நெருங்கும் திமுக- தேமுதிக: உதயமாகிறது மெகா கூட்டணி?.. அதிர்ச்சியில் அதிமுக, பாஜக!!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழக சட்டசபை தேர்தலுக்காக தி.மு.க.- தே.மு.தி.க. கூட்டணி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதனால் ஆளும் அண்ணா தி.மு.க.வும் லோக்சபா தேர்தலில் அமைத்தது போல மெகா கூட்டணி அமைக்கலாம் என கனவு காணும் பா.ஜ.க.வும் அதிர்ச்சியடைந்துள்ளன.

தமிழக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரக்கூடும் என கூறப்படுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் திரைமறைவில் கூட்டணி பேரங்களில் மும்முரமாக இருக்கின்றன. தி.மு.க.வைப் பொறுத்தவரையில் ஒரு மெகா கூட்டணி அவசியம் என்ற நிலையில் இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் எப்போதும் நிலையாக இடம்பெற்றிருப்பது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி. அதேபோல் அண்மைக்காலமாக புதிய தமிழகமும் இடம்பெற்று வருகிறது.

இவை இல்லாமல் அண்ணா தி.மு.க, பா.ஜ.க. தவிர்த்த அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியில் கொண்டுவருவதற்கான அனைத்துவித முயற்சிகளையும் அக்கட்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் இடதுசாரிகளோ தே.மு.தி.க, த.மா.கா, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி என பலமான ஒரு கூட்டணியை அமைப்பதில் தீவிரமாக இருக்கிறது. இதற்காக இடதுசாரித் தலைவர்கள் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் அதிரடியாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது வீட்டுக்கே போய் சந்தித்தார். அதேபோல் பல கட்சித் தலைவர்களையும் விஜயகாந்த் சந்தித்தாலும் கருணாநிதியுடனான சந்திப்பும், அதன் பின்னர் கூட்டணி குறித்த பதில்களும் இரு கட்சிகளும் நிச்சயம் கூட்டணி அமைக்கத்தான் போகின்றன என்பதை உறுதிப்படுத்தி வருகின்றன.

தி.மு.க. தலைவர் கருணாநிதியோ, தே.மு.தி.க- தி.மு.க. கூட்டணிதான் தமிழகத்தைக் காப்பாற்றும் என்று வெளிப்படையாகவும் கூறிவருகிறார். இதை விஜயகாந்த் மறுக்காமல் மழுப்பலாகவே பதில் கூறி வருகிறார்.

இப்படி தி.மு.க.வுடன் தே.மு.தி.க. நெருங்கியது ஆளும் அண்ணா தி.மு.க.வை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தங்களுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைந்துவிடக் கூடாது என்பதில் மும்முரமாக இருந்தது அண்ணா தி.மு.க. எதிர்க்கட்சிகள் பல அணிகளாக நின்றால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது அண்ணா தி.மு.க.வின் கணக்கு.

அத்துடன் தி.மு.க.- தே.மு.தி.க. என இரு பெரும் கட்சிகளும் கை கோர்ப்பதால் ஒட்டுமொத்த தமிழக அரசியல் களமே தலைகீழாக மாறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரையில் தனித்தே போட்டி என்று கூறி வருகிறது. இருந்தாலும் அக்கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தற்போது தே.மு.தி.க. வருவது உறுதியாகும் நிலையில் பா.ம.க.வை கழற்றிவிடவே தி.மு.க. நினைக்கும்.

அதே நேரத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், மறுமலர்ச்சி தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி என பிற கட்சிகளையும் இந்த கூட்டணி யோசிக்க வைத்திருக்கிறது என்றே கூறலாம்… ஏற்கெனவே தி.மு.க. அணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம் ஆகியவை நீடிப்பதால் இந்த கட்சிகளும் இணையும் போது நிச்சயம் மெகா கூட்டணியாகத்தான் அமையும்…

லோக்சபா தேர்தலைப் போலவே சட்டசபை தேர்தலிலும் தங்களது தலைமையில் ஒருவலுவான கூட்டணி அமைத்து தமிழகத்தில் காலூன்றி விடலாம் என கணக்குப் போட்ட பாரதிய ஜனதாவோ தி.மு.க.- தே.மு.தி.க. கூட்டணியை நினைத்துக் கூட பார்க்க முடியாத அஜீரணத்தில்தான் இருக்கிறது… இதனால் எப்படியாவது தே.மு.தி.க.வை தங்களது பக்கம் வளைத்துவிடலாம் என தொடர்ந்து கணக்குப் போடுகிறது…. ஆனால் நடைபெறப் போவது சட்டசபை தேர்தல் என்பதால் தி.மு.க. பக்கமே சாயலாம் என விஜயகாந்த் முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுவதால் பா.ஜ.க. அதிர்ச்சியில் இருக்கிறதாம்.. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி உருவானால்தான் தங்களுக்கும் லாபம் என பிற கட்சிகளும் எண்ணுவதால் தமிழக அரசியல் களத்தில் புதிய சந்திப்புகளும் திருப்பங்களும் காத்துகிடக்கின்றன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*