மனிதத்தை தட்டியெழுப்பிய வித்தியாவின் மரணம் சட்டப்புத்தகத்தினையே மறுசீரமைக்குமா?-குமரன்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலகத்தில் நீதியும் நீயாயமும் வல்லமைபொருந்தியவர்களால் வகுக்கப்பட்டது என்பாதாலோ என்னவோ அது ஏழை எழிய மக்களுக்கு எப்போதுமே எட்டாத கனியாகவே உள்ளது வயிற்றுப்பசிக்காக ஒருவன் திருடிவிட்டால் அவனை திருடன் என்று சொல்லி சிறையில் அடைக்கும் நீதிமன்றங்கள்- தமது பரம்பரைகளுக்காக திருடிய திருடிக்கொண்டிருக்கும் எத்தனை மனிதர்களை விடுதலை செய்திருக்கும் விடுதலை செய்துகொண்டிருக்கின்றது.சட்டம் தன் கடமையினை செய்யும் என்று பொதுவாக எல்லோருமே கூறுவதுண்டு ஆனால் அந்த சட்டதிட்டங்கள் எல்லாமே வல்லமை பெருந்தியமனிதர்களுக்கும் வசதிபடைத்த மனிதர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் சாதகமானதாகவே வகுக்கப்பட்டுள்ளது. சட்டப்புத்தகங்களை வரைந்தவர்களே தமது சுயநலத்திற்காக அதில் பல ஓட்டைகளை விட்டுச்சென்றுள்ளனர். சட்டம் என்பது ஒரு இருட்டறை என்று கூறினாலும் அந்த இருட்டறைகளில் இருந்தும் சில பெருச்சாளிகள் நிலத்தைக்குடைந்து தப்பித்துவிடுகின்றன என்பது வேதனையான விடயம்.

கொள்ளையடித்தால் ஆயிரம், கொலைசெய்தால் பத்தாயிரம், கற்பழித்தால் ஒருலட்சம், கடத்திச்சென்றால் பல லட்சம் என நீதிமன்றங்கள் தண்டப்பணங்களை அறவிடுகின்றதே தவிர சரியான தண்டனையினை குற்றவாழிகளுக்கு வழங்குவதில்லை அதனால் இன்று எமது சமூகத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன .எதைச்செய்தாலும் எப்படியேனும் தப்பிவிடலாம் என்றும் என்ன பெரிய சட்டம் அது என்ன செய்துவிடப்போகின்றது என்ற தைரியத்திலும் புதிய புதிய குற்றச்செயல்கள் புதிய புதிய வழிகளிலே நாளாந்தம் எமது சமூகத்தில் தலைதூக்கிக்கொண்டிருக்கின்றது திரைப்படங்களில் வரும் காட்சிகளைப்போல பட்டப்பகலிலேயே நடு வீதிகளிலும் பொது இடங்களிலும் சண்டித்தனங்களும் வாள் வீச்சுக்களும் கலாசார சீர்கேடுகளும் மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் -கொண்டிருக்கின்றது.

சட்டத்தின் மீதும் சட்டத்தினை காப்பாற்றவேண்டிய காவல்த்துறைமீதும் மக்களுக்கு இருந்த நம்பிக்கை வெகுவாக குறைந்து செல்கின்றது, வீதி ஒருங்குக்காக நியமிக்கப்பட காவல்துறை வீதிகளில் நின்று நூறு இருநூறு ஆயிரம் ஐநூறு என்று கைநீட்டி வாங்குவது வீதிகளில் நின்று விபச்சாரம் செய்யும் விபச்சாரிகளைவிட கேவலமான ஒன்று. சட்ட ஒழுங்குமுறைகளை காப்பற்றவேண்டிய காவல்துறை கைநீட்டி காசுவாங்கிய விசுவாசத்திற்காக குற்றவாளிகளை தப்பிச்செல்ல விடுவதால் மக்கள் மத்தியில் காவல்துறைமீது நம்பிக்கை என்பதே இல்லாது போய்விட்டது .வரம்புப்பிரச்சினை என்று நீதிமன்றம் சென்றால் காணியினை விற்று வக்கீலின் கணக்கினை தீர்க்கவேண்டிய நிலை நீதிபதிகளின் இழுத்தடிப்பினாலும் அசட்டுத்தனங்களாலும் நீதிமன்றம் மீது மக்கள் நம்பிக்கை வைப்பதற்கு தயக்கம் கொள்கின்றனர் சாதாரன ஏழை எழிய மக்கள்.

