அதெப்படி தே.மு.தி.க. எம்.எல்.ஏக்களை தொடர்ந்து சஸ்பென்ட் செய்யலாம்?: கொந்தளிக்கும் கருணாநிதி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் மேலும் 10 நாட்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகச் சட்டப் பேரவையில் 31-3-2015 அன்று பேரவைத் தலைவர் ஓர் அறிவிப்பினைச் செய்திருக்கிறார். என்ன அறிவிப்பு தெரியுமா? உரிமை மீறல் குற்றத்திற்குள்ளான தே.மு.தி.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆறு பேரை அடுத்து நடைபெறவுள்ள மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும் நீண்ட தொடர் முழுவதும், அதற்குப் பிறகு அடுத்த கூட்டத் தொடர் தொடங்கி பத்து நாட்களுக்கும் பேரவையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தடைவிதிக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார். இந்த முடிவினை எதிர்த்து கழகத்தின் சார்பில் தம்பி மு.க. ஸ்டாலினும், மார்க்சிஸ்ட் சார்பில் சவுந்தரராஜனும், காங்கிரஸ் சார்பில் பிரின்சும், இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் ஆறுமுகமும், மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லாவும், பார்வர்டு பிளாக் சார்பில் கதிரவனும், புதிய தமிழகம் சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமியும் என அனைத்து எதிர்க் கட்சியினரும் கேட்டுக்கொண்டும், பேரவைத் தலைவர் அதனைப் பிடிவாதமாக ஏற்கவில்லை.

தேமுதிக உறுப்பினர்கள் மீது இந்தப் பெரிய கடுந் தண்டனைக்கு, அவர்கள் இழைத்த குற்றம் தான் என்ன? ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்ற போது, 19-2-2015 அன்று ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் பேசுகையில், “சட்ட மன்றப் பேரவையில் அனுமதி சீட்டு வாங்கி விட்டு ஒரு சிலர் அவைக்கு வருவதே இல்லை. அதில் ஒருவர் முதியவர். மற்றொருவர் சிட்டிசன் – “சிட்டிசன்” என்றால் குடி மகன்” என்று பேசினார். தே.மு.தி.க. உறுப்பினர்கள், “குடி மகன் என்ற வார்த்தையை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென்றார்கள். அவை முன்னவரான நத்தம் விசுவநாதன் குடி மகன் என்று யாரையும் குறிப்பிட்டுப் பேச வில்லை என்றார். பின்னர் ஆளுநர் உரையில் பேசிய தேமுதிக உறுப்பினர், மோகன்ராஜ்,ஜெயலலிதாவைப் பற்றி ஒரு வார்த்தையை உச்சரித்த நிலையில், முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் உட்பட அதிமுக வினர் அனைவரும் ஒரு சேர எழுந்து எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி, ஜெயலலிதாவைப் பற்றித் தேமுதிக உறுப்பினர் குறிப்பிட்ட வார்த்தையை அவைக் குறிப்பிலிருந்து நீக்கியதோடு, அவரையும் வெளியேற்ற பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவையிலே குழப்பமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. உடனே பேரவைத் தலைவர் தேமுதிக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றினார். பின்னர் நத்தம் விசுவநாதன் தேமுதிக உறுப்பினர்கள் அனைவரையும், அந்தக் கூட்டத் தொடர் முழுவதும் நீக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட தேமுதிக கொறடா சந்திரகுமார் உட்பட அனைவரையும் அடுத்த கூட்டத் தொடர் முழுவதும் நீக்க வேண்டும் என்றும்,உரிமைக் குழுவுக்கு அதனை அனுப்ப வேண்டுமென்றும் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.

