வடக்கு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆனந்த சங்கரி மட்டு. வந்து தமிழரசுக் கட்சியினரை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது; அரியநேத்திரன்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வடமாகாண மக்களால் நிராகரிக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்த சங்கரி மட்டக்களப்பில் வந்து தமிழரசுக் கட்சியினரை விமர்சிப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அவரது கருத்தைக் கேட்பதற்கு மக்கள் தயாராக இல்லாத நிலையில் மட்டக்களப்பிற்கு வந்து 12 பேரை வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பைக் கேவலப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பில் விடுதலை இல்லம் திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், பொ.செல்வராசா, சீ.யோகேஸ்வரன் மாகாண சபை பிரதி அவைத் தலைவர் பிரசன்னா இந்திரகுமார், உறுப்பினர்களான மு.இராஜேஸ்வரன், மா.நடராசா, கே.சிவாஜிலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்!

“புதிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது எங்கள் காணிகள் அபகரிக்கப்படுகின்ற வேலைகள் வெற்றிகரமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. வாகரைப் பிரதேசத்திலே 2500 ஏக்கர் காணியை பிரதியமைச்சராக இருக்கின்ற அமீர் அலி அவர்கள் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்கின்றார்.

அமீர் அலி அவர்கள் அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு எங்களை ஏமாற்ற முடியாது. இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு தடுப்பதற்கான நடவடிக்கையெடுக்கப்படும்.

நாங்கள் அரசாங்கத்தோடு இருக்கின்றோம் கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் இருக்கின்ற காரணத்தினால் அந்த பதவியைப் பாவித்து நாங்கள் நினைப்பது போல் காணிகளைப் பெறலாம் என சிலர் நினைக்கின்றார்கள். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் அனுமதிக்காது தொடர்ச்சியாக காணி அபகரிப்பு நடைபெறுமானால் தொடர்ச்சியாக அதற்காக போராட வேண்டி ஏற்படும் அதுமட்டுமின்றி கிழக்கு மாகாண சபையிலே முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி செய்வதென்பதை நாங்கள் மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். நாங்கள் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு எல்லை நிர்ணயம் தொடர்பாக மிகத் தெழிவாக இருக்கின்றோம்.

சுதந்திர தினமன்று சிறையிலே தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது இளைஞர்களில் குறைந்தது 10 பேரையாவது நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் என்று புதிய அரசாங்கத்திடம் கூறியிருந்தோம். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. ஒவ்வொரு கட்டம் கட்டமாக எங்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்கின்றார்களே தவிர எங்களுக்கு அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரிப்பதற்கு பலர் முயற்சிக்கின்றார்கள். பல்வேறு பெயர்களிலே பல்வேறு கட்சிகள் இங்கு வருகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பை ஓரளவேனும் ஓரம் கட்ட வேண்டும் அவர்களின் விகிதாசாரத்தைக் குறைக்க வேண்டும் பலர் இலக்கியவாதி என்ற போர்வையில் பொன்னாடை போர்த்திக் கொண்டு தமிழ் தேசியத்தைச் சிதைப்பதற்கு மட்டக்களப்பிற்கு வருகின்றார்கள்.

ஐக்கிய தேசிய கட்சி எவ்வாறாவது தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதுகில் குத்தி உடைக்க வேண்டும் என்பதில் திடமாகவிருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் கட்சி எங்களை பிரிக்க வேண்டும் என்பதற்காக பலரை அனுப்பியுள்ளார்கள். இந்த விடயங்களிலிருந்து எவ்வாறு முறியடித்து நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்பது பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் சில பிரச்சினைகள் உள்ளன அவற்றுக்கு மேலாக எங்களை உடைக்க நினைக்கும் சில்லறைகளை நாங்கள் இனங்காண வேண்டும். இந்த சில்லறைகளுக்குப் பின்னால் யார் செல்கிறார்கள் என்பதை இனங்காண வேண்டும்.

வடகிழக்கு மாகாண சபை ஆரம்பித்த காலம் தொடக்கம் கிழக்கு மாகாண சபையில் இருந்து இன்றுவரை தமிழ் தேசியத்துக்கு துரோக இழைக்கும் ஒருவர் மட்டக்களப்பு மாவட்டத்திலே பாராளுமன்ற தேர்தலிலே போட்டியிட இருக்கின்றார். இதற்கான கூட்டங்களை விரைவில் நீங்கள் எதிர்பார்க்கலாம்.

ஆனந்தசங்கரி ஐயா ஐம்பது வருடம் அனுபவம் பெற்றவர் ஒரு சட்டதரணி மக்களை அனைத்துச் செல்லக்கூடிய தலைவர் ஆனால் அவர் மட்டக்களப்பிலே வந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை பற்றி விமர்சித்துள்ளார். நாங்கள் அரசியலுக்கு வந்ததிலிருந்து கட்சியில் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். ஆனால் ஆனந்த சங்கரி ஐயா அவர்கள் உறுதியாக இருக்கின்றாரா? இறுதியாக நடைபெற்ற வட மாகாண சபைத் தேர்தலில் அவரது சொந்த ஊரிலே மக்கள் அவரை நிராகரித்து விட்டார்கள்.

அவ்வாறனவர் மட்டக்களப்பில் வந்து எங்களை விமர்சிக்கின்றார். அவரது அனுபவத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் ஆனால் எங்களை மட்டம் தட்டி அரசியில் செய்வதற்கு அனுமதிக்க மாட்டோம். கிளிநொச்சியில் அவரது கருத்தைக் கேட்பதற்கு மக்கள் தயாராக இல்லாத நிலையில் இங்கு வந்து 12 பேரை வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பைக் கேவலப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க முடியாது.

முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு ஆனந்த சங்கரி ஐயாவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. உண்மையா? இல்லையா? என்பது ஆராயப்பட வேண்டிய விடயம். அவர் தொடர்நது செயற்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 94 காரியாலயங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு திறக்கப்பட்டன. 10 ஆயிரம் ரிசேட்டுகள் கொடுக்கப்பட்டன. மூன்று இலட்சத்து 60 ஆயிரம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அவர்களால் மட்டக்களப்பு மக்களின் மனங்களை கவர முடிந்ததா? தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மூன்று நாட்கள் மக்களை சந்தித்து தமது நிலைப்பாட்டினை கூறினார்கள். ஆகவே மக்கள் ஆடம்பரத்தைப் பார்த்து மயங்கி விடமாட்டார்கள் அவர்கள் உறுதியாக உள்ளார்கள் என எதிர்வரும் தேர்தல்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பலம் சேர்க்க வேண்டும்” என்றார்.

ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்,

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*