ஒருநாட்டின் சட்டதிட்டங்கள் அனைத்துமே ஏழை எழியமக்களைத்தான் முதலிலே சென்றடையவேண்டும் அப்போதுதான் அது ழுழுமையாக வளர்ச்சியடைந்த ஒரு நாடாக மாற்றம்பெறும் கூலிக்கு கொலையும் கூட்டுக்கொள்ளையும் பணம் என்று சொன்னால் பாவ மன்னிப்பும் இதுதான் இன்றய நீதித்துறையுன் செயற்பாடாக மாறிக்கொண்டிருக்கின்றது சட்டத்தரணிகளின் சாமத்தியத்தினால் மயாணபூமிகள் எல்லாம் மல்லிகைத்தோட்டங்களாக சித்தரிக்கப்பட்டு கொலையாளிகளும் கொள்ளைக்காறர்களும் தப்பித்து செல்கின்றனர் கொலை செய்தவனை விட அதற்கு துணைபோவதும் தூண்டுதல் கொடுப்பதும் முக்கிய குற்றம் என்று சட்டப்புத்தகங்கள் சொல்கின்றன அப்படியாயின் மன்னிக்கமுடியாத கொலையையும் பாலியல் வன்புணர்வையும் செய்த பாவிகளுக்காக நீதிமன்றங்களில் வக்காளத்து வாங்கும் சட்டத்தரணிகளுக்கு என்ன தண்டனை? அநீதி என்று தெரிந்தும் அநீதிக்காக நீதிமன்றங்களுக்குள்ளேயே குரல்கொடுக்கும் இவர்களுக்கு தண்டனை என்ன? குற்றவாளிகளுக்காக கூலிக்கு மாரடிப்பதே இவர்கள் தொழில் என்றால் நீதியும் நியாயமும் சாதாரண வறிய மக்களுக்கு கிடைப்பது எவ்வாறு?சாட்சியங்கள் இல்லை என்றால் சத்தியம் செத்துவிடும் என்ற நிலையில்தான் இன்றய நீதி வகுக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவிலே படுகொலை செய்யப்பட்ட ஒரு பாடசாலைமாணவிக்காக இன்று வடகிழக்கு முழுவதுமே ஆர்ப்பாட்டங்களும் கண்டணப்பேரணிகளும் யாருமே எதிர்பார்க்காத அளவு மேற்கொள்ளப்படுகின்றன.ஆனாலும் எத்தனையோ படுகொலைகளும் பாலியல் வன் கொடுமைகளும் நடைபெற்றபோதெல்லாம் மௌனிகளாக இருந்த மக்கள் எதையும் கைக்கைட்டி வேடிக்கைபார்ப்பதையே வழக்கப்படுத்திக்கொண்டிருக்கும் மக்கள் எங்கோ ஒரு வித்தியா கொல்லபட்டாள் என்று பேசாமல் இருந்து விடுவார்கள் என்ற ஒரு தைரியம் தான் மனிதகுலத்துக்கே ஒவ்வாத இந்த இரக்கமற்ற படுகொலைக்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் .ஆனால் சிலரை சிலநேரம் ஏமாற்றலாம் பலரை பல நேரம் ஏமாற்றலாம் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது என்பது
இப்போது தெளிவாகி இருக்கும்.

