ஸ்ரீரங்கம் கோவிலில் மேலும் ரகசிய அறைகள் இருக்கிறதா? தோண்டும் பணி 2-வது நாளாக தீவிரம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ஸ்ரீரங்கம் கோவிலில் பாதாள அறைகள் கண்டுபிடிக்கப்பட்டதைத்தொடர்ந்து அங்கு மேலும் ரகசிய அறைகள் இருக்கிறதா? என கண்டறிய நேற்று 2-வது நாளாக தோண்டும் பணி தீவிரம் அடைந்து உள்ளது.

ஸ்ரீரங்கம் கோவிலில் புனரமைப்பு

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலில் சிதிலமடைந்த கட்டிடங்களை சீரமைப்பது, வர்ணம் தீட்டுவது உள்பட பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனை சென்னையை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சி துறை ஆலோசகர் நரசிம்மன் மேற்பார்வையிட்டு வருகிறார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் ஆண்டாள் கீழ் உள்வீதியில் பல்வேறு சன்னதிகள் உள்ளன. அதில் வேணுகோபால் சன்னதி தொடக்கத்தில் உள்ளது. இந்த சன்னதியானது கடந்த 8-ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் ஒய்சால மன்னர் என்பவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கட்டிட நிபுணர்களை கொண்டு கட்டியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

இந்த சன்னதியானது நுழைவு வாயிலில் மகா மண்டபத்தையும், அதனைத் தொடர்ந்து அர்த்த மண்டபத்தையும், இறுதியில் சாமி வீற்றிருக்கும் கற்பக மண்டபத்தையும் கொண்ட வடிவமைப்பு உடையதாகும்.

ரகசிய அறை கண்டுபிடிப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் கருங்கற்களால் கட்டப்பட்டிருந்த வேணுகோபால் சன்னதியில் புனரமைப்பு பணிகள் நடந்தன. இந்த சன்னதியின் மகா மண்டபத்தில் உள்ள வலது பக்க சுவற்றில் வாசல் படிகளுடன் கூடிய தன்வந்திரி பெருமாள் சாமியின் ஓவியம் வரையப்பட்டு இருந்தது. மேலும் மகாமண்டபம் கருங்கற்களால் ஆனபோதிலும் இந்த ஓவியம் மட்டும் மண் சுவற்றில் பதிந்து இருந்தது. இதனைக்கண்ட கோவில் அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஓவியத்தின் நேர் எதிரே அதாவது மகாமண்டப சுவற்றின் வலது பக்க சுவற்றில் சிறிய துவாரங்கள் சில இருந்தன. அதற்கு கீழே வாசல் படியும் இருந்தது. இதனால் தன்வந்திரி பெருமாள் ஓவிய இடத்தில் இருந்த மண் சுவற்றினை அகற்றினால் உள்ளே சுரங்கப்பாதை இருக்குமோ? என்ற சந்தேகத்தின் பேரில் கோவில் அதிகாரிகளின் முன்னிலையில் அந்த மண் சுவற்றினை கட்டிட பணியாளர்கள் அகற்றினர்.

அப்போது அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதத்தில் அதனுள்ளே பழங்கால அறை ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அறையானது சுமார் 20 அடி நீளம் மற்றும் 5 அடி அகலத்தில் செவ்வக வடிவத்தில் உள்ளது.

அறையின் தளத்தில் பட்டு போன்ற மண் கொட்டப்பட்டிருந்தது. மேலும் அந்த அறையின் உள்ளே பழங்காலத்தில் சுண்ணாம்புக்கல் மற்றும் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட 3 ஏணிகள் இருந்தன. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த அறையானது வேணுகோபால் சன்னதியையும், அமிர்த கலச கருடர் சன்னதியையும் இணைக்கும் விதத்தில் இருந்தது.

தங்க புதையலா?

மேலும் அந்த அறையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த அறையில் சதுரவடிவிலான கல் ஒன்று புதைந்திருந்தது. இதனை கோவில் அதிகாரிகள் உத்தரவின்பேரில் கட்டிட பணியாளர்கள் அகற்றினர். அப்போது சுமார் 12 அடி ஆழத்தில் கீழ் தளம் ஒன்று தெரிந்தது. அதனுள் அதிகாரிகள் இறங்கி பார்த்தனர்.

அப்போது அந்த அறையானது மேலிருந்த அறையை விட சற்று குறைவான நீள அகலத்தில் இருந்தது. அடுத்தடுத்து அறைகள் இருந்ததால் அதனுள் விலை மதிக்க முடியாத தங்க புதையல்கள் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

2-வது நாளாக தோண்டும் பணி தீவிரம்

இதைத்தொடர்ந்து 2-வதாக இருந்த அறைக்கு கீழேயும் ஒரு அறை இருக்கலாம் என்று நேற்று 2-வது நாளாக அந்த அறையின் கீழ் தளத்தில் இருந்த மணமேடையும் அகற்றினார்கள். ஆனால் அங்கு அறைகள் எதுவும் இல்லை. இருப்பினும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 2 பாதாள அறைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து அங்கு பல்வேறு ரகசிய அறைகள் இருக்கிறதா? அதில் ஏதேனும் பழங்கால புதையல்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit