சென்னை மெட்ரோ ரெயில் சேவை; ஒரு வாரத்தில் பாதுகாப்பு ஆணையர் சான்றிதழ்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரப்பணியை ஒரு வாரத்தில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து முடித்து சான்றிதழ் வழங்க இருப்பதாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.

மெட்ரோ ரெயில் சேவை

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை பணிகள் நடந்து வருகிறது. வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரை 22.50 கிலோ மீட்டர் வரையிலும் 2-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த திட்டத்துக்கு தேவையான ரூ.14 ஆயிரத்து 600 கோடி நிதியை மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் வழங்கி வருகிறது. இதில் சுரங்கப்பாதையில் 19 ரெயில் நிலையங்கள் உயர்த்தப்பட்ட பாதையில் 13 ரெயில் நிலையங்கள் என 32 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.

பயணிகள் ஆர்வம்

மெட்ரோ ரெயில் சேவைக்கான ரெயில்கள், பிரேசில் நாட்டில் உள்ள ‘அல்ஸ்டாம்’ ரெயில் பெட்டி தயாரிக்கும் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படுகிறது. ரூ.1,471 கோடியில் 42 ரெயில்களுக்கு தலா 4 பெட்டிகள் வீதம் 168 பெட்டிகள் வாங்க இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. 9 ரெயில்கள் பிரேசில் நாட்டில் இருந்தும் 33 ரெயில்கள் ஆந்திரா மாநிலம் தடா ஸ்ரீசிட்டியில் பெறவும் அனுப்பவும் திட்டமிடப்பட்டது.

அதன்படி பிரேசிலில் இருந்து கப்பல் மூலம் 9 ரெயில்களும், ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் இருந்து 12 ரெயில்களும் கோயம்பேடு பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரப்பாதையில் அதிவேக சோதனைகள் உள்பட பல்வேறு கட்ட சோதனைகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் பயணிகள் சேவை எப்போது தொடங்கப்படும்? என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

பாதுகாப்பு ஆணையர் வருகை

சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் பணிகளை திட்டமிட்ட காலத்தில் முடிப்பதற்காக பணிகள் விரைவாக நடந்து வருகிறது. குறிப்பாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான பணிகள் முற்றிலுமாக நிறைவடைந்துவிட்டன. இந்த மார்க்கத்தில் உள்ள கோயம்பேடு, கோயம்பேடு பஸ்நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளன.

இதனை தொடர்ந்து இந்த பாதையில் பயணிகள் ரெயிலை இயக்குவதற்காக பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து சான்றிதழை தர உள்ளார். அந்த சான்றிதழை பெறுவதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளோம். இது தொடர்பான ஆவணங்கள் பெங்களூரில் உள்ள பாதுகாப்பு ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதனை அவர் பார்வையிட்டு ஓரிரு நாட்களில் சென்னைக்கு வர உள்ளனர். இங்கு ஒரு வாரம் தங்கியிருந்து ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவார். அதற்கு பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலும். ஆய்வின் போது, பாதுகாப்பு ஆணையர் குழுவினர் சில மாற்றங்களை செய்ய அறிவுறுத்தினால் அதனை செய்து தந்த பின்னர் தான் சான்றிதழை பெற முடியும். அதற்கு பிறகு முறையாக மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதலை பெற்று பயணிகள் சேவை தொடங்கப்படும்.

டிக்கெட் கட்டணம்

சென்னையில் அனைத்து மெட்ரோ ரெயில் பணிகளும் திட்டமிட்ட காலத்தில் முடிக்கப்படும். மார்ச் 1-ந்தேதி நிலவரப்படி சுரங்கப்பாதை பணிகள் 73 சதவீதம் நிறைவடைந்துள்ளன. பறக்கும்பாதையில் திருமங்கலம் முதல் பரங்கிமலை வரை 23 ஆயிரத்து 235 மீட்டருக்கு தண்டவாளப் பணிகள் நிறைவடைந்துள்ளன. சின்னமலை, மீனம்பாக்கம், விமான நிலையம் ஆகிய 3 ரெயில் நிலையங்களுக்கான கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துவிட்டன.

திருமங்கலம் சுரங்க ரெயில் நிலைய பணிகளும் முடிவடைந்துள்ளன. கோயம்பேடு – ஆலந்தூரை தொடர்ந்து கோயம்பேடு- திருமங்கலம் – ஷெனாய் நகர் வழியாக எழும்பூர் வரை சுரங்கப்பாதை பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. சென்னையின் இதயப்பகுதியான அண்ணாசாலையிலும் திட்டமிட்டப்படி சுரங்கப்பாதைப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கோயம்பேட்டில் 26 ஹெக்டேர் நிலப்பரப்பில் ரூ.198.10 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள மெட்ரோ ரெயில் பணிமனையும் நிறைவு கட்டத்தை எட்டி வருகிறது. டிக்கெட் கட்டணம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ஆணையர் சான்றிதழ் அளித்த பின்னர் ஓரிரு நாட்களில் டிக்கெட் கட்டணத்தையும் மாநில அரசு இறுதி செய்து அறிவிக்கும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit