்னுத்துரை மகேஸ்வரன் ஆவார்.

டிசம்பர் 19, 2000 அன்று காலை 10 மணியளவில் இவர்கள் நான்கு ஈருருளிகளில் தமது சொந்த நிலங்களை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். விறகுகளைச் சேகரிப்பதற்காகவே இவர்கள் சென்றிருந்தனர்.

பி.ப 4 மணி, சிறுவன் ஒருவனுக்கு கொய்யாப்பழம் சாப்பிட ஆசையாக இருந்தது. அதனால் இவர்கள் அந்த மரத்திற்கு அருகில் சென்றனர். இதன் பின்னர் இவர்களை இரண்டு இராணுவத்தினர் சூழ்ந்து கொண்டு விசாரித்தனர். ஒருவன் துப்பாக்கி வைத்திருந்தான். மற்றவனின் கையில் கத்தி இருந்தது. இவ்விருவரும் திரும்பிச் சென்று மேலும் 2-3 பேருடன் அந்த இடத்திற்கு வந்தனர். தமது நிலங்களில் விறகு சேகரிப்பதற்காகச் சென்றவர்களில் ஒருவருக்கு ஒரு கை இல்லை. இதனை மிதிவெடி விபத்தின் போது இழந்திருந்தார்’

‘மிதிவெடி விபத்தில் கையொன்றை இழந்திருந்த நபரிடம் ஒரு மணித்தியாலமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இவர்கள் அனைவரது கண்களும் கட்டப்பட்டன. எமக்கு சாட்சியமளித்த பிரதான சாட்சியக்காரரின் கண்கள் கட்டப்பட்ட போது அவர் மயக்கமுற்று விட்டார். இதனால் இவர் மீண்டும் எழுந்திருக்கும் வரை என்ன நடந்ததென்பது தனக்குத் தெரியாது என இவர் கூறினார்.

தன்னை இராணுவத்தினர் மலகுழி நோக்கித் தூக்கிச் செல்வதைத் தான் உணர்ந்ததாகவும் சாட்சியக்காரர் தெரிவித்தார். மலக்குழியின் அருகில் இரண்டு இராணுவ வீரர்கள் நின்றிருந்தனர். மலக்குழியிலிருந்து இராணுவத்தினர் சத்தமிட்டதையும் தன்னால் கேட்க முடிந்ததாக இவர் கூறினார்.

தனக்கு என்ன நடக்கப் போகின்றது என்பதை அறிந்தவுடன் இவர் ஒருவாறு இராணுவத்திடமிருந்து தப்பிச் சென்றார். அப்போது பி.ப ஆறு மணி. இவரது சாரத்தால் இவர் மிக இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தார்’

‘இந்த இராணுவ வீரர்கள் குறிப்பிட்ட ஒரு பிளட்டூனைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் சம்பவம் இடம்பெற்ற தினத்திற்கு முதல்நாளே அந்த இடத்திற்கு வந்திருந்தனர். இந்தப் பிரதேசம் தொடர்பாக அவர்கள் பரிச்சயம் பெற்றிருக்கவில்லை.

இந்த இடம் அப்போது சிறிலங்கா இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த இடத்தில் எழும் எந்தவொரு துப்பாக்கிச் சத்தமும் சந்தேகத்தையே தோற்றுவிக்கும். அவ்வாறானதொரு காலப்பகுதியிலேயே இப்படுகொலை இடம்பெற்றது.

ஆகவே மகேஸ்வரன் இராணுவத்தினரிடமிருந்து தப்பியோடும் போது அவர்கள் மகேஸ்வரனைக் குறிவைத்துச் சுடமுடியவில்லை. மகேஸ்வரனுக்கு அந்த இடம் மிகவும் பரிச்சயமானது. அதனால் அவர் குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி தனது சித்தி வீட்டிற்குத் தப்பிச் சென்றார்.

இவர் அரை நிர்வாணமாகவே அங்கு சென்றிருந்தார். அதனால் சித்தி வீட்டார் பயப்பட்டனர். இவர் முழு விடயத்தையும் அவர்களிடம் தெரிவித்து விட்டு காட்டிற்குள் அன்றிரவைக் கழித்தார்.

இதன்பின்னர் இவர் ஈ.பி.டி.பி அலுவலகத்திற்குச் சென்று நடந்த விடயத்தைத் தெரிவித்தார். இதன் பின்னர் இவரது உடலில் ஏற்பட்ட சிறு காயங்களுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்’

இதனை ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் ஐ.நாவிடம் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்தில் ஐ.நா தலையிட்டது. இது தொடர்பில் மிகத் துரிதமான விசாரணை மேற்கொள்ளுமாறு இராணுவ உயர் கட்டளை அதிகாரி கட்டளையிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக இராணுவக் காவற்துறையினர் மகேஸ்வரனிடம் விசாரணை செய்தனர். ஆனால் இவர்கள் தொடர்பில் மகேஸ்வரன் அச்சப்பட்டார். இறுதியில் தமக்கு ஒத்துழைப்புத் தருமாறு அவர்கள் மகேஸ்வரனை நம்பிக்கை கொள்ளச் செய்தனர்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு மகேஸ்வரன் அழைத்துச் செல்லப்பட்டார். மலசலகூடக் குழிக்கு அருகில் சென்ற பொது அங்கே இரத்தக் கறைகள் இருப்பதை இராணுவ காவற்துறையினர் அடையாளங் கண்டனர். மலசலகூடத்தின் குழிக்குள் அவர்களது உடலம் போடப்பட்டதாக மகேஸ்வரன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மலசலகூடக் குழி திறக்கப்பட்டது. ஆனால் அதற்குள் இறந்த ஆடு மட்டுமே இருந்தது. மகேஸ்வரன் தப்பிச்சென்றதை குற்றவாளிகள் அறிவர்.

