அகர்வால் – யுவராஜ் அபாரம்: தில்லிக்கு முதல் வெற்றி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக மயங்க் அகர்வால் – யுவராஜ் சிங் ஜோடியின் அபார ஆட்டத்தால் தில்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த இரு அணிகளும் மோதிய ஆட்டம் புணேவில் புதன்கிழமை நடந்தது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக முரளி விஜய்யும், வீரேந்திர சேவாக்கும் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 33 ரன்கள் சேர்த்து இந்த ஜோடி பிரிந்தது. மேத்யூஸ் வீசிய பந்தில் விஜய் 19 ரன்களுடன் (18 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ரித்திமான் சாஹா, சேவாக்குடன் இணைந்தார். இம்ரான் தாஹிர் வீசிய ஒன்பதாவது ஓவரில் சேவாக் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 15 ரன்கள் விளாச அந்த ஓவரில் மட்டும் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.

அடுத்த சில நிமிடங்களில் தில்லி அணிக்கு இரண்டாவது விக்கெட் கிடைத்தது. அமித் மிஸ்ராவின் சுழலில் சாஹா 39 ரன்களுடன் (28 பந்து, 3 சிக்ஸர்) வெளியேறினார். தொடர்ந்து 3-ஆவது விக்கெட்டுக்கு மில்லர் களம்புகுந்தார்.

அதிரடியே தனது பேட்டிங் பாணி என்பதற்கேற்ப சேவாக்கின் ஆட்டம் இல்லை. அவர் பவுண்டரி, சிக்ஸர் விளாசியே தனது ரன்களை உயர்த்துவார். ஆனால் இந்த ஆட்டத்தில் ஓடி ரன் எடுப்பதில் ஆர்வம் காட்டினார். இதனால் ரசிகர்கள் சோர்வடைந்தனர்.

கோட்லர் வீசிய 15-ஆவது ஓவரின் கடைசி பந்தில் சேவாக் கேட்ச் ஆனார். அவர் 41 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் என 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மேக்ஸ்வெல்லின் ரன்குவிப்பு மின்னல் வேகத்தில் இருக்கும் என்று ரசிகர்கள் நம்பும் வேளையில் அவர் தனது விக்கெட்டையும் அதே வேகத்தில் இழந்து வருகிறார். முந்தைய இரண்டு ஆட்டங்களில் முறையே 7,6 என ரன்கள் எடுத்திருந்த மேக்ஸ்வெல், இந்தமுறை 5 பந்தில் 2 சிக்ஸர் உள்பட 15 ரன்களுடன் வெளியேறினார்.

அவரைப் பார்த்து மறுமுனையில் நின்றிருந்த மில்லரும் 5 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.

இதன்பின் கேப்டன் பெய்லியும், அக்ஸர் படேலும் கூட்டணி அமைத்தனர். மிஸ்ராவின் 19-ஆவது ஓவரில் இந்த ஜோடி 19 ரன்கள் விளாசியது. இம்ரான் தாஹிரின் கடைசி ஓவரில் இருவரும் தங்களது விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். பெய்லி 19 ரன்களிலும், அக்ஸர் படேல் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தோல்விக்கு முற்றுப்புள்ளி: இதையடுத்து பேட்டிங் செய்த தில்லி அணியில் தொடக்க வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களிலும், கேப்டன் டுமினி 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரரான மயங்க் அகர்வாலும், யுவராஜ்சிங்கும் வலுவான ஃபார்ட்னர்ஷிப் அமைத்தனர். 3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த அகர்வால், யுவராஜ் இருவரும் அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர்கள் விளாசியதோடு தங்களது அரை சதத்தையும் நிறைவு செய்தனர்.

கடைசி 60 பந்துகளில் அணியின் வெற்றிக்கு 97 ரன்கள் தேவைப்பட்டது.

15,16,17 ஆகிய மூன்று ஓவர்களில் மட்டும் 47 ரன்கள் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டுவந்தனர். நீண்ட நேரம் சவால் அளித்த இந்த இணையை 19-ஆவது ஓவரில் அனுரீத்சிங் வெளியேற்றினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் யுவராஜ்சிங்கும், மூன்றாவது பந்தில் மயங்க் அகர்வாலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். யுவராஜ் 55 ரன்களுடனும் (39 பந்துகள், 5 பவுண்டரி, 3 சிக்ஸர்), அகர்வால் 68 ரன்களுடனும் (48 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்ஸர்) வெளியேறினர்.

பின்னர் வந்த ஜாதவ் 3 ரன்களில் நடையைக் கட்டினார். கடைசியில் மேத்யூஸ் வெற்றி ஷாட் அடித்து தில்லி அணியின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 19.5 ஓவர்களில் தில்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தியது.

ஆட்டநாயகனாக அகர்வால் தேர்வானார்.

களத்துக்கு வெளியே…

சிறிய பவுண்டரி எல்லைகள், ரன்கள் குவிப்பதற்கு சாதகமாக ஃபீல்டிங்கில் கட்டுப்பாடு என கடந்த உலகக் கோப்பையில் அனைத்து வேகப் பந்துவீச்சாளர்களும் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக கடைசி பத்து ஓவர்கள் நிலைமை மிகவும் மோசம். அதிகப்படியான ஆட்டங்களில் பங்கேற்பது வேகப் பந்துவீச்சாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏராளமான ஆட்டங்களில் ஆடும்போது உடற்தகுதி, வேகம், திறமை ஆகியவற்றை கட்டுக்குள் வைத்திருப்பது கடினம்.

மைக்கேல் ஹோல்டிங், மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் வீரர்.

“”கடந்த ஆட்டத்தில் எங்களுக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை.

தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னைக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் எங்களின் வியூகத்தை மாற்ற வேண்டியுள்ளது”

கீரான் பொல்லார்டு, மும்பை இந்தியன்ஸ் வீரர்.

“”மூன்று ஆட்டங்களில் நாங்கள் தோற்றுள்ளோம். சில விஷயங்களில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. அவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம். ஒரு விஷயம் எங்களுக்கு தடையாக உள்ளது. அதனை நாங்கள் கடந்து செல்ல வேண்டும்.

பேட்டிங்கிலோ அல்லது பந்துவீச்சிலோ குறைபாடு உள்ளது. அது நம்பிக்கை சார்ந்த விஷயம். எங்கள் அணி வீரர்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டியுள்ளது”

ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் கேப்டன்.

ஐபிஎல் தொடரில் இருந்து ஆரோன் ஃபின்ச் விலகல்?

மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஆரோன் ஃபின்ச் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார். இதையடுத்து 10 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் காயம் காரணமாக வெளியேறினார். மருத்துவப் பரிசோதனையில் காயம் குணமடைய சிறிது நாள்களாகும் என்பதால் அவர், ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலக இருப்பதாகத் தெரிகிறது.

“தற்போதைய சூழலில் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி விட்டதாகவேத் தெரிகிறது. பரிசோதனை முடிவுகளைப் பார்க்கும்போது முற்றிலும் சேதமடைந்திருப்பதாகவே உள்ளது’ என்று சுட்டுரையில் ஃபின்ச் குறிப்பிட்டுள்ளார். ஆரோன் ஃபின்ச் மூன்று ஆட்டங்களில் முறையே 5,8, 10 ரன்களே குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுருக்கமான ஸ்கோர்

பஞ்சாப் 165/7

சேவாக் 47

ரித்திமான் சாஹா 39

தில்லி 169/5

மயங்க் அகர்வால் 68

யுவராஜ் சிங் 55

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*