இன்று உணர்வற்றவர்களாக இருந்த மக்கள் எல்லோருமே ஒரு ஆக்ரோசம் கொண்டவர்களாக வடக்கு கிழக்கு என்று தமிழர் தாயகம் எங்குமே கொதித்தெழுந்து வீதிகளில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்கின்றனர் குற்றவாளிகளை தூக்கிலே போடும்வரை இவர்களின் போராட்டம் ஓய்ந்துவிடாது ஓய்ந்துவிடவும் கூடாது மாணவசக்தி என்றால் என்ன என்பதனை இப்போது எல்லோருமே அறிந்திருப்பார்கள் வித்தியா என்ற அந்த இளம் செடியின் மரணத்தில் இருந்து ஒற்றுமை என்ற ஒரு விருட்சம் இப்போது உருவாகியுள்ளதைக்கண்டு பூரிப்படைந்தாலும் இது வித்தியாவுடன் வீழ்ந்துவிடக்கூடாது ஒன்றுபட்ட இனமாக ஒடுக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராக கிழர்ந்தெழுந்து தொடர்ந்தும் போராடவேண்டும் மயங்கிக்கிடந்த மனிதத்தை தட்டியெழுப்பிய வித்தியாவின் மரணத்துக்கு சரியான நீதிகிடைக்கும்வரை போராடவேண்டும் குற்றவாளிகளுக்கு பிணை வழங்குவதோ விடுதலை செய்வதோ அல்லது பத்து இருபது வருடங்கள் சிறையில் அடைப்பதோ சரியான தீர்வாக அமையாது தளைத்து வளரவேண்டிய அந்த இளம் செடியை நாசம் செய்த இந்த அரக்கர்களின் மரணக்குழிகளுக்குள் பெண்களுக்கெதிரான வன்முறைகளை தள்ளி மூடிவிடவேண்டும் . கேட்போரற்று கொழுப்பெடுத்து வீதி வீதியாக பெண்களுக்கு அநீதிசெய்யும் அனைவருமே இவர்கள் மரணத்தினைக்கண்டு மனமாற்றம் பெற்ற மனிதர்களாக மாறிவிடவேண்டும் எத்தனையோ வீரர்களையும் தியாகிகளையும் இந்த மண்ணில் இழந்திருக்கின்றோம் எத்தனையோ உத்தமர்கள் அநியாயமாக துடிக்கத்துடிக்க கொல்லப்பட்டார்கள் ஒரு இனத்திற்காக போராடினான் குரல்கொடுத்தான் என்ற ஒரே காரணத்துக்காக வெலிக்கடைச்சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டிருந்த தியாகி குட்டிமணியின் இரண்டு கண்களுமே பிடுங்கப்பட்டு சப்பாத்துக்கால்களால் நசுக்கப்பட்டன இவை எல்லாம் அநீதிக்காக நடைபெற்ற படுகொலைகள் எனவே நியாயத்திற்காகவும் மயக்கநிலையில் இருக்கும் நீதிக்காகவும் இம்முறை வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய அனைவரையும் ஏன் தூக்கிலே போடமுடியாது?

மரணதண்டனைக்கு எதிராக மார்நிமிர்த்தியபடி குரல்கொடுக்கும் சீறீலங்கா அரசு எத்தனை மனிதர்களை அநியாயமாக படுகொலை செய்திருக்கும் கண்முன்னே எத்தனையோ படுகொலைகள் நடைபெற்றபோது கண்டுகொள்ளாத சட்டம் அநீதி இழைப்பவர்களையும் தேசத்துரோகிகளையும் காப்பாற்றுவதிலேயே முக்கியத்துவம் கொடுக்கின்றது அதனால் தான் கொலைகள் கொள்ளைகள் கற்பழிப்புக்கள் ஆட்கடத்தல்கள் குழு மோதல்கள் கள்ளச்சாராயம் விபச்சாரம் என பஞ்சமா பாதகங்களையும் தாண்டி தமிழர் தாயகம் எங்குமே அநீதி தலைவிரித்து கொடும் தாண்டவம் ஆடுகின்றது. மதுபோதையில் ஒருவன் குற்றம் செய்தால் அவன் சுயநினைவுடன் அதனைச்செய்யவில்லை என்று கூறி நீதிமன்றங்கள் விடுதலை செய்வதால்த்தான் இன்று வித்தியாவின் படுகொலைக்கு காரணமான அரக்கர்கள் சிலர் தாம் மதுபோதையில் இருந்ததாகவும் தமக்கு என்ன நடைபெற்றது என்று தெரியவில்லை என்றும் அப்பாவிகளைப்போல கூறுகின்றார்கள் இவ்வாறு கூறினால் தண்டனைகளில் இருந்து தப்பிக்கொள்ளலாம் என்று இவர்களுக்கு யாரேனும் சொல்லிக்கொடுத்தார்களா அல்லது படுகொலைகளையும் ஈனச்செயல்களையும் செய்யும்போது மாட்டிக்கொண்டால் இவ்வாறு சொல்லிதப்பித்துக்கொள்லாம் என்று குற்றவாளிகள் இவ்வாறன செயல்களைத்துணிச்சலுடன் செய்துவருகின்றார்களா என்பது கேழ்விக்குறியாகவே உள்ளது.