தி.மு. கழகச் சட்டமன்றக் குழுத் தலைவர், தம்பி மு.க. ஸ்டாலின் எழுந்து, “அடுத்த கூட்டத் தொடர் வரை நீக்கம் என்பதைக் குறைக்க வேண்டும்” என்றார். பின்னர் நத்தம் விசுவநாதன், தேமுதிக உறுப்பினர்களை இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடர் முழுவதும் நீக்கி வைக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டு வந்தார். இதற்குப் பிறகும் தேமுதிக உறுப்பினர்கள் மீது அவை உரிமை மீறல் கொண்டு வரப்பட்டது. உரிமைக் குழுவில் தேமுதிக உறுப்பினர்கள் ஆறு பேர் மீது உரிமை மீறல் பிரச்சினை எழுப்பப்பட்ட போது, கழகத்தின் சார்பில் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த தம்பி கம்பம் ராமகிருஷ்ணன் இதுவரை வழங்கப்பட்ட தண்டனையே போதும், இனிமேலும் தண்டிக்க வேண்டாம் என்று கூறியகருத்துகளை ஏற்காமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி 31-3-2015 அன்று பேரவையில் தேமுதிக உறுப்பினர்கள் ஆறு பேரும், அடுத்த கூட்டம் தொடங்கி பத்து நாட்களுக்கு அவை நடவடிக்கைகளில் இருந்து நீக்கப் படுவதாகவும், அதுவரை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தையும், சலுகைகளையும் பெற இயலாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் அவையிலிருந்து இவ்வாறு வெளியேற்றுவது என்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு 22-7-2014 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் ஓர் அறிவிப்பினைச் செய்தார். அந்த அறிவிப்பில் தி.மு. கழக உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்து கொண்டு இருப்பதாகச் சொல்லி, நான்காவது முறையும் வெளியேற்றப்பட்டதால், தி.மு.க. உறுப்பினர்கள் அந்தக் கூட்டத் தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள இயலாது என்று ஆணை பிறப்பித்தார். தி.மு.கழக உறுப்பினர்கள் உண்மையிலேயே அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தார்களா? சட்டப்பேரவை என்பது ஜனநாயக முறைப்படி இயங்க வேண்டிய ஒரு மன்றம். அங்கே ஆளுங்கட்சி உறுப்பினர்கள் – அமைச்சர்கள் – முதலமைச்சர் என்றால் தாங்கள் விரும்பியவாறு எதை வேண்டு மென்றாலும் ஜனநாயக மரபுகளைப் பற்றிககவலைப்படாமல் விமர்சிக்கலாம். ஆனால் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைத்தையும் கேட்டுக் கொண்டு அடக்கமாக இருக்க வேண்டும் என்றால் அதற்குப் பெயர் ஜனநாயக மன்றமா? அ.தி.மு.க. 2011இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே – 16-8-2011 அன்று கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று, அந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரில் மேலும் கலந்து கொள்வது சரியாக இருக்காதென்று முடிவெடுக்கப்பட்டதோடு, 425-8-2011 அன்று சென்னையில் “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு” என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நானும், கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு உரையாற்றினோம்.

அதுபோலவே 2012ஆம் ஆண்டிலும் சட்டப் பேரவையில் அ.தி.மு.க. அமைச்சர்களும், உறுப்பினர்களும் தி.மு. கழகத்தைப் பண்பாடு சிறிதுமின்றித்தாக்கிப் பேசுவதையே தொடர்ந்து கடைப் பிடித்த காரணத்தால், அந்த ஆண்டும் 25-4-2012 அன்று “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு” என்ற தலைப்பிலே சென்னையிலும், மாவட்டத் தலை நகரங்களிலும் கூட்டங்களை நடத்தி மக்கள் முன்னால் நம்முடைய கருத்துகளைத் தெரிவித்தோம். 2013ஆம் ஆண்டில் பேரவைத் தலைவர் அவர்கள், கழக உறுப்பினர்களைகூட்டத் தொடர் முழுவதிலும் கலந்து கொள்ள அனுமதி மறுத்த காரணத்தால், 24-4-2013 அன்று திருவான்மியூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு” என்ற தலைப்பில் நானும், கழகப் பொதுச் செயலாளரும், பொருளாளரும், துணைப் பொதுச் செயலாளரும் கலந்துகொண்டோம்.

2014ஆம் ஆண்டிலும் அதே நிலைமை தான். தி.மு. கழகத்தைப் பொறுத்து இந்த நிலை என்றால், 2012ஆம் ஆண்டிலேயே அவையின் எதிர்க்கட்சித் தலைவர் மீது அவசர அவசரமாக உரிமைப் பிரச்சினைகொண்டு வந்து, அவருக்கு வழங்கப்பட்ட கார், போலீஸ் பாதுகாப்பு போன்றவற்றைக் கூட அனுமதிக்காமல், அவரையும் அப்போது அவைக்கு வராமல் செய்து அவமதித்தார்கள். இவைகள் எல்லாம் அ.தி.மு.க. பேரவையில் காட்டிய பெருந்தன்மை! அதே நேரத்தில் தி.மு.கழக ஆட்சியில் ஜனநாயக மரபுகளையும், பண்பாட்டையும் காத்திட எவ்வாறு நடந்து கொண்டோம் என்பதற்கு இரண்டொரு உதாரணங்கள் கூறட்டுமா? 2007ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழகச் சட்டப் பேரவையில் சபாநாயகர் மீதே ஒரு தொப்பி வீசப்பட்டு, அவர் மேஜையையே திசை திரும்புகின்ற அளவுக்கு கடுமையான செயலில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அந்தக் கூட்டத் தொடர் முழுவதும் நீக்கம் செய்யப்பட்டார்கள்.

