பெங்களூரை எளிதாக வீழ்த்தியது ஹைதராபாத்

பிறப்பு : - இறப்பு :

பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டேவிட் வார்னர், ஷிகர் தவண் அரை சதம் அடித்து உதவ, ஹைதராபாத் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயில், விராட் கோலி ஜோடி களமிறங்கியது. டிரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே கிறிஸ் கெயில் சிக்ஸர் அடித்து அமர்க்களப்படுத்தினார். இது ஐபிஎல் வரலாற்றில் அவர் அடிக்கும் 200-ஆவது சிக்ஸர்.

கெயில் அவுட்: தன் பங்குக்கு விராட் கோலி, நியூஸிலாந்தின் போல்ட் வீசிய நான்காவது ஓவரில் “லாங் ஆன்’ திசையில் சிக்ஸர் அடித்தார். பிரவீண் குமார் வீசிய அடுத்த ஓவரில் திருப்புமுனை. பெரிதும் அலட்டாமல் கெயில் சிக்ஸர் அடிக்க முயல, அதை ஆஷிஸ் ரெட்டி அழகாக கேட்ச் பிடித்தார். இதனால் கெயில் 21 ரன்களில் (16 பந்து) பெவிலியன் திரும்பினார்.

அதன்பின் கோலி, தினேஷ் கார்த்திக் ஜோடி நிதானமாக ரன் குவித்தது. இதற்கிடையே “தினேஷ் கார்த்திக்குக்கு எதற்கு ரூ.12 கோடி கொடுத்தார்கள். அவர் எடுக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் கொள்முதல் விலை மிக மிக அதிகம்’ என சுட்டுரையில் ஒரு ரசிகர் பதிவிட்டார். இதை மெய்ப்பிக்கும் வகையில் இருந்தது அவரது ஆட்டம். ஆம், கரண் ஷர்மா பந்தை தினேஷ் கார்த்திக், மண்டியிட்டு சிக்ஸர் அடிக்க முயன்று, கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

டி வில்லியர்ஸ் அதிரடி: டி வில்லியர்ஸ் களம்புகுந்ததுமே உற்சாகமாகினர் பெங்களூரு ரசிகர்கள். அதற்கேற்ப அவரும் ரவி போபரா பந்தில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்து உற்சாகமானார். ஆனால், அதே ஓவரில் விராட் கோலி (41 ரன்கள்) கிளீன் போல்டாகி அதிர்ச்சியளித்தார். அடுத்த பந்தில் மன்தீப் சிங்கை டேவிட் வார்னர் அற்புதமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்து அனுப்பி வைத்தார்.

ஆனால், என்ன நடந்தாலும் தனது ஆட்டத்தை மாற்றாமல் ஆடினார் டி வில்லியர்ஸ். ஆஷிஸ் ரெட்டி வீசிய 16-ஆவது ஓவரில் ஸ்வீப் மூலம் டீப் பேக்வார்ட் ஸ்கொயர் லெக் திசையில் டி வில்லியர்ஸ் சிக்ஸர் அடிக்க, அதே ஓவரில் யார்க்கராக வந்த பந்தைத் தடுக்க முயன்றபோது டேரன் சமி (6 ரன்கள்) ஸ்டெம்பைப் பறிகொடுத்தார்.

அடுத்தடுத்து விக்கெட்: அடுத்து, டி வில்லியர்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார் சீன் அபோட். நேரம் செல்லச் செல்ல ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் டிரென்ட் போல்ட் வீசிய 19-ஆவது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அடித்த டி வில்லியர்ஸ், அடுத்த பந்தை தூக்கி அடித்து, ஷிகர் தவணிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். டி வில்லியர்ஸ் 46 ரன்களில் (28 பந்து) வெளியேற, அடுத்த பந்தில் சீன் அபோட்டும் (14 ரன்) சிக்கினார். கடைசிக்கு முந்தைய பந்தில் பந்தில் ஹர்ஷா படேலையும் (2 ரன்) பெவிலியன் அனுப்பி, ஒரே ஓவரில் மூன்று வீக்கெட் வீழ்த்தி அசத்தினார் போல்ட். இதன்பின் வந்தவர்கள் அடுத்தடுத்து நடையைக் கட்ட, வலுவான பேட்டிங் வரிசையைப் பெற்றிருந்த பெங்களூரு 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் எடுத்தது.

வார்னர் அதிரடி: அடுத்து, ஹைதராபாத் அணிக்கு ஷிகர் தவண், டேவிட் வார்னர் இருவரும் அருமையான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தனர். ஆரம்பத்தில் இருந்தே இருவரும் அடிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக, வார்னரின் ஆட்டத்தில் அனல் கிளம்பியது. பாரபட்சமின்றி அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்திலும் பவுண்டரியும், சிக்ஸரும் பறந்தன. இதனால் அவர் 24 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இது ஐபிஎல் தொரில் அவர் அடிக்கும் 18-ஆவது அரை சதம். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர், ஒரு வழியாக யுஸ்வேந்திரா சஹல் பந்தில் விக்கெட்டை இழந்தார். வார்னர் 57 ரன்களில் (27 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்ஸர்) அடித்து, வெற்றியை எளிதாக்கிச் சென்றார். ஆனால், சஹல் வீசிய அடுத்த ஓவரில் கேன் வில்லியம்சன் (5 ரன்கள்) ஆட்டமிழக்க நேரிட்டது.

சுலப வெற்றி: அடுத்து லோகேஷ் ராகுல், தவண் ஜோடி பொறுமையாக இலக்கை நோக்கி முன்னேறியது. சொந்த மண்ணை சாதகமாகப் பயன்படுத்தி ராகுல் நங்கூரம் பாய்ச்ச, கடைசி நேரத்தில் ஷிகர் தவண் அதிரடிக்கு மாறினார். இந்த ஜோடியைப் பிரிக்க வழியே இன்றி திணறினர் பெங்களூரு பந்துவீச்சாளர்கள். இதனால் 17.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி பெற்றது. ஷிகர் தவண் 50 ரன்களுடனும், லோகேஷ் ராகுல் 44 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆட்ட நாயகனாக டேவிட் வார்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வலுவான பேட்டிங் வரிசையைப் பெற்றுள்ள பெங்களூரு பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவு ஜொலிக்காததால், ஆட்டத்திலும் விறுவிறுப்பு இல்லை.

சுருக்கமான ஸ்கோர்

பெங்களூரு 166

விராட் கோலி 41

டி வில்லியர்ஸ் 46

போல்ட் 3வி/36ரன்

ஹைதராபாத் 172/2

டேவிட் வார்னர் 57

ஷிகர் தவண் 50*

கே.எல்.ராகுல் 44*

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit