உடன்குடி மின் திட்ட பணிகள் விரைவில் தொடங்கும்; நத்தம் விஸ்வநாதன் பதி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உடன்குடி மின் திட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்று கருணாநிதி புகாருக்கு நத்தம் விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் ரா.விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உடன்குடி மின்திட்டம்

“உடன்குடி மின் திட்டத்தை தாமதித்ததற்கும்-ரத்து செய்ததற்கும்; விசாரணைக் கமிஷன் அமைக்கத் தயாரா?” என தலைப்பிட்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை 18.3.2015 அன்று வெளியிட்டுள்ளார். இந்த அரசின் மீது அபாண்டமாக பழி சுமத்துவதற்காகவே இந்த அறிக்கையை கருணாநிதி வெளியிட்டுள்ளார். தனது அறிக்கையின் முதல் பத்தியில் கருணாநிதி, உடன்குடி மின்திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெற்று நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து, 22.2.2009 அன்று ‘உடன்குடி பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்’ நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது என்று கூறியுள்ளார்.

கருணாநிதி கூறியுள்ள தகவல்களில் அடிக்கல் நாட்டு விழா பற்றிய தகவல் மட்டுமே உண்மை. நிலம் கையகப்படுத்தப்பட்டது என்பதும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறப்பட்டது என்பதும் வடிகட்டிய பொய். கருணாநிதி முதல் பத்தியில் கூறியுள்ளது போல் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்துவிட்டன என்றால், 2013-ம் ஆண்டுக்குப் பின்னர் எதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட வேண்டும்?

உடன்குடி அனல் மின் திட்டம் அமைப்பதற்காக பாரத மிகுமின் நிறுவனமும், தமிழ்நாடு மின் வாரியமும், 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தி.மு.க. ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு உடன்குடி மின் கழகம் என்னும் நிறுவனம் 26.12.2008 அன்று ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியின் இறுதி வரை, அதாவது, 2011-ம் ஆண்டு மே மாதம் வரை, ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் உடன்குடி திட்டம் தொடர்பாக எந்தவித பணிகளும் நடைபெறவில்லை.

விளக்க தயாரா?

எந்தப்பணியையும் செய்யாமல், அடிக்கல் நாட்டி விட்டாலே, திட்டம் துவங்கப்பட்டதாக கருணாநிதி தனது ஆட்சி காலத்தில், தன்னையும் ஏமாற்றிக் கொண்டு. தமிழக மக்களையும் ஏமாற்றியுள்ளார். உடன்குடி அனல் மின் நிலையம் போன்றே, தூத்துக்குடி நான்காம் நிலை 2 ஜ் 500 மெகாவாட் மின் நிலையம் அமைக்கப்படுவதாக 2007-ம் ஆண்டு அறிவித்து மின்சார வாரிய பொன்விழா மேடையில் அடிக்கல்லையும் கருணாநிதி நாட்டினார். அதன் பின்னர், அந்தத் திட்டத்திற்கு தெரிவு செய்த நிலத்தை மின்வாரியம் ஏன் பயன்படுத்தவில்லை? மின்வாரியத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க வழிவகை செய்தது ஏன்? என்பதை கருணாநிதி விளக்கத் தயாரா?

உடன்குடி மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு எந்த வித வேலையையும் 5 ஆண்டு காலமாக பாரத மின்மிகு நிலையம் மேற்கொள்ளாத நிலையில் 24.2.2012 அன்று ஜெயலலிதா, தமிழ்நாடு மின்சார வாரியமே மாநில அரசின் திட்டமாக இதனைச் செயல்படுத்தும் என அறிவித்தார்.