சபாநாயகர் மீது தொப்பியை வீசிய அதிமுக உறுப்பினர் போஸ் அவர்களை ஆறு மாதங்களுக்கு நீக்கி வைக்க வேண்டுமென்று முதலில் தீர்மானிக்கப்பட்ட போதிலும், அப்போது முதல் அமைச்சராக இருந்த நான் கேட்டுக் கொண்டதின் பேரில், சுமார் பதினைந்து நாட்களுக்கு மட்டும் அதாவது அந்தக் கூட்டத் தொடரில் நான்கு நாட்களும்,அதற்கடுத்த கூட்டத் தொடரில் 10 நாட்களும் நீக்கம் என்ற வகையில் தண்டனையைக் குறைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 7-1-2011 அன்று தி.மு. கழக ஆட்சியில் ஆளுநர் உரையாற்றிய போது, அதிமுக உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டு, வெளியேற்ற வந்த அவைக்காவலர்களைக் கடுமையாகத் தாக்கினார்கள்.

அதிலே ஒருவர், அவைக் காவலர்களை எட்டி உதைத்து, தொப்பிகளை பறித்து அவர்கள் முகத்திலேயே அடித்தார். அந்தப் புகைப்படங்கள் எல்லாம் ஏடுகளிலே அப்போதே வெளி வந்தன. ஆளுநர் உரையாற்றிய போது அத்துமீறிச் செயல்பட்ட அதிமுக உறுப்பினர்கள் ஒன்பது பேரை மாதக் கணக்கிலோ, ஆண்டுக் கணக்கிலோ அல்ல; அந்தத்தொடர் முழுவதும் நீக்கம் செய்து பேரவைத் தலைவர் திரு. இரா. ஆவுடையப்பன் உத்தரவிட்டார். அப்போதும் முதல் அமைச்சராக இருந்த நான் மறுநாள் பேரவையில் கூறும்போது, “வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் அவைக்கு வந்து ஒத்துழைக்க வேண்டுமென்று அண்ணா வழியிலே நடைபெறுகின்ற இன்றைய தி.மு. கழக அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று கேட்டுக் கொண்டேன்.

13-11-2008 அன்று தி.மு. கழக ஆட்சியில் நான் அவையிலே இல்லாத நேரத்தில் – பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள் என்ற செய்தியினை அறிந்து – “அவர்கள் மின்சார வாரிய விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்றுஅக்கறையோடு இருந்தார்களே, வெளியேற்றப்பட்டு விட்ட காரணத்தால், அந்த விவாதத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுமே” என்று எண்ணி – நானே எதிர்க்கட்சித் துணைத் தலைவருடன் தொலைபேசியிலே பேசிட முயற்சித்து – அது கிடைக்காத காரணத்தால் – ஆளுங்கட்சியைச் சேர்ந்த தம்பிகள் மு.க. ஸ்டாலின், துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், கே.என். நேரு ஆகிய அமைச்சர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு -திர்க்கட்சித் தலைவரின் அறைக்கே சென்று அ.தி.மு.க. வினரைச் சமாதானம் செய்து மின்சாரம் பற்றிய விவாதத்திலே கலந்து கொள்ள வாருங்கள் என்று ழைக்கச் செய்தேன்.

ஆனால் என்ன காரணத்தாலோ அவர்கள் அவைக்குவரவும் இல்லை. மின்சார விவாதத்திலே கலந்து கொள்ளவும் இல்லை. அ.தி.மு.க. ஆட்சியிலே ஜனநாயகம் எப்படிப் புறக்கணிக்கப்படுகிறது என்பதையும், கழக ஆட்சியில் எப்படி கண்ணும்கருத்துமாகக் கட்டிக் காக்கப்பட்டது என்பதையும் ஒருசில உதாரணங்களின் மூலமாக சுட்டிக் காட்டியிருப்பதன் நோக்கம், முக்கிய எதிர்க் கட்சி இல்லாமல் பேரவையை நடத்துவது ஜனநாயக முரண் என்பதை உணர்ந்து இனியாவது அ.தி.மு.க. மனம் திருந்தி, பெருந்தன்மையோடு தே.மு.தி.க. உறுப்பினர்கள் மீதான தண்டனையைக் குறைத்து, தங்களுக்கும் பேரவை நாகரிகத்தைப் போற்றிடத் தெரியும் என்பதை நிரூபித்துக் கொள்ள முன்வருவார்களா என்பதற்காகத் தான்!”

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*