மே 18:முள்ளிவாய்க்காலில் மக்கள் வெள்ளம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எங்கள் உடன்பிறப்புக்களை, எங்கள் புதல்வர்களை, புதல்விகளை, தாய்மாரை, கர்ப்பிணித் தாய்மாரை, முதியோரை, நோயுற்றோரை, பசித்திருந்தோரை, நடக்க முடியாது இளைத்திருந்தோரை சிங்கள கொலை இயந்திர இராணுவம் ஈவிரக்கமின்றி சுமாராக ஒன்றரை லட்சம் மக்களை முள்ளிவாய்க்காலில் கொன்று குவித்தது.

சுமாராக பத்தாண்டு கால வியட்நாம் யுத்தத்தின் போது மொத்தம் முப்பது லட்சம் வியட்நாமிய மக்கள் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்;. அதன்போது மொத்தம் 58 ஆயிரம் அமெரிக்கப் படையினர்; கொல்லப்பட்டனர்;. அக்காலத்தில் வியட்நாமிய ஜனத்தொகையின் படி சுமாராக 6 வீத மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். (1975 ஆண்டு கணக்கின் படி அன்றைய வியட்நாமிய ஜனத்தொகை சுமாராக 5 கோடியே 25 இலட்சம் ஆகும்).

ஆனால் முள்ளிவாய்க்காலில் ஒரு வருட காலத்தில் சுமாராக ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனா; அரசாங்க பதிவேடுகளின் படி அந்தக் காலகட்டத்தில் வன்னியில் மொத்தம் 4 இலட்சத்து 20 ஆயிரம் பேர் இருந்துள்ளனா; ஆனால் யுத்தம் முடிந்தபோது முள்வேலி முகாம்களில் எஞ்சிய மக்கள் தொகை அரசாங்க கணக்கின் படி 2 இலட்சத்து 70 ஆயிரம் பேர். எனவே இங்கு கணக்கில் இல்லாத ஒன்றரை லட்சம் பேரும் கொல்லப்பட்டோர் ஆவர்.

இந்த கொல்லப்பட்ட மக்களின் தொகையை அங்குள்ள மொத்த மக்கள் தொகையோடு வீதாசரப்படுத்தி பார்த்தால் சுமாராக மூன்றில் ஒரு பங்கினர் அல்லது 30 வீதத்திற்கு மேல் கொல்லப்பட்ட மக்களின் வீதாசாரம் அமைகிறது. அதுவும் ஒருவருடத்தில் இப்படி இந்த வீதாசாரம் காணப்படுகிறது. ஆனால் வியட்நாமில் 6 வீத மக்கள் கொல்லப்பட்டதுடன் அதுவும் பத்தாண்டு கால இடைவெளியில் நிகழ்ந்துள்ளது. அப்படியென்றால் வியட்நாம் யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்கள் தொகையின் வீதாசாரத்தை விடவும் பல மடங்கு முள்ளிவாய்காலில் கொல்லப்பட்டோரின் வீதாசாரம் அமைகிறது.

இப்படிப் கணித்துப் பார்த்தால் எங்களின் மீது புரியப்பட்ட இனப்படுகொலையின் அளவானது உலக வரலாற்றில் பெரிதாகப் பேசப்படும் வியட்நாமில் கொல்லப்பட்ட மக்கள் அளவை விட மிகப்பெரியது என்பதை புரிந்து கொண்டால் எமக்கு ஏற்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் கொடூரத்தை நாம் இலகுவாக புரிந்து கொள்ளலாம்.

 

வியட்நாம் யுத்தம் முடிந்து ஏப்ரல் 30ஆம் தேதியோடு 40 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனாலும் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வியட்நாமில் நிகழ்ந்த நினைவுநாள் உரையின்போது வியட்நாமிய பிரதமர் கோபம் கக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி, கடும் சொற்களைப் பயன்படுத்தி அமெரிக்க இராணுவத்தின் கொலைக்கு எதிராக பேசியிருந்தார்.

முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து 6 ஆண்டுகள் தான் ஆகின்றது. உறைய மறுக்கும் மக்களின் இரத்தம் பாய்ந்த நிலத்தில், அந்த முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் அலையென திரண்டு மரியாதை செலுத்த வேண்டிய பொறுப்பும், அவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடைய அந்த இடங்களில் பிரார்த்தனை செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் பெரிதாக உண்டு.

