டுமினியின் பேட்டும், பந்தும் பேசின! தில்லி “த்ரில்’ வெற்றி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜேபி டுமினி பேட்டிங்கில் 54 ரன்கள் குவித்தும், பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியும் தேர்ந்த ஆல் ரவுண்டராக ஜொலிக்க, ஹைதராபாதுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் தில்லி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் “த்ரில்’ வெற்றி பெற்றது.

இந்த ஆட்டம் விசாகப்பட்டினத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஹைதராபாத் அணியில் டிரென்ட் போல்ட்டுக்குப் பதிலாக டேல் ஸ்டெயின் வாய்ப்பு பெற்றார். டாஸ் வென்ற தில்லி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 1 ரன்னில் ஆட்டமிழக்க, இரண்டாவது விக்கெட்டுக்கு டுமினி, ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். டுமினி சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் நிறைந்தவர் என்றாலும், அவரை விட படு நேர்த்தியாக எவ்வித சிரமும் இன்றி பந்துவீச்சை எதிர்கொண்டார் ஷ்ரேயஸ்.

ஷ்ரேயஸ் மிரட்டல்: குறிப்பாக, பிரவீண் குமார் ஓவரில் அபாரமாக தலா ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசிய அவர், கரண் ஷர்மாவின் சுழற்பந்திலும் சிக்ஸர் பறக்க விட்டார். தனது நேர்த்தியான ஃபுட்வொர்க் மூலம் வேகம், சுழல் என அனைத்து பந்தையும் லாவகமாக எதிர்கொண்ட அவர், கரண் ஷர்மா வீசிய 10-ஆவது ஓவரில் “லாங் ஆன்’ திசையில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் விளாசியது அடடா ரகம்.

யுவராஜ் சோகம்: தொடர்ந்து மிரட்டிய ஷ்ரேயஸ், இமாலய ஸ்கோரைப் பதிவு செய்வார் என எதிர்பார்த்தபோது, கவர் திசையில் இருந்த டேவிட் வார்னரிடம் கேட்ச் கொடுத்து, 60 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த யுவராஜ் சிங், முதல் பந்தில் கொடுத்த கேட்ச்சை ரவி போபரா தவற விட்டார். இதனால் யுவராஜ் கண்டம் தப்பினார். மறுமுனையில் பொறுப்புடன் ஆடிக்கொண்டிருந்த டுமினி, ரவி போபராவின் பந்தில் இரண்டு பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்தார். அதே வேகத்தில் ஸ்டெயின் ஓவரிலும் சிக்ஸர் பறக்க விட்டு அரை சதம் அடித்த டுமினி, அதே ஓவரில் கிளீன் போல்டானார்.

பொறுப்புடன் அடித்து ஆட வேண்டிய சூழலில் யுவராஜ் சிங் பந்தை சிக்ஸருக்குத் தூக்கி அடிக்க, எல்லையில் அதற்கென்றே காத்திருந்த டேவிட் வார்னர் அட்டகாசமாக கேட்ச் செய்தார். ஆக, யுவராஜ் 9 ரன்களில் நடையைக் கட்டினார். அதன்பின் ஏஞ்சலோ மேத்யூஸ் (15 ரன்கள்), கேதர் ஜாதவ் (19 ரன்கள்) இருவரும் ஆட்டமிழக்காமல் தங்கள் பங்குக்கு ரன்கள் குவிக்க, தில்லி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.

நிதான தொடக்கம்: எட்டக்கூடிய இலக்கை நோக்கி களம்புகுந்த ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் – ஷிகர் தவண் ஜோடி சிறந்த தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. முதல் மூன்று ஓவர்களில் பவுண்டரி அடிக்கவில்லை. ஆனால், மேத்யூஸ் வீசிய நான்காவது ஓவரில் தவண் 3 பவுண்டரிகளும், டாம்னிக் முத்துசாமி வீசிய அடுத்த ஓவரில் வார்னரும் 4 பவுண்டரிகளும் அடிக்க ரன் ரேட் உயர்ந்தது. ஆனால், 7-ஆவது ஓவரை வீசவந்த டுமினி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். தவண் (18 ரன்கள்), வார்னர் (28 ரன்கள்) இருவரையும் அதே ஓவரில் வெளியேற்றி திகைக்க வைத்தார்.

அடுத்தடுத்து விக்கெட்: இருப்பினும், லோகேஷ் ராகுல், ரவி போபரா இருவரும் பொறுப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 24 ரன்கள் எடுத்திருந்தபோது ராகுல் வெளியேற, நமன் ஓஜா, போபராவுடன் இணைந்தார். இந்த ஜோடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஓஜா 12 ரன்களில் திருப்தியடைய, ரவி போபரா வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். இதற்கிடையே 17-ஆவது ஓவரை வீச வந்த டுமினி மீண்டும் ஆட்டத்தை தங்கள் வசம் கொண்டு வந்தார்.

அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த போபரா 41 ரன்கள்(30 பந்து), மோர்கன் (1 ரன்) ஆகியோரை அந்த ஓவரில் வெளியேற்ற, ஹைதராபாதின் வெற்றி கேள்விக்குறியானது. இருந்தாலும் இம்ரான் தாஹிர் வீசிய சுழலில் கரண் சர்மா அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து மிரட்டினார். அவருடன் ஆஷிஸ் ரெட்டியும் கை கொடுத்தார்.

திக் திக் திக் நிமிடங்கள்: கடைசி ஓவரில் வெற்றிக்கு பத்து ரன்கள் தேவை. நாதன் கோல்டர் நைல் பந்துவீசினார். இரண்டாவது பந்தில் ஆஷிஸ் ரெட்டி (15 ரன்) ரன் அவுட்டாக, கடைசி இரண்டு பந்தில் ஏழு ரன்கள் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தில் கரண் ஷர்மா “லாங் ஆஃப்’ திசையில் பந்தைத் தூக்கி அடிக்க, அது சிக்ஸர் செல்வது போல இருந்தது. ஆனால், அங்கிருந்த மயங்க் அகர்வால் உஷாராகி, “கால்பந்தில் கோல் கீப்பர் பறந்து பந்தைத் தட்டி விடுவது போல’ பந்தை சிக்ஸருக்குச் செல்ல விடாமல், உள்ளே தள்ளி விட்டார். இதனால், இரண்டு ரன்கள் மட்டுமே கிடைத்தது. அடுத்த பந்தில் கரண் சர்மா (19 ரன்கள்) ஆட்டமிழந்தார்.

திருப்புமுனை ஃபீல்டிங்: ஒருவேளை மயங்க் அகர்வால் அதைத் தடுக்காமல் விட்டிருந்தால், சிக்ஸர் சென்றிருக்கும். ஹைதராபாத் வெற்றி பெற வாய்ப்பிருந்திருக்கும். ஆனால், அந்த சமயோசித ஃபீல்டிங், ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

ஹைதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. தில்லி அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைப் பெற்றது. பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய டுமினி ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit