மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்: தோற்றாலும் ஹர்பஜன் நாயகன்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஐபிஎல் தொடரில், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஜார்ஜ் பெய்லியின் அதிரடியும், பந்து வீச்சாளர்களின் தேர்ந்த பங்களிப்பும் பஞ்சாப் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது.

பெய்லி ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், 24 பந்துகளில் 64 ரன்கள் விளாசி மும்பை அணியின் வெற்றிக்காகப் போராடிய ஹர்பஜன்தான் ஆட்ட நாயகனுக்குரிய அந்தஸ்துடன் நடத்தப்பட்டார்.

டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முரளி விஜய் உடன் இணைந்து தொடக்க வீரராகக் களமிறங்கிய வீரேந்தர் சேவாக், இந்த முறை பொறுப்புணர்ந்து ஆட்டத்தைத் தொடங்கினார். இருந்தாலும், தனது வழக்கமான அதிரடியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

வினய் குமார் வீசிய 3-ஆவது ஓவரில் சிக்ஸர், இரண்டு பவுண்டரி என ஆட்டத்தை ஆரம்பித்த சேவாக், “யார்க்கர்’ புகழ் மலிங்கா ஓவரையும் விட்டு வைக்காமல் இரண்டு பவுண்டரி அடித்தார். சேவாக் இன்று இமாலய ஸ்கோர் அடிப்பார் என ரசிகர்கள் உற்சாகமாக, ஹர்பஜன் பந்தில் பொல்லாட்டுவிடம் கேட்ச் கொடுத்து, 36 ரன்கள் (19 பந்து) நடையைக் கட்டினார்.

மற்றொரு அவசரப் பேர்வழியான மேக்ஸ்வெல் (6 ரன்கள்) பவுண்டரி அடித்த கையோடு, சிக்ஸர் அடிக்கிறேன் என “டீப் மிட் விக்கெட்’ திசையில் இருந்த அம்பாதி ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பொறுப்புடன் ஆடிக் கொண்டிருந்த முரளி விஜய் தன் பங்குக்கு 35 ரன்களுடன் திருப்திபட்டுக் கொண்டார்.

பெய்லி அரைசதம்: இதன்பின் மில்லரும், கேப்டன் பெய்லியும் 4-ஆவது விக்கெட்டுக்கு கைகோர்த்தனர். நடுவரிசையில் இணைந்த இந்த ஜோடி விக்கெட் சரிவை தடுத்தது. அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர் விளாசிய மில்லர்-பெய்லி ஜோடி அணியின் ஸ்கோர் 134-ஆக இருந்தபோது பிரிந்தது. மில்லர் 24 ரன்களுடனும் (22 பந்து 3 பவுண்டரி), அவரைத் தொடர்ந்து ரிஷி தவண் 6 ரன்களிலும் வெளியேறினர்.

இதற்கிடையே ஜான்சனுடன் இணைந்து சீரான இடைவெளியில் சிக்ஸரும், பவுண்டரிகளுமாக விளாசினார் கேப்டன் ஜார்ஜ் பெய்லி. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது. பெய்லி 61 ரன்களுடனும் (32 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்ஸர்), ஜான்சன் 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ரோஹித் அவுட்: மும்பை அணிக்கு தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய கேப்டன் ரோஹித் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே, சந்தீப் சர்மா பந்தில் எல்பிடபுள்யூ முறையில் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். ஒன் டவுன் இறங்கிய ஆதித்யா தாரே 7 ரன்களிலும், தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச் 8 ரன்களிலும், கோரி ஆன்டர்சன் 8 ரன்களிலும் அணி வகுக்க, மும்பை ரசிகர்கள் விரக்தியடைந்தனர். பொல்லார்டுவும், ராயுடுவும் சிறிது நேரம் போராடிப் பார்த்தனர். ஆனால், மிச்செல் ஜான்சனின் நேர்த்தியான பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அம்பாதி ராயுடு பெவிலியன் திரும்பினார்.

நிசப்தம்: மறுமுனையில் மும்பை அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த பொல்லார்டு 20 ரன்களில் வெளியேற வான்கடே மைதானம் ஒரு வித நிசப்த நிலைக்கு வந்தது. ரிக்கி பாண்டிங் உள்பட மும்பை அணியின் பெஞ்சில் இருந்த ரசிகர்கள் இறுக்கமான மனநிலையில் இருந்தார்.

எல்லோரும் எப்போது ஆட்டம் முடியும் என பார்த்துக் கொண்டிருந்த வேளையில், ரிஷி தவண் வீசிய 15-ஆவது ஓவரில் ஹர்பஜன் மூன்று பவுண்டரிகளும், சுசித் ஒரு பவுண்டரியும் அடித்தனர். ஜான்சன் வீசிய அடுத்த ஓவரில் சுசித், ஹர்பஜன் இருவரும் தலா ஒரு சிக்ஸர் விளாசினர். இருந்தாலும், 24 பந்துகளில் 82 ரன்கள் தேவை என்பதால் என்ன அடித்தாலும், வெற்றி கடினம் என்ற மனநிலையே நீடித்தது.

ஹாட்ரிக் சிக்ஸர்: அந்த சமயத்தில்தான் அனுரீத் சிங் பந்தில் லாங் ஆன், டீப் மிட் விக்கெட் திசைகளில், அட, அட, அட என மூன்று (ஹாட்ரிக்) சிக்ஸர்களை பறக்க விட்டு, மும்பை ரசிகர்களை நிம்மிதப் பெருமூச்சு விட வைத்தார் ஹர்பஜன். இணக்கமான சூழல் மாறி தோற்றாலும் நல்லதொரு ஆட்டத்தைப் பார்த்த திருப்திக்கு ரசிகர்களைக் கொண்டு வந்த ஹர்பஜன், ரிஷி தவண் ஓவரையும் விட்டு வைக்காமல் பந்தை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் அனுப்பி வைக்க, மும்பை ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

சுசித் அதிரடி: இதற்கிடையே அக்ஷர் படேல் வீசிய 19-ஆவது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என தன்னையும் கவனிக்க வைத்தார் சுசித். கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை. இருவரும் இருக்கும்

ஃபார்மைப் பார்த்தால், “ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக….’ என்பது போன்றதொரு சாதனை நிகழுமா என எதிர்பார்ப்பு எகிறியது. பஞ்சாப் கேப்டன் ஜார்ஜ் பெய்லிக்குத்தான் எவ்வளவு நம்பிக்கை. மீண்டும், அனுரீத் சிங் கையில் பந்தைக் கொடுத்தார். ஆனால், இந்த முறை அவர் “வள்ளலாக’ மாறவில்லை. மாறாக, கடைசிக்கு முந்தைய பந்தில் ஹர்பஜன் விக்கெட்டைக் கைப்பற்றினார். 24 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் விளாசிய ஹர்பஜன், பெவிலியன் திரும்பும்போது பெய்லி உள்ளிட்ட பஞ்சாப் வீரர்கள் கை கொடுத்து பாராட்டினர். மும்பை ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டினர். அடுத்த பந்தில் மேட்ச் முடிந்தது.

மும்பை 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஜார்ஜ் பெய்லி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதல் மும்பை வீரர்: ஹர்பஜன் 19 பந்துகளில் 53 ரன்களை அடித்து, ஐபிஎல் தொடரில் அதி விரைவில் அரை சதம் அடித்த முதல் மும்பை வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*