அதனால் குற்றவாளிகள் தமது குற்றத்தை மறைப்பதற்காக கொலை செய்யப்பட்ட உடலங்களை அங்கிருந்து அகற்றிவிட்டனர். அதற்குப் பதிலாக இறந்த ஆடும் அதன் இரத்தமுமே அங்கே காணப்பட்டது.

இக்கொலை வழக்கை விசாரணை செய்த இராணுவக் காவற்துறையினரின் தலைமை தொடர்ந்தும் முயற்சி செய்தது. இறுதியில் அந்த இடத்திலிருந்து இராணுவச் சீருடை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சீருடை கஜபா படைப்பிரிவின் சிறப்பு பிளட்டூனுக்குச் சொந்தமானதாகும்.

ஆகவே அவர்கள் இந்த பிளட்டூன் வீரர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். அண்மையில் ஆட்டை அடித்துக் கொன்றது யார் எனக் கேட்ட போது இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளி தான் தானென ஒப்புக்கொண்டார்.

அதன்போது மகேஸ்வரன் உடனடியாகக் குற்றவாளியை இனங்கண்டு கொண்டார். இதன்பின்னர் குற்றவாளி கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது நடந்த விடயங்கள் அனைத்தையும் இராணுவக் காவற்துறையிடம் பிரதான குற்றவாளி ஒப்புவித்தார்.

இதன்பின்னர் பொதுமக்கள் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்ட இடத்தை இராணுவக் காவற்துறையினர் கண்டுபிடித்தனர். இந்த இடம் ஆரம்பத்தில் உடலங்கள் புதைக்கப்பட்ட மலக்குழியிலிருந்து 500 மீற்றர் தூரத்திலிருந்தது. படுகொலை செய்யப்பட்டு நான்காவது நாள் உடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டன.

இந்த வழக்குத் தொடர்பாக இராணுவத் தளபதிக்கு அறிக்கையிடப்பட்டது. இதன் பின்னர் இராணுவத் தளபதி இக்கொலை தொடர்பாக காவற்துறைக்கு அறிவித்தார்.

‘இதனை ஆராய்வதற்கு அவர்கள் முயற்சிக்கவில்லை. இந்த வழக்கானது கொடிகாமம் காவற்துறையிடம் கையளிக்கப்பட்டது. உதவிக் காவற்துறை அதிகாரி தென்னக்கோன், மேஜர் சொய்சா ஆகியோர் இது தொடர்பில் முன்னின்று செயற்பட்டனர்’ என மேலதிக பொது வழக்கறிஞர் ஜெயமன்னே தெரிவித்தார்.

கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் அவர்கள் அணிந்திருந்த உடைகளைக் கொண்டு உறவினர்களால் அடையாளங் காணப்பட்டது. ‘எல்லா உடலங்களின் கழுத்திலும் வெட்டுக் காயங்கள் காணப்பட்டன. இதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே இவ்வாறு வெட்டியிருக்க முடியும்.

முதலில் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிராக பலமான சாட்சியங்கள் காணப்பட்டன. ஆனால் மீதி நால்வரினதும் குற்றங்களை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் கிடைக்கப் பெறவில்லை. இதனால் இந்த வழக்கை ஆராய்ந்த நீதிபதிகளால் ஏனைய நால்வருக்கும் எதிராக தண்டனை வழங்க முடியவில்லை என ஜெயமன்னே குறிப்பிட்டார்.

இதில் குற்றம்சுமத்தப்பட்ட ரத்னாயக்கவால் இராணுவக் காவற்துறையிடமோ அல்லது காவற்துறை அதிகாரிகளிடமோ வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் நீதிமன்றில் சாட்சியமாகப் பயன்படுத்தப்பட முடியாது. இதனால் இந்த வழக்கில் மேலும் இழுபறி ஏற்பட்டது.

இந்த வழக்கை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதாலும் மற்றைய இருவருக்கும் உயர் பதவி வழங்கப்பட்டதாலும் வேறு மூன்று நீதிபதிகளை நியமிக்குமாறு ஜெயமன்னே கொழும்பு உச்சநீதிமன்றில் முறையிட்டிருந்தார்.

