மலாலாவை சுட்ட தலிபான்கள் 8 பேர் ரகசிய விடுதலை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மலாலாவை சுட்ட 8 தலிபான் தீவிரவாதிகளை, சிறையில் அடைத்த சில நாட்களிலேயே பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பெண் உரிமை மற்றும் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்து வந்த மலாலாவை சுட்டுக்கொல்ல முயன்ற 10 தலிபான் தீவிரவாதிகளுக்கு, 25 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.

பாகிஸ்தானின் பெண்கள் உரிமைக்காகப் போராடி வந்த மலாலாவின் செயல்களில் ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள், கடந்த 2012 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி, அவர் பள்ளிக்கூடத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது அவர் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

மலாலா மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். தீவிரவாதிகளின் கொலை முயற்சியில், மலாலா மரணத்தின் விளிம்பு வரை சென்று, பின்னர் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் மாநகரில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் அங்கு பர்மிங்ஹாமில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தொடர்ந்து பெண் கல்விக்காகவும், பெண் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.

தலிபான்களின் தாக்குதலால் அவர் உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். அவரின் பிறந்த நாளான ஜூலை 12 ஆம் தேதியை `மலாலா தினம்`என ஐ.நா. சபை அறிவித்து கௌரவித்துள்ளது. கடந்த ஆண்டு அவருக்கும், இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்திக்கும் அமைதிக்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டது. இதன் மூலம் மிக இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற சாதனையாளர் என்ற பெயரை மலாலா பெற்றுள்ளார்.

இந்நிலையில் மலாலாவை சுட்டுக்கொல்ல முயன்ற வழக்கில் தலிபான் தீவிரவாதிகள் 10 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஜாபர் இக்பால், பிலால், ஷவுக்கத், சல்மான், இஸ்ரருல்லா, ஜாபர் அலி, இர்பான், இசார், அத்னன், இக்ரம் ஆவார்கள். 10 பேர் மீதும் ஸ்வாட்டில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணை முடிவில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் 10 பேர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கருதிய நீதிமன்றம், அனைவருக்கும் 25 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.

ஆனால் மலாலாவை சுட்ட தலிபான் தீவிரவாதிகளை சிறையில் அடைத்த சிலநாட்களிலேயே பாகிஸ்தான் அரசு ரகசியமாக 8 பேரை வெளியே விட்டுள்ளது.அவர்களில் இஸ்ரருல்லா, இசார் உர் ரகுமான் ஆகிய இரண்டு பேர் மட்டும் சிறையிலே உள்ளனர் என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மலாலாவின் மீதான தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டுள்ளது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*