உண்மையிலேயே மதுபோதையில் இருப்பவன் சுயநினைவினை இழக்கின்றான் அவன் மது மயக்கத்தில் குற்றச்செயல்களைச்செய்யத்தூண்டப்படுகின்றான் எனவே அவனுக்கு கடுமையான தண்டனைகொடுக்கமுடியாது அவன் அப்பாவி அவன் கொடூரச்செயல்களைச்செய்வதற்கு இந்த மது அரக்கனே முக்கியகாரணம் என்று வக்காளத்து வாங்கும் சட்டத்தரணிகளும் அதனை ஆம் என்று தலையசைக்கும் நீதிமன்றங்களும் ஒன்றைமட்டும் புரிந்துகொள்ளத்தவறிவிட்டன உண்மையிலே மது மயக்கத்தில் இருக்கும் ஒருவன் சுயநினைவினை இழந்திருந்தால் உண்மையாக அவன் காம வெறிகொண்டு வீதியால் போகும் அப்பாவி பெண்களை தேடிச்சென்று எதற்காக கற்பழிக்கவேண்டும்?சுயநினைவினை இழந்தவன் தன் காமப்பசிக்காக தன் உடன்பிறந்த சகோதரியினையோ அல்லது தன்னைப்பெற்ற தாயினையோ தன் இளவயது தங்கையினையோ ஏன் கற்பழிக்கக்கூடாது? சுயநினைவினை இழந்தவன் அவன் அப்பாவி மதுமயக்கத்தில் இருந்தான் என்றெல்லாம் இந்ததேசவிரோத சக்திகளுக்காக வக்காளத்து வாங்கும் அனைவரும் முதலிலே இதனைச்சிந்திக்கவேண்டும் எவளவுதான் குடித்திருந்தாலும் எவளவு போதை தலைக்கு ஏறியிருந்தாலும் இது எனது அக்கா இது எனது தங்கை இது எனது தாய் என்று ஒருவனுக்கு நன்றாக தெரிகின்றது என்றால் அவனை சுயநினைவு இல்லாதவன் என்று எவாறு தண்டனைகளில் இருந்து தப்பிக்கொள்ளவிடமுடியும்?

மதுவைக்குடித்தால் தான் சுயநினைவினை இழந்துவிடுவேன் என்று தெரிந்தும் அதனைக்குடிக்கின்றான் என்றால் அதுவே அவன் செய்யும் முதல்க்குற்றம் அதற்காகவே முதலில் அவனைத்தண்டிக்கவேண்டும் நீதிக்காகவும் நியாயத்திற்காகவும் ஏங்கிக்கொண்டிருக்கும் மக்கள் நலனுக்காக புதிய புதிய சட்டதிட்டங்கள் உருவாக்கப்படவேண்டும்.

நீதித்துறைமீது மக்களுக்கிருக்கும் நம்பிக்கையீனமே சமுகத்தில் மாபெரும் குற்றச்செயல்களுக்கு அத்திவாரமாக அமைகின்றது. என்னதான் குற்றங்களை ஒருவன் செய்தாலும் பாதிக்கப்பட்டவனுக்கான நீதி சட்டத்தரணிகளின் வாதப்பிரதிவாதங்களிலேயே அடங்கியுள்ளது என்றால் இந்த நீதிமன்றத்தின் மீதும் நீதித்துறைமீதும் மிகுந்த வெறுப்பு ஏற்படுகின்றது நீதிமன்றங்களில் சாட்சியங்கள் இல்லை என்றால் சத்தியம் செத்துவிடும் கொலைகாறனுக்காக களமிறங்கும் சட்டத்தரணியின் கெட்டித்தனத்தால் குற்றவாளி சுற்றவாளியாக மாற்றப்படுகின்றான் பாதிக்கப்பட்டவன் கண் முன்னே குற்றவாளி சுதந்திரமாக நடமாடுகின்றான்.