‘இந்த வழக்குத் தொடர்பில் காவற்துறை அதிகாரிகளும் இராணுவக் காவற்துறையினரும் சுயாதீன விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதில் எவ்வித தலையீடுகளும் காணப்படவில்லை. சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு எதிராக இராணுவத் தனபதி முறையீடு செய்தார். பிரதான சாட்சியக்காரரான மகேஸ்வரன் கொழும்பிற்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவர் சிங்கள நீதிபதிகளின் முன்னால் தமிழில் சாட்சியமளித்தார். இந்த வழக்கில் நாங்கள் நீதியைப் பெற்றுள்ளோம். இதில் சட்டம் எவ்வித பாரபட்சமுமின்றி தனது பணியை ஆற்றியுள்ளது’ என ஜெயமன்னே மேலும் குறிப்பிட்டார்.

இப்படுகொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஏனைய நான்கு பேரும் விடுவிக்கப்பட்டதன் நோக்கம் என்ன என வினவியபோது, ‘இதில் இரண்டாவதாகக் குற்றம்சுமத்தப்பட்ட நபர் பிளட்டூன் தலைவராக இருந்தார்.

இவர் இந்தச் சம்பவம் இடம்பெற்ற போது பிறிதொரு பயிற்சிநெறியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்திருந்தார். அடையாள அணிவகுப்பில் மகேஸ்வரன் குற்றவாளிகளை அடையாளங் காண்பித்தார்.

மலக்குழியில் இருந்த இரத்தக்கறையானது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அது மிருகம் ஒன்றின் இரத்தமல்ல எனவும் மனிதர்களின் இரத்தம் என்பதும் நிரூபணமானது. இதன் மூலம் மகேஸ்வரன் உண்மையைக் கூறுகின்றார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது’ என்கிறார் மேலதிக பொது வழக்கறிஞர் ஜெயமன்னே.

‘மிருசுவில் படுகொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதானது எனக்கு மிக மகிழ்வைத் தருகிறது. நான் ஒரு சிங்களவன். ஆனால் இந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என நான் போராடினேன். நான் இராணுவத்திற்கு எதிரானவன் எனச் சிலர் கூறினர். ஆனால் இன வேறுபாடு எனக்கு ஒருபோதும் பிரச்சினையாக இருக்காது. நான் எனது பணியை ஆற்றியுள்ளேன்’ என ஜெயமன்னே குறிப்பிட்டார்.

மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் ரத்னாயக்கவிடம் ஏதாவது கூறவிரும்புகிறாரா என வினவப்பட்டது. மரண தண்டனையை எதிர்கொள்கின்ற அளவிற்கு தான் மிக மோசமான குற்றத்தில் ஈடுபடவில்லை என ரட்ணாயக்க பதிலளித்தார்.

இராணுவத்தில் சேவையாற்றிய போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம்களுக்குள் ஊடுருவிச் சென்று பல்வேறு வீரச் செயல்களைப் புரிந்ததாகவும் ஏனைய இராணுவ வீரர்கள் இவற்றைச் செய்வதற்கு அச்சப்படுகின்ற போது கூடத் தான் துணிச்சலாக முன்னேறிச் சென்றதாகவும் ரத்னாயக்க கூறினார்.

அதாவது தனக்கெதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றங்கள் தவறானவை என ரத்னாயக்க நியாயப்படுத்த முயன்றுள்ளார்.

தற்போது 48 வயதாகும் பரமேஸ்வரி இன்று தன் குடும்பத்தைப் பராமரிப்பதற்கு பல்வேறு துன்பங்களைச் சந்திக்கிறார். ‘நான் பல்வேறு பொறுப்புக்களை ஆற்றவேண்டியுள்ளேன். எனது பிள்ளைகளை வளர்த்தெடுப்பதற்காக நான் என்னை இயன்றளவு அர்ப்பணித்துள்ளேன்.

நான் கால்நடைகளை வளர்க்க விரும்புகிறேன். என்னிடம் சிறியதொரு பண்ணை உள்ளது. இதில் மேலும் முதலீடு செய்தால் நீண்ட தூரங்களுக்கு நடந்து சென்று கூலிவேலைகள் செய்யாது வீட்டிலிருந்தவாறே எனது குடும்பத்தை என்னால் பராமரிக்க முடியும் என நம்புகிறேன்’ என பரமேஸ்வரி தெரிவித்தார்.

பரமேஸ்வரியிடம் அவரது கணவன், மகன் உட்பட எட்டு உறவினர்கள் கொல்லப்பட்டதுடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரிக்கு எதிராக மரணதண்டனை வழங்கப்பட்டமை தொடர்பாக வினவியபோது, ‘இக்குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. குறைந்தது ஒரு குற்றவாளிக்காவது மரண தண்டனை வழங்கப்பட்டது மகிழ்வைத் தருகிறது. எனது கணவனும் மகனும் விறகு சேகரிப்பதற்காகத் தான் சென்றார்கள்.

ஆனால் இவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதற்காக கடவுள் தற்போது தண்டனை வழங்கியுள்ளார்’ என பரமேஸ்வரி தெரிவித்தார்.

ஆங்கில மூலம் – சஹ்ரா இம்தியாஸ்
வழிமூலம் – சிலோன் ருடே
மொழியாக்கம் -நித்தியபாரதி

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*