கொல்லப்பட்ட எங்கள் மக்களுக்காக சர்வதேச விசாரணை வேண்டாம் என பதவியில் இருக்கும் சிறிசேன-ரணில் அரசாங்கம் மறுக்கிறது. ஆனால் தமிழ் மக்களின் வாக்குகளால் பதவிக்கு வந்த இந்த புதிய அரசாங்கம் குறைந்த பட்சம் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக மத கிரியைகளையோ, பிரார்த்தனைகளையோ, மரியாதை செலுத்துவதையோ இலகுவில் தடுக்க முடியாது. ஆதலால் தமிழ் மக்கள் இத்தருணத்தை பயன்படுத்தி முள்ளிவாய்க்காலில் பெரு வெள்ளமென திரண்டு கொல்லப்பட்டவர்களுக்காக முள்ளிவாய்க்கால் நினைவு நாளான மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் ஒன்று கூடி தமது வரலாற்றுக் கடமையை செய்வார்களாக..

நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூர் ஆட்சிசபை உறுப்பினர்கள் என அனைத்து வகை மக்கள் பிரதிநிதிகளும் இப்பணியில் முன்னின்று செயற்படவேண்டியது அவர்களது வரலாற்றுக் கடமையாகும்.

கொல்லப்பட்ட மக்களைச் சார்ந்த மதத் தலைவர்கள், மத குருக்கள், மத போதகர்கள் தத்தம் மத முறைகளுக்கு ஏற்ப கொல்லப்பட்ட மக்களின் ஆன்மா சாந்தியடைய முள்ளிவாய்க்காலில் அன்றைய தினத்தில் ஒன்றுகூடி அம்மக்களுக்காக விசேட மத பிராh;த்தனைகளை புரிவார்களாக.

வட மாகாணசபை உறுப்பினர்கள் திரு.சிவாஜிலிங்கம், திரு.இரவிகரன் மற்றும் பலர் மே 12ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் தீபமேற்றி மரியாதை செய்யும் வைபவத்தை முன்னோடிகளாக நின்று ஆரம்பித்து வைத்துள்ளமை பெரிதும் வரவேற்கத்தகுந்த விடயமாகும். அதேபோல யாழ்பல்கலைக் கழகத்தில் இதே தினத்தில் பல்கலைக் கழக மாணவர்கள் தீபங்களை ஏற்றி முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை ஆரம்பித்து வைத்துள்ளமை கூடவே பெரிதும் வரவேற்றக்கத் தகுந்த வரலாற்று நிகழ்வாகும். எப்போதும் போல யாழ் பல்கலைக் கழகம் தனது முன்மாதிரியை ஆரம்பித்து வைத்துள்ளமை இங்கு சிறப்பாக பராட்டக்கூடிய விடயமாகும்.

 

ஆதலால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும், தமிழ் காங்கிரஸ் கட்சியினரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள தனித் தனி கட்சிகளும் கூட்டாகவும், தனியாகவும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முள்ளிவாய்க்காலில் பெருந்திரளான மக்களுடன் பங்கேற்று முன்நின்று நடத்துவார்கள் என்பது இயல்பாகவே எதிர்ப்பார்க்கக் கூடிய ஒன்றுதான்.

முள்ளிவாய்க்காலில் போதிய குடிநீர் மற்றும் உணவு வசதிகள் இருக்க வாய்ப்பில்லை. ஆதலால் முள்ளிவாய்க்கால் நோக்கி திரளும் மக்கள் ஒவ்வொருவரும் மூன்று லிட்டர்; தண்ணீரும், ஒரு கிலோ உலர்; உணவு மற்றும் சாத்தியமான பழவகைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ மாத்திரைகள் என்பனவற்றை உடன் எடுத்து வருமாறு முன்கூட்டியே மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

மேலும் மக்களின் இத்தகைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், தமிழ்க் காங்கிரசும், சமய சமூக அமைப்புகளும், வர்த்தகர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தத்தம் அளவிற்கேற்றவாறு ஒழுங்குகளை அங்கு மேற்கொள்வாh;கள் என்று எதிர்பார்க்கலாம்.

முள்ளிவாய்க்கால் நினைவு வார அஞ்சலி விடயங்களுக்கு ஊடகங்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானது. சமூகப் பொறுப்புடன் அவர்கள் இதனை ஆற்றுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்பதற்கு இணங்க மக்கள் வெள்ளத்தின் திரட்சி ஒரு தனிப்பெரும் அரசியல் சக்தியாய் உலகின் கண்களில் தெரியும் என்பது உண்மை. இந்த உண்மையை நோக்கி பொறுப்புடன் ஈழத்தமிழ் மக்கள் எல்லா வழியிலும் செயற்பட்டு தம் பங்கையும், பணியையும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தன்று உலகிற்கு முள்ளிவாய்க்காலில் நிருபிப்பார்களாக.

– தமிழ்த் தேசிய சிந்தனையாளன்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*