ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை மேல்முறையீட்டு செய்வதில் இருந்து கர்நாடக அரசை திசை திருப்ப முயற்சி கருணாநிதி குற்றச்சாட்டு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதில் இருந்து கர்நாடக அரசை திசை திரும்புவதற்கான முயற்சி நடக்கிறது என்று கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நீதி நிலைநாட்டப்பட வேண்டும் 


நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா தரப்பினரை விடுதலை செய்த போதிலும், அந்த மேல் முறையீட்டு வழக்கினை அவர் விசாரித்த போது, இடையிடையே அவர் வெளியிட்ட கருத்துகளுக்கும், இறுதியாக அவர் எழுதிய தீர்ப்புக்கும் இடையே ஏராளமான முரண்பாடுகள் இருப்பதை நாடு கண்டது.

ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பதோ, அவர் தண்டனை அனுபவித்திட வேண்டும் என்பதோ நம்முடைய விருப்பமே அல்ல. ஆனால் சட்டத்தின் முன்அனைவரும் சமம் என்பதும், சட்டத்தின் ஆட்சியும் நீதியின் தனிச் சிறப்பான மாண்பும் நிலை நாட்டப்பட வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பும் ஆகும்.

பெரிய தவறு 


நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பு முறையானது தானா? நீதிமன்ற வரலாற்றில் இதுவரை வந்த தீர்ப்புகளில் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் உள்ள குளறுபடிகள், தவறுகள் போல வேறு எந்த தீர்ப்பிலாவது நடந்தது உண்டா? நீதித்துறையைச் சார்ந்த வழக்கறிஞர்கள், நீதிபதிகள் எல்லாம் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வார்களா? பத்து கோடி ரூபாய் என்பதை தவறுதலாக 24 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டு, இந்த 24 கோடி ரூபாயை வருமானமாக எடுத்துக்கொண்டு, ஜெயலலிதா 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பு செய்யவில்லை, வருவாய்க்கு மேல் 2 கோடி ரூபாய்தான் சொத்து சேர்த்தார், 2 கோடி ரூபாய் என்பது அவரது வருவாயில் 8 சதவிகிதம் தான், எனவே அவரை தண்டனையிலிருந்து விடுவிக்கிறேன் என்றுதான் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்திருக்கிறார்.

கூட்டுத்தொகை 24 கோடி ரூபாய் என்று நீதிபதி தவறுதலாக குறிப்பிடாமல், உண்மையான கூட்டுத்தொகையான 10 கோடி ரூபாய் என்று கணக்கெடுத்தால், ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 8 சதவிகிதம் என்பதற்கு பதிலாக 76 சதவிகிதம் என்றாகிறது. அப்போது ஜெயலலிதா தண்டனைக்கு உரியவர் ஆகிறார் அல்லவா? நீதிபதி இவ்வாறு தவறுதலாக கணக்கிட்ட காரணத்தால், ஒரு பெரிய வழக்கில் தண்டனை அளிப்பதற்கு மாறாக, விடுதலை அளித்திருக்கிறார். அது எவ்வளவு பெரிய தவறு?

மேல் முறையீடு 


இந்த வழக்கு எப்படியும் உச்சநீதிமன்றத்திலே மேல் முறையீட்டுக்கு செல்லும் என்ற நிலைமை இருந்த போதிலும், அதைப் பற்றி கவலைப்படாமல் ஜெயலலிதா முதல்–அமைச்சராக பதவியேற்க எண்ணுகிறார்.

மத்திய அரசை ஆளும் பா.ஜ.க.வின் செயல்பாடுகள் பற்றி இந்த தீர்ப்பைத் தொடர்புபடுத்தி சில அய்யப்பாடுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏனென்றால் நீதிபதி குமாரசாமி ஜெயலலிதாவை விடுவித்து தீர்ப்பளித்ததும் இந்திய பிரதமரே அவருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இன்னும் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் வாழ்த்தியிருக்கிறார். நமது ஊரை சேர்ந்த பா.ஜ.க. மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்ததோடு, தமிழக முதல்–அமைச்சராக ஜெயலலிதா வர வேண்டுமென்றும் பேட்டியளித்திருக்கிறார். இவர்களுக்கெல்லாம் மேலாக, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இந்த தீர்ப்புக்கு முன்பாகவே ஜெயலலிதா வீட்டுக்கே சென்று விட்டு வந்திருக்கிறார்.

திசை திருப்ப… 


நீதியைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமது ஜனநாயகத்திலும், அரசியல் சட்டத்திலும் நம்பிக்கை உள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு.

குறிப்பாக இந்த நேரத்தில் கர்நாடக அரசுக்கு உண்டு. ஏனென்றால் அவர்கள் தான் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய முதல் உரிமை பெற்றவர்கள்.

ஆனால் அவர்களையும் திசை திருப்புவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக கூறுகிறார்கள். எனவே அத்தகைய விமர்சனங்களுக்கெல்லாம் இடம் தராமல், கர்நாடக அரசு நீதியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உடனடியாக உச்ச நீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்வதுதான் ஏற்பட்டுள்ள தவறைக் களைவதற்கு வழிவகுக்கும் என்பதால், அதற்கான அறிவிப்பினை செய்ய வேண்டுமென்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*