அவசர தேவை

அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதற்காகத் தான் உடன்குடி திட்டத்தில் தாமதம் ஏற்படுவதாக கற்பனையான குற்றச்சாட்டை கருணாநிதி கூறியுள்ளார். அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் போட்டவரே கருணாநிதி தான். அதாவது, ஜி.எம்.ஆர். நிறுவனத்துடன் 12.9.1996 அன்றும், பி.பி.என். நிறுவனத்துடன் 3.1.1997 அன்றும், மதுரை பவர் நிறுவனத்துடன் 21.5.1998 அன்றும், சாமல்பட்டி நிறுவனத்துடன் 22.5.1998 அன்றும் தி.மு.க. ஆட்சியில் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவை தான், தனியார் உற்பத்தி செய்யும் அதிக விலை மின்சார நிறுவனங்கள் ஆகும்.

தி.மு.க. ஆட்சிக் காலமான 2006-2007 முதல் 2010-2011 வரை ஐந்தாண்டு காலத்தில் மேற்கண்ட தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து 20,308 மில்லியன் யூனிட் மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 2011-12 முதல் 2014-15 (டிசம்பர்) வரை மூன்றேமுக்கால் வருட காலத்தில் 11,065 மில்லியன் யூனிட் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. அதாவது தி.மு.க. ஆட்சிக்காலத்தில் வாங்கியதில் சுமார் பாதி அளவே அதுவும் அவசரத்தேவையை முன்னிட்டு வாங்கப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சியில்…

அதுமட்டுமல்லாது, குறுகிய கால அடிப்படையில் வாங்கப்படும் மின்சாரத்தைப் பொறுத்த வரையில், தி.மு.க. ஆட்சிக்காலமான பிப்ரவரி 2008-லிருந்து மின்சாரம் வெளி மாநிலங்களிலிருந்தும், மார்ச் 2009-லிருந்து தமிழகத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்தும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் வெளிமாநிலங்களிலிருந்து ரூ.4.93 என்ற குறைந்த விலையிலேயே ஒப்பந்தம் செய்யப்பட்டு மின்சாரம் பெறப்பட்டு வருகிறது.

அதேபோல், தமிழகத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்து தற்போது யூனிட் ஒன்றுக்கு ரூ.5.50 என்று கொள்முதல் செய்யப்படுகிறது. யூனிட் ஒன்றுக்கு ரூ.5.50 என்ற வீதத்தில் மூன்று ஆண்டுகளாக அதே விலையில் தான் தற்போதும் கொள்முதல் செய்யப்படுகின்றது. ஆனால், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரத்தின் சராசரி விலை 6.70 ரூபாய் ஆகும். வெளி மாநிலங்களிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூபாய் 9.05 வீதம் அதிக விலை கொடுத்து மின்சாரம் தி.மு.க. அரசால் வாங்கப்பட்டுள்ளது.

விரைவில் தொடங்கும்

மேலும், மின் பரிமாற்ற வர்த்தக நிறுவனம் மூலம் 5,261 மில்லியன் யூனிட் வாங்கப்பட்டது. அதிக பட்சமாக யூனிட் ஒன்றுக்கு 15.22 ரூபாய் என்ற அளவில் கூட தி.மு.க. ஆட்சியில் மின் பரிமாற்ற வர்த்தக நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது.

இப்படி, மிக அதிக விலை கொடுத்து தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கியது தி.மு.க. ஆட்சியில் தான்.

உடன்குடி திட்டத்திற்கு நிலக்கரி கையாளும் சுய சார்பு துறைமுகம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் 19.3.2015 அன்று திறக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும். உடன்குடி நிலை-1 (2 ஜ் 660) திட்டத்திற்கான புதிய ஒப்பந்தப்புள்ளிகள் விரைவில் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

ஏமாளிகள் அல்ல…

எனவே அ.தி.மு.க. அரசு மீது வீண் பழி சுமத்தி அறிக்கை வெளியிடுவதன் மூலம் மின்சாரம் தொடர்பாக தமிழக மக்களுக்கு தி.மு.க. இழைத்த வஞ்சனையை தமிழக மக்கள் மறந்து விடுவார்கள் என்று கருணாநிதி நினைக்கிறார். இந்த ஏமாற்று பேச்சுகள் மூலமும், அறிக்கைகள் மூலமும், தி.மு.க.வின் துரோகத்தை மறந்து விடவோ, மன்னித்து விடவோ தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.

இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*