இது எந்தவிதத்தின் நியாயம் சட்டதிட்டங்கள் எல்லாமே வல்லமைபெருந்தியவர்களுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் என்ற எண்ணம் ஏழை எழிய மக்கள் மனங்களில் ஆழமாகப்பதியப்பட்டுவிட்டது. நீதித்துறையிலே மாற்றம் வேண்டும் அது ஏழை எழிய மக்களின் நலனுக்காக உருவாக்கப்படவேண்டும் எனவே வித்தியாவின் மரணம் சட்டப்புத்தகங்களை எல்லாம் தூசுதட்டி புதிய வரலாற்றினை பதிவுசெய்யவேண்டும் புங்குடுதீவில் செய்யப்பட்ட கொடும் செயல் இலங்கைத்தீவின் சட்டப்புத்தகத்தில் மாற்றங்களைக்கொண்டுவரவேண்டும் சட்டப்புத்தகங்களின் உள்ள ஓட்டைகள் அடைக்கப்பட்டு சட்டம் என்ற இருட்டு அறை பெருச்சாளிகள் குடைந்து செல்லமுடியாத அளவு இரும்புக்கவசங்களால் பாதுகாக்கப்படவேண்டும் வித்தியாவின் படுகொலைக்குக்காரணமான அனைவருமே பொது இடத்தில் பொதுமக்களின் மத்தியில் தூக்கிலே தொங்கவிடப்படவேண்டும்,

இலங்கையின் சட்டப்புத்தகத்தில் தூக்குத்தண்டனை இல்லை என்றும் தூக்கிலே போடமுடியாது என்றும் சொல்லும் நீதிபதிகள் எத்தனையோ அப்பாவிகள் நாயைப்போல நடு வீதிகளில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டபோது அதனை எந்த சட்டத்தின் அடிப்படையில் இலங்கை ஆட்சியாளர்கள் செய்தார்கள் என்பதை சிந்தித்துப்பார்க்கவேண்டும் விசச்செடிகளை மண்ணில் வளரவிடுவதால் அதன் விதைகள் பரவி நல்ல நிலங்களையெல்லாம் நாசம் செய்துவிடும் முள் என்று தெரிந்தால் அதை முறித்து விடுவதுதானே வழக்கம் சமூகத்தில் வாழத்தகுதியில்லாத மனிதர்களை இந்த மண்ணிலே வாழ அனுமதிக்கக்கூடாது உயிர் வலி என்ன என்பதைத்தெரியாத இந்த இரக்கமற்ற அரக்கர்களை தூக்கிலே போடுவதே சரியான நீதி.

இவர்களின் மரணத்தைக்கண்டு எத்தனையோ குற்றவாழிகள் மன மாற்றம் பெறுவார்கள் நாளுக்குநாள் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஓரளவேனும் குறைந்துவிடும் வாழவேண்டிய எத்தனையோ நல்ல பட்டதாரிகளையும் படித்த மேதைகளையும் அநியாயமாக வீதிகளிலும் வழிபாட்டுத்தளங்களிலும் வைத்து படுகொலை செய்த ஆட்சியாளர்கள் அநீதியின் மறு வடிவங்களான இந்த அரக்கர்களை தூக்கிலே போட தயங்குவது எதற்க்காக? சட்டப்புத்தகத்தில் தீர்வு இல்லை என்றால் அதனைத்தூக்கிவீசிவிட்டு மக்கள் நலன் சார்ந்த வலுவான சட்டங்களை உருவாக்கிக்கொள்ள ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும். வாழவேண்டிய அந்த மாணவியின் மரணத்தில் இருந்து மனிதம் விழித்துக்கொள்ளவேண்டும் மானிடசமூகம் அனைவரும் வித்தியாவின் படுகொலைக்குக்காரணமான அனைவரையும் தூக்கிலே போடும்வரை தூங்கிவிடக்கூடாது.

வித்தியாவின் மரணம் ஒரு புதிய வரலாற்றினை உருவாக்கட்டும் அதுவரை தொடர்ந்தும் போராடுவோம்……………………….

-